-35-
தொகையினரிடை மொழிப்பற்று விழிப்புற்று வருகின்றது. தமிழ்நாட்டிலும் தமிழர்கள் வாழ்கின்ற அயல்நிலங்களில் சிலவற்றிலும், மொழியின் பெயரால் கழகங்களும், மன்றங்களும், இயக்கங்களும் தோன்றிச் செயற்பட்டு வருகின்றன. இந்நிலை பெரிதும் ஆறுதலளிக்கின்றது. தனித்தமிழ் வளர்ச்சிக்கென ஓர் இயக்கமே தோன்றி மக்களிடை தெளிவான மொழிநடையை உருவாக்கி வருகின்றது. அரசியல் மேலீட்டால் அயன்மொழி வல்லாண்மை ஓங்கி வந்ததும், அதனை எதிர்க்க ஒரு போராட்டமே நடத்தப் பெற்றதும் எதிர்கால நம்பிக்கைக்கு இன்னும் வலிவூட்டும் நிகழ்ச்சியாய் அமைந்திருந்தது.
19 : 2: பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் உள்ள மாணவர்கள் தம்மிடையில் தமிழுணர்ச்சி ஓரளவு வேரூன்றி வருகின்றது. மொழியுணர்வு கொளுத்திய பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் முழக்கங்கள் ஆங்காங்கே கேட்கப் பெற்று வருகின்றன. மறைமலையடிகளாரின் தமிழும் ஒரு தமிழா எனக் கேட்கப் பெற்றநிலை சிறிது சிறிதாக மறைந்தொழிந்து, அவர் தோற்றுவித்த தனித்தமிழ் இயக்கம் மெல்லெனப் பரவிவருகின்றது. மறைமலையடிகளாரைப் பின்பற்றி மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் தலைமையில் தூய தமிழியக்கம் செயலாற்றி வருகின்றது,
19 : 2: இத்தகைய மொழி வளர்ச்சியை யொட்டித் தமிழ் இலக்கியத்திலும் ஒருவகைப் புத்துணர்வு பிறந்து வருவதை எவரும் மறுக்க முடியாது. தமிழ் மறுமலர்ச்சியுற்று வருவதை யடுத்து, நல்ல தரமான நடையில் கதையிலக்கியங்களும், சிறுகதை இலக்கியங்களும், பாட்டிலக்கியங்களும் தலையைக் காட்டி உருவது மனத்துக்குத் தென்பூட்டுகின்றது. இந்நிலைகளை மேலும் ஊக்கப்படுத்துவதற்குரிய ஆக்கப் பணிகளில் நாம் கவனம் செலுத்தும் காலமும் வந்துவிட்டது என்றே சொல்லலாம்.