உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

உள்ளத்தில் முளைத்திருந்த அறியாமைக் காட்டை
      உழுபடையாம் திருக்குறளால் உழுதுழுது வித்தி
தெள்ளுதமிழ் நீர்பாய்ச்சி அறிவாக்கம் தந்த
      செஞ்சொல்லே ருழவனெனில் யார்மறுக்கக் கூடும்?

அங்கிங்குப் போவானேன்? தமிழகத்தை ஆளும்
      அமைச்சரெலாம் உழவரென்று மன்றத்தில் நின்றே
உங்களுக்கு நான் சொல்லல், சொல்லுவதைச் சொல்லல்!
      ஊர்காப்போர் ஏர்காப்போர் நாடறிந்த உண்மை!
தெங்குண்ட நீரெல்லாந் தீஞ்சுவை நீர் ஆக்கித்
      திசைதோறும் நாடோறும் வழங்குவதைக் கண்டோம்!
மங்குகின்ற ஆலமரம் வாழவைக்க வந்த
      மக்களின விழுதாவார் அமைச்சரினம் ஆமே!

சொல்லுழவர் முதலமைச்சர் நல்லுழவர் ஆவார்!
      துறைதோறும் துறைதோறும் நாவேரைப் பூட்டி
வில்லுழவர் முன்னாண்ட அமைச்சர்களை ஓட்டி
      வெற்றிவலம் வருகின்றார்! தமிழகத்தில் வாழும்
பல்லுழவர் வளம்வேண்டி இரவுபகல் என்றும்
      பாராமல் உழைக்கின்றார். முத்துவேலர் தந்த
நல்லுழவர் அமைச்சரவை நீடு நிலைத் தென்றும்
      நற்றமிழ்போல் வாழ்கவென நாம்வாழ்த்து வோமே!

ஏரோட்டும் உழவன்கைத் தார் நீட்டுங் கோலே
      எருதுகளைத் தமிழகத்தில் வெருட்டியதைக்கண்டோம்!
ஏரோட்டும் உழவன்கைத் தார் நீட்டுங் கோவே
      எம்மமைச்சர் கையிருக்கும் சீர் நீட்டும் செங்கோல்!
காரோட்டம் குறைந்தாலும் கழனிவறண் டாலும்
      கனிவோடு குடிமக்கள் குறைகளையும் ஆன்ற
ஈரோட்டு வயலுழவன் முதலமைச்சர் வாழ்க!

      எனத்தமிழால் பல்லாண்டு பாடிடுவோம் நாமே!