17
(நேரிசை ஆசிரியப்பா)
இவ்வியல் நாட்டு நகர அமைப்பை
ஒவ்வார் எந்த உலகத் துண்டாம்?
அறிஞன் சுமீத்து, “நகர அமைப்பில்
மேல்நா டெல்லாம் கீழ்நாட் டடிப்படை”
என்றனன்; உண்மையை எண்ணுவீர் நீரே!
சிற்பம் ஓவியம் செழுங்கலைக் கோபுரம்
மேலை நாடு வியப்பது தம்மொடு
கைகோத் தொருமையில் கலந்து திகழும்
இரசபுத் திரரின் இரவிவர் மாவின்
தாசும காலின் தகுதியே யாகும்!
ஆனால் இவற்றின் அடிப்படை யாவும்
சிற் றன்ன வாயில் சென்றால் புரியும்!
கடல்மல்லை காஞ்சி தஞ்சை மதுரை
சென்றால் கீழ்மேற் றிசை நாட் டொருமை
இன்று மிருப்பதை யாரே மறுப்பார்?
சாக்கைக் கூத்து துன்பியல் முடிவாம்;
ஓட்டந் துள்ளல் இன்பத் துயர்வாம்;
கதைகளி இரண்டும் கலந்ததே யாகும்!
இந்நிலை கலவாக் கூத்தெங் கிருக்கும்?
பிள்ளைக் கிட்டுப் பிணியைப் போக்க
வாழைப் பழத்தில் மருந்தை மறைத்துத்
தாய்தரு பழமே சான்றோர் இலக்கியம்;
“நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆரள வின்றே; சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே!”
2