138
வரலாற்றுக்கு முன்
பாரத காலம் பெரும்பாலும் கி.மு. 1,400 என்று கூறுவர். ஆரியர் இந்தியாவுக்கு வந்த சிறிது காலத்துக்குப் பின் இந்த நிகழ்ச்சி நடைபெற்றிருக்கலாம் என்பதை ஆராய்ச்சி வல்லுனர் பலர் ஏற்றுக்கொள்ளுகின்றனர். ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்து பஞ்சாபுப் பகுதியில் வாழத் தொடங்கிய காலத்து, திராவிடர்கள் இந்தியா முழுவதும் பரவியிருந்தார்கள் என்றும், அவர்களுடைய அரசுகள் பல இடங்களில் நிலைத்திருந்தன என்றும், அவற்றுள் வடக்கில் மகதமும் காமரூபமும் சிறந்திருந்தன என்றும், தெற்கில் கலிங்க, சோழ, சேர, பாண்டி நாடுகள் சிறந்திருந்தன என்றும் திரு. R.D. பானர்ஜி அவர்கள் தம் ஆராய்ச்சியின் முடிவை நன்கு எடுத்துக் காட்டுகின்றார்[1]. இவர்தம் ஆராய்ச்சியின் வழியில் ஆராய்ந்தால் பாரத காலத்தில் இந்தியா முழுவதும் சிறந்திருந்தவர் திராவிடர் என்பதும், அவருள் சிறந்த மன்னராய் வைத்து எண்ணப்பட்ட சேரர் பரம்பரையில் ஒரு மன்னன் அப் பாரதப் போரில் நடுவுநிலையில் நின்று அவர்தம் இரு படைகளுக்கும் சோறு அளித்தான் என்று கொள்வதும் தவறு இல்லை எனவே எண்ணுகின்றேன்.
மற்றும் இந்த அடிகளில் பாரதப் போரில் இரு படைகட்கும் இறுதி வரைக்கும் வரையாது சோறு வழங்கினவன் இவன் எனக் குறிக்கப்பெறுகிறான். இதனால், நாம் மற்றொன்றும் காணமுடிகின்றது. வடநாட்டில் நடந்த ஒரு குடிப் போரில் தமிழர் யார் பக்கமும் சேரவில்லை என்பதும், அவர்தம் போரில் துன்பமுற்றார்க்கு உற்றுழி உதவினர் என்பதும் தெரியவரும். இன்றும் பெரும் போர்க்களங்களில் நாட்டு வேறுபாடு அற்றுச் செஞ்சிலுவைச் சங்கத்தார் (Red Cross Society) அடிபட்டவர்களுக்கும் மற்றவர்களுக்கும் உதவுவதை அறிகிறோம். இதே நிலையில் அன்று
- ↑ Pre-Historic, Ancient and Hindu India, by R. D. Banerji p. 30.