கவலைப்பட்டதுண்டா? பேசுவது உண்டா? இவற்றை மாற்றுவதற்கான சட்டதிட்டங்களைக் கொண்டு வந்து, அல்லது கொண்டுவர முயற்சி செய்ததாவது உண்டா? ஓரினத்தார் மட்டும் தெய்வத்திற்கொப்பாகத் தங்களை உயர்த்திக்கொள்வதும் பிற அனைவரையும் உழைக்கின்ற பிற இனத்தவர்களையும், தங்களுக்கென்றே உழைக்கும்படியாக ஆண்டவன் படைத்தான் என்பதும் என்ன அறநெறி? என்ன சட்டம்? இஃதெப்படிக் குடியரசு நாட்டுக்குப் பொருந்தும் சமநிலை உணர்வாகும்? இந்த ஏற்றத் தாழ்வு நிலைகள் இருக்கும்வரை இவ்வகையான போராட்டங்களும் இருந்தே தீரும். எதிர்காலத்தில் இன்னும் வலுப்பெற்று நடக்கும்.
இங்குள்ள மத ஆளுமையே அடிப்படை!
மத அடிப்படையில், ஒர் இனத்தவர் மேலாளுமையே செயல்படுமாறு நம் திட்டங்களையும் நடைமுறைகளையும் வகுத்துக் கொண்டு எல்லாருக்கும் உரிமை, எல்லாருக்கும் சமநிலை என்று காட்டுக் கூச்சலாய்க் கத்துவதால், அடக்கி ஒடுக்கப்பட்டுக்கிடக்கும் மக்களுக்கு உரிமை வந்துவிடப் போவதில்லை. இந்த நாட்டை அரசியல் வல்லுநர்கள் ஆள்கிறார்கள் என்று சொல்வதைவிட மதத் தலைவர்கள் தாம் வழிநடத்துகின்றனர் என்று சொல்லப் பெறுவதே மிகப்பொருத்தமானதும், சரியானதுமாகும். இந்நாட்டின் தலைமையதிகாரவிடத்தில் இருந்து கொண்டிருக்கும் தலைமை அமைச்சர் இந்திராகாந்தி முதல், இங்குள்ள ஓர் அடிமை அமைச்சர்வரை, எல்லாரும் மதத்தலைவர்க்கு ஆட்பட்டுத்தானே செயல்களைச் செய்துவருகின்றனர். இஃதெப்படி ஒரு தன்னுரிமை நாடாக இருக்க முடியும்?
மதமே வேறுபாடுகளை வளர்க்கிறது;
ஆட்சியாளர்களோ அதற்கு அடிமை!
மதத்தலைவராக வீற்றிருக்கும் காஞ்சி காமகோடி பீடாதிபதியின் பிறந்தநாள் விழா ஒன்று (1980 இல்) தில்லியில் கொண்டாடப்பெற்றது. அவ்விழாவில், இந்நாட்டின் அறுபது கோடி மக்களின் தலைவர் ஆகிய தலைமையமைச்சர் இந்திராகாந்தி கலந்துகொண்டு, அவர் தொடர்பான நூலொன்றை வெளியிட்டுப் பேசிய பேச்சுகள் எவ்வளவு அடிமைத்தனமானவை; அருவருப்பானவை; அப்பேச்சில் சில பொதுவான மதக் கருத்துகளை வெளியிட்டிருக்கின்றார், இந்திராகாந்தி! அதில் 'குறுகிய மனப்பான்மைகளிலிருந்து விடுபடுவதே மதம்' என்ற பொன்மொழி ஒன்றையும் வாயவிழ்த்திருக்கின்றார் அவர். இந்தப் பொன்மொழிக்கும் அந்தக் காஞ்சி ஆச்சாரியாருக்கும் ஏதாவது ஒரு வகையிலேனும் தொடர்பிருக்கின்றது என்பதை இந்திரகாந்தியால் எடுத்துக்காட்ட முடியுமா? குறுகிய மனப்பான்மையே உருக்கொண்ட ஒருவரின் பிறந்தநாள் விழாவில் இந்நாட்டின் தலைமையமைச்சர் எப்படிக் கலந்து கொள்ளலாம்?
9