24
II. சொல்
1. சொல்லாவது யாது ?
கை-என்பது ஓர் உயிர் மெய் எழுத்து. ஆனால் அது ஒருவனின் அங்கமாகிய ஒரு பொருளைக் குறிக்கின்றது. இதுபோலவே தீ, பூ பை, முதலிய உயிர்மெய் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கின்றன. இவ்வாறு எழுத்துக்கள் தனித்து நின்று பொருள் தருவதும் உண்டு, அப்பொழுது அவை சொல் எனப்படும்.
ஆடு, படம், நாற்காலி-இவைகள் ஒன்றிற்கு மேற்பட்ட பல எழுத்துக்களைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளை உணர்த்துகின்றது. இவ்வாறு பல எழுத்துக்கள் தொடர்ந்து வந்து பொருள் தருவதும் சொல்லெனப்படும். "எழுத்துத் தனித்தாயினும், ஒன்றுக்கு மேற்பட்டுத் தொடர்ந்தாயினும் வந்து ஒரு பொருளைத் தருமாயின் அது சொல்லாம்."
2. சொல்லின் வகை 4.
பெயர்ச் சொல்:-
பூ, சோலை, கடை, முருகன்-இவை சொற்கள். இவை பொருட்களின் பெயர்களாக வழங்கப்படுகின்றன. இவ்வாறு வருவது பெயர்ச் சொல். "ஒரு பொருளின் பெயரைக் குறிக்குஞ் சொல்லே பெயர்ச் சொல்லாம்."