51
கொண்டிருத்தலின் இது சிலப்பதிகாரம் எனப்பட்டது.
சேரன் செங்குட்டுவன் பத்தினிக் கடவுளுக்குக் கோயில் கட்டிச் சிலையமைத்து வழிபாடு செய்த விழாவிற்குக் கயவாகு மன்னன் வந்திருந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இலங்கை வரலாற்று நூல்களான 'மகாவமிசம்', 'இராஜா வளி' என்பவை அவன் காலம் கி பி. 114-136 என அறிவிக்கின்றன. அதனால், இவன் காலமாகிய இரண்டாம் நூற்றாண்டே சிலப்பதிகார காலம் எனக் கணிக்கப்படுகிறது.
குடிமக்கள் காப்பியம்
காப்பியம் என்பது தன்னிகரில்லாத தலைவனை உடைத்தாய், நாடு நகர், இயற்கை வருணனைகள் பெற்று, அறம், பொருள் இன்பம், வீடு என்னும் உயர்ந்த நோக்கங்களைத் தாங்கி அமைவது. பொதுவாக அரசர்களையே தலைவர்களாகக் கொண்டு காப்பியம் இயற்றல் இயல்பு. ஆனால் இக்காப்பியம் மக்களுள் சிறந்தவனாகிய கோவலனையும் கற்பின் செல்வியாகிய கண்ணகியையும் காப்பியத் தலைவர்களாக வைத்து இயற்றப் பெற்றுள்ளது. இஃது இதன் தனிச் சிறப்பாகும். பெண்மைக்கு உயர்வு தரும் நோக்கில் இது படைக்கப்பட்டுள்ளது. மணிமேகலையும் பெண்மைக்கு உயர்வு தருகிறது.
காப்பியத்தின் நோக்கம்
‘அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்'
என்பன இக்காவியத்தின் குறிக்கோள்களாகும்.