பக்கம்:மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

250

மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள்

கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் அவர்களுடைய சக்திதானே எல்லோருடைய சக்தியைக் காட்டிலும் அதிகமாயிருக்கிறது. அவர்களால்தானே வோட்டின் விலையும் விஷம் ஏறுவதுபோல் ஏறிக்கொண்டே போகிறது? அத்தகைய சக்தி வாய்ந்த சுயேட்சை வேட்பாளர்கள் இருவர் எங்கள் வட்டாரத்தில் நடந்த உபதேர்தலில் ஆளும் கட்சியையும், எதிர்க் கட்சியையும் எதிர்த்துப் போட்டி யிட்டார்கள். அவர்களில் ஒருவர் பெயர் ராமன்; இன்னொருவர் பெயர் ராவணன். ராமனுக்கு நாய்ச் சின்னம்; ராவணனுக்கு நரிச் சின்னம். ‘நாய் நன்றியுள்ள பிராணி, அதே மாதிரி நானும் உங்களிடம் நன்றியுள்ளவனா யிருப்பேன். ஆகவே, எனக்கே உங்கள் வோட்டைப் போடுங்கள்?’ என்று ராமன் பிரசாரம் செய்தார்; 'இந்தக் காலத்தில் ஒரு ராஜ்யத்தை ஆள நன்றி மட்டும் போதாது; தந்திரமும் வேண்டும். அதைத்தான் ராஜதந்திரம் என்று அந்த நாளிலேயே சாணக்கியன் சொல்லியிருக்கிறான். அந்தத் தந்திரம் நரிக்கு வேண்டிய மட்டும் உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே, உங்கள் வோட்டை எனக்கே போடுங்கள்!' என்று ராவணன் பிரசாரம் செய்தார்.

‘இப்படியாகத்தானே இவர்கள் பிரசாரம் சூடு பிடித்துக் கொண்டு வந்தகாலை, ஒரு நாள் ஆளுங் கட்சியைச் சேர்ந்த ஒருவர் எங்கள் மன்றத்தைத் தேடி வந்தார். தலைவர் என்ற முறையில் நான் அவரை வரவேற்று, ‘என்ன விஷயம்?' என்று விசாரித்தேன். 'ஒன்றுமில்லை; இந்தத் தேர்தலில் உங்கள் மன்றம் யாருக்கு வேலை செய்கிறது என்பதை நான் தெரிந்து கொள்ளலாமோ?' என்று அவர் மெல்லக் கேட்டார். 'போர்க்களத்தில் எந்த ரகசியத்தையும் வெளிப்படுத்துவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்; அதே மாதிரித்தான் தேர்தல் களத்திலும் நாங்கள் எந்த ரகசியத்தையும் வெளிப் படுத்துவதில்லை!' என்றேன் நான். 'அப்படியா, நீங்கள் சுயேச்சையாளர்களுக்குத்தானே வேலை செய்கிறீர்கள்?'