பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விக்கேசின்_கரந்தைப்படலம் 35 13. குடி நிலை மண்திணி ஞாலத்துத் தொன்மையும் மறனும் கொண்டுபிறர் அறியும் குடிவர வுரைத்தன்று. மண்செறிந்த இந்த நிலவுலகினிடத்தே, பழைமையும் தறுகண்மையும் கொண்டு, அவற்றின் சிறப்பாற் பிறர் எல்லாம் அறியும்படியான புகழுடனே விளங்கும் மறக்குடியினது வரலாற்றை உரைப்பது, குடிநிலை ஆகும். - பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம் வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலக் கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முற்றோன்றி மூத்த குடி. 35 பண்டு, இந்த வையகத்தினைக் கவிந்து கொண்ட தெளிந்து ஆரவாரிக்கும் ஊழிக்கடல் வெள்ளமானது விட்டு நீங்கியதாக, அதன்பின் முற்பட மலைதோன்றி மண்ணானது தோன்றாதிருந்த அந்தப் பழங்காலத்திலேயே, எல்லா மக்கள் குடியினும் முற்படத் தோன்றி, வாளாண்மையுடன் முதிர்ச்சிபெற்று வருவது இம்மறவனின் குடியாகும். அதனால் இவன், பொய்மை நீங்க நாடொறும் புகழினை விளைத்துச் சிறப்புறுதல் என்னதான் அதிசயமோ? வேத்தியன் மரபின் பின்வரும் இது, மன்னன் தன்னுடைய மறக்குடி மாண்பினைப் போற்றி உரைப்பதாகும். வெட்சியுள் வரும், துடிநிலையோடு இதனை ஒத்துக் காண்க. அங்குத் தலைவன் துடியனைப் போற்றுகின்றான்; இங்கு மறவனை மன்னன் போற்றுகின்றான். - தொகுத்து உரைத்தல் பகையரசரது படைமறவரால் வெட்சி மேற்கொண்டு கவர்ந்து போகப்பட்ட நிரையினை, அதற்கு உரியரான நாட்டு மறவர்கள், கரந்தை சூடிப் பின்பற்றிச் சென்று போரிட்டு மீட்டுவருவது இந்தக் கரந்தைத் திணையாகும். இது, பகைவர் நிரைகொண்டு போயதைக் கேட்டு மறவர்கள் திரண்டெழுகின்ற கரந்தை அரவம், அவர் கூற்றெனச் சினந்தாராக வெட்சியார் சென்ற வழியிலே அவரைப்பின்பற்றிச்செல்லுகின்ற அதரிடைச் செலவு, அவரையடைந்து வளைத்துக் கொண்டு போரிடலாகிய போர் மலைதல், போரிட்டாருள் சிலர் புண்பெற்று வருதலாகிய புண்ணொடு வருதல், சிலர் அயராது போரிட்டுப் பின் வாங்கலின்றிக் களத்திலேயே வீழ்தலாகிய