உள்ளடக்கத்துக்குச் செல்

மனத்தின் தோற்றம்/பிரபுலிங்கலீலை - ஒர் அறிமுகம்

விக்கிமூலம் இலிருந்து

10. பிரபுலிங்கலீலை - ஓர் அறிமுகம்



1. அறிமுகம்

1.1. நூல் அறிமுகம்

பிரபுலிங்கலீலை என்பது ஒரு வீர சைவ நூல். இதை ஒரு காப்பியம் எனலாம், காப்பியத் தலைவர் அல்லமப்பிரபு என்பவர். இவர் சிவபெருமானின் தெய்வக் கூறாகக் (தெய்வ அம்சமாகக்) கருதப்படுகிறார்.

இந்த நூல் நயமான கற்பனை வளம் நிரம்பியது. இந்த இருபதாம் நூற்றாண்டின் முற்பாதி வரையிலுங்கூட இந்நூல் பலராலும் படிக்கப் பெற்றது. திருப்பாதிரிப்புலியூர். ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளார் தாம் சென்ற இடங்களிலெல்லாம் இந்நூலைப் பலர்க்குக் கற்பித்துள்ளார். அந்தப் பேறுபெற்ற பலருள் அடியேனும் ஒருவன்.

சென்ற ஆண்டு (1991) ஒருநாள், உயர்திரு டாக்டர் ச. மெய்யப்பன் அவர்களின் வீட்டிற்கு நான் சென்றிருந்த போது, அவருடைய தந்தையாரும் குங்குலியம் சாமியார் என்று ஒரு சிறப்புப் பெயர் வழங்கப்பெறுபவருமாகிய பெருந்திரு சண்முகம் செட்டியாருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் பெரியவர், பிரபுலிங்க லீலைப் பாடல் களைப் பார்க்காமலேயே அவர்பாட்டும் ஒப்பித்தார். நான் வியப்படைந்தேன்; செட்டிநாட்டில் பிரபுலிங்க லீலை பரவியிருந்தமையை உணர்ந்தேன்.

புதுச்சேரியில் வள்ளலார் சன்மார்க்க சங்கத்தில் நான் ஒரு நாள் பிரபுலிங்கப் பாடல் ஒன்றைப் பார்த்து விளக்கிக் கொண்டிருந்தபோது, வந்திருந்தவர்களுள் ஒருவரான ந. மகாலிங்கம் என்பவர் என்னை நோக்கி, நீங்கள் பிரபு லிங்கலீலைப் பாடலைப் பார்த்துப் படிக்கிறீர்களே - எங்கள் தாத்தா பிரபுலிங்கலீலைப் பாடல் முழுவதையும் பார்க்காம லேயே ஒப்பிப்பார் என்று கூறினார். பிறகு நான் அவரிடம் சில பாடல்களைப் பார்க்காமல் ஒப்பித்துக் காட்டினேன்.

1.1.1. நூல் நுதலிய பொருள்

நூல் நுதலிய பொருள் புராணக் கதை போன்றது தான். கதையில் நம்பிக்கை யிராவிடினும், பாடல்களில் உள்ள ஈடு இணையற்ற வளமான கற்பனை நயங்களைச் சுவைக் கலாம். கதை வருமாறு:

கைலாயத்தில் சிவனும் சிவையும் உரையாடுகின்றனர். மண்ணுலகில் உள்ள என் கூறாகிய அல்லமப் பிரபுவை யாராலும் தன்பால் அகப்படும்படிக் கட்டுப்படுத்தி வெல்ல முடியாது என்று சிவன் கூறினார். மந்த குணமாகிய மாயையைப் பெண்ணாக அனுப்பி அல்ல.மரைக் கட்டுப்படுத்தி வெல்லும்படி யான் செய்வேன் எனச் சிவை சூள் உரைத்தாள். பின் மந்தகுண மாயை, மையக்குண விமலை, உயர்குண மாதேவி ஆகியவர்களை அனுப்பியும் அல்லமரை வெல்ல முடியவில்லை. பின்னர்ச் சிவை தோல்வியை ஒப்புக்கொண்டாள்.

இவர்களை வென்ற அல்லமர் பின்னர் மாற்றுக் கருத்து கொண்டிருந்த அறிஞர்கள் பலரை வென்று அருளாளர் களாக்கி வீடுபேறு அடையச் செய்தார். இது கதை.

அல்லமப் புரபுவின் லீலைகளை அதாவது அருளை அடிப்படையாகக் கொண்ட திருவிளையாடல்களைக் கூறுவதால் இந்த நூல் பிரபுலிங்க லீலை என்னும் பெயர் வழங்கப் பெற்றது. லிங்கம் என்பது தெய்வத் தன்மையைக் குறிப்பது. வீர சைவர்கள் இலிங்கத்தைத் தம் உடலிலேயே அணிந்து கொண்டு வழிபடுபவர்கள். அதனால் நூல் பெயரில், பிரபுலிங்கம் என்னும் பெயர் இடம் பெற்றது. இந்நூலில் இருபத்தைந்து கதிகள் உள்ளன.

1.2. ஆசிரியர் அறிமுகம்

பிரபுலிங்கலீலை நூலாசிரியர் கற்பனைக் களஞ்சியம் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற சிவப்பிரகாச அடிகளா ராவார். இவர் குமாரசாமி ஐயர் என்பவரின் திருமகனார். வீரசைவரும் ஐயர் என்ற பட்டம் வைத்துக் கொள்கின்றனர். அடிகளாரின் இளவல்களாகிய கருணைப் பிரகாசர், வேலையர் என்பவர்களும் புலவர்களாகத் திகழ்ந்தனர்.

அடிகளார் இடைக் காலத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் என்ற ஊரில் தங்கியிருந்தமையால் துறைமங்கலம் சிவப்பிரகாசர் எனப் பெயர் வழங்கப் பெற்றார். இறுதிக் காலத்தில், புதுச்சேரிக்கு மேற்கே 16 கி.மீ. தொலைவிலுள்ள நல்லாற்றுாரில் தங்கியிருந்தமை யாலும் அவரது அடக்கமும் அந்த ஊரிலே இருப்பதாலும் நல்லாற்றுார்ச் சிவப்பிரகாசர் என்றும் பெயர் வழங்கப் பெறுகிறார். இவர் பல நூல்கள் இயற்றியுள்ளார். இவர் பாடல்களில் நயமான கற்பனைகள் செறிந்திருக்குமாதலின், இவர் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர் என்றும் பெயர் வழங்கப் பெறுகிறார்.

2. கற்பனை வளம்

2.1. தாழ்ந்தோர் - உயர்ந்தோர்

உலகில் செல்வம் நிலையான தன்று. ‘மூன்று தலை முறை தொடர்ந்து வாழ்ந்த குடும்பமும் இல்லை - மூன்று தலைமுறை தொடர்ந்து தாழ்ந்து வீழ்ந்த குடும்பமும் இல்லை’ என்னும் பழமொழி ஒன்றுன்டு. இதில் ஒரளவு விதி விலக்கும் இருக்கலாம். செல்வமும் வறுமையும் நிலையானவை அல்ல - வண்டிக் கால்கள் போல் மாறி மாறி வரலாம். இந்தக் கருத்தை நறுந்தொகை என்னும் நூல் விரிவாக விளக்குகின்றது. வருமாறு:

“உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா” (49)
“குடைநிழல் அமர்ந்து குஞ்சரம் ஊர்க்தோர்
நடைமெலிந்து ஒரூர் கண்ணினும் கண்ணுவர் (50)
“சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக் கூழ்ச் சாலை அடையினும் அடைவர்” (51)
“அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
அரசரோ டிருந்து அரசாளினும் ஆள்வர்” (52)
“குன்றத்தனை இரு நிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர்” (33)
“எழுநிலை மாடம் கால்சாய்ந்து உக்குக்
கழுதை மேய் பாழாயினும் ஆகும்” (54)
“பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தரும் கூடி
நெற்பொலி நெடுநகர் ஆயினும் ஆகும்” (55)

பட்டறிந்து எழுதிய இக்கருத்துகளின் உண்மையை இந்தக் கால நாடாளும் தலைவர்களிடமும் காணலாம்; தனி மாந்தரின் வாழ்க்கையிலும் காணலாம்.

இந்தக் கருத்துகள் நாலடியாரில் செல்வம் நிலையாமை என்னும் பகுதியிலும் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவை:

“அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கி உண்டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனில் செல்வ மொன்று
உண்டாக வைக்கற்பாற் றன்று” (6.1)
“அகடுற யார்மாட்டும் கில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்” (62)
“யானை எருத்தம் பொலியக் குடை நிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினையுலப்ப வேறாகி வீழ்வர் தாம்கொண்ட
மனையாளை மாற்றார் கொள” (63)

செல்வத்தை - செல்வாக்கை இழப்பதன்றி, மனை யாளையும் மாற்றார் கொள்ள இழப்பர் என்பது மிகவும் இரங்கத் தக்கது . வருந்தத் தக்கது.

இன்னும் தமிழ் நூல்களைத் துருவினால் இத்தகைய எண்ணற்ற அகச் சான்றுகளைக் காணலாம்.

இந்தக் கருத்துகளை யெல்லாம் உள்ளத்தில் கொண்டு சிவப்பிரகாசர் பிரபு லிங்க லீலை மாயையின் உற்பத்தி கதி என்னும் பகுதியில் பின்வருமாறு கூறியுள்ளார்.

தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் பின்னொருகால் உயர்ந்த நிலை எய்தலாம் என்றும், உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் பின்னொரு நேரம் தாழ்ந்த நிலை எய்தக் கூடும் என்றும், அறத்தின் இயல்பை, அற நூல்கலைக் கொண்டும் உலகியல் நடைமுறையைக் கொண்டும் ஆராய்ந் தறிந்த அறிஞர்கள் கூறியது மிகவும் உண்மை என்பதை அறிந்து கொண்டோம் - என்று அடிகளார் கூறியுள்ளார். பாடல்:

“தாழ்ந்தோர் உயர்வர் என்றும் மிக உயர்ந்தோர் தாழ்வர் என்றும் அறம்
சூழ்ந்தோர் உரைக்கும் உரை கண்டாம்” (14)

என்பது பாடல் பகுதி. அறம் சூழ்ந்தோர் என்பவர் நாலடியார் ஆசிரியர், நறுந்தொகை ஆசிரியர் முதலானோர். அறம் சூழ்ந்தோர் உரைக்கும் உரை என்பது, மேற் கூறிய நூல்களின் பாடல்களில் கூறப்பட்டுள்ள திரண்ட கருத்தாகும்.

இந்தப் பிரபுலிங்க லீலைப் பாடல் பகுதிக்கு வேறொரு விதமாகவும் பொருள் கூறலாம். அதாவது:-

தாழ்மையாக - அமைதியாக அடக்கமாக - பணிவாக வாழ்பவர்கள் மிகவும் உயர்ந்தவர்களாக மதிக்கப் பெறு வார்கள்; இங்கனம் இன்றி, தங்களைத் தாங்களே பெருமைப்படுத்திக் கொண்டு ஆரவாரமாகச் செருக்குடன் வாழ்பவர்கள் மிகவும் தாழ்ந்தவர்களாகக் கணிக்கப்படுவர். என்பதுதான் மற்றொரு பொருள்:

இந்தக் கருத்தை, எந்த அறம் சூழ்ந்தோர் உரைத்த நூல்கள் கூறுகின்றன? திருவள்ளுவர் திருக்குறளாகிய அறநூலில் கூறியுள்ளார்:

பெருந்தன்மை உடையவர்கள் என்றைக்கும் பணிவாக ஒழுகுவார்கள் அதாவது, பணிவாக நடப்பவர்களே பெருந் தன்மை உடையவர்களாக மதிக்கப் பெறுவர். மாறாக, கீழ்மையாளர்கள் தங்களை மேலாகப் பாராட்டி ஆரவாரப் படுத்திக்கொள்வர் - அதாவது, தங்களைத் தாங்களே பாராட்டிக் கொண்டு ஆரவாரத்துடன் வாழ்பவர்கள் கீழோராகக் கணிக்கப்படுவர்-

மற்றும், தங்களைத் தாங்களே பெருமிதப் படுத்திக் கொள்ளாதவர்கள் பெருமை உடையவர்கள் எனவும், தங்களைத் தாங்களே பெருமிதப்படுத்திக் கொண்டு திரிபவர்கள் சிறுமை உடையவர்கள் என்றும் மக்களால் எண்ணப்படுவர். குறள்கள்.

“பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து” (978)
“பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்த்து விடல்” (979)

என்பன குறள்கள். திருத்தக்கதேவர் சீவக சிந்தாமணியில் நெல்பயிரைக் கொண்டு இந்தக் கருத்தைக் குறிப்பாக அறிவித்துள்ளார்:

நெல்பயிர் செல்வம் பெற்றுள்ள மேன்மையில்லாத கீழோர்போல் தொடக்கத்தில் தலை நிமிர்ந்து நின்று, பின்னர், தேர்ந்த நூல் கற்ற பெரியோர் போல் தலை தாழ்ந்து காய்த்து விளையுமாம். பாடல்:

“சொல் அரும் பசும்பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார்
செல்வமே போல் தலைநிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே” (53)

என்பது பாடல். இந்தக் கருத்தை, ஆங்கிலப் பெரும் புலவராகிய சேக்சுபியரும் தமது “As you like it” என்னும் நாடக நூலில் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அறிவிலி தன்னை உயர்ந்த அறிவாளியாக எண்ணிக் கொண்டிருப்பானாம்; ஆனால், உண்மையான அறிஞன் தன்னை அறிவிலியாக எண்ணிக் கொண்டிருப்பானாம் - அதாவது, சிறுமை தன்னை வியந்து அணியுமாம்; பெருமையோ என்றும் பணியுமாம், பாடல்:

“I do now remember a saying,
The fool doth think he is wise,
but the wise man knows himself to be a fool” (5-1 : 29-31)

என்பது பாடல் பகுதி. ‘I do now remember a saying’ என்பது, பிரபுலிங்க லீலைப் பாடலில் உள்ள ‘அறம் சூழ்ந்தோர் உரைக்கும் உரை கண்டாம்’ என்னும் பகுதி போன்றது.

இனி, சிவப்பிரகாச அடிகளார் எதை அடிப்படையாகக் கொண்டு இக்கருத்தைக் கூறியுள்ளார் என நோக்குவாம்:

விளவல நாட்டின் தலைநகராகிய வனவசை என்னும் நகரைச் சுற்றியுள்ள கோட்டை மதிலையும் அதைச் சுற்றியுள்ள அகழியையும் மையமாகக் கொண்டு அடிகளார் இதை அறிவித்துள்ளார்.

அகழி மிகவும் ஆழமாகத் தாழ்ந்து - தாழ்ந்து கீழ் நோக்கிச் சென்றதால், ஆதி சேடனுடைய மணிமுடிமேல் நிற்கும் பெருமை பெற்றதாம்.

மதிலோ, மேல் நோக்கி உயர்ந்து-உயர்ந்து சென்றதால், ஞாயிற்றின் காலடியில் மிதிபடும் தாழ்வை அடைந்ததாம்.

அதாவது, அகழி மிகவும் ஆழமானது என்பதையும், மதில் மிகவும் உயரமானது என்பதையும் அடிகளார் இவ்வாறு கற்பனை செய்துள்ளார். இனிப்பாடல் வருமாறு.

“தாழ்ந்தோர் உயர்வர் என்றும் மிக உயர்ந்தோர் தாழ்வரென்றும் அறம்
சூழ்ந்தோர் உரைக்கும் உரைகண்டாம் மதில் சூழ்கிடந்த தொல் அகழி
தாழ்ந்து ஓர் அனந்தன் முடிமேல் நின்றன்று உயர்ந்து தடவரையைச்
சூழ்ந்துஓர் வரையின் உதிப்பவன் தாள்கீழ் கின்றது போய்ச் சூழெயிலே” (3:14)

என்பது பாடல். அனந்தன் = ஆதிசேடன். ஒர் வரையின் உதிப்பவன் = ஞாயிறு தோன்று மலை (உதயகிரி) என்னும் மலையிலிருந்து ஞாயிறு தோன்றுவதாகக் கூறுவது அக்கால மரபு. ஒரு மலையின் மேற்கே வாழ்ந்த பண்டைக் காலத்தார், கிழக்கேயுள்ள மலையிலிருந்து ஞாயிறு தோன்று வதாகக் கூறினர். கடற்கரையைச் சார்ந்து வாழ்ந்தவர்கள் ஞாயிறு கடலிலிருந்து தோன்றுவதாகக் கூறினர். இந்தக் கால நிலைமை வேறு.

அடிகளார் இந்தப் பாடலில் ‘ஒரு கல்லால் இரண்டு மாங்காய்’ அடித்துள்ளார்.

மண்ணுலகைத் தாங்கும் சேடன்முடிவரையும் அகழி சென்றுள்ளது என்று கூறியதன் வாயிலாக அகழியின் ஆழத்தையும், ஞாயிறு மண்டலம் வரையும் மதில் உயர்ந் துள்ளது என்று கூறியதன் வாயிலாக மதிலின் உயரத்தையும் கற்பனை செய்தது ஒரு மாங்காயாகும்.

இந்தக் கற்பனையின் அடிப்படையில், தாழ்ந்தோர் உயர்வர் - உயர்த்தோர் தாழ்வர் என்னும் உலகியல் நடை முறை உண்மையைக் கூறியது இரண்டாவது மாங்காயாகும்.

இப்பாடலில் ஒரு கற்பனைச் செய்தியைக் கூறி அதன் அடிப்படையில் வேறோர் அறக் கருத்தைப் பெறவைத் திருப்பதால், இத்தகைய அமைப்பு வேற்றுப் பொருள் வைப்பு அணி எனப்படும்.

2.2. நாகமும் மயிலும்

ஒரு தனி நூலாக எழுத வேண்டிய அளவிற்குச் சிவப்பிரகாசரின் கற்பனை நயம் பரந்துபட்டுள்ளது. விரிவு அஞ்சி, இன்னும் ஒரே ஒரு கற்பனை நயத்தோடு இந்தத் தலைப்பை முடித்துக் கொள்ளலாம்.

இடப் பாகத்தில் பெண்ணையுடைய சிவன், பாம்பு, மண்டையோடு முதலியவற்றை அணிந்திருப்பவர். அவருடைய பிள்ளையாகிய முருகன் மயிலை ஊர்தியாக உடையவர்.

முருகன் தந்தையாகிய சிவனைக் காண மயில் ஊர்தியில் அமர்ந்து அடிக்கடி வருவது உண்டு. நாகப் பாம்புக்கு மயில் பகை என்பது அறிந்த செய்தி. முருகனது மயிலைச் சிவன் அணிந்துள்ள நாகப்பாம்பு பார்த்ததும், அஞ்சி, சிவன் அணிந்துள்ள மண்டை ஒட்டின் துளைக்குள் பதமாக உடல் சுருண்டு புகுந்து கொண்டதாம். பின், மயில் போய் விட்டதா என்பதை அறிந்துகொள்ள மெல்லத் தலையை வெளியே நீட்டிப் பார்க்குமாம், மயில் போகாததைக் கண்டதும் மீண்டும் தலையை உள்ளே இழுத்துக் கொள்ளுமாம் பாடல்:

“பாகம் ஒரு பெண் குடியிருக்கும்
பரமன் அணியில் பரித்த மணி
நாகம் நுழைவுற்று உடல் சுருண்டு கிடந்து
நகுவெண் தலைப் புழையில்
போக மெல்லத் தலைநீட்டிப்
பார்த்து வாங்கப் போகும் ஒரு
தோகை மயில் வாகனப் பெருமாள்
துணைத்தாள் கமலம் தொழுதிடுவாம்” (1.4)

என்பது பாடல். நகு வெண்தலை = வெண்ணிற மாயிருக்கும் தலை ஒடாகிய மண்டை ஒடு. வெள்ளொளி வீசுவதால் நகுவெண்தலை எனப்பட்டது. இது ஒரு நகைச் சுவைக் கற்பனை.

இங்கே ஒரு சிக்கலுக்கு இடம் உண்டு. நாகப்பாம்புக்கும் கருடனுக்கும் பகை என்பதும் அனைவரும் அறிந்த செய்தி. ஆனால், கருட ஊர்தியில் அமர்ந்து திருமால் சிவனைக் காணச் செல்லின், சிவன்மேல் உள்ள பாம்பு திருமாலின் கருடனுக்கு அஞ்சுவ தில்லையாம். அந்தப் பாம்பு கருடனை நோக்கி, ‘ஏன் கருடா நலமா?’ என நலம் விசாரிக்குமாம் சிவன்மேல் உள்ள துணிவால் நாகம் இவ்வாறு கேட்குமாம். திருமாலின் கருடன் சிவனுக்காக அஞ்சி, நலம் வினவிய பாம்பை நோக்கி, ‘எல்லாம் இருக்கிற இடத்தில் இருந்தால் நலம்தான்’ என்று பதில் இறுக்குமாம்.

திருமாலின் கருடனுக்கு அஞ்சாத பாம்பு, முருகனின் மயிலுக்கு அஞ்சும் போலும், ஒரு தலைவனிடம் இருப்பவர்கள் அத்தலைவனின் பிள்ளைக்கு மட்டுமன்று - அப்பிள்ளையின் நாய்க் குட்டிக்கும் அஞ்சுவது போன்றது இது.

இது வெங் கற்பனை நயச்சுவை. அவ்வளவுதான்.

3. சிறப்புச் செய்திகள்

3-1 வெண்மைப் புகழ்

கண்ணுக்குத் தெரியாத பண்பாகிய புகழ் என்பதை வெண்ணிறமாகக் கூறுதல் இலக்கிய மரபு. இகழ் கரு நிற மாம் - புகழ் வெண்ணிறமாம். கம்பர் பல இடங்களில் இதைக் கூறியுள்ளார். இலங்கையை இருள் கவ்விக் கொண்டதாம். இதற்குக் கம்பர் கூறும் உவமைகளுள் ஒன்று வருமாறு:-

இராவணன் சீதையைச் சிறையிட்டதால் அவனுக்கு உண்டான கரிய இகழ் சூழ்ந்து கொண்டதுபோல் இருள் சூழ்ந்து கொண்டதாம். இராவணனது இகழை, வெண்மை நீங்கிய புகழ்' என்கிறார் கம்பர். புகழ் வெண்மையானது. அந்த வெண்மை நீங்கியது இகழாகத்தானே இருக்க வேண்டும். அதனால் இகழை வெண்மை நீங்கிய புகழ் என்கிறார். பாடல்:

“வண்மை நீங்கா நெடுமரபில் வந்தவன்
பெண்மை நீங்காத கற்புடைய பேதையைத்
திண்மை நீங்காத வன்சிறை வைத்தான் எனும்
வெண்மை நீங்கிய புகழ் விரிந்த தென்னவே” (5-2-44)

என்பது பாடல். இவ்வாறு, புகழ் வெண்மையானது என்பதைச் சிவப்பிரகாசர் தெளிவாக் கூறியுள்ளார். கைலை மலை வெண்மையானது. சிவனது புகழாகிய வெண்மை தான் வெள்ளைக் கைலை மலையாகத் திரண்டுள்ளது எனக் கற்பனை செய்துள்ளார், பாடல்:

“கள்ளழிந்து ஒழுகு செம்பொன் கடுக்கை
வேய்ந்து இலகு வேணி
வள்ளல் வெண் புகழ் திரண்ட
வளங்கெழு கைலைக் குன்று” (2-4)

என்பது பாடல் பகுதி. கைலாச கதியிலேயே மற்றொரு சுவையான பாடல் உள்ளது.

மூன்று அகவை உடைய ஞானசம்பந்தர் சிவனைப் பாடப் பால் சுரந்தளித்த உமையின் கொங்கையின் வெண்மைப் புகழ்போல, ஒளி வீசும் வெண்மையான முத்து மாலை அந்த உமையின் கொங்கைமேல் அணியப்பட் டுள்ளதாம். பாடல்:

“அரவுலாஞ் சடை அண்ணலைப் பிள்ளைதான்
பருவம் மூன்றினில் பாட இன்பால் தரும்
பொருவில் கொங்கைப் புகழெனப் பொங்கொளி
மருவும் ஆர மணிவடம் தாழ்ந்துற” (22)

என்பது பாடல். அண்ணல் = சிவன், பிள்ளை - ஞான சம்பந்தர்.

பிரபுலிங்க லீலைப் பாடலுக்கு மேலும் அரண் செய்ய இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் இன்னும் சில காண்போமே. சிலப்பதிகாரத்திலுள்ள -

“அந்தி வானத்து வெண்பிறை தோன்றி
மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து” (4-23, 26)

என்னும் பகுதியில் உள்ள வெள்ளி விளக்கம் என்பதற்குப் புகழ் என்னும் பொருள் கூறப்படுகிறது. மற்றும்,

“இகல் என்னும் எவ்வநோய் நீங்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்” (853)

என்னும் குறளிலுள்ள விளக்கம் என்னும் சொல்லுக்குப் பரிமேலழகர் முதலியோர் புகழ் என்னும் பொருளே தந்துள்ளனர். அன்றியும், - வெள்ளைக் கொடிகள் புகழ்போலவும் வெண்மையான அலைபோலவும் பரந்து பறந்தனவாம் எனக் கம்பர் கூறியுள்ளார்:

“தானைமாக் கொடி-புகழ் எனக் கால்பொரப் புரண்ட
வானயாற்று வெண்திரையென வரம்பில பரந்த” (3-9-7)

மற்றும், நிலவின் வெண்மையான ஒளி, இராமனது புகழ் புகுந்து உலவியதுபோல் இருந்ததாம்:

“அன்னவன் புகழ் புகுந்து உலாயதோர்
பொலிவும் போன்றதே” (5-1-65)

என்பன கம்பரின் பாடல் பகுதிகள்.

3.2 கற்பு முல்லை

கற்புக்கும் முல்லைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கற்புடைய மகளிர் தம் மனையில் முல்லைக் கொடி வளர்ப்பார்களாம்; முல்லை மலரைச் சூடிக் கொள்வார் களாம். இது பல இலக்கியங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. சில காண்பாம்:

சிலப்பதிகாரத்தில்:

“இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ் சேக்கைப் பள்ளி” (4:27, 28)
“மாதவி, மல்லிகை, மனைவளர் முல்லைப்
போது விரி தொடையல்” (13:120, 121)

குறுந்தொகையில்:

“மனை எல்லறு மெளவல் காறும்
பல்லிருங் கூந்தல்” (மெளவல்=முல்லை 19:4,5)

நற்றிணையில்:

“மனைகடு மெளவலொடு ஊழ்முகை யவிழ” (11:6)

அகநானூற்றில்:

“மனைய மெளவல் மாச்சினை காட்டி” (23:12)

பெருங் கதையில்:

“இல்லெழு முல்லையொடு மல்லிகை மயங்கிப்
பெருமணம் கமழவும்” (1:33:73,74)

இப் பகுதிகளால், மனையில் மல்லிகை வளர்ப்பதும் கூந்தலில் சூடிக் கொள்வதும் கற்புடைய மகளிர்க்கு இயல்பு என்பதை அறியலாம்.

இந்த நூல்களின் அடிப்படையில், ஒட்டக் கூத்தர் தக்க யாகப் பரணி என்னும் நூலில், உமாதேவிகூட முல்லை வளர்த்ததாகப் பாடியுள்ளார். உமாதேவி வளர்க்கும் முல்லைக்கொடி நூறாயிரமாகக் கிளைத்து விண்ணில் சென்று திங்களைத் தடவுகின்றதாம். திங்களிலுள்ள (கறையாகிய) மான், தேவி வளர்க்கும் முல்லை என அஞ்சி அதை மேய வில்லையாம். பாடல்:

“நுதிக்கோடு கூர்ங்கலை உகைப்பாள் விடாமுல்லை
நூறாயிரம் கிளைகொடு ஏறா விசும்பிவர்
மதிக்கோடு தைவர எழும்தண் கொழுந்துகளை
வாயாது எனக்கொண்டு மேயாது மான்மறியே” (75)

என்பது பாடல். கூர்ங்கலை உகைப்பாள் = உமாதேவி. மேலும் சில வருமாறு:-

‘முல்லை சான்ற கற்பு’ என்னும் தொடர் அகநானூறு (274), நற்றிணை (142), சிறுபாணாற்றுப்படை (30) என்னும் நூல்களில் இடம் பெற்றுள்ளது.

ஐங்குறு நூறு

“வாணுதல் அரிவை முல்லை மலைய” (408)

தக்கயாகப் பரணி

“முடிச்சூட்டு முல்லையோ முதல்கற்பு முல்லையோ” (119)

குலோத்துங்க சோழன் உலா

“வண்முல்லை சூடுவதே நலங்காண் குலமாதருக்கே” (168)

காளத்திப் புராணம்

“முல்லை சால்மனை உலோபா முத்திரை” (பொன்முகரி-21)

பெரிய புராணம்

“கற்புவளர் கொடியே யனைய மனைவியார்” (3369)

இன்ன பிற.

கற்புக்கும் முல்லைக்கும் உள்ள தொடர்பு குறித்து திவாகர நிகண்டும் ஆசிரிய நிகண்டும் முல்லைக்குக் கற்பு என்னும் பெயரும் உண்டெனக் கூறியுள்ளன. முறையே அவை. வருமாறு:

“மெளவலும் தளவமும் கற்பும் முல்லை” (தி.நி. 4.197)
“மெளவல் ஊதிகை தளவு கற்பு மாகதியென
வழங்கு பெயர் முல்லையாகும்” (ஆ.நி. 137)

அகப்பொருள் இலக்கணப்படி நோக்கின், முல்லையின் உரிப்பொருளாவது, தலைவன் பிரிந்திருந்த காலத்தில் தலைவி பெரும் பண்புடன் ஆற்றியிருத்தலாகும். குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் ஆகியவற்றிற்கு உரிய புணர்தல் ஊடல், பிரிதல், இரங்கி வருந்தல் என்னும் உரிப்பொருள் களினும் முல்லையின் உரிப்பொருளாகிய ஆற்றியிருத்தலே கற்புடைமைக்குச் சிறந்த தகுதியாகும். அதனாறும் கற்பு முல்லை எனப்பட்டது.

இதுகாறும் கூறியவற்றால் கிடைத்த - சிறந்த கற்புடைய மகளிர்க்கும் முல்லைக்கும் உள்ள தொடர்பை அடிப்படையாகக் கெண்ேடு பிரபுலிங்க லீலைக்கு வருவோம்.

கற்புடைமையில் சிறந்தவளாக - கற்புடைய பெண்கட்கு 岂_Qfü}凸0丛凸T凸 ஒதப்படுபவளாக உள்ளவள் அருந்ததி என்பதை, கற்றவர் - கல்லாதவர் அனைவரும் ஒப்புக் கொள்வர். இந்த அருந்ததியும் முல்லை வளர்த்தவளாம். முனிவர்களின் மனைவிமார்களைக் குறிப்பிடத் தொடங்கிய சிவப்பிரகாசர், வசிட்ட முனிவரின் மனைவி எனப்படும் அருந்ததியை முதலில் குறிப்பிட்டுள்ளார். பாடல்:

“முல்லையங் தொடை அருந்ததி முதல் எழு முனிவர்
இல்லறம்புரி துணைவியராம் எழுவர்” (2:27)

என்பது பாடல் பகுதி. சங்க இலக்கியங்களிலிருந்து தம் கால இலக்கியங்கள் வரை கற்றுத் தேர்ந்துள்ள சிவப்பிரகாச அடிகளார், அந்த மரபை ஒட்டி இவ்வாறு கூறியிருப்பது ஒரு சிறப்புறு கருத்தாகும்.

இந்தக் காலத்தில் எங்கெங்கோ சில வீடுகளில் முல்லை வளர்க்கின்றனர். முல்லைமலர் மாலை சூடிக் கொள்வதும் வழக்கத்தில் உள்ளது. முல்லையரும்பு - முல்லையரும்பு என்று கூவித் தெருக்களிலும் விற்கப்படுகிறது.

3.3. மரபு நிலையும் சூழ்நிலையும்

ஒருவருக்குப் பிறந்த குடிவழி - குடும்பவழி வரும் குணநலச் செயல் மரபுநிலை (Heredity) எனப்படும். ஒருவர் சேர்ந்து பழகுகின்ற சூழல் வழி வரும் குண நலச் செயல்கள் சூழ்நிலை (Environment) எனப்படும்.

நல்ல மரபு நிலையில் பிறந்தவர்கள் நல்லவராக இருப்பதும் உண்டு அல்லது தீய சூழ்நிலையால் கெட்டு விடுவது முண்டு. திய மரபு நிலையில் பிறந்தவர்கள் தீயவராக இருப்பது முண்டு அல்லது நல்ல சூழ்நிலையால் நல்லவராக மாறுவதும் உண்டு.

சூழ்நிலை என்ற ஒன்றைத் தவிர மரபுநிலை எனப் பண்டு இருந்ததில்லை. காட்டுமிறாண்டிகளாக வாழ்ந்த மக்கள் சிறிது சிறிதாக நாகரிகம் பெறப் பெற நல்ல சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நல்ல சூழ்நிலையின் மாற்ற முடியாத இறுக்கமே நல்ல மரபுநிலை என்பது. அதே போல், தீய சூழ்நிலையின் மாற்ற முடியாத இறுக்கமே கெட்ட மரபுநிலை என்பது. மரபுநிலையின் தாய் சூழ்நிலையே.

‘உயிர்கள் சார்ந்ததன் வண்ணம்’ எனச் சைவ சித்தாந்தம் கூறுகிறது.

மக்களின் பொதுமனப் போக்குகளுள் (Generał Tendencies) ‘பின்பற்றல்’ (Imitation) என்பது ஒன்று. குழந்தைப் பருவத்திலிருந்து முதுமை வரையும் மக்கள் வாழ்க்கையில் பெரும்பாலும் பிறரைப் பின் பற்றுவதைக் காண்கிறோம். இது சூழ்நிலையின் பாற்பட்டதே.

ஒருவர் தீய இனத்துடன் தொடர்ந்து பழகினால் அவரது அறிவு தீயதாகவே செயல்படும். ஒருவர் நல்ல இனத்தோடு தொடர்ந்து பழகினால் அவரது அறிவு நல்லதாகவே செயல்படும். ஈண்டு இனம் என்பது சாதி குலத்தை யன்று - மக்கள் குழுவே ஈண்டு இனம் எனப்படுவது.

நிலத்தின் இயல்புக்கு ஏற்ப நீர் திரிவது போல, மாந்தர்க்குப் பழகும் இனத்தின் இயல்பினதாகவே அறிவு செயல்படும் எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார்:-

“கிலத்தியல்பால் நீர்திரிங் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பதாகும் அறிவு” (425)

மேலும் கூறுகிறார்: ஒருவன் இத்தகையவன் என்பதை அவன் பழகும் இனத்தைக்கொண்டு கூறிவிடலாம். அறிவு இனத்துளதாகும்;

“மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படும் சொல்” (453)
“மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு” (454)

என்பன குறள்கள். இந்த அடிப்படையுடன் பிரபுலிங்க லீலைக்கு வருவோம்.

திருநீறு (விபூதி) மிக்க பெருமைக்கு உரியது என்பதைச் சைவ நூல்களில் பரக்கக் காணலாம். இதற்கு ஞான சம்பந்தரின் தேவாரத் திருநீற்றுப்பதிகம் ஒன்றே போதுமே.

திருநீறு அணிந்து தூய்மையாயிருப்பின், உள்ளத்தில் உண்டாகும் உலக மாயையை உலக மயக்கத்தைத் திருநீறு போக்கும் என்பர். அந்தத் திருநீறே சாரக்கூடாத இனத்தைச் சார்ந்ததும் தீய உணர்வை உண்டாக்குகிறதாம்.

மாயை என்னும் மிக்க அழகிய பெண் சிவன் கோயிலை அடைவதற்காகத் தெருவிலே வந்துகொண்டிருக்கின்றாள். அவள்நெற்றியில் திருநீற்றை நிரம்பப் பூசிக்கொண்டுள்ளாள். அவளை நோக்கியதும் காம உணர்வு கொள்ளும் இளைஞர்க்கு, அவள் அணிந்துள்ள திருநீற்றின் பொலிவு மேலும் திய உணர்வைத் தூண்டுகிறதாம். திருநீறு அணிந்த தோற்றம் அவ்வளவு இவர்ச்சியாயிருக்கிறதாம், இளைஞர் களின் உடலை அதிரச்செய்து காமத்தீயை உண்டாக்கு கிறதாம். அறிவு இனத்தியல்பதாகும் எனப் பெரியோர் கூறியது உண்மையே போதும் - என்று கூறுகிறது. ஒரு பாடல்:

“இனத்தியல்ப தாகும் அறிவென்பது உண்மையே,
மனத்துயர் செயும் மயல்மாற்றும் நீறுதான்,
அனிச்ச மெல்லடியினார் துதல் அடுத்தலும்
பனித்து உடல் வெதும்பும் மால் படுத்தலால் என்பார்” (4-34)

மாயையின் தோற்றத்தைக் கண்ட இளைஞர்கள் இவ்வாறு கூறினராம். 'இனத்தியல்பதாகும் அறிவு என்னும் திருக்குறள் கருத்தை வைத்துக் கொண்டு சிவப்பிரகாசர் இவ்வாறு பாடலில் விளையாடியுள்ளார்.

4. கருத்து வெளியீட்டில் புதுமை

4.1 வினா எதிர் வினா விடை

ஒருவர் மற்றொருவரை நோக்கி, முனியன் ஏன் குறை வயதிலேயே இறந்து போனான்? என்று ஒரு வினா எழுப்பு கிறார் என வைத்துக் கொள்வோம். அதற்கு மற்றவர் நேரே பதில் சொல்லாமல், ‘கெட்ட பழக்கம் உடையவர்களுள் யார் நீடித்து வாழ்ந்தார்கள்? - என்று தாம் ஒரு வினா எழுப்புகிறார். இந்த வினா, ‘முனியன் கெட்ட பழக்கம் பல கொண்டவன் ஆதலின் விரைவில் இறந்து போனான்’ என்னும் விடையைத் தருவதாகும். இதற்குத் தான் ‘வினா எதிர் வினாவிடை விடுத்தல்’ என்பது பெயர். இனி நூலுக்கு வருவோம்.

மாயை கோயிலுக்குச் சென்ற போது அவளுடன் மிகவும் அழகிய மகளிர் பலர் சென்று கொண்டிருந்தனர். இவர்களைக் கண்ட இளைஞர் பலர் ஒருவர்க்கொருவர் இவர்கள் தொடர்பாக உரையாடிக் கொண்டனர். ஒருவன் மற்றவர்களைப் பார்த்து, ‘கூட்டமாக வரும் இப்பெண்களுள் அழகில் மிகவும் சிறந்தவள் யார்?’ என வினவினானாம். அவ்வினாவிற்கு விடையாக, ‘வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் என்னும் முக்கனிகளுள் மிக்க சுவையுடைய கனி எது என்று கூறுவாய்?’ என்ற வினா வந்தது. அதாவது, முக்கனிகளுள் எல்லாமே ஒத்த சுவை உடையன ஆதலின், இன்னதுதான் சுவை மிக்கது என்று சொல்ல முடியாதது போல், இந்தப் பெண்கட்குள்ளும் இன்னாரே மிக்க அழகுடையவர் என்று சுட்டிக் கூறமுடியாது என்பது உரிய பதிலாகும். பாடல்:

“இக்குழு மகளிருள் யார் வனப்பினால்
மிக்கவள் எனத்தமை வினவினா னெதிர்,
முக்கனிகளுள் சுவை முதிர்ச்சி பெற்றுளது
எக்கனி அதனைநீர் இயம்புவீர் என்பார்” (4-35)

இந்தக் காலத்தில், பெண்களைக் கேலி செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று செய்தித் தாள்களில் படிக்கிறோம். நடுத்தெருவில் செல்லும் பெண் களைப் பற்றித் திறனாய்வு செய்யும் வல்லுநர்கள்’ எந்தக் காலத்திலும் இருப்பார்கள் போலும் ஆண் - பெண் என்ற இரு வேறு இனத்தைப் படைத்த இயற்கையின் விளையாட்டு போலும் இது. கருத்து வெளியீட்டில் இது ஒரு புதுமை யன்றோ?

4.2 ஒன்றை ஒன்றால் கட்டுதல்

விளவல நாட்டு மக்கள், பொறையும் புகழும், இன் சொல்லும் விருந்தோம்பலும், பெரியோரின் அறிவுரையும் மன அடக்கமும், அறச் செய்கையும் செல்வமும் உடையவர் களாம். இதைச் சிவப்பிரகாசர் ஒரு புதுமையான முறையில் விளக்கியுள்ளார்.

பொறை என்ற கயிற்றால் புகழையும், இன்சொல் என்னும் கயிற்றால் விருந்தையும். பெரியோரின் அறிவுரை என்னும் கயிற்றால் அலைந்து திரியும் மனத்தையும், அறத்தால் (பிறர்க்குக் கொடுத்தலால்) செல்வத்தையும் கட்டிப் போட்டு நிலைபெறச் செய்து விட்டார்களாம். என்பது பாடல்.

“பொறைக் கயிற்றின் புகழை, இன்சொல் எனும்
விறல் கயிற்றின் விருந்தைக், குரவர் சொல்
மறைக் கயிற்றின் மனத்தைத், திருவைகல்
அறக் கயிற்றின் அசைப்பவர் எங்குமே” (3-4)

பொறைக் கயிற்றின் புகழை. “பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்” (156) என்பது திருக்குறள். இன்சொல் கயிற்றின் விருந்தை:- “மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக்குழையும் விருந்து” (90) - குறள்.

குரவர் சொல் கயிற்றின் மனத்தை. “மனம் தூய்மை செய் வினை தூய்மை இரண்டும் இனம் தூய்மை தூவாவரும்” குறள் - 455

அறக்கயிற்றின் திருவை:

“அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
கல்விருந்து ஓம்புவான் இல்” (84)
“காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள” (52)

பொறையால் புகழையும், இன்சொல்லால் விருந்தையும், குரவர் சொல்லால் மனத்தையும் கட்டுப்படுத்தி நிலை நிற்கச் செய்யலாம். ஆனால், அறத்தினால் திருவைக் கட்டுதல் என்பது அவ்வளவு எளிய செயலன்று.

காக்கைபோல் கரவாமல் எல்லாருக்கும் உதவிக் கொண்டு இருந்தால் செல்வம் நிலைக்குமா? ஒரு போதும் நிலைக்காது.

இந்தச் சிக்கலுக்குத் தீர்வு என்ன? காக்கை போல் மறைக்காமல் பலருக்கும் உதவுபவரிடமே செல்வம் இருக்க அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். மாறாக, பிறர் ஈட்டிய செல்வத்தையோ - தீய வழிகளில் ஈட்டிய செல்வத்தையோ வைத்துக் கொண்டு பிறருக்கு உதவாதவரிடத்தில் செல்வம் இருக்க அரசு உடன்படலாகாது; அச்செல்வத்தை அரசு பறிமுதல் செய்து பலருக்கும் உதவும்படியான பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்பதே இதற்கு உரிய சிக்கல் தீர்வாகும். இதைத்தான் திருவள்ளுவர் மறைமுகமாகக் கூறியிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள என்பதற்கு, ஆக்கம் அன்ன நீரார்க்கே உளவாதல் வேண்டும் என்பது கருத்து. திருவை அறக்கயிற்றால் கட்டுதலும் இன்னதே.

4.3 காராடும் வெள்ளாடும்

காம வேதனை கொண்ட மகளிர் திங்களை நோவதாகக் கூறுவது இலக்கிய மரபு. இங்கே, அல்ல.மப் பிரபுமேல் காதல் கொண்ட மாயை என்பவள் திங்களை நொந்து புலம்புதலில் சிவப்பிரகாசர் ஒரு புதுமையைக் கையாண்டுள்ளார். அதாவது, அவள் கூறுகிறாள்: திங்களே! உடலுக்குள் செல்லுமாறு நஞ்சை உண்டவனாகிய சிவன், நின்னை அவ்வாறு செய்யாமல், உடலின் உட்பகுதியோடு தொடர்பு இல்லாத முடிமேல் நின்னை வைத்திருப்பது, நீ நஞ்சினும் கொடிய பொருள் என்பதால்தான். உன்னை அமுத கலை என்று சொல்வது, மக்கள் காராட்டை வெள்ளாடு என்று சொல்வது போலாம்.

“அங்கமதில் நஞ்சிருத்தினோன் அங்கமல்லா
அவிர்சடை மேல்
தங்ககினை வைத்திட்டது கின்கொடுமை
கருதித் தானன்றோ
பொங்கும் அமுதகலை என்ன கின்னைப்
புகறல் வெண்திங்காள்
இங்கு மனிதர் காராட்டை வெள்ளா
டென்பது ஒக்குமால்” (5.59)

செம்மறியாட்டின் உடலை நோக்க, காராட்டின் உடல் தெளிவாக - தூய்மையாக இருப்பதால், காராட்டை வெள்ளாடு என்றனர் போலும். இந்தியர், ஐரோப்பிய வெள்ளையர் போல் இல்லாவிடினும், ஆப்பிரிக்க அட்டைக் கறுப்பர்களை நோக்க ஒரளவு வெள்ளையராவர். காராட்டை வெள்ளாடு என்பதும் இன்னதே!

4.4 கொள்வோர் இல்லாக் குறை:

வனவசை என்னும் நகரத்தில் எந்தக் குறையும் இல்லையாம். அங்ஙன மிருக்கவும், அங்கேயும் ஒரு குறையிருப்பதாகப் புதிய குறை ஒன்று கண்டு பிடித்துள்ளார் சிவப்பிரகாசர். உடை, உணவு, மலர், அணிகலன், மனை முதலியவற்றால் எந்தக் குறையும் இல்லாத அந்த நகரில், கொடுப்பவருக்கு வாங்குபவர் இல்லாதகுறை ஒன்று உள்ளதாம் பாடல்:

“உடுப்போர்க்கு உடுக்கும் துகில்களால்
உண்போர்க்கு உண்ணும் பொருள்களால்
தொடுப்போர்க்கு எடுக்கும் மலர்களால்
அணிவோர்க்கு அணியும் சுடரிழையால்
அடுப்போர்க்கு அடுக்கும் மனைகளால்
குறைபா டுடைய தன்று அதுதான்
கொடுப்போர்க்கு இரப்பார் இல்லாத
குறை ஒன்றுளது கூறுங்கால்” (3.16)

கொடுப்போர்க்குக் கொள்வோர் இல்லாத குறை இருப்பதாகக் கூறியதன் வாயிலாக, அந்நகரின் மாபெரு வளத்தைப் புதிய முறையில் அறிவித்துள்ளார் அடிகளார்.

இங்கே கம்பரின் பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது. கோசல நாட்டில் வறுமையே இன்மையால் கொடுக்கும் வள்ளல் செயலுக்கும், பகைவர் இன்மையால் மறத்திற்கும், பொய் இல்லாமையால் உண்மைக்கும், மக்களிடையே கேள்விச் செல்வம் மிக்கிருத்தலால் அறியாமைக்கும் இடம் இல்லையாம். இவ்விதமாக அந்நாட்டின் பெருமையைக் கூறியுள்ளார் கம்பர். பாடல்:

“வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர்செறுகர் இன்மையால்
உண்மை இல்லை பொய்உரை இலாமையால்
ஒண்மை இல்லை பல்கேள்வி ஓங்கலான் (1-2-53)

சிவப்பிரகாசரும் கம்பரும் இவ்வாறு கூறியிருப்பதில் உள்ள உட்கருத்து என்ன?

வரலாற்றாசிரியன் நடந்ததை மட்டும் கூறுபவன். இலக்கிய ஆசிரியனோ, இருந்ததைக் கொண்டு, மேலும் இருக்க வேண்டியதைக் கூறுபவன்.

இந்த அடிப்படையில், ஒரு நாட்டில் உடை, உணவு, உறையுள், செல்வம் முதலியன குறையின்றி நிறைந்திருக்க வேண்டும் என அடிகளார் மறைமுகமாக வலியுறுத்தியுள்ளார்.

இதே அடிப்படையில், ஒரு நாடு என்றால், அதில், வறுமை, பகை, பொய், அறியாமை முதலியவை கூடா எனக் கம்பர் மறைமுகமாக வலியுறுத்தி யுள்ளார். இத்தகைய கருத்து வெளிப்பாடுகள் புதுமையா யுள்ளன வன்றோ?

5. சுவையான சில செய்திகள்

5.1 வெறுத்து விரும்பல்

பொழிலின் குளிர்ச்சி மிகுதி புலவர்களால் பலவாறு புனையப்படும். வானளாவிய குளிர்ந்த பொழில் ஒன்றின் வழியாக ஞாயிறு செல்வதால், வெப்பமான ஞாயிற்றை இழுத்துச் செல்லும் குதிரைகள் ஒரளவு களைப்பு குறைந்து மீண்டும் செல்லும் ஆற்றலைப் பெற்றனவாம் எனக் கம்பர் மராமரப் படலத்தில் கூறியுள்ளார். பாடல்:

“திக்கும் வானமும் செறிந்த அத்தருகிழல் சீதம்
புக்கு நீங்கலின் தளர்கில இரவி தேர்ப்புரவி” (5)

என்பது பாடல்.

சிவப்பிரகாசர் வசவண்ணர் கதியில், ஒரு பொழிலின் குளிர்ச்சியின் மிகுதியைப் பின்வருமாறு புனைந்துள்ளார்: கடுமையான வெயிலில் வழி நடந்து வெப்பம் தாங்காமல் களைப்படைந்து அந்தப் பொழிலில் வந்து தங்கினவர்கள், அந்தப் பொழிலின் குளிர்ச்சி மிகுதியால் உடல் நடுங்கி மீண்டும் வெயிலை விரும்பினார்களாம். பாட்டு:

“தனைவிரும்பி வந்துஅடைந்தவர் தம்மைமுன் வெறுத்த
தினகரன்கதிர் விரும்புறச் செய்து. பொழில் திகழ்வது” (14-11)

5.2 பிடியின் ஊடல்

மக்களினத்தில், கணவன் மற்றொரு பெண்ணை விரும்புவதாகத் தெரிந்தால் மனைவி ஊடல் கொள்ளும் செயல், அஃறிணை உயிரிகளிடமும் நிகழும் போலும், இது பல நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

ஒரு மாடத்தில் பல பழ வகைகளும் கிளி முதலிய பறவை வகைகளும் பொம்மையாகச் செய்து வைக்கப் பெற்றிருந்தன. உயிர் உள்ள ஓர் ஆண் கிளி, பொம்மை வடிவில் உள்ள பெண் கிளியின் பக்கத்தில் நின்று அங்கிருந்த பொம்மைக் கனியை உண்மைக் கனி என்று கொத்திற்றாம். எட்டிய தொலைவில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த பெண் கிளி, தன் கணவனாகிய ஆண் கிளி இன்னொரு பெண் கிளியை விரும்பி அதன் அருகில் நிற்பதாக எண்ணி ஊடல் கொண்டதாம். இவ்வாறு பல கற்பனைகள் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. சிவப்பிரகாசரின் படைப்பில் உள்ள இத்தகைய ஊடல் ஒன்றைக் காண்பாம்:

திருப்பருப்பதம் என்னும் மலைச் சாரலில், ஒரு களிறு (ஆண் யானை) தளிர் இலைகளைப் பறித்துத் தேனில் தோய்த்துப் பிடியின் (பெண் யானையின்) வாயில் கொடுத்துக் கொண்டிருந்ததாம். இந்தக் காட்சி, பக்கத்தில் இருந்த பளிங்கு அறைச் சுவரில் தெரிந்ததாம். தளிரை உண்டுகொண்டிருந்த பெண்யானை பளிங்குச் சுவரில் இதைக் கண்டு, தன் கணவனாகிய களிறுதான் வேறொரு பிடிக்கு உணவு தருவதாக எண்ணிக் களிற்றின்மேல் ஊடல் கொண்டதாம். பாடல்:

“தளிர்க் குளகினைத் தேன்தோய்த்துத்
தனதுவாய் கொடுக்கும் செய்கை
பளிக்கறை அதனுள் கண்டு
பரிந்து வேறொன்றினுக்கு இங்கு
அளித்த தென்று உளம்மயங்கி
அரும்பிடி ஒருகூர்ங் கோட்டுக்
களிற்றினை முனிந்து செல்லும்
கம்பலை உடைத்து அக்குன்றம்” (19-23)

என்பது பாடல். குளகு = இலை உணவு.

5.3 பறவைகளை மிரட்டும் பொய்த் தீ

ஒரு பொய்கையில் அரக்கு ஆம்பல் எனப்படும் சிவந்த ஆம்பல் மொக்குகள் வாய் அவிழ்ந்து நிரம்ப மலர்ந்தனவாம். அதைக் கண்ட தாய்ப் பறவைகள், தண்ணீர் தீப்பற்றி எரிகிறது என்று அஞ்சி, தம் குஞ்சுகளைச் சிறகாகிய கைகளில் ஒடுக்கிக் காத்தனவாம். இக்கற்பனை முத் தொள்ளாயிரம் பாடல் ஒன்றில் உள்ளது. பாடல்.

“அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம் தீப்பட்ட தெனவெரீஇப் - புள்ளினம்தம்
கைச்சிறகால் பார்ப்புஒடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு” (110)

என்பது பாடல். பார்ப்பு = குஞ்சு. கவ்வை = கூச்சல் ஒலி - இதிலிருந்து பிரபுலிங்க லீலைக்கு வருவோம்.

திருப்பருப்பத மலையில் உள்ள ஒளிமரத்தில் பகலில் பறவைகள் கூடுகளில் முட்டையிட்டு வெளியில் சென்று இரைதேடிப் பின் இருள் தொடங்கும் மாலையில் மரத்தை அடைந்தபோது, அம்மரம் ஒளிமயமாகத் திகழ்ந்ததால், மரம் தீப்பற்றிக் கொண்டது என அஞ்சி மேலேயே வட்ட மிட்டு வருந்தினவாம். பாடல்:

“செங்கதிரவன் எழுந்த திவாவிடைக் குடம்பை தெற்றிப்
பொங்குஒளி மரத்தில் சீர்சால் புள்ளினம் பொறையுயிர்த்துக்
கங்குலின் அடைகிடப்பக் கருதிவந்து அதனைக் கண்டு
வெங்கனல் கொளுந்திற்றுஎன்று மீமிசைச் சுழன்று இரங்கும்” (19-19)

என்பது பாடல். திவா = பகல்; குடம்பை = கூடு; பொறை உயிர்த்தல் = முட்டையிடுதல், ஒளிமரத்திற்குச் சோதி மரம் என்ற பெயரும் உண்டு. இம்மரம் இரவில் ஒளி வடிவாகத் தெரியுமாம்.

5.4 திங்களின் கொடுமை

திங்கள் (நிலா) தோன்றி, தன்னைப் பெற்ற தாய் அலை மோதித் தலைசாயும் படிச் செய்கிறதாம். தன்னுடன் பிறந்தவளின் வீட்டை மூடிப் பூட்டிவிடுகிறதாம். இவ்வாறு தாய்க்கும் தமக்கைக்குமே கேடு செய்யும் திங்கள், உறவு இல்லாத அயலாரை என்ன பாடு படுத்துமோ?

இவ்வாறு, அல்லமப் பிரபுவைக் காதலித்துக் காம வேதனை கொண்டுள்ள மாயை என்பவள் திங்களைத் திட்டுகிறாள்: பாடல்:

“தாய்வா யடைந்து மிருந்தலையை
மோதிமோதிச் சலித்தலறக்
காய்வாய் கிலவே உடன்பிறந்தாள்
இருந்து வாழும் கடிமனையை
நீ வான் எழுந்து வந்தழிப்பா
யென்றால் அந்தோ நிலையின்றித்
தேய்வாய் கின்னோடு இயைபில்லா
என்னை என்ன செய்யாயோ” (5.57)

திங்களும் திருமகளும் கடலில் தோன்றியதாகக் கூறுவது புராண இலக்கிய மரபு. இதே சிவப்பிரகாச அடிகளார் தம் நன்னெறி என்னும் நூலில், தண்ணென் கதிர் வரவால் பொங்கும் கடல், (18) என்றார். தண்ணென் கதிர் திங்கள். முழு நிலாப் பருவ நாளில் கடல் மிகவும் அலைமோதி மோதி அலறும் - இரைச்சலிடும். அதை இப்பாடலின் முதலடியில் குறிப்பிட்டுள்ளார். மிகுந்தலையை மோதி என்னும் தொடரில், தாயாகிய கடல், நிலவால், தலையை மோதி மோதி வருந்துகிறது என்னும் பொருள் நிழலோடுகிறது. இதையே மிகுந்து அலை மோதி எனப் பிரிக்கின், அலை மிகுதியாய் அடிக்கிறது என்னும் பொருள் தெரிகிறது. இவ்வாறு இருபொருள் (சிலேடை) அமையப் பாடப்பட்டுள்ளது ஒரு சுவையன்றோ?

அடுத்தது, உடன் பிறந்தவளின் மனையை மூடி அழிப்பது. உடன் பிறந்தாள் திருமகள். திருமகள் தங்கியிருக்கும் மனை (வீடு) செந்தாமரை, நிலா தோன்றியதும் தாமரை மலர் முடிக்கொள்ளும் அல்லவா? அதைத்தான், இவ்வாறு உடன் பிறந்தவளின் மனையைக் கெடுப்பதாகக் கூறியுள்ளார்.

பிரிந்த தலைவி திங்களை வெறுத்துப் பேசுவதாகக் கூறுவது இலக்கிய மரபல்லவா? எனவே, தாய்க்கும் தமக்கைக்கும் தொல்லை கொடுக்கும் திங்கள், ஓர் உறவும் இல்லாத எனக்குத் தரும் தொல்லையைச் சொல்லவா வேண்டும் என்று கூறும் முறையில் மாயையின் வாயிலாக அடிகள் பாடியுள்ளார்.

திங்கள் தேய்வதும் வளர்வதுமாய் இருப்பதைக் குறிப்பிட்டு, நிலையில்லாமல் தேய்கின்ற நிலவே எனக் கூறித் திட்டுகிறாள் மாயை. 5.5 கொங்கைக் குடம்

கெளசிகன் என்னும் மன்னன் அக்கமாதேவி என்னும் பெண்ணைத் தனிமையில் கண்டு, நெருப்பில் உருகிய அரக்கு போல உள்ளம் உருகி, பூங்கொடியே காமக் கடலை நான் கடப்பதற்கு உன் கொங்கையாகிய குடத்தைத் தருவாயாக என்று கெஞ்சினான் பாடல்:

“மடங்தையைத் தனிக்கண்டு அங்கி
மருவிய அரக்கே போல
உடைந்து நெக்குருகி ஆற்றா
உள்ளமோடு இளம்பூங் கொம்பே
கடந்திடற்கு அரிய காமக்
கடல் கடந்தேறக் கொங்கைக்
குடம்தரத் திருவுளத்தில் கோடி
என்று அரசு இறைஞ்ச” (10.44)

கொங்கைக்குக் குடத்தை ஒப்புமையாகக் கூறுவது இலக்கிய மரபு. இங்கே, கொங்கையாகிய குடம் எனக் கொங்கை குடமாக உருவகிக்கப்பட்டுள்ளது. கொங்கைக்கு யானைக் கொம்பு, தாமரை மொக்கு, மலை முதலியவற்றை உவமையாகக் கூறுவதும் உண்டு. இங்கே, கொங்கைக் கொம்பைக் கொடு - கொங்கை மொக்கைக் கொடு - கொங்கை மலையைக் கொடு என்றெல்லாம் கூறாமல், கொங்கைக் குடம் கொடு என்றது ஏன்? ஆற்றைக் கடப்பதற்குக் குடத்தைக் கவிழ்த்துப் பிடித்துக்கொண்டு நீந்திச் செல்லும் வழக்கம் உண்டு. இங்கே காமக் கடலாகிய பெரிய நீர்நிலையைக் கடக்க வேண்டுமாதலின் கொங்கை குடமாக உருவகிக்கப்பட்டது. ‘கும்பத்தின் அணைத்தவும் அணையா’ என்பது திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம். கும்பம்-குடம்.

5.6 மருங்குல் வெளி

தெருவில் செல்லும் இராமனைக் காணப் பெண்கள் நெருக்கியடித்துக் கொண்டு நின்றனர். முன் வரிசையில் நின்றவர்கள் எளிதாக இராமனைக் காண முடிந்ததாம். பின் வரிசையில் நின்றவளுக்கு முன் வரிசையில் நின்றவர்கள் மறைத்துக்கொண்டிருந்ததால் காணமுடிய வில்லையாம். அதாவது, முன்வரிசையில் நின்றவர்களின் இடுப்புக்கு மேல் உள்ள பருத்த முலை, அடர்ந்த கூந்தல், இடுப்பின் கீழே உள்ள அல்குல் பரப்பு ஆகியவை மறைத்துக்கொண்டிருந் தனவாம். ஆனால் அவர்களின் இடை மெலிந்திருந்ததால், முன் வரிசையில் நின்ற இரண்டு பெண்களின் இடையின் நடுவே உள்ள இடைவெளி வழியாகப் பின் வரிசையில் உள்ளவள் இராமனைக் கண்டாளாம். பாடல்! இதனைக் கம்பர், பால காண்டம் உலாவியல் படலத்தில் கூறியுள்ளார். பாடல்:

“கருங்குழல் பாரம் வார்கொள்
கனமுலை கலைசூழ் அல்குல்
நெருங்கின மறைப்ப ஆண்டுஓர்
நீக்கிடம் பெறாது விம்மும்
பெருந்தடங் கண்ணி காணும்
பேரெழில் ஆசை தூண்ட
மருங்குலின் வெளிக ளுடே
வள்ளலை நோக்கு கின்றாள்” (17)

என்பது பாடல். பிரபுலிங்க லீலைக்கு வருவோம்:

இளவரசியாகிய மாயை என்பவள், ஆடவர்கள் வராதபடி வாயிலை அடைத்துக் கோயிலின் ஒரு புறம் நடனம் ஆடினாள். இதைக் காண விரும்பிய இளைஞர்களுள் சிலர் மதிலிலுள்ள துளைவழியாகக் கண்டார்களாம். சிலர் மதில் ஒரம் இடம் கிடைக்காமையால், நின்றிருந்தவர் களின் தோள்மேல் ஏறிக் கொண்டு மதிலின் மேல் துளை வழியாகப் பார்த்தார்களாம். (திரைப்பட அரங்கில் கட்டணச் சீட்டு (டிக்கெட்) வாங்க, கும்பலாக நின்றிருப்பவர்களின் தலைமேல் ஒருவர் கவிழ்ந்து படுத்துக் கொண்டு நீந்திச் செல்வதைக் காணலாம்).

இந்த இளைஞர்கள் என்ன கண்டார்கள். மாயையின் மருங்குல் (இடை) என்னும் வெற்றுவெளியைக் கண்டார்களாம்:

“பொன்னெயிலின் ஒன்றிய புழைக்குள் முகம்வைத்தும்
துன்னி முனம் கின்றவர் தோளிடை இவர்ந்தும்
மின்னென நடம்புரியும் மெல்லியல் மருங்குல்
என்னும் வெளிகானிய இடர்ப்படுவர் மைந்தர்” (4-55)

பெண்கட்கு இடை சிறுத்திருப்பதால், இடையே இல்லை எனக் கற்பனையாகக் கூறுவது இலக்கியமரபு. அவ்வாறே, கம்பர் மருங்குலின் வெளி என்றும், சிவப்பிரகாசர் 'மருங்குல் என்னும் வெளி என்றும் கூறியுள்ளனர்.

இடுப்பு மடிப்பு விழுந்திருக்கும் பெண்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு என்றபடி உண்டி சுருங்கி மெல்லிய இடுப்புடன் இருப்பவர்கட்கு மகப்பேறு எளிதாயிருக்கும்; குழந்தை விரைவில் வெளியில் வரும்படியான அழுத்தம் (Pressure) உண்டாகும் என்றெல்லாம் கருத்து கூறப்படுகிறது.

6.6 சொல்லாட்சி

6.1 அள்ளிக் கொள்ளும் அழகு

அல்லமப் பிரவுவை “அள்ளிக் கொள்ளும் பேரழகன்” (51-31)

என்று அடிகளார் குறிப்பிட்டுள்ளார். அழகை அள்ள முடியாது. மிகுந்த அழகு என்னும் பொருளில் இந்தச் சொல்லாட்சி கையாளப்பட்டுச் சுவை பயக்கிறது.

6.2 நீங்கிய உடையாள்

அக்கமாதேவி என்பவள் துறவு முதிர்ச்சியால் உடையின்றிச் சென்றாளாம். இதை, ‘நீங்கிய உடையாள்’ என எதிர் மறுக்கும் உடன்பாட்டால் கூறியுள்ளார். இது, அகநானூற்றில உள்ள ‘சென்று சேக்கல்லாப் புள்ள’ (42-8) என்பது போலவும், திரு முருகாற்றுப் படையில் உள்ள ‘கழிந்த உண்டியர்’ (4- 31) என்பது போலவும், கம்ப ராமாயணத்தில் உள்ள ‘பயில்வு இல் கல்வியார்’ (4-3-32) என்பது போலவும் உள்ள சொல்லாட்சியாகும். இஃது ஒர் இனிய இலக்கிய நடையாகும்.

6.3 பறந்திடா வண்டு

கொக்கு என்னும் சொல்லுக்கு, மாமரம், பறக்கும் ஒரு பறவை என்ற பொருள்கள் உண்டு. பறவாக் கொக்கு என்றால், இத்தொடர் பறக்காத மாமரத்தைக் குறிக்கும். அதுபோல், வண்டு என்னும் சொல்லுக்கு, வளையல், பறக்கும் வண்டு என்னும் பொருள்கள் உண்டு. பறந்திடா வண்டு என்றால், இத்தொடர், பறக்காத வளையவைக் குறிக்கும். சிவப்பிரகாசர் கைலாச கதியில் உள்ள.

“பறந்திடா மணிவண்டு படுமலர்” (23)

என்னும் பாடலில் ‘பறந்திடா மணி வண்டு’ என வளையலைக் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு சுவையான சொல்லாட்சியாகும். (மணி = அழகு. மலர் = மலர் போன்ற கை)

6.4 எட்டிப் பார்த்தல்

மாயை வளர்ந்து வருகிறாள். மார்பில் கொங்கைகள் தோன்றத் தொடங்கிவிட்டன. மாயையின் பேரழகால் துறவிகளாம் பறவைகளும் காம மயக்க வலையில் விழுவார்களாம். துறவிகள் எந்த நிலையில் உள்ளனர் என்பதை அறிய மார்பில் இருந்து கொண்டு முலைகள் எட்டிப் பார்த்தனவாம்.

மார்பில் முலைகள் சிறிய அளவில் முளைத்திருப்பதை, இவ்வாறு ‘எட்டிப் பார்த்தல்’ என்னும் சொல்லாட்சியால் கூறி இலக்கியச் சுவை தந்துள்ளார் அடிகளார். பாடல்:

“முட்டித் துறவாம் பறவை மயல்
வலையில் படுதல் மெல்ல மறைந்து
எட்டிப் பார்ப்பு என முகங்கொண்டு
எழுந்தன மார்பில் இள முலைகள்” (3-56)

என்பது பாடல் பகுதி. வலையில் பறவை விழுவதை மறைந்திருந்து தானே வேடர்கள் பார்ப்பார்கள். இங்கே முலைகள் மறைந்திருத்தல் என்பது மேலாடையால் மூடப்பட்டிருப்பதாகும். இந்தச் சொல்லாட்சியை அடிப் படையாகக் கொண்டு, அம்பிகாபதி காதல் காப்பியம்' என்னும் நூலில் இந்த அமைப்பு பின்வருமாறு புனையப் பட்டுள்ளது.

“இடமது சிறிதே ஈந்ததும் பெரிய
மடமுழு தினையும் மடக்குவோர் மான
எட்டிப் பார்க்க இடம் சிறிதளவே
விட்ட மார்பின் வியலிடம் முழுமையும்
தட்டிக் கொண்ட தளதள ஈகில்கள்” (2:21-25)

என்பது பாடல் பகுதி. இத்தகைய நயமான சொல்லாட்சிகள் பல, நூலில் இடம் பெற்றுள்ளன. -

7. திருக்குறள் ஆட்சி

திருக்குறள் ஆட்சி பன்னிரண்டுக்குமேல் பிரபுலிங்க லீலையில் இடம் பெற்றுள்ளன. ஈண்டு இரண்டு மட்டும் கtrண்பாம்:

7.1 தொழு தெழுதல்

மாதாம்பிகை என்னும் பெண்மணி கொழுநனைத் தொழுது எழுவாளாம்: 'பைந்தொடி கொழுநன் தொழு தெழு தொழிலாள்". (9-21)

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை” (55)

என்னும் குறள் கருத்து இதில் உள்ளது.

7.2 உடுக்கை யிழந்தவன் கை

அல்லம தேவர், உடையிழந்தவன் கைபோல, அடியர் களின் துன்பம் துடைப்பாராம்:

“உடையிழந்த ஒருவன் கரமெனக்
கடிதடைந்து களைந்தருள் செய்யுநாள்” (13.2)

என்னும் பாடல் பகுதியில்,

“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு” (788)

என்னும் குறள் கருத்து அடங்கியுள்ளது. இவ்வாறு பல உள.

8. உவமையணி

இந்நூலில் உவமையணி மலிந்துள்ளது. தற்குறிப்பேற்ற அணி முதலியவும் உள்ளன. ஈண்டு உவமையணி சில காண்பாம்:-

8.1 தளர்ந்துழி உதவும் கல்வி

முனிவர்கள் தளர்ச்சியுற்றிருந்த போது அவர்களின் தளர்ச்சியைப் போக்கத் துருவாசமுனி வந்தாராம். இதற்கு உவமையாக,

“தளர்ந்துழி உதவும் கல்விதானென” (3-34)

என்பது கூறப்பட்டுள்ளது. சிறந்த உவமை இது.

“இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார் வாய்ச் சொல்” (415)

என்னும் குறள் ஈண்டு எண்ணத்தக்கது.

8.2 குழந்தை வளர்ப்பு

மோகினி மாயை என்னும் குழந்தையை அருமையாகப் போற்றி வளர்த்தமைக்கு மூன்று உவமைகள் கூறப் பட்டுள்ளன. அவை:-

“மிடியன் ஒருசெய்யாளன் அச்செய்
விளையக் காக்கும் செயல்போலப்
படியில் கல்வி விரும்பினோன்
பாடம் போற்றுமது போல
ஒடிவில் செங்கோல் மனுவேந்தன்
உலகம் புரக்கு முறைபோலக்
கொடிய நோன்பு செய்தீன்ற
கொடியை வளர்த்தாள் மோகினியே” (3.49)

என்பது பாடல். இதில் அரிய பெரிய ஆழ்ந்த கருத்துடைய மூன்று உவமைகளைக் காணலாம்.

9. தத்துவ ஆய்வு

அல்லமரும் கோரக்கர் என்பவரும் தத்துவ ஆய்வு செய்து உரையாடுகின்றனர். உயிர் என்பது பற்றியும் ஆன்மா என்பது பற்றியும் அல்லமர் கோரக்கருக்கு விளக்குகிறார்.

உயிர் என்பது ஆன்மாவின் பெயர் அன்று. மூக்கின் வழியாகப் போய் வந்து கொண்டிருக்கும் மூச்சுக் காற்றுக்குத்தான் உயிர் என்பது பெயராகும். உயிரை உடைய ஆன்மா என ஒன்றுள்ளது. உயிர் என்னும் பெயர் ஆகுபெயராய் அதனை உடைய ஆன்மாவைக் குறிக்கிறது. பாடல்;

“உயிர் எனும் பெயர் இயங்குகாற்கு இயற்பெயர் உரைப்பின்
அயலுறுந் தனக்கு அப்பெயர் ஆகுபெயராம்” (19-38)

என்பது பாடல் பகுதி. உயிர் என்னும் பெயர், மூச்சுக் காற்றுக்கு உரிய இயற்பெயராம் - ஆன்மாவிற்கு ஆகு பெயராம். இது பற்றி மெய்யறி வாய்வாளரிடம் கருத்து வேற்றுமை இருக்கலாம். தனக்கு - ஆன்மாவிற்கு உயிர்ப்பது (மூச்சு விடுவது) உயிர்.

இப்பாடவில் உள்ள ‘காற்கு’ என்னும் சொல், கால் என்பது ‘கு’ என்னும் நான்காம் வேற்றுமை உருபு பெற்ற சொல்லாகும். கால் + கு = காற்கு. ‘காற்கு’ என்றால் காற்றுக்கு என்று பொருளாம். ‘காற்கு’ என்பதற்கு முன்னால் இயங்கு என்னும் சொல் சேர்ந்து ‘இயங்கு காற்கு’ என்றுள்ளது.

காற்று எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பது. கால் என்னும் தமிழ்ச் சொல்லுக்கும், வாயு என்னும் வட மொழிச் சொல்லுக்கும் பொருள் இஃதே. காற்று உலவிக் கொண்டே இருப்பதால், திவாகர நிகண்டில் காற்றுக்கு உலவை என்னும் பெயர் தரப்பட்டுள்ளது (1-37). காற்று எப்போதும் சரித்துக் கொண்டே (இயங்கிக்கொண்டே) இருப்பதால் ‘சாரிகை’ என்னும் பெயரும், சதா சென்று கொண்டே இருப்பதால் ‘சதார கதி’ என்னும் பெயரும் சூடாமணி நிகண்டில் காற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

10. பிற துறைகள்

மருத்துவம், சோதிடம், தருக்கம் முதலிய துறைகளும் பிரபுலிங்க லீலையில் இடம் பெற்றுள்ளன.

10.1 மருத்துவம்

ஆவிற்கு (பகவுக்கு) நோய் வரின், அதன் பாலையே கறந்து அதற்கு ஊட்டினால் நோய் நீங்குமாம். பாடல்:

“ஆவுறு பிணிகெட ஆவின் பால்கறந்து
ஆவினை ஊட்டல் போல்” (16-15)

என்னும் பாடல் பகுதியால் மாட்டு மருத்துவமும் அறிவிக்கப் பட்டுள்ளது.

10.2 கணி (சோதிடம்)

மாயை என்னும் கன்னியின் அத்தத்தில் (கையில்) கடகம் என்னும் அணிகலனைப் புனைந்தாளாம் ஒரு தோழி. பாடல்:

“கன்னி அத்தம் வந்து இனமணிக் கற்கடகத்தின்
மன்னி உற்றது அற்புதம் என வளைபல காக்க
வின்னுதல் கருங்கண் மடமாது கை விளங்கப்
பொன்னின் கற்கடகம் புனைந்தனள் ஒரு பூவை” (4-13)

என்பது பாடல்: மேடம், இடபம், மிதுனம், கடகம் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம், என்னும் பன்னிரண்டு இராசிகளுள், இருபத்தேழு விண் மீன்களுள் (நட்சத்திரங்களுள்) ஒன்றான அத்தம் (அஸ்தம்) என்னும் விண்மீன் கன்னி இராசிக்கு உரியது. அது, (கற்) கடக இராசியில் வந்து உற்றது அற்புதம் என்று சொல்லும் படி, கன்னியின் அத்தத்தில் (கையில்) கடகம் அணிந்தது இருந்ததாம். கணிப்பாடல் இன்னும் உண்டு.

10.3 தருக்கம்

தருக்கம் என்பதைத் தமிழில் நெறிமுறை எனலாம். தி மேல் நோக்கிச் செல்லும் - நீர் கீழ் நோக்கிச் செல்லும் என்பது தருக்க - நெறி முறை.

திருப்பருப்பத மலை உச்சியிலிருந்து அருவி கீழ் நோக்கி ஓடி வருகிறது. ஒரு யானை அருவி நீரை உறிஞ்சி மேல் நோக்கி விண்ணிலே செல்லும்படி உந்தி எறிகிறதாம். வெப்ப மான ஞாயிறு இந்த அருவி நீர் படலால் குளிர்ந்த திங்கள் போல் குளிர்கிறதாம்: இது, தீ மேல் நோக்கியும் நீர் கீழ் நோக்கியும் செல்லும் என்னும் தருக்க - நெறிமுறைக்கு மாறாக உள்ளதாம். பாடல்:

“தூங்கிசை அருவிபாயத் தொளைக்கை
வெண்கோட்டு உரல்கால்
ஈர்ங்கவுள் நெடுகல்யானை ஏற்ப
வெந்தழல் அலாமல்
தேங்கு தண்புனல் மேல்நோக்காது
என்பது தீரச் சென்று
பூங்கதிர் பணிவெண் திங்கள்
போன்மெனத் திவலை செய்யும்” (19-16)

என்பது பாடல். ஏற்ப = மேல் நோக்கி எறிய பூங்கதிர்= ஞாயிறு.


இவ்வாறாகப் பிரபுலிங்கலீலை என்னும் இலக்கிய உலகில் பல துறைக் காட்சிகளைக் கண்டு களிக்கலாம். சிவப்பிரகாச அடிகளாரைக் ‘கற்பனைக் களஞ்சியம்’ என்னும் சிறப்புப் பெயரால் குறிப்பிட இந்நூல் ஒன்றே போதுமே!