பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

15

வடக்கே அம்மைய நாயக்கனூரிலிருந்தும், திண்டுக்கல்லிலிருந்தும் வந்திருந்த படை வீரர்கள், ஒற்றர்களின் குதிரைகள் உடனே அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டதைத் தமுக்கம் மாளிகையின் உப்பரிகையிலிருந்து ராணியும் இளவரசரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


2. சின்னமுத்தம்மாளுக்குப்
பெரிய முத்துமாலை

டை வீரர்களின் குதிரைகள் கண்பார்வைக்கு மறைகிற வரை அந்தத் திசையிலேயே பார்த்துக் கொண்டிருந்தான் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பன். படை வீரர்களின் தோற்றம் கண் பார்வையில் தொலைதூரத்துப் புள்ளியாக மங்கி மறைந்த பின் தன் தாய் ராணி மங்கம்மாளின் பக்கம் திரும்பினான்.

“இது குனியக் குனியக் குட்டுவது போல் இல்லையா அம்மா? எவ்வளவுதான் பொறுத்துக் கொள்வது?”

“மகனே! அரசியலில் பொறுமை என்பதன் அர்த்தமே வேறு. நமது எதிரிக்கு நாம் அடக்கமாக இருப்பதுபோல் தோன்றச் செய்துவிட்டு அவனை எதிர்க்க இரகசியமாக நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்குத் தான் பொறுமை என்று பெயர்.”

“நாம் இப்படி நினைக்கிறோம். ஆனால் நம் எதிரிகளோ தூங்கினவன் தொடையில் திரித்தமட்டும் கயிறு மிச்சம் என்று நினைக்கிறார்கள்.”

“நாம் தூங்கினால்தானே அவர்கள் கயிறு திரிக்க முடியும்?”

தாயின் இந்தக் கேள்வியில் இருந்த குரல் அழுத்தம் மகனுக்குத் தெளிவாகப் புரிந்தது. அவள் நினைவோ உணர்வோ தூங்கவில்லை என்பதை அந்தக் குரல் புரியவைத்தது. தன்னை விட அதிக ஆத்திரம்