பக்கம்:நித்திலவல்லி.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

440

நித்திலவல்லி / மூன்றாம் பாகம்



அடையாளமாய் இருந்தது. அவன் நிமிர்ந்து அவளை ஏறிட்டுப் பார்த்து வினாவினான்:

“ஏன் சிரிக்கிறாய் இரத்தினமாலை?”

“ஏன் சிரிக்கிறேன் என்று உங்கள் மனத்தையே கேட்டுப் பாருங்கள்! தெரியும்! அடுத்த பிறவி வரை உங்களுக்காகக் காத்திருக்கத் துணிந்தவளை, இந்தப் பிறவியிலேயே நீங்கள் நம்பாததைப் பார்த்துத்தான் சிரிக்கிறேன்.”

“நான் உன்னை நம்பவில்லை என்பதை நீ இப்போது எப்படிக் கண்டுபிடித்தாய்?”

“என்னிடமே மறைக்கவும், ஒளிக்கவும் உங்களுக்கு இரகசியங்கள் இருக்கின்றன. அப்படி நான் எதையும் உங்களிடம் ஒளிக்க முயன்றதில்லை...” இளையநம்பியின் நெஞ்சில் சுரீரென்று தைத்தன இந்தச் சொற்கள். உடனே ஒரு வைராக்கியத்தோடும், நிர்ப்பயமான நேர்மையோடும், எந்த அந்தரங்கத்தையும் பங்கிட்டுக் கொள்ள ஏற்ற அவளிடம் எதையும் மறைக்க வேண்டியதில்லை என்ற நியாய உணர்வோடும், மேலாடையால் மறைத்திருந்த ஒலைகளை எல்லாம் எடுத்து, “இந்தா! இதில் உன்னிடம் ஒளிக்க எதுவும் இல்லை. இவற்றை நீயும் படிக்கலாம். இவற்றைப் படித்த பின்பும், நீ அடுத்த பிறவி வரை எனக்காகக் காத்திருக்கச் சித்தமாயிருப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு இரத்தினமாலை!” என்று அவற்றை அவளிடம் அளிக்கலானான் இளையநம்பி.

அவள் அவற்றைப் பெற்றுக் கொள்ளாமலேயே, அவனை நோக்கிப் புன்னகை புரிந்தாள்.

“சில வேளைகளில் உன் வார்த்தைகளை விட புன்னகைகள் கடுமையானவையாக இருக்கின்றன, இரத்தினமாலை!”

“ஐயா! இப்போது நான் கூறப் போவதைக் கேட்டு நீங்கள் திகைப்படையவோ, என் மேல் கோபப்படவோ கூடாது. என்னைப் பொருத்தருள வேண்டும்! இந்த ஒலைகளை நீங்கள் அறியாமலே, பலமுறை உங்கள் அங்கியிலிருந்து ஏற்கெனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/438&oldid=946659" இலிருந்து மீள்விக்கப்பட்டது