பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

எண்ணி இரண்டு நாட்கள்கூட ஆகவில்லை; வந்து விட்டது, ஆனந்தியிடமிருந்து அம்பலவாணருக்குப் பதில் வந்தே விட்டது. அந்தப் பதிலில் கண்டிருந்ததாவது:

‘அன்புள்ள அத்தானுக்கு, அடியாள் வணக்கம்......

அவ்வளவுதான்; அதற்கு மேல் அந்தக் கடிதத்தை அம்பலவாணரால் உடனே தொடர்ந்து படிக்க முடியவில்லை. தம்முடைய உச்சி முடியில் நான்கைச் சேர்த்துப் பிடித்து யாரோ தூக்குவது போல் அவருக்கு 'ஜிவ்' வென்று ஓர் உணர்ச்சி; தம்மையும் அறியாமல் குலுங்கிய தம் உடம்பை அவர் ஒரு முறை தடவி விட்டுக் கொண்டு, மேலே படிக்கலானார்:

.......நீங்கள் சொன்னது சொன்னபடி பச்சைப்
புடைவை கட்டிக்கொண்டு நாளைக் காலை நான்
ஐயம்பேட்டைக்கு வருகிறேன். நீங்களும் மறக்காமல்
‘வயோதிகத்தில் வாலிபராகத் திகழ்வது எப்படி?'
என்ற புத்தகத்துடன் ஸ்டேஷனுக்கு வந்து முதல்
வகுப்புப் பிரயாணிகள் அறையில் இருங்கள்.
மற்றவை நேரில் - ஆசை முத்தங்களுடன், ஆனந்தி.'

இதைப் படித்ததும் அவருக்கே ஒரு மாதிரியாகப் போய், “சீச்சீச்சீ!' என்று முகத்தைச் சுளிக்க, ‘என்ன அப்பா, என்ன?' என்று அதுகாலை அங்கே வந்த அம்சா கேட்க, ‘ஒன்றும் இல்லை, அம்மா! பட்டணத்து நண்பர் ஒருவர் ஏதோ வியாபார விஷயமாக உலகம் சுற்றப் போகிறாராம். வர இரண்டு மாதங்கள் ஆகுமாம். அவருக்கு ஒரு வாழா வெட்டித் தங்கை. 'நான் வரும் வரை அவள் உங்கள் வீட்டில் இருக்கட்டும்’ என்று அவர் எனக்கு எழுதியிருந்தார். 'சரி, அனுப்பி வையுங்கள்!’ என்று நான் எழுதியிருந்தேன். அவள் நாளைக் காலை வருகிறாளாம். 'ஊருக்குப் புதுசாகையால் மறக்காமல் ஸ்டேஷனுக்கு வாருங்கள்; கூச்சப்பட்டுக் கொண்டு வராமல் இருந்துவிடாதீர்கள்!’ என்று அவள் எழுதியிருக்கிறாள். இந்த வயதில் எனக்கென்ன கூச்சம்?