உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சாதி ஒழிப்பு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விழாக்குழுவின் பெயர்களை வெளிப்படுத்திய பட்டியலில் (4.10.66) திரு. ஏ.எசு.சி, உலூர்துசாமிப் பிள்ளை, திரு.டி.எம்.நாராயணசாமிப் பிள்ளை, திரு.அ.வெ.ரா.கிருட்டிணசாமி ரெட்டியார் முதலியவரும் உளராகக் காட்டியிருப்பதும், 'விடுதலை'யின் சாதியொழிப்புக் கொள்கைக்கு இழுக்கைத் தேடுவனவாகும். உலூர்துசாமி, நாராயணசாமி, கிருட்டினசாமி என்று திருத்தி வெளியிடுவதால் அவர்கள் எல்லாரும் வருந்துவார்கள் என்றால் ஈ.வே.இராமசாமி நாய்க்கர் என்று தினமணி, சுதேச மித்திரன் வெளியிடுவதற்காகப் பெரியார் மகிழ்கின்றார் என்பது பொருளா? அல்லது வருந்துகின்றார் என்றால் அதில் என்ன பொருளிருக்கிறது? இங்கெடுத்துக் காட்டப்பெற்ற எடுத்துக்காட்டுகள் இரண்டே! ஒவ்வொரு நாளும் விடுதலையில் இத்தகைய சாதிப்பட்டங்கள் எவர் பெயருடனாவது ஒட்டிக்கொண்டுதாம் வருகின்றன. இது பெரும்பாலும் ஆசிரியர் பிழையாகும். இத்தவற்றைக் கவனித்து உடனே திருத்திக்கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளுகின்றோம். இல்லையேல் இது பெரியாரின் கொள்கைக்குப் பேரிழுக்காகும் என்பது சொல்லித் தெரிதல் வேண்டா.

தென்மொழி, சுவடி-4, ஒலை-9, (1966)

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாதி_ஒழிப்பு.pdf/41&oldid=1164353" இலிருந்து மீள்விக்கப்பட்டது