பக்கம்:சிந்தனை மேடை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

 மனித உடம்பில் இது மோதிரம் அணிகிற இடம், இது பூ வைத்துக் கொள்கிற இடம் இது காப்புப் போட்டுக் கொள்கிற இடம் என்று அணிபவற்றுக்கும், அணிவதற்கும் ஏற்ப இடத் தகுதிகள் இருப்பதுபோல் கொள்கைகளைப் பூணுவதற்கு இதயம் இடமாக இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் அங்கே அதற்குத் தகுந்த அணிகளை அணிந்து அலங்காரம் செய்தாக வேண்டும். 'கழற்றாமல் பூணுவது' என்ற பொருள் நயம் கிடைக்கும்படி கொள்கைக்குப் 'பூட்கை' (பூணுவது) என்று பழைய தமிழில் பெயர் வைத்திருக்கிறார்கள். 'பூட்கை இல்லோன் யாக்கை போல'--

என்று புறநானூற்றுப் பாடல் ஒன்றில் வருகிறது. இந்தப் பாடலில் வருகிற 'பூட்கை' என்ற பதத்துக்கு மட்டும் எல்லையற்ற பொருள் உண்டு. அந்தப் பதத்தைச் சரியானபடி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்ல வேண்டுமென்றால் settled principles எனச் சொல்ல வேண்டும். உடம்பு இளமையாகவும், வலிமையாகவும் இருப்பது அந்த உடம்பை ஆள் கிறவன் வகுத்துக் கொண்டிருக்கிற திட்டமான கொள்கைகளைப் பொறுத்தது. முகமும், கண்களும், மூக்கும், உதடுகளும், பிறப்பிலேயே அழகாக வாய்ப்பதுபோல் கொள்கைகள் நன்றாகவும், திட்டமாகவும் வாய்ப்பது மனத்துக்கும் உடம்புக்கும் அழகு. 'நாம் திட்டமாக நமக்கென்று வகுத் துக் கொண்ட ஒழுங்குகளுடன் கட்டுப்பட்டு வாழ்கிறோம்' என்று நினைப்பதற்கே பெருமையாக இருக்கிறதல்லவா?

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விநாடியும், திட்டப்படி வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையில் எந்த இடத்திலாவது எந்த வேளையிலாவது திட்டம் மாறினால் அந்த மாறுதலுக்கு ஆளானவனுடைய மனம் ஏதோ பெரிய பிழை செய்துவிட்டாற் போல எண்ணி எண்ணித் தவிப்பது உண்டு. இந்த தவிப்பை உண்டாக்குவதும் மனச்சாட்சி தான். திட்டமிட்டுக் கொண்ட வழிகளிலிருந்து தவறும் போது இப்படி இடித்துரைக்கிற மனச்சாட்சிப் பண்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிந்தனை_மேடை.pdf/29&oldid=1553088" இலிருந்து மீள்விக்கப்பட்டது