உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

என் கண்டார்? கோடையிலே ஏரிவற்றக் கண்டார்;
     எண்ணத்தின் பெருவிளைவால் கிணறுவெட்ட லானார்!
முன்கண்ட நிலையினிலும் முன்னேற்றம் வேண்டி
     முயன்றார்கள்! குடியரசில் புழை நீர்கண்டாரே! 7

மலையிணைந்த அணைகட்டி நீர்தேக்கி வைத்து
     வாழ்வளிக்கும் மின்சாரம் வருவழியைக் கண்டார்!
தலைகனத்த முடியரசர் காலத்தில் மக்கள்
     சாதிக்கும் வாழ்வுக்கும் வழிவகுத்த துண்டோ?
விலையில்லாப் பெருஞ்செல்வம் மின்சாரம்! இன்று
     விண்பொய்த்துப் போனாலும் மண்விளைந்து போகும்!
அலைகடலின் உவர் நீரும் நன்னீராய் ஆக்கும்
     அறிவடைந்து வருகின்றோம் குடியரசினாலே! 8

அந்நாளில் வயலுழுது விதையைத் தூவி
     ஆன மட்டும் விளைவறுத்துக் கொண்டு வந்தோம்!
இந்நாளில் குடியரசால் வேற்று நாட்டார்
     எந்தெந்த முறையினிலே விளைவைச் செய்து
பொன் விளைத்து வருகின்றார் என்று கண்டோம்;
     புதுமுறையைக் கைக்கொண்டோம்; வளரு கின்றோம்!
முன்னேற்றம் கைவிட்டோம் இல்லை! நெல்லின்
     முடியேற்றம் குடியரசின் ஏற்ற மாமே! 9

மாட்டோடு மாடாக மக்களெலாம் அன்று
     வயலுழுது வளஞ்சேர்த்தார்! குடியரசில் இன்று
கூட்டாக உழைக்கின்றோம்; விளைவுகுவிக் கின்றோம்!
     குறையுழைப்புப் பெரும்விளைவு குடியரசின் மாட்சி!
பாட்டாளி நல்வாழ்வு வாழ்கின்றான்! நாட்டில்
     பஞ்சத்தின் சிறுவாடை வீசுவதைக் கண்டோம்!
கூட்டாளி நல்லுழவன் வளஞ்சேர்க்கும் நாட்டில்
     குனிந்துவரும் எப்பகையும் தூளாகிப் போமே! 10