உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பம்-அறிஞர் அண்ணவின் கட்டுரைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

65

எப்பொருளிலும் இல்லை, உள்ளத்தின் உணர்ச்சியே இன்பம் என்பது; இன்பமென எண்ணித்தீமை செய்தலாகாது என்பதை நன்றாக உணர்த்துவதற்காக இக்கட்டுரையில் அது விரித்துக்கூறப்பெறுகிறது. இன்பம் உள்ள உணர்ச்சியே என்பதை உள்ளம் பொருந்த உணர்ந்து விடுவார்களானால் பின்னர் இன்பம் என எண்ணிச் செய்யும் தீமைகளை யெல்லாம் போக்கிவிடுதல் கூடுமன்றோ! இன்பம் பொருளிலில்லை யென்பதற்கு ஈண்டுக்காட்டியதை விட இன்னும் விளக்கமாகக் காட்டவேண்டிய தில்லையன்றோ?

மக்கள் செய்யவேண்டுவதென்ன? நூல்கள் விதித்த நற்கடமையாகிய அறனே பிறிது செய்யக் கனவினும் கருதலாகாது. அறன் ஒன்றே இன்பமெனக் கருதப் பழகிவிட்டால், அதன் பாற்பட்ட நற்செயல்கள் தவிரப்பிறயாவும் துன்பமாகவும் அவையே இன்பமாகவும் தோன்றும் என்பதிற் சிறிதும் ஐயமில்லை. அப்பழக்கமே - அறமே இன்பமெனக்கருதும் அறிவே மக்கள் பெறுதல் வேண்டும். அவ்வறிவு படைத்தாலன்றி மக்கள் யாக்கை பெற்ற பயன் இல்லை இல்லை முக்காலும் இல்லை. மக்கள் அறத்தையே இன்பமாகக் கருதும் அறிவுபெற வேண்டுமென்று கருதியே யன்றோ இன்பம் நுகர இவ்வுலகிற் பிறந்த மக்கட்கு முதலில் அமைந்த ஔவை பிராட்டியருளிய அருஞ்சொற்றொடர் “அறஞ்செயவிரும்பு” எனப் பணித்தது.