பக்கம்:திருவிளையாடற் புராணம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

திருவிளையாடற்புராணம்

இல்லையோ என்னால் கூறமுடியாது;” பொதுச்சொத்தை நான் கொள்ளை அடிக்கவில்லை. ஊர்ச் சொத்துக்கு யான் பிள்ளையாகப் பிறக்கவில்லை. நற்பணி மன்றங்களுக்கே அரசனது செல்வத்தைப் பயனிட்டேன்; இதை எப்படி அவனிடம் சொல்வது. சொல்லிவிட்டால் என்ன? சொல்லலாம், சேதிராயன் படை எடுத்து வந்து விட்டால் அப்பொழுது நாட்டையும் அரசனையும் காப்பது எப்படி? எல்லாம் உன் பொறுப்பு” என்று முறையிட்டான்.

"நாளைக்குச் சேனையோடு வருவோம்; நீ அரசனுக்கு அறிவிப்பாய்” என்று அசரீரி கூறியது. நம்பியவரை நாயகனாகிய இறைவன் கைவிடான் என்ற மனநிறை வோடு வீடு வந்து சேர்ந்தான்.

மறுநாள் அரசனும் சுந்தரசாமந்தனும் அரண்மனை முகப்பில் நின்று கொண்டு வரப்போகும் சேனைகளைக் காணக் காத்துக் கொண்டிருந்தனர். சிவபெருமான் கணநாதர்களையும் பூத கணங்களையும் படைகளாகவும் இடபத்தைக் குதிரையாகவும் மாற்றிச் சோமசுந்தரர் ஒற்றைச் சேவகராக அதில் ஏறி வந்து சேர்ந்தார். கண்ணுக்கெட்டிய தூரம் குதிரைப் படைகளும் காலாட்படைகளும் அணிவகுத்து நின்றன. சாமந்தனின் திறமையையும் செயலையும் பாண்டியன் வெகுவாகப் பாராட்டினான்.

ஒற்றைச் சேவகனை அருகில் வரப் பாண்டியன் அழைத்தான். அவன் மிடுக்கான தோற்றத்தைக் கண்டு அவனை மகா வீரன்’ என்று பாராட்டிப் பட்டுத் துகில்களையும் இரத்தின ஆபரணங்களையும் பரிசாகத் தந்தான்.