உள்ளடக்கத்துக்குச் செல்

திருப்புமுனை/8

விக்கிமூலம் இலிருந்து

8


இனியன் தன் வகுப்புத் தோழனாயிருந்தும் மணி ஒருமுறைகூட அவன் வீட்டுக்கு வந்ததில்லை. வர விரும்பியதும் இல்லை. இன்று கட்டுரை ரகசியம் தெரிந்துவர தன் நண்பர்களுக்காக வலுக்கட்டாயமாக வரவேண்டியதாகி விட்டது. இனியனின் பேச்சும் செயலும் மணிக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இருவரும் பேசிக் கொண்டே வீட்டை நெருங்கினார்கள். இனியன் வீடு கூரை வீடாக இருந்தாலும் விசாலமாக இருந்தது.

“இனியன்! உங்க வீடு கூரை வீடாக இருந்தாலும் ரொம்பச் சுத்தமாகவும் அழகாகவும் இருக்குடா. நீ படிக்கிற அறை எது'டா?”

“இதோ: இந்தச் சின்ன அறைதான்’டா நான் படிக்கிற அறை.”

மணியைத் தன் படிப்பறைக்குள் அழைத்துச் சென்று காட்டினான் இனியன். மணி அந்த அறை முழுதும் தன் பார்வையை ஓட்டினான்.

“சின்ன அறையாக இருந்தாலும் ஆடம்பரம் இல்லாம அமைதியான இடமா இருக்குடா. ஒரு சின்ன நூலகம்கூட வச்சிருக்கியே. எல்லாப் புத்தகமும் உங்கப்பா வாங்கிக் கொடுத்ததாடா?”

“எங்கப்பாவுக்கு அவ்வளவு பணவசதி ஏதுடா? எல்லாம் நான் பரிசா வாங்கின புத்தகங்கள்தான்!”

“இனியன்! நீ புத்தகங்களை அடுக்கி வச்சிருக்கிற அழகைப் பார்த்தாலே அவைகளை எடுத்துப் படிக்கனும், போலத் தோணுதுடா. அமைதியான சூழ்நிலையிலேதான் நிறையப் படிக்க முடியும்’னு நம்ம ஆசிரியர்கூட அடிக்கடி சொல்வார். படிக்குமிடம் தெய்வ சந்நிதிபோல இருக்கணும்னு நான் எங்கேயோ படிச்சுக்கூட இருக்கேன்’டா,”

“உண்மைதான்’டா” மணி கூறியதை இனியன் முழுமனதோடு அங்கீகரித்தான்.

இனியனின் அப்பாவைத் தன் அப்பாவோடு மணி ஒருகணம் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அது ஏக்க உணர்வாக வெளிப்பட்டது.

“இனியன்! உங்க அப்பா எவ்வளவோ தேவலை’டா. எங்கப்பா அதுக்கு நேர்மாற்றம்’டா. நிறைய படிக்காதே; படிச்சா மூளை குழம்பிடும்; உன் அண்ணன் மாதிரி மூளையிலே கட்டி வந்து செத்துப் போயிடுவே’ன்னு சொல்லி அடிக்கடி பயமுறுத்தறார். பாடப் புத்தகம் தவிர வேறு புத்தகங்களை வீட்டிலே படிக்கவே விடமாட்டார்’டா. எங்க வீட்டிலே எங்கப்பா கணக் குப் புத்தகங்களைத் தவிர வேறு புத்தகங்களைப் பார்க்கவே முடியாது. உனக்கு இருக்கிற படிக்கிற சூழ்நிலை எனக்கு இருந்தா நானும் எவ்வளவோ படிச்சு பரிசெல்லாம் வாங்குவேன்.

தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினான் மணி.

“மணி! நீ கட்டுரைப் போட்டியிலே சேர்ந்திருக்கிறது உங்கப்பாவுக்குத் தெரியுமா?”

“தெரிஞ்சா திட்டுவார்'டா!”

“உண்மையிலேயே உங்கப்பா ஒரு அதிசய மனிதர்தான்’டா.”

பேச்சை மாற்ற முற்பட்டான் மணி.

“கட்டுரை எழுத உதவற மாதிரி ஏதாவது புத்தகம் இருந்தால் கொடு'டா.” தான் வந்த நோக்கத்தை இனியனுக்கு நினைவுபடுத்தினான் மணி. தன் புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து மணிக்கு நேராக நீட்டினான்.

“இதோ பார் மணி! அறிவுச் சுடர்'ங்கிற புத்தகம். நம்ம ஆசிரியர் எழுதியது. கட்டுரைத் தொகுப்பு நூல். இதிலே ‘உழைப்பே செல்வனும்’ ஒரு கட்டுரை இருக்கு. அதைப் படிச்சிட்டு போட்டிக் கட்டுரையை நீ எழுதலாம்.

நூலை மணியின் கையில் கொடுத்தான். மணி தன் கையிலிருந்த நூலை புரட்டிக் கொண்டே இனியனை நோக்கி வியப்போடு கேட்டான்:

“இதை என்கிட்டே கொடுத்திட்டா நீ எப்படிடா போட்டிக் கட்டுரை எழுதுவே?”

“நான் இதையெல்லாம் முன்பே படிச்சிட்டேன். எழுதறபோது மனசிலே என்ன வருதோ அதை எழுதுவேன். இன்று இரவு போட்டிக் கட்டுரை எழுதலாம்’னு இருக்கேன். நீ இந்தப் புத்தகத்தை எடுத்துக்கிட்டுப் போ.”

இனியன் தன் திறமை மீது கொண்டுள்ள நம்பிக்கையும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணமும் மணியைச் சிறிது நேரம் திக்குமுக்காட வைத்தது. இனியனின் இனிய பண்பை நினைந்து நெகிழ்ந்தான்.

“ரொம்ப நன்றி இனியன். நான் வர்றேன்” என்று கூறி விடைபெற்றுச் சென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=திருப்புமுனை/8&oldid=489836" இலிருந்து மீள்விக்கப்பட்டது