29. பெரியாரைத் துணைக் கோடல் சிறந்த பெரியோரைத் துணையாகக் கொள்ளுதல். உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். (ப-உ) உற்ற நோய்-(ஒருவன்) தனக்கு வந்த துன்பத்தை, நீக்கி-போக்கி, உறாஅமை-அது போன்ற துன்பம் மீண்டும் வராதபடி, முன்காக்கும்-முன் சாக்கிரதையாக அறிந்து காப்பாற்றக்கூடிய, பெற்றியார்-தன்மையுடைய பெரியோர்களை, கோடல்-தனக்குத் துணையாகக் கொள்வானாக. (க-உ) துன்பங்களிலிருந்து காப்பாற்றும் பெரியோரைத் துணையாகக் கொள்ள வேண்டும். ஒருவன்-தோன்றா எழுவாய் ; கொளல்-பயனிலை. 30. சிற்றினம் சேராமை இழிந்த குணமுடையவர் கூட்டத்தில் கூடாதிருத்தல். நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்(கு) இனத்தியல்ப தாகும் அறிவு. (ப-உ) நீர்-தண்ணீரானது, நிலத்து இயல்பால்-தான் சேர்ந்துள்ள பூமியின் தன்மையால், திரிந்து-தன் இயற்கைத் தன்மை மாறுபட்டு, அற்று ஆகும்-அந்தப் பூமியின் தன்மை யாகவே இருக்கும். (அதுபோல), மாந்தர்க்கு-மனிதர்களுக்கு, அறிவு-அறிவானது, இனத்து-தாம் கூடிப் பழகும் கூட்டத்தி னுடைய, இயல்பது ஆகும்-தன்மையை உடையதாகவே இருக்கும். (க-உ) ஒருவரின் அறிவு, சேர்க்கையின்படியே இருக்கும். அறிவு-எழுவாய் இயல்பதாகும்-பயனிலை. 21
பக்கம்:திருக்குறள் தெளிவுரை–முதற்படிவம்.pdf/21
Appearance