பக்கம்:வெற்றி முழக்கம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300

வெற்றி முழக்கம் / நா. பார்த்தசாரதி

‘இது மற்றோர் அரசனுக்குரிய நாடு தானே! நான் ஆளக் கொடுத்து வைத்தது எவ்வளவு நாளோ? அதுவரை நமக்குத்தோன்றியவாறு எல்லாம் இதை ஆளுவோம்’ என்று எண்ணித் தன் மனம்போன போக்கில் கொடுங்கோல் ஆட்சி நடத்தியிருந்தான் ஆருணி, புதிதாக மக்கள் பல வரிகளைச் செலுத்தவேண்டும் என்று அவன் இட்டுவிட்டுச் சென்றிருந்த கட்டளைகள் உடனே உதயணனால் நீக்கப்பெற்றன. ஆருணியின் வன்முறை ஆட்சியை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் அவன் ஆள்கின்ற காலத்திலேயே கோசாம்பி நகரத்து மக்கட்கு இருந்தபோதிலும், அது பெற்றோர்களிடம் காவலிலுள்ள கன்னிப் பெண்கண்ட காதல் கனவுபோல வெளியிட முடியாததாகவே கழிந்து போய்விட்டது. எனவே ஆருணியின் காலத்தில் கொடுங்கோலாட்சியால் மக்களடைந்த துன்பத்திற்கு ஆறுதல்போல அமைந்தது, உதயணன் இப்போது ஆளத் தொடங்கிய விதம்.

கவனிப்பார் இன்மையாலும் ஆட்சியினால் புறக்கணிக்கப்பட்டதனாலும், ஆருணியின் காலத்தில் நகரில் இருந்த சில அறக்கோட்டங்களும், அழகிய பழமையான கோயில்களும், மலர்ப் பொய்கைகளும், பூஞ்சோலைகளும், குடியிருப்பு வீதிகளும் பாழடைந்து போயிருந்தன. உதயணன் முதல் வேலையாக உடனே அவைகளைப் புதுப்பிக்கும்படி ஆணையிட்டான். இன்னும் ஆட்சிமுறை சீர்குலைந்திருந்ததனால், மக்களிற் பலர் தங்கள் உடமைகைளைப் பறி கொடுத்திருந்தார்கள். அத்தகையவர்கள் மீண்டும் தத்தம் உடைமைகளை அடைவதற்கு வழி செய்யப்பட்டது. சால்பும் மானமும் தன்னடக்கமும் உள்ள சில சான்றோர்கள் தாங்களுற்றிருந்த துன்பங்களைக் கூறுவதற்கு நாணினர். ஆனால் குறிப்பாக அவர்கள் துன்பத்தையும் அறிந்து போக்கினான் உதயணன். போரில் தத்தம் கணவன் மாரை இழந்து கைம்மைக் கோலமுற்ற இளமகளிர்க்கு வாழ்க்கை துன்பமின்றிக் கழிவதற்குப் போதுமான வசதிகள் செய்து தரப் பெற்றன. கைகால் முதலியன இழந்து உறுப்புக்குறை