சோழர் வரலாறு/மூன்றாம் இராசேந்திரன்

விக்கிமூலம் இலிருந்து

8. மூன்றாம் இராசேந்திரன்
(கி.பி. 1245-1279)

முன்னுரை : மூன்றாம் இராசேந்திரன் கி.பி.1216-இல் சோழப் பேரரசன் ஆனான். ஆனால், இராசராசற்கு இவன் இன்ன முறையில் உறவினன் என்பது புலப்படவில்லை. இராசராசன் உயிருடன் இருந்த பொழுதே இவனது ஆட்சி தொடக்கம் ஆகிவிட்டது. இவன் இராசராசனுடன் அவனது இறுதிக் காலத்தில் சேர்ந்திருந்தே நாட்டை ஆண்டு வந்தான் என்றும் கூறலாம். இராசராசன் இறுதிக் காலத்தில் அவனுடைய கல்வெட்டுகள் வடஆர்க்காடு, நெல்லூர்க் கோட்டங்களில் காணப்படுகின்றன. ஆயின், அதே காலத்தில் இராசேந்திரன் கல்வெட்டுகள் சோழப் பெருநாடு முழுவதும் காணக்கிடைக்கின்றன. இதனால் இராசேந்திரன் பொது மக்களால் நன்கு வரவேற்கப்பட்டமையும் சிற்றரசரிடம் இவனுக்கு இருந்த செல்வாக்கும் நன்கறியலாம். இவன் கல்வெட்டுகள் முன்னோர் கல்வெட்டுகளில் உள்ள பலவகைத் தொடக்கங்களையே உடையன. நிகழ்ச்சி முறைகொண்டு வேறு பிரித்தல் வேண்டும்.

ஹொய்சளர் பகைமை : ஹொய்சள நரசிம்ம தேவன் மகனான வீர சோமேசுவரன் இக்காலத்தில் ஹொய்சள நாட்டை ஆண்டு வந்தான். இவனது தந்தை இராசராசனை இரண்டு முறை காத்து அரசனாக்கியவன். ஆயின், இவன் எக்காரணம் பற்றியோ இராசேந்திரனிடம் பகைமை பாராட்டியதோடு பாண்டியனை நட்புக் கொண்டிருந்தான். தன்னைப் ‘பாண்டிய குலக் காப்பாளன்’ என்று கூறிக் கொண்டான். ஆனால் இச்சோமேசுவரனை இராசேந்திரனும் சுந்தர பாண்டியற்குப் பின் பாண்டிய நாட்டை ஆண்ட இரண்டாம் மாற வர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1238-1253) என்பவனும் ‘தம் மாமன்’ என்றே கல்வெட்டு களிற் கூறியுள்ளனர். எந்த வகையில் இவன் இருவர்க்கும் ‘மாமன்’ ஆனான் என்பது விளங்கவில்லை. இவ்வுறவு எங்ஙனமாயினும், இவன் பாண்டியனை ஆதரித்து, இராசேந்திரனை வெறுத்து வந்தான் என்பது திண்ணம்.

சோமேசுவரன் தன் தண்ட நாயகரை ஏவிர் சோணாட்டைப் பிடிக்க முயன்றான் என்பது சில கல்வெட்டுகளால் தெரிகிறது. கி.பி.1241-இல் சிங்கண தண்ட நாயகன் என்பவன் சோணாட்டிற்குள் படையெடுத்து வந்தான். அப்பொழுது மூடப்பட்ட ஒரு கோவில் 50 ஆயிரம் காசுகள் செலவில் கும்பாபிடேகம் செய்யப்பட்டது என்று திருமறைக்காட்டுக் கல்வெட்டுக் கூறுகிறது.[1] சோமேசுவரனது மற்றொரு தண்ட நாயகனான இரவிதேவன் என்பவன் கான நாட்டைக் கைப்பற்றினான் என்று புதுக்கோட்டைக் கல்வெட்டுக் குறிக்கிறது.[2]

பாண்டியர் - ஹொய்சளர் உறவு : கி.பி. 1238 - இல் பட்டம் பெற்ற இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் வலியற்ற அரசன். இவன் கி.பி.149-இல் திருநெல்வேலிக் கோட்டத்தில் தன் மாமனான வீரசோமேசுவரன் பெயரை அவன் விருப்பப்படி ஒரு சிற்றுார்க்கு இட்டு வழங்கினான்; அதே ஆண்டில், வரக்கண்ண தண்டநாயகன் என்ற சேனைத் தலைவன் திருநெல்வேலியில் இருந்து வந்தான்.அக்காலத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த திருமய்யத்தைச் சுற்றியுள்ள நாடு ‘கான நாடு எனப்பெயர் பெற்றிருந்தது.அது பாண்டிய நாட்டைச் சேர்ந்திருந்தது. அங்குச் சைவ வைணவச் சண்டை உண்டாகி நாடு குழப்பப்பட்டதால், சோமேசுவரனது தண்ட நாயகனான அப்பண்ணன் என்பவனால் அமைதி உண்டாக்கப்பட்டது, பாண்டிய அரசன் மைத்துனன் ஹொய்சள இளவரசன். அவன் பெயர் விக்கிரம சோழதேவன் என்பது. அவன் பாண்டிய அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற்றவனாக இருந்தான்.[3]

சோழர் - தெலுங்கர் உறவு: வீரசோமேசுவரன் பாண்டியனை ஆதரிக்கத் தொடங்கிவிட்டதால், இராசேந்திரன் ஹொய்சளர்க்குப் பகைவரான தெலுங்குச் சோடரை நட்புக் கொண்டான். அக்காலத்தில் நெல்லூரை ஆண்ட தெலுங்குச் சோடர் வன்மை மிக்கிருந்தனர். அவரது ஆட்சி நெல்லூர் முதல் செங்கற்பட்டு வரை பரவி இருந்தது. அவர்கள் நீண்டகாலமாகச் சோழப் பேரரசிற்கு உட்பட்ட சிற்றரசராக இருந்தவர்கள். திக்கன் என்ற கண்டகோபாலன் என்பவன் அப்பொழுது இருந்த சோழ அரசன் ஆவன். இவன் சாம்புவராயர், சேதியராயர், காடவராயர்களை வென்று தன் பேரரசை ஒப்புக்கொள்ளச் செய்தவன்; இவ்வெற்றியால் கோப்பெருஞ் சிங்கன் சூழ்ச்சிகளை ஒடுக்கினவன். இவன் தொண்டை மண்டலத்தில் பெரும் பகுதியைச் சோழப் பேரரசிற்கு அடங்கியே ஆண்டு வந்தான்.[4] இங்ஙனம் பாண்டியற்கு ஹொய்சளன் உதவியாக இருந்தாற்போலச் சோழற்குத் தெலுங்குச் சோடன் உதவியாக இருந்தான்.

சோழ பாண்டியர் போர் : இராசராசன் ஆட்சியில் இருமுறை சுந்தரபாண்டியன் படையெடுத்துவந்து சோணாட்டை அலைக்கழித்து அவமானப்படுத்தியதற்குப் பழி வாங்கத் துணிந்த இராசேந்திரன், தெலுங்கர் நட்பைப் பெற்ற பிறகு, பாண்டி நாட்டின்மீது படையெடுத்தான்; வலியற்ற இரண்டாம் சுந்தரபாண்டியனை வென்றான்: அவனது முடியைக் கைப்பற்றி இராசராசனிடம் தந்து பாண்டி நாட்டைக் கொள்ளையடித்தான். ஆனால் இந்த வெற்றி மூன்று ஆண்டுகளே நிலைத்திருந்தது.[5] அதற்குள் வீரசோமேசுவரன் சோழனைத் தாக்கிப் போரில் முறியடித்தான்; மற்றொரு பக்கம் கோப்பெருஞ் சிங்கன் சோழனைத் தாக்கினான். இந்த இருவரையும் சோழன் நண்பனான கண்டகோபாலன் தாக்கினான். இவர் எல்லாரும் அவரவர் கல்வெட்டுகளில் தாம் தாம் வென்றதாகக் குறித்துள்ளனர். ‘கண்டகோபாலனுக்குப் பாண்டியன் கப்பம் கட்டினான், என்று கேதனர் தமது தசகுமார சரித்திரத்திற் கூறியுள்ளார். கோப்பெருஞ் சிங்கன் தன்னைப் ‘பாண்டிய மண்டல ஸ்தாபன சூத்ரதாரன்’ என்று குறித்துள்ளான். “தான் இராசேந்திரனைப் போரில் புறங்கண்டதாகவும், இராசேந்திரன் தன்னிடம் அடைக் கலம் புகுந்தவுடன் ஆதரித்ததாகவும் சோமேசுவரனைப் போரில் புறங்கண்டதாகவும், இராசேந்திரன் தன்னிடம் அடைக்கலம் புகுந்தவுடன் ஆதரித்ததாகவும் சோமேசு வரனைப் போரில் வென்று, சோழ அரசனை மீட்டும் அரசனாக்கிச் ‘சோழ ஸ்தாபன ஆசாரியன்’ என்ற பெயர் பெற்றான்” என்று திக்கநர் தமது இராமாயணத்து முகவுரையிற் கூறியுள்ளார். கி.பி. 1240- இல் வெளிப்பட்ட ஹொய்சளர் கல்வெட்டு ஒன்றில், “சோமேசுவரன் கண்டகோபாலன்மீது படையெடுத்தான்” என்று கூறுகிறது. இவை யாவற்றையும் ஒருசேர நோக்க நாம் அறிவதென்ன? இப்போருக்குப் பின்னர்ப் பாண்டிய நாடு தனியே பாண்டியனால் ஆளப்பட்டே வந்தது என்பதனால், சோமேசுவரன் இடையீடு பயனைத் தந்ததென்றே கூறவேண்டும். ஆனால் கண்ட கோபாலன் சோழனுக்கு உதவியாகச் சென்றிராவிடின், சோணாடு பாண்டியர்க்கும் கோப்பெருஞ்சிங்கற்கும் இரையாகி இருக்கும்.

இலங்கைப் போர்: ‘வீர ராக்கதர் நிறைந்த இலங்கையை இராமன் வென்றாற் போல இந்த இராசேந்திரன் என்ற இராமன், வீர ராக்கதர் நிறைந்த வட இலங்கையை வென்றான்’ என்ற பொருள்படும் கல்வெட்டு இருக்கிறதால், இராசேந்திரன் வீர ராக்கதரை வென்றிருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது.அவர் யார்?வடஆர்க்காடுகோட்டத்தில் ஒருபகுதியை ஆண்டுவந்த சாம்புவராயர் தம்மை ‘விர ராக்கதர்’ என்று கூறிக்கொண்டு வந்தனர். அவர்கள் ஆட்சியில் ‘மா இலங்கை’ ஆகிய மகாபலிபுரம் இருந்திருத்தல் வேண்டும். இராசேந்திரன் அவர்களைப் போரில் வென்றவனாதல் வேண்டும். இவன் நண்பனான கண்ட கோபாலனும் சாம்புவராயரை வென்று, பிற பகை மண்டலீகரையும் தோற்கடித்துக் கச்சியைக் கைப்பற்றினான் என்று திக்கநர் தமது நூலிற் கூறலால், சாம்புவராயர் இராசேந்திரனாலும் கண்ட கோபாலனாலும் அடக்கப்பட்டனர் என்பது நன்கு தெரிகிறது.

காஞ்சிநகரம் : இந்நகரில் கி.பி.1245 வரை இராசராசன் காலத்துக் கல்வெட்டுகள் உள்ளன. இராசேந்திரன் காலத்துக் கல்வெட்டுகள் இல்லை. இராசராசன் காலத்தில் இந்நகரம் நரசிம்ம தேவன் மேற்பார்வையில் இருந்தது. பிறகு என்ன ஆயிற்று? கி.பி. 1249-இல் காகதீய அரசனான கணபதியின் கல்வெட்டுக் காண்கிறது. சில ஆண்டுகட்குப் பிறகு கண்ட கோபாலனுடைய கல்வெட்டுகள் கிடைக்கின்றன. எனவே, காஞ்சிமா நகரம் இராசராசன் காலத்தில் ஹொய்சள நரசிம்மதேவன் பார்வையில் இருந்தது; பிறகு கி.பி. 1245-க்குப் பிறகு காகதீய அரசன் ஆட்சியில் அல்லது தெலுங்க அரசனது ஆட்சியில் காகதீயன் மேற்பார்வையில் இருந்தது; இறுதியில் கி.பி. 1251-இல் பட்டம் பெற்ற சடாவர்மன் சுந்தர பாண்டியன் கைக்கு மாறிவிட்டது என்பதை வரலாறு உணர்த்துகிறது.

ஹொய்சளர் நட்பு: சடாவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி. 1251-இல் பாண்டியர் அரசன் ஆனான். இவன் தன் காலத்தில் பாண்டிப் பேரரசு கண்ட பெருவீரன். இவன் ஹொய்சள வீர சோமேசுவரனை மதிக்கவில்லை. இவனது பேராற்றல் கண்ட வீர சோமேசுவரன் இவன்மீது கொண்ட வெறுப்பினால் தான் அதுகாறும் பகைத்து வந்த இராசேந்திரனுடன் உறவு கொண்டாடலானான்: அந்த உறவினால் சோழனது நட்பையும் தன் பகைவனான தெலுங்குச் சோழனது நட்பையும் பெறலாம்; பெற்றுக் கூடுமாயின், சடாவர்மனை அடக்கி விடலாம் என்பது அவனது எண்ணம்.இங்ஙனம் உண்டான புதிய நட்பினால், சோணாட்டில் ஹொய்சள அரசியல் அலுவலாளர் பலர் வந்து தங்கினர்; சோழ அரசியலிற் பங்கு கொண்டனர்; கோவில் சம்பந்தமான வழக்குகளை விசாரித்தனர்.[6] இந்த இரு நாடுகட்கும் உண்டான நட்பு சோமேசுவரன் இறந்த பிறகும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. கி.பி. 1295-இல் ஹொய்சளத் தென்நாட்டை ஆண்ட இராமநாதன் 10,15ஆம் ஆட்சி ஆண்டுகளில் வெளியிட்ட இரண்டு கல்வெட்டுகள் திருச்சோற்றுத் துறையில் காண்கின்றன.[7]

பாண்டியன் பேரரசு : சடாவர்மன் சுந்தர பாண்டியன் ஏறத்தாழக் கி.பி. 1256, 57-இல் பெரும் படையுடன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான்; சோழநாட்டைக் கைப்பற்றி இராசேந்திரனைத் தனக்கு அடங்கிய சிற்றரசன் ஆக்கினான்; அவனுக்கு உதவியாக வந்த வீரசோமேசு வரனை வென்று துரத்தினான். சோமேசுவரன் மீட்டும் கி.பி. 1254-இல் போருக்கு எழுந்தான்; போர் கண்ணனூர்[8] என்ற இடத்தில் நடந்தது. அப்போரில் சோமேசுவரன் கொல்லப்பட்டான். பின்னர் இப்பாண்டியன் பல்லவ மரபினனான கோப்பெருஞ்சிங்கன் அனுப்பிய கப்பத்தை ஏற்றுக்கொள்ளாமல், அவனது கோநகரமாகிய சேந்த மங்கலத்தை முற்றுகை இட்டான்; அந்நகரையும் பிற பொருள்களையும் கைப்பற்றினான்; அவற்றை அவர்க்கே தந்து. தன்கீழ் அடங்கிய சிற்றரசனாக இருக்குமாறு செய்து வடக்கு நோக்கிச் சென்றான்; வாணர்க்குரிய மகதநாட்டை யும் கொங்கு நாட்டையும் கைப்பற்றிக் கண்டகோ பாலனைப்போரிற் கொன்று, நெல்லூரில் ‘வீராபிடேகம்’ செய்துகொண்டான், காஞ்சியைத் தன் பேரரசின் வடபகுதிக்குத் தலைநகரம் ஆக்கிக் கொண்டான். இங்ஙனம் திடீரென்று எழுந்த பாண்டிய வீர அரசனால், சோழப் பேரரசின் எஞ்சிய பகுதியும் அழிந்து, இராசேந்திரனே சிற்றரசனாக வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது. இவ்விழிநிலைக்குப் பிறகு சோழ அரசு தலையெடுக்காது மறைந்தது.

நாட்டு விரிவு : இராசேந்திரனுடைய கல்வெட்டுகள் பல சோழ நாட்டிலே காணக்கிடைக்கின்றன. இவனது 13-ஆம் ஆட்சிக் கல்வெட்டு ஒன்று கடப்பைக் கோட்டத்து நந்தலூரிலும், 14ஆம் ஆட்சிக் கல்வெட்டொன்று கர்நூல் கோட்டத்துத் திரிபுராந்தகத்தும் கிடைத்துள்ளன. கி.பி. 1261-க்குப் பிறகு சோழ நாட்டிற்கு வெளியே ஒரு கல்வெட்டும் இல்லை. இதனால், இராசேந்திரன் அரசியலில் முற்பகுதியில் கடப்பை, கர்நூல் வரை இவனது பேரரசு பரவி இருந்தது என்பதும், பிற்பகுதியில் சோழநாட்டு அளவே பரவி இருந்தது என்பதும் அறியத்தக்கன.

இராசேந்திரன் இறுதி : இவனது ஆட்சி கி.பி. 1279 வரை இருந்தது. இவன் 33 ஆண்டுகள் அரசாண்டான். இவன் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து அரசாண்டான். இவனது குலதெய்வம் தில்லை நடராசர் ஆவர்.[9] இவனுக்குச் ‘சோழகுல மாதேவியார்’ என்றொரு மனைவி இருந்தாள் என்பது தெரிகிறது.[10] இவனுக்குச் சேமாப்பிள்ளை என்றொரு மகன் இருந்தான் என்பது திருக்கண்ணபுரத்துக் கல்வெட்டால் தெரிகிறது.[11] இராசேந்திரன் ஆட்சி கீழ்நிலைக்கு வந்துவிட்டதால், சிற்றரசர் தொகையே குறைந்துவிட்டது. ‘சோழகங்கன், என்ற ஒருவனும் களப்பாளன், என்ற ஒருவனுமே சிற்றரசராகக்” குறிக்கப்பெற்றனர்.[12] இராசேந்திரனுக்குப் பிறகு சோணாட்டைச் சோழ அரசன் ஆண்டதற்குச் சான்றில்லை. எனவே, இராசேந்திரனுடன் சோழர் தனியாட்சியும் ஆதித்தன் தோற்றுவித்த பேராட்சியும் ஒழிந்து விட்டதென்றே கோடல் தகும்.

சோழப் பேரரசின் மறைவு : பாண்டியப்பேரரசிலும் வடக்கிலும் இங்குமங்குமாகச் சிலர் தம்மைச் சோழர் மரபினர் என்று கூறிக்கொண்டு சிற்றரசராகவும் அரசியல் அலுவலாளராகவும் 15-ஆம் நூற்றாண்டுவரை இருந்தனர் என்பது தெரிகிறது. முதற் பராந்தகன் காலத்தில் பாண்டிய நாடு தன்னாட்சி இழந்து சோழப் பேரரசிற் கலந்துவிட்டது போலவே, கி.பி. 1280-இல் சடாவர்மன் சுந்தரபாண்டியன் தோற்றுவித்த பாண்டியப் பேரரசில் சோழநாடு கலந்துவிட்டது. ‘வரலாறு தன்னையே திருப்பிச் சாட்டும்’ (History repeats itself) என்பதற்கு இதைவிடச் சிறந்த சான்று வேறென்ன வேண்டும்?


  1. 501 of 1904.
  2. 387 of 1906.
  3. K.A.N. Sastry’s ‘Pandyan Kingdom’, Page 158.
  4. Tikkana’s Int to his Ramayanam.
  5. 420 of 1911; 513 of 1922.
  6. 498 of 1902. 387 of 1903, 49 of 1913, 349 of 1919.
  7. 207, 208 of 1931.
  8. இது திருச்சிராப்பள்ளிக் கோட்டத்தில் உள்ள கண்ணனூர்க் கொப்பம்’ - Vide S pandarathar’s Pandyar vara Iaru p.51.
  9. 93 of 1897
  10. 427 of 1921.
  11. A.R.E. 1923. II. 45
  12. 194 of 1926, 202 of 1908, 339 of 1925