பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


நாணத்தின் குழலி

போனது வந்தது தெரியாமல் ‘பறந்து’ போய் ‘பறந்து’ வந்துவிட்டான் ஞானபண்டிதன். புது டில்லிப் பயணம் அவனுக்கு இனியதொரு சுகமாக அமைந்திருந்தது. மிஸ் ஸ்டெல்லா ஜான்ஸன் சந்திப்பும் அவனுக்கு இனிய கற்கனவை எண்ணி எண்ணி மகிழ்வதை நிகர்த்து இருந்தது.

கார் வீட்டுக்கு வந்தது.

அவன் குளித்து மீண்டான். மீண்டதும் புதிய தெளிவு பெற்று, ‘விருந்தினர் அறை’க்குச் சென்றான். அன்னபாக்கியத்தம்மாளுக்கு வணக்கம் தெரிவித்தான்.

பிறகு குழலி - பூவழகி இருவரையும் ஒரு சேரச் சந்தித்தான். “என் குழலியை என்னிடம் சேர்ப்பித்த பெருமையும், அவளை இப்போது என்னிடம் பத்திரமாக ஒப்படைத்த புண்ணியமும் உன்னேயேதான் சேரும் சகோதரி !” என்றான் ஞானபண்டிதன். ‘சகோதரி’ என்ற புதிய உறவின் கூப்பாட்டில் அவன் உள்மனம் பாசத்தால் விம்மிப் பூரித்தது.

புதுடில்லிக்குப் பயணப்பட்ட போது, ஒரு வேளை திரும்புவதற்குள் முன் போலப் பூவழகி மறைந்துவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சி, குழலியிடம் நிரம்பவும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டான். “உன் அண்ணியை என்னிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டியது உன் பொறுப்புத்தான் அம்மா !” என்று ரத்தினச் சுருக்கமாக, அவளிடம் அவன் பெரும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டான்.

எப்படியோ பொறுப்பு செவ்வனே நிறைவேற்றப்பட்டது.

அவன் குழலியை எந்தப் பிறப்பில்தான் மறப்பான் ?

“...உங்கள் உள்ளங்கவர்ந்த பெண் உண்மையிலேயே பாக்கியவதிதான் ! அந்தப் பாக்கியத்துக்கு அவள் முன் ஜென்மத்தில் நல்ல பூ எடுத்துப் போட்டிருக்க வேண்டும் !...