6
அவரவர் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப, மணப்பந்தலை மலர் மாலைகளாலும் பல்வேறு விளக்குகளாலும் அழகு படுத்துமாறு செய்தல் வேண்டும். குத்துவிளக்கு, குடவிளக்கு, கிளைவிளக்கு, கைவிளக்கு முதலியவைகளுள் ஒன்றினை அவரவர்கட்கு இயைந்த வகையில் ஏற்றிவைக்கலாம். சிலர் வர்ணம் தீட்டிய மட்கலங்கள், மர உரல் முதலியவைகளை மணப்பந்தலில் வைப்பினும் ஆசிரியர் அவைகளை ஏற்றுக் கொள்ளலாம். மரபுக்கு மாறுபடாத வகையில் குறைந்தது இரண்டு குத்துவிளக்குகளேனும் இருத்தல் வேண்டும்.
மணப்பந்தலில் மணமக்கள் கிழக்கு நோக்கியும் மணம் செய்து வைக்கும் ஆசிரியர் வடக்கு நோக்கியும் அமர்ந்திருத்தல் நம் நாட்டு மக்களின் வழக்கமாக இருத்தலின் இதனேயே அனைவரும் மேற்கொள்ளலாம்.
ஒரு தலைவாழையிலையை மணமக்களுக்கு முன்புறமாக (அதாவது கிழக்குத்திசையில்) வைத்து, அவ்வாழை இலையில் மூன்று பிடி பச்சரிசி பரப்பி வைத்து அதன் மீது வாழைப் பூ வடிவிலமைந்த ஒரு செம்பினை மஞ்சள் குங்குமங்களால் அலங்கரித்து வைத்தல் வேண்டும். பின்பு அச்செம்பில் தூய்மையான நீர்வார்த்து மாவிலைக் கொத்தினைப் பொருத்தி அதன்மீது முற்றிய தேங்காய் ஒன்றினை மஞ்சள் பூசிக் குங்குமம் இட்டு வைத்தல் வேண்டும். அச் செம்பினுக்குப் பக்கத்தில் அரைத்த மஞ்சளைப் பிடித்து வைத்து அதைக் குங்குமத்தால் அலங்கரித்தல் வேண்டும். செம்பினுக்கு மற்றாெரு பக்கத்தில் ஒருதட்டில் மஞ்சள் கலந்த பச்சரிசியைப் பரப்பி அதன் மீது முற்றிய தேங்காய் ஒன்றினை வைத்து அதனையும் மஞ்சள் குங்குமங்களால் அலங்கரித்துப் பொற்றாவியோடு கூடிய மஞ்சள் கயிற்றை அதில் சுற்றி வைத்தல் வேண்டும். மணமக்களுக்கு முன்னர் இரண்டு முக்காலிகள் இட்டு மணமகனுக்காகவும் மணமகளுக்காகவும் பெற்றாேர்கள் பரிசாகத் தரும் புத்தாடைகளும் மலர் மாலைகளும் நிரம்பிய தட்டுகளை வைத்தல் வேண்டும்.