பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

257


166. நல்ல வாயின கண்!

துறை : வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத் தானாகத், தலைமகள் பசப்பிற்கு வருந்திய தோழி, அவனை இயற்பழித்துக் கூறியது.

[து .வி.: வரைதலை நாடாது, களவையே நாடி வந்து போகும் தலைவனின் போக்குக்கண்டு வருந்திய தோழி, அவன் சிறைப்புறத்தானாதல் நோக்கி, அவன் உள்ளம் தெளியுமாறு, அவனை இயற்பழித்துக் கூறியது இது.]

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
வரிவெண் டாலி வலைசெத்து வெரூஉம்
மெல்லம் புலம்பற் றேறி

நல்ல வாயின நல்லோள் கண்ணே!

தெளிவுரை: பெரிய கடற்கரைக் கண்ணதான சிறுவெண் காக்கையானது, வரிகள் பொருந்திய வெள்ளிய பலகறைகளை வலையென்றே நினைத்து அஞ்சும், மென்மையான கடற்கரை நாட்டோன் தலைவன். அவன் சொற்களை வாய்மையாயினவாம் என்று தெளிதலாலே, இந் நல்லோளின் கண்களும், இதுகாலை பசலைபடர்ந்து, நல்லழகு பெற்றவை ஆயினவே!

கருத்து: 'அவன் அறத்தொடு வாய்மை பேணாதான்' என்றதாம்.

சொற்பொருள் : வரி - கோடுகள். தாலி - பலகறை; வலைகள் நீரினுள் அமிழ்ந்து மீனை வளைத்துப் பிடிக்க உதவுவது; தாலி என்றது அது தொங்குதலால். தேறி - தெளிந்து; சூளுரைகளை வாய்மையெனக் கொண்டு.

விளக்கம் : 'நல்லவாயின' என்றது எதிர்மறைக் குறிப்பு. அவன் பேச்சை அப்படியே நம்பி அவனொடும் காதன்மை கொண்டதன் பயனாலே, இவள் கண்கள் தம் பழைய அழகு நலம் கெட்டன என்பதாம். நல்லோள் - நல்ல அழகும் பண்பும் உடைய தலைவி.

உள்ளுறை : 'வரிவெண் தாலியை வலையெனக் கொண்டு சிறுவெண் காக்கை அஞ்சும்' என்றது, அவ்வாறே தலைவனும் தலைவியை வரைந்துகொள்வது தன் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் என்று கருதினன் என்று உள்ளுறுத்துக் கூறியதாம். அவன் பொறுப்பற்ற தன்மை சுட்டிப் பழித்ததும் இது.

ஐங். -- 17