உள்ளடக்கத்துக்குச் செல்

செயலும் செயல்திறனும்/வினையறிந்தாரைத் துணைக்கொள்ளல்

விக்கிமூலம் இலிருந்து



13. வினையறிந்தாரைத் துணைக்கொள்ளல்

1. தெரிதல் வேறு திறம்படச் செய்தல் வேறு

ஒரு வினையை எடுத்த எடுப்பில் திறம்படச் செய்வதற்கு நாம் அறியோம். கண் பார்த்தால் கை செய்யும் என்பது ஒரளவு உண்மைதான். எதிலும் எல்லா வினைகளையும் கண் பார்த்து விட்டாலே கை செய்துவிடும் என்பது அத்துணை சரியாகிவிடாது. ஒரு வினையைச் செய்யுமுன் அவ்வினையை நன்றாகச் செய்யத் தெரிந்தவனை நாம் துணையாகக் கொள்ளுதல் வேண்டும். வினைசெய்யத் தெரிந்தவன், அதைச் செய்யத் தெரியாதவனை விட மேலானவனல்லனோ? ஒரு வினையில் முன்னரே ஈடுபட்டு, அதில் உள்ள சுழிவு நெளிவுகளைப் பலவாறு உணர்ந்து, தம் பட்டறிவால் அந்த வினையை எளிதாகவும் செப்பமாகவும் சுருங்கிய செலவுடனும் செய்யத் தெரிந்தவர் ஒருவர் இருப்பார். அவர் அந்த அறிவு வரப் பெறுவதற்கு எவ்வளவோ காலத்தைச் செலவு செய்திருப்பார். எவ்வளவோ பணத்தைச் செலவு பண்ணியிருப்பார். அது தொடர்பாக எத்தனையோ திறமுடையவர்களைப் பார்த்து, அவர்களிடம் அதுவகையில் எத்தனையோ நுட்பங்களைக் கேட்டு அறிந்திருப்பார். அத்துணை அறிவும் நமக்கு ஏற்பட வேண்டுமானால், நாமும் எவ்வளவோ காலத்தை, பணத்தை வீணடிக்க வேண்டியிருக்கும். அவற்றை வீணாக்காமல் நாம் காக்க வேண்டுமானால், நாம் அவரிடம் போய், அவருக்குத் தெரிந்த வழிகளைக் கேட்டறிவதும், அவருக்குத் தெரிந்த உத்திகளை நாமும் கையாள்வதும் நம் வினை நிலைகளை எளிதாக்க உதவும் அன்றோ? அதைவிட்டு, நமக்கே எல்லாம் தெரியும் என்பதாக நாம் எப்பொழுதும் நினைத்துக் கொள்ளக்கூடாது. நமக்கு ஒரு வினைபற்றி முன்னரே ஓரளவு தெரியும் என்றாலும், ஒரு வினையைத் தெரிதல் வேறு, அதைத் திறம்படச் செய்தல் வேறு.

2. நுட்பங்கள்

ஒரு வினை முன்னரே நமக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் அதைத் திறம்படச் செய்ய நமக்குத் தெரியும் என்று எண்ணி விடக்கூடாது. அதன் தொடக்கம், இடைமுயற்சி, முடிவு என்பவற்றில் எத்தனையோ நுட்பங்கள் இருக்கும். அவற்றை நாம் முன்கூட்டியே அறிந்திருப்போம் என்று சொல்ல முடியாது. அப்படியே அறிந்திருந்தாலும் அதன்

நுட்பங்கள் அனைத்தும் விளங்கியிருக்கும் என்று கொள்ள முடியாது. எனவே, நாம் எல்லாவற்றையும் தெரிந்து விட்டோம் என்று நம்மை அளவுக்குமேல் மதித்துக் கொள்ளக் கூடாது.

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை.

(438)

என்பது குறள் கூறும் அடக்க நிலை. ஒரு வினையால் நல்லது விளையுமா தீயது விளையுமா என்பது அவ்வினையில் ஈடுபட ஈடுபடத்தான் தெரியவரும். முழுவதும் முன்கூட்டியே உணர்ந்து கொள்வது கடினம். அடுத்து என்ன நடைபெறும் என்று அறிய முடியாத நாம், ஒரு வினைமுடிவில் என்ன நேரும் என்று அறிந்து விட்டதாகக் கருதுவது அறியாமை.

3. அறிதோறும் அறியாமை

எனவே, ஒரு வினைபற்றிய முழுமையான தொடக்க முடிவுகளை, ஏற்கனவே அவ்வினையறிந்தாரைக் கொண்டு தான் நாம் தெரிந்து கொள்ளமுடியும். அப்படித் தெரிந்து கொள்ளாமல் நாமே வினையில் ஈடுபட்டுத் தெரிந்து கொண்டுவிடலாமென்று நினைப்பது அறியாமை. அறியாமை என்பது அடுத்தடுத்து வரும். அறிய அறியத்தான் அது விளங்கும். 'அறிதோறும் அறியாமை கண்டற்றால்' (10) என்னும் தெளிவுரை அறிய அறியத்தான் அறியாமை தெரியும் என்று எச்சரிக்கின்றது. அறிவு நிலைகளிலேயே அறியாமை தொடரும் என்றால், வினைநிலைகளில் வரும் அறியாமயை முன்கூட்டியே உணர்தல் மிகக் கடினம். ஒரு மிதிவண்டியின் பாகங்களையோ, ஒரு கடிகாரத்தின் உறுப்புகளையோ ஒவ்வொன்றாக அடையாளம் வைத்துக்கொண்டு - நினைவு வைத்துக்கொண்டு - நாம் பிரித்தெடுப்பதாக வைத்துக் கொண்டாலும், அவற்றை மீண்டும் பழையபடி பூட்டிவிடுவது அவ்வளவு எளிதன்று. கழற்றிய பல திருகாணிகளை, எங்கே எந்த உறுப்பில் வைத்துப் பொருத்துவது என்பதில் நாம் திண்டாடும் பொழுதுதான் நம் அறியாமை நமக்கு விளங்கும். இனி எல்லா உறுப்புகளையும் ஆய்ந்து அவ்வவற்றின் இடங்களைத் தேடிக் கண்டு பொருத்திவிட்டாலும் ஏதோ ஒரு கோளாறால், வண்டியின் அல்லது கடிகாரத்தின் இயக்கம் சரிவர அமையாது போகும். அது, அவ்வாணிகளுள் சிலவற்றைத் தளர்த்தியும், இறுக்கியும் முடுக்காமல் போவதால் அல்லது முடுக்கி விடுவதால் வந்த இடையூறாகக் கூட இருக்கும். எஃது எதனால் நேர்ந்தது என்பதை நாமே பட்டறிந்து கண்டுகொள்வதைவிட, ஏற்கனவே அதுபற்றிக் கண்டறிந்த ஒருவரைக் கேட்டறிந்து கொள்வது எளிதானதாக அல்லது சிக்கனமானதாக இருக்கும். இஃது இதனால் வரும். இதை இப்படிச் செய்வதால், இந்த இடர்ப்பாடு வராது என்பதே பட்டறிவு என்பது. இவ்வறிவு நமக்குப்

படாமல் அஃதாவது நாமே ஈடுபடாமல், அல்லது துன்பப்படாமல் வரும் என்பது அறியாமை அல்லது செருக்கு செருக்கு என்பது நமக்குத் தெரிந்த சிறிய அறிவை மிகுதியாகக் கருதிக் கொள்வது. செருக்கு மிகுதி. செருக்காகக் கருதிக் கொள்ளுதல்.

4. கற்றலின் கேட்டலே நன்று

ஆகவே, இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கையில் ஒன்றை நாமே அறிந்து கொள்வதைவிடக் கேட்டறிந்து கொள்வது எளிது; நல்லது என்பது தெரிகிறது. “கற்றலின் கேட்டலே நன்று” என்பது அறிந்தார் வாய்ச்சொல் திருவள்ளுவப் பெருந்தகையும் கற்றிலனாயினும் கேட்க (414) என்பார் தெரியாதார் தெரிந்தாரைக் கேட்டது இழிவாகாது. மானக்கேடும் ஆகிவிடாது. கேட்டுச் செய்வது இழிவென்று கருதி, சிலர் கேட்காமலே செய்து, பிறகு துன்புறுவர். ஒருவர் கேட்பதால், சொல்லுபவர்க்குக் கிளர்ச்சியும் மலர்ச்சியும் ஏற்படும். தமக்குத் தெரிந்ததைப் பிறர்க்குச் சொல்லவேண்டும் என்பது ஓர் இயற்கை உணர்வு. அவ்வுணர்வுதான் அறிவு பரவ வழியாக அமைகிறது. தன் பிள்ளைக்குப் பாலூட்டுவதை எப்படி தாய் இன்ப உணர்வாகக் கருதுகிறாளோ, அப்படி ஒருவர் தமக்குத் தெரிந்ததை மற்றவர்க்குச் சொல்வதை இன்பமாகக் கருதுகிறார். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நல்லவர் எல்லாரும் எண்ணுகின்றனர். தன்னிடம் இருப்பதை மற்றவர்க்குக் கொடுப்பதை ஈத்துவக்கும் இன்பம் (228) என்பார் திருவள்ளுவர். ஈவது பொருளை மட்டுமன்றி அறிவையுந்தான்! தாய் தன் குழந்தைக்குப் பால் கொடுப்பதைப் போன்றது, ஒர் ஆசிரியர் மாணவனுக்கு அறிவூட்டுவது, அறியாதவனுக்கு அறிந்தவன் ஒருவன் சொல்லித் தருவது தெரிந்தவன் தனக்குத் தெரிந்ததைப் பிறர் எப்பொழுது வந்து கேட்பார்களோ என்று இருப்பான். தீய எண்ணம் அல்லது தன்னலம் உடைய சிலர்தாம் தமக்குத் தெரிந்ததைப் பிறர் கேட்டாலும், சொல்லுவதற்கு விரும்பமாட்டார்கள். அத்தகைவில்லாதவர்கள், பிள்ளைக்குப் பால் கொடுக்காத கொடிய தாய்மார்களைப் போன்றவர்கள். தன் அழகு கெடுமென்று பிள்ளைக்குப் பால்கொடாமல் இருப்பது தன்னலம். அவர்களுக்குத் தாய்மை உணர்வும் குறைவாகவே இருக்கும்! அவர்களைத் தாய்கள் என்று சொல்வதைவிடப் பேய்கள் என்று சொல்லலாம். மற்றபடி நாய்கள் என்று கூடச் சொல்லக் கூடாது. ஏனெனில் நாய்கள் தாம் தம் குட்டிகளுக்கு அன்போடு பால் கொடுக்கின்றனவே? தாம் அறிந்ததைப் பிறர்க்குச் சொல்லிக் கொடுத்து மகிழாதவர்களையும் தந்நலப் பேய்கள் என்றுதான் சொல்லல் வேண்டும். இத்தகைய தந்நலப் பேய்களாகச் சிலர் இருப்பர். அவர்களுக்காக நாம் கவலைப்பட வேண்டுவதில்லை. ஒருவர் சொல்லித் தராமற்போனால் இன்னொருவரிடம் போதல் வேண்டும். அவர் இல்லையானால் இன்னொருவர். எவ்வாறாயினும் தெரியாதவர் தெரிந்தவரை - அதைத்

தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றவரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு

எய்த உணர்ந்து செயல்.

(56)

என்பது திருவள்ளுவம்.

5. வினையறிந்தார் நட்பு

{{gap}வினைத்திறம் உடையவரை நாம் நட்பாக்கிக் கொள்ளுதல் வேண்டும். அவரை நம்மினும் வேறாக நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் நம் வினையால் பொருட்பயனை உண்டாக்கிக் கொள்ளமுடியாது. வினைத் திறம் உடையவனை வினையுடையான் என்பார் திருவள்ளுவர். பொருளுடையவனைப் பொருளுடையான் என்பதுபோல், வினையுடையான் வினைத்திறம் உடையான் ஆகின்றான்.

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக

நினைப்பானை நீங்கும் திரு.

(519)

வினைத்திறம் உடையானை வேறாகக் கருதக்கூடாது. நமக்குப் பசிக்கின்றபொழுது அவனுக்கும் பசிக்கும் என்று கருத வேண்டும். நாம் உண்ணும்பொழுது அவனையும் உண்ணச் செய்தல் வேண்டும். நாம் உறங்கப் போகும்பொழுது அவனையும் ஒய்வெடுத்து உறங்கும்படி செய்தல் வேண்டும். அவனுடைய தொடர்பை நட்பாகக் கருதுதல் வேண்டும். இன்னும் கேண்மை என்பது நட்பு மட்டுமன்று. சொந்தமும் ஆகும். எனவே, நண்பனாக மட்டுமன்று. சொந்தக்காரனாகவும் கருதுதல் வேண்டும் அப்பொழுதுதான் அவன் வினைத்திறத்தை நமக்குக் கற்றுத்தர விரும்புவான். தாய் தன் சொந்தப் பிள்ளைக்குத்தானே பால் தர விரும்புவாள். சொந்தமல்லாத பிள்ளைக்குப் பால் தருவதை எந்தத் தாயும் அவ்வளவாக விரும்ப மாட்டாளன்றோ?

6. நல்வழி வரவு

ஆகவே, வினைத்திறம் உடையவர்களைச் சொந்தமாகக் கருதிப் போற்றிக் கொள்ள வேண்டும். இனி, வினைத்திறம் உடையவர்களுக்கு இன்னொரு தகுதியும் தேவை. உலகியல் நிலையில் சரியானதையும் தவறானதையும் அவர்கள் தெரிந்து வினையில் ஈடுபடுதல் இன்றியமையாதது. உலக நயங்களை நியாயங்களை அவர் அறிந்திருத்தல் மிக மிகத் தேவை. இல்லாவிடில், வினைத்திறத்துடன் கள்ளவழிகளையும், தவறான போக்குகளையும் நமக்குக் காட்டிவிடலாம். பணம் ஈட்டுவதற்காக மட்டும் நாம் ஒரு செயலைச் செய்யக் கூடாது. நல்ல வழியில் வராத எந்தவகை சட்டமும் சிறந்த பயனைத் தராது. நல்லவர்கள், அறிவுடையவர்கள் அத்தகைய பண வருவாயை விரும்புதல் கூடாது. சிலர் எவ்வாறேனும் பணத்தைச் சம்பாதித்து, நல்ல செயல்களைச் செய்ய எண்ணங்கொள்வார்கள். நல்ல செயல்களைச் செய்ய விரும்புபவர்கள், அவற்றை ஒரு கொள்கை நோக்கமாகக் கொண்டவர்கள். அச்செயல்களைச் செய்வதற்குரிய பணம் தவறான வழியில் கிடைப்பதாயின், அதனை விரும்பக் கூடாது, அதைத் தவிர்த்து விடல் வேண்டும் என்பார் திருவள்ளுவர்.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல் (113)

என்பது திருக்குறள்.

7. நேர்மையான வழி வரவு

நேர்மையாக வரும் பொருள் எந்தச் செயலைச் செய்வதன் வழி வரும்; எந்தச் செயலைச் செய்து பொருள் திரட்டக்கூடாது என்பதை அறிவுள்ளவர் அறவுணர்வு கொண்டவர்தாம் பிரித்து உணர முடியும். எனவே அறவுணர்வை - நடுநிலை உள்ளத்தைக் கொண்டவர்தாம் நமக்கு நல்ல வழியில் பொருளை ஈட்ட உதவுவார்கள். அவர்கள்தாம், அவ்வழியை நமக்கு அமைதியான அறிவுரையால், இனிமையான சொற்களால், நாம் மனங்கொள்ளுமாறு எடுத்துச் சொல்வார்கள். செயல் நிலைகளில் நமக்குத்துணையாக வருபவர்கள் நமக்கு ஓர் அமைச்சரைப் போல் நின்று வழிகாட்ட வேண்டும். அவர் கூறும் வழிகளில் நமக்குப் பொருள் வரும் என்றாலும், அவ்வழிகளும் நல்லனவாக, தீயவை அல்லாதவனவாக இருத்தல் வேண்டும். அந்த வழிகளை அவர் நமக்குக் காட்டுவதற்கு அவர் நேர்மையானவராகவும், அறவுணர்வு கொண்டவராகவும் இருத்தல் வேண்டும் அன்றோ? எனவே அறவழியை அறிந்து அதனை அமைந்த பட்டறிவால் நமக்கு அன்பாக எடுத்துக் கூறி நம்மை நல்ல நெறியில் கொண்டு செலுத்தும் திறமுடையவர்களையே நாம் வினைக்குத் துணையாகக் கொள்ள வேண்டும் என்பது திருவள்ளுவப் பெருந்தகையின் கருத்து.

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லால் எஞ்ஞான்றும்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை (635)

என்பது அப்பொன்னுரை. எஞ்ஞான்றும் எப்பொழுதும், எந்த நிலையிலும், நமக்கு அவர் காட்டிய வழியில் ஒருகால் பொருளிழப்பு நேர்ந்தாலும், அல்லது இடர்கள் வந்து இன்னல் தந்தாலும் அவ்விடத்தும், அப்பொழுதும், நமக்கு நல்ல வழியினையே இறுதியாக நின்று காட்ட வேண்டியவராக இருப்பதால்தான் அவர் திறம் உடையவராக இருத்தல் வேண்டும் என்கிறார். திறம் உறுதிப்பாடு. உலகியல் நெறிமுறைகளை அறிந்த நல்லுணர்வு இழப்பு வந்தவுடன், நாம் கொண்ட நல்வழியை நெகிழ விட்டு, வேறு அல்வழியை, தவறான வழியை அவர் காட்டிவிடக் கூடாது. கொள்கை உறுதியும் உலகியல் பட்டறிவும் அவர்க்கு இருந்தாலல்லது அவர் காட்டும் வழியில், அவர் துணையில் அவர் தொடர்ந்த ஓர் உறுதியை நமக்குக் காட்ட முடியாது. எனவேதான் நமக்குத் துணைவருபவரிடம், அல்லது நாம் வினைத்துணையாகக் கொள்வோரிடம் நல்லது தேரும் திறனும், செயலறிவும், உலகியலறிவும், அவற்றை நமக்கு அன்புடனும் அறிவுடனும் எடுத்துக் கூறும் அமைதித் தன்மையும், அத்தகைய சொல்திறனும் இவற்றில் நெகிழாத உறுதிப்பாடும் இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரைத்தான் நமக்குத் துணையாக, செயலுக்கு வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அவருக்கிருக்கும் அந்தத் திறமைதான் செயல்முறை எனப்படும்.

8. செயலுக்குத் துணையாக வேண்டாதவர்கள்

செயல்முறை என்பது செயலைச் செய்கின்ற புறத்திறனை மட்டும் குறிப்பதன்று. அந்தச் செயலைச் செய்யும் திறமுடையவனின் அகத்திறனையும் குறிப்பதாகும். செயல் செய்யும் புறத்திறனால் அச்செயல் நன்கு செய்யப்படலாம். வருவாயும் நிறைய வரலாம். ஆனால் அச்செயலின் தன்மையை, மேன்மையை, சிறப்பை, அதால் வரும் உலக நன்மையை, தீமையில்லாத தன்மையை எண்ணிப் பார்த்தல் சிறப்பானது. அவற்றையும் எண்ணிப் பார்த்துச் செயல் செய்பவனைத்தான் செயல்திறன் உடையவன், செயல்முறை தெரிந்தவன் என்று கூற முடியும்.

கள்ள நாணயம் செய்தல் அல்லது தாள் அடித்தல், திருடுதல், கூட்டுக் கொள்ளையடித்தல், வழிப்பறி செய்தல், ஏமாற்றுதல், வஞ்சித்தல், கையூட்டுப் பெறுதல், கள்ளக் கடத்தல் செய்தல், வட்டி வாங்குதல், வெறிக்குடிப்புகளைக் காய்ச்சுதல், பெண்களைக் கொண்டு பணம் ஈட்டுதல், பொதுநலன்களுக்கு உகந்த பொருள்களைத் தவறாகத் தன் நலன்களுக்குப் பயன்படுத்தல் முதலியவற்றால் வரும் ஊதியங்கள், வருமானங்கள் தவிர்க்கத் தக்கனவாகும். அவற்றைச் செய்பவர்கள் தீயவர்கள், கொடியவர்கள், கயவர்கள், பொதுநலக் கேடர்கள், உலக நலங்கெடுக்கும் உலுத்தர்கள், தந்நலமே கருதும் தகவிலர்கள், குமுகாயக் கொலைஞர்கள் இவர்களைப் போன்றவர்கள் என்றுமே வினைக்குத் துணையாக வேண்டாதவர்கள். அவர்களுக்கு அறவுணர்வு இராது. நன்மை கருதும் எண்ணமிராது. உலக நலம் நாடும் உயர்ந்த நோக்கம் இருக்காது. மக்களுள் மாக்களாக இருப்பவர்கள் இவர்கள்! இவ்வகையினரைத்தாம் திருவள்ளுவச் சான்றோர் மக்களே போலும் கயவர்கள் (107) என்றார். 'தகவிலர்' (14) என்றார். இன்னும், தம் ஒப்பற்ற திருக்குறளில் அப்படிப்பட்டவர்களை, அவ்விய நெஞ்சத்தார். (69), 'அறனல்ல செய்வார்' (173) 'அன்பிலார்' (72) 'அறம் செய்வார்' (266), 'அறிவிலார்' (427, 430), 'அளவறிந்து வாழாதார் (479), 'அகத்தின்னா

வஞ்சர்' (824), 'இசையிலா யாக்கையர்' (239), 'இனமல்லார்' (822), 'இசை வேண்டார்' (1003), 'இழிந்த மயிரனையர் '(964), உடம்பாடிலாதவர் (890), என்புதோல் போர்த்த உடம்பர் (80), ஒப்பிலார் (மாறுபட்டவர்) (800, 812), ஒட்டார் (பொருந்தாதவர்), (826), காரறிவாளர் (287), களவறிந்தார் (288, கீழ்கள் (10.75), கொடியர் (550), சிறியார் (970), சீரல்லவர் (977), நகைவகையர் (817, பண்பிலார் (81), பூரியர் இழிந்தவர், கீழ்மக்கள் (241, 918 பேதையர் (782, 797) மரம் போல்வர் (997), மக்கட் பதடி (பதர்) (196) மாணார் பெருமையில்லாதவர் (823), மெய்ப்பொருள் காணார் (857), வன்கண்ணவர் (228), வாழாதவர் (240), விளிந்தார் (செத்தவர்) (1430) முதலிய சொற்களால் குறித்து, அவர்களின் மனவுணர்வு, அறிவுணர்வு, செயலுணர்வு ஆகியவற்றில் உள்ள இழிவுகளையும், அவற்றால் அவர்களுற்ற தாழ்ச்சி நிலைகளையும் சுட்டிக் காட்டுவார்.

இத்தகவிலாரால் நமக்கு எத்துணையளவு ஊதியம், வருவாய், பொருள்கள், நலன்கள், வளவாழ்க்கை முதலியன கிடைப்பதாயினும், அவர்களை எவ்வகையிலும் நாம் துணைவர்களாகக் கொள்ளக்கூடாது என்பதை நன்றாக மனத்தில் இருத்திக் கொள்ளல் வேண்டும். அப்படிப்பட்டவர்கள் எப்பொழுதும் நமக்குக் கேடானவற்றையே பழுதான எண்ணங்களையே எண்ணுவர்.0 (639) அவர்களால் பெறுகின்ற பொருள் நலன்கள் எவ்வளவாயினும் அவற்றை நாம் துறந்துவிடல் வேண்டும். பண்பு உடைய செயல்கள் வழி வராத அச்செல்வம் தவறானது. துய்மையில்லாத கலத்தில் ஊற்றிய பாலைப் போன்றது (1000) என்பது திருக்குறள் கொள்கை. துன்பமே வருவதானாலும் அத்தகைய வருவாய்க்காக நாம் செயல்களை மேற்கொள்ளக்கூடாது. நல்ல அறிவுடையவர்கள் அவ்வாறான செயல்களை எந்தத் துன்ப நிலையிலும் செய்ய மாட்டார்கள்.

9. இழி செயல்கள்

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சி யவர்

(654)

நடுக்கற்ற காட்சி - நடுக்கம் (அசைவு, நெகிழ்ச்சி) இல்லாத அறிவு. இளிவந்த செயல் - இழிவான செயல்கள், அவ் விழிசெயல்களின் வழியாக வந்த அல்லது வருகின்ற செல்வங்கள், பொருள்கள் இழிவான செயல்களை தீமை தரும் செயல்களைத்தாம் செய்ய உதவும். நல்ல செயல்களைச் செய்ய அப்பொருள் உதவுவதில்லை.

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்

சீரல் லவர்கண் படின்

(977)

தீதில்லாமல் வந்த பொருள்தான் அறச்செயல்களைச் செய்ய உதவும். இன்பம் காணத் துணைநிற்கும்.

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள் (754)

எனவே, அத்தகைய பொருளை ஈட்டித் தருகின்ற செயல்களைத் தாம் நாம் செய்ய வேண்டும். அவ்வகை உயர்ந்த செயல்களைச் செய்ய வல்லவர்களையே, நல்லவர்களையே, நாம் நம் வினைத் துணைவர்களாகக் கொள்ளவேண்டும். அவ்வாறல்லாத தீயவர்களை, உலகியலைத் தவறாக அறிந்த கேடர்களை, அறவுணர்வு அறியாத பேதைகளை நாம் வினைத்துணைவர்களாகக் கொள்ளக்கூடாது. அவ்வாறின்றி, அவர்களை நாம் துணைவர்களாகக் கொண்டு செய்யும் வினைகள் அல்லது செயல்கள் அல்லது கருமங்கள் அல்லது உழைப்புகள் வீணாய்ப் போகும். தவறாகப் போகும். அல்லாவிடில் வெறும் விளம்பரம் பூண்டு நிற்கும். பிறர் ஏமாறுவதற்குரிய வகையில் ஆரவாரம் காட்டி நிற்கும். போலிப் பெருமை செய்து இருக்கும். அவற்றால் யாருக்கும் உண்மைப் பயன் விளைய முடியாது; நல்ல மாந்த ஆக்கத்திற்குதவ முடியாது என்பது பேரறிஞர் திருவள்ளுவர் மெய்யுரை எச்சரிக்கை உரை.

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்

பேதை வினைமேற் கொளின்

(836)

கையறியா என்பது செய்தல் அறியாத என்று பொருள்படும். கைசெய். செய்தல் அறியாத என்பதனுள் செயல் அறியாத, செய்கின்ற திறனறியாத, எந்தச் செயல் செய்ய வேண்டும் என்றறியாத, எச் செயலால் என்ன விளைவு நேரும் என்றறியாத, மொதத்தில் நன்மை, தீமை உணராத என்னும் பொருள்களெல்லாம் அடங்கும். அதனால்தான்,

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை

உள்ளறிவான் உள்ளம் கொளல்

(677)

என்னும் குறட்பாவில், வினை உள்ளறிவான் என்று செயலறிந்தவண்னக் கூறுவர் மெய்ப்பொருளாசான்.

10. ஒருவர்க்கொருவர் துணை

இனி, துணை என்று சொல்லும் பொழுது, ஒருவர் சார்பாக மட்டும் அதனைப் பொருள்படுத்தி விடக்கூடாது. இருவர் சார்பாகவும் அது பொருள்படும். முத்துக்குமரனாருக்குத் துரையரசனார். துணை என்றால், துரையரசனாருக்கும் முத்துக்குமரனார் துணை என்றே இருவரும் கருதிக் கொள்ளுதல் வேண்டும். இறைவாணனார், முல்லை வாணனாரைத் தமக்கு மட்டும் துணை யென்று கருதி விடக்கூடாது. முல்லைவாணனாருக்கும் இறைவாணனார் துணையாக இருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. இவ்விடத்தில் ஒன்றை மட்டும்

நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

ஒருவரை யொருவர் துணையாக்கிக் கொள்ள விரும்பும் இருவர் பல்வேறு கூறுகளில் வேறு வேறு தன்மைகள் கொண்டவராக இருக்கலாம். அவற்றுள், பெரும்பான்மையும், ஒருவர்க்கொருவர் பொருந்திவரக் கூடிய கூறுகளைக் கொண்டவராக ஒருவர் இருக்கின்றாரா என்று, மற்றவர் ஆய்ந்து பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.

பெரும்பாலும், மாந்தராகப் பிறந்த ஒவ்வொருவரிடமும், இயற்கையாகவும் செயற்கையாகவும் பல்வேறு தன்மைகள் இருக்கும். இவற்றுள் இயற்கைக் கூறுகள் எவை, செயற்கைக் கூறுகள் எவை என்பனவற்றை வேறு பிரித்து அறிவது ஒருவாறு கடினமானதே. இன்னும் சொன்னால் சில கூறுகளை அறிவது மிகவும் கடினமாகவே இருக்கும். சில அறிந்து கொள்ள இயலாத கூறுகளாக இருக்கும். எனவே, நாம் ஒருவர் துணையை எவ்வகையில் எதன் பொருட்டு நாட விரும்புகிறோம் என்பதை, முதலில் நன்றாக எண்ணி முடிவு செய்தல் வேண்டும். அவ்வகையில் நமக்கு அவர் துணை பொருந்தி வருமா என்பதை அறிவுவழி ஆய்ந்தறிதல் வேண்டும். இந்நிலைகளை எல்லாரும் அறிந்திருப்பது மிகவும் கடினமாதலால், இவற்றைக் கொஞ்சம் விரிவு படவே கூறுவோம்.

11. இயற்கைக் கூறுகளும் செயற்கைக் கூறுகளும்

மக்களுக்கு இருக்கும் இயற்கைக் கூறுகளை ஒருங்கே தொகுத்துக் கூறுதல் மிகவும் கடினம். ஆனால் அவற்றை ஒருவாறு கீழ்வருமாறு எடுத்துக் கூறலாம்.

அன்பு, பண்பு, அவா, குணம் அறிவு நாட்டம் முதலிய உணர்வுகள் பிறவி வழி உயிரியக்கத்துடன் ஒன்றிய இயற்கைக் கூறுகளாகும்.

அறிவிடுபாடு பழக்க வழக்கம், மொழியுணர்வு, இனவுணர்வு, நாட்டுணர்வு, உணவு, உடை, நாகரிகம் முதலியன சார்பு வழி அமையும் செயற்கைக் கூறுகளாகும்.

ஒருவரிடம் அமைந்த இயற்கை உணர்வுக் கூறுகளைப் பெரும்பாலும் மாற்றவே இயலாது. செயற்கை உணர்வுக் கூறுகளை நெருங்கிப் பழகுவதன் வழியாலும், அறிவுத் தாக்கத்தாலும் படிப்படியாக மாற்றியமைத்து விடலாம்.

நல்ல ஒழுகலாறுகள் பெரியோர்களிடம் பழகுவதால் நமக்கும், படிந்து சிறக்கும். சிறியோர்களிடம் பழகுவதால் அவை தவிர்ந்து அழியும். எனவேதான் உலகின் உயர்ந்த மெய்ப்பொருள் நூலாகிய திருக்குறளில்,

பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்தையும், அதனை யொட்டிச் சிற்றினம் சேராமை என்னும் அதிகாரத்தையும், வைத்துள்ளார் மெய்ந்நூலறிவராகிய திருவள்ளுவர் பெருமான். இவ்விரண்டு அதிகாரங்களிலும் சில அரிய கருத்துகள் சொல்லப் பெறுகின்றன. அவற்றுள் தலையாய ஒரு கருத்தை நாம் நன்கு கவனித்தல் வேண்டும். மனம் எல்லாருக்கும் தொடக்கத்தில் பெய்யும் மழை நீரைப் போல் தூய்மையாகத்தான் இருக்கிறது. ஆனால் அந்நீர் விழுகின்ற நிலத்தைப் பொறுத்து, அதன் தன்மைகள் திரிபடைந்து விடுகின்றன. சூழ்நிலையால்தான் தன்மைகள் அமைகின்றன என்று, பிற்காலத்து வளர்ந்த அறிவியல், மனவியல் அறிவால் கண்டுகாட்டிய தன்மையை, நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பே, திருவள்ளுவப் பெருமான் உணர்ந்து கூறியது வியந்து போற்றுதற்குரியது.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு

இனத்தியல்ப தாகும் அறிவு

(452)



மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்

இன்னான் எனப்படும் சொல்.

(453)



மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு

இனத்துள தாகும் அறிவு.

(454)



மனந்துய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனந்துாய்மை துரவா வரும்

(455)



மனந்துயார்க் கெச்சம்நன் றாகும் இனந்துரயார்க்

கில்லைநன் றாகா வினை.

(456)

ஆகிய ஐந்து குறள்களின் கருத்துகளுள் உலகில் உள்ள மாந்தர்க்கு வேண்டிய மனவியலறிவின் அடிப்படை முழுவதும் சொல்லப் பெற்றுள்ளன. இவற்றை விரிக்கில் மிகவும் பெருகும். இவற்றின் ஆழ்ந்த உட்பொருள் மனத்தின் தன்மையால்தான் ஒருவர்க்கு உணர்வு, உரை, செயல், நன்மை, தீமை முதலிய அனைத்தும் விளைகின்றன என்பதாகும். ஒருவரின் உள்ளத்தில் இருக்கும் உணர்வை நாம் எளிதாக உணர முடியாது. ஆனால் அவரின் உரையால் (சொல்லால் நாம் அதனை ஒருவாறு அறியலாம். நிலத்தில் உள்ள அடிச்சுவடுகளைக் கொண்டு அவற்றுக்குரிய விலங்குகளையும் உயிரிகளையும் நாம் அறிந்து கொள்வது போல், ஒருவரின் சொற்களைக் கொண்டு, அவரின் மனஉணர்வையும், அவரின் தன்மையையும்அவற்றுக்கடிப்படையான அவரது மரபு நிலையையும் அறிந்து கொள்ளலாம் என்பார் திருவள்ளுவப் பெருந்தகை.

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்

குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்

(959)

எனவே மனத்தின் உணர்வுகளெல்லாம் இயற்கை உணர்வுகளாகும். அவை மாற்ற முடியாத உயிரொடு தொடர்புற்ற உணர்வுகள். அந்த மனம் சார்ந்த உடல் இவ்வுலகில் எவ்விடத்து வந்து பிறக்கின்றதோ, அவ்விடத்துச் சூழல்களை அளாவி அமையும் உணர்வுகள் செயற்கை உணர்வுகளாகும். இவற்றை நாம் நம் வலிந்த முயற்சிகளால் மாற்றிக் கொள்ள இயலும் என்பது அறிவு நூலார் கொள்கை.

எனவே, அறிவீடுபாடு செயற்கையுணர்வு ஆகும். அவ்வறிவிடுபாட்டின் அனைத்து முயற்சிகளையும் தமிழ்ச் சான்றோர் பொருள் என்னும் பாகுபாட்டில் அடக்குவர். மனவீடுபாட்டின் அனைத்து முயற்சிகளையும் அறம் என்றும் பாகுபாட்டில் அடக்குவர். இவ்விரு உணர்வுகளே தமிழ்நூல்களில் புறம் என்றும் அகம் என்றும் குறிப்பிடப்பெறுகின்றன.

12. சில மனவியல் நுட்பங்கள்

இவ்வுணர்வுநிலை நுட்பங்களையெல்லாம் விளக்கிச் சொல்வதானால் அஃது ஒரு பெருநூலாகவே விரியும். ஆகலின் அதனை இத்துடன் நிறுத்திக் கொண்டு, வினைக்குத் துணைவரத் தக்கவரைப் பற்றி மேலும் சிறிது விளக்கி மேலே சொல்லுவோம்.

ஒருவர்பால் அமைந்துகிடக்கும், மாற்றலாகாத இயற்கை உணர்வுகளைக் கொண்டே, ஒருவரை எடையிட்டுத் தேர்ந்து, அவர் ஏதோ சில வகையில் நமக்குப் பொருந்தியவராயின், அவருடன் தொடர்பு கொள்ளவும், பொருந்தாதவராயின் அவருடன் தொடர்பு தவிர்க்கவும் வேண்டும். ஒரு வகையில் மட்டும் இச்செயல் நிகழும் என்று சொல்ல முடியாது. இருவகையிலுமே இச் செயல் நிகழலாம். நாம் ஒருவரின் தொடர்பு நமக்குக் கூடாது என்று நினைக்கும் அதே நேரத்தில், அவரும் நம்முடைய தொடர்பைக் கூடாது என்று ஒதுக்கலாம். இதனால் நாம் வருந்திக் கொண்டிருக்கத் தேவையில்லை. நிலை எளிதானது என்று எண்ணி, மனம் நிறைவுறுதல் வேண்டும்.

இயற்கை உணர்வுகளால் வேறுபடாமல், நாம்துணையாகக் கொள்ள விரும்பும் ஒருவர், நமக்கு, செயற்கை உணர்வுகளால் மட்டும் வேறுபட்டிருப்பாராயின், நாம் அவரைத் தவிர்க்கத் தேவையில்லை. அத்தகைய உணர்வுகள் என்றும் மாற்றிக் கொள்ளத் தக்கனவே ஆகும். ஆனால், அதற்காகச் சில முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கும். அவ்வளவே! அம் முயற்சிகள் நம் வினை முயற்சிகளுள் அடங்கிவிடும். எனவே, அவற்றுக்காக நாம் சலிப்படைய வேண்டுவதில்லை. எப்படியோ ஒரு வினைக்குத் துணையாக, முழு நிறைவாக, நாம் எதிர்பார்க்கும்

அத்தனைக் கூறுகளுடனும், ஒருவர் கிடைப்பது மிக மிக மிக அரிது.

ஒருவர் நாம் விரும்பும் அன்புடையவராக இருப்பார். ஆனால் அறிவில் அத்துணை விருப்பத்திற்குரியவராக இரார். இன்னொருவர். அறிவில் நம்மைக் கவரலாம். ஆனால் அன்புடையவராக இருக்கமாட்டார். அவரைத் துணையாகத் தேர்ந்துவிட்டால், அவரிடம் எப்பொழுதும் முரண்பட்டுக் கொண்டு கிடக்க வேண்டியதுதான்.

இனி, ஒருவர் நாம் விரும்பும் அன்புடையவராகவும் இருப்பார். நாம் எதிர்பார்க்கும் அல்லது மதிக்கும் அறிவுடையவராகவும் இருப்பார். ஆனால் நல்ல பண்புடையவராக இருக்கமாட்டார். ஒழுக்கக் கேடுகள் சில அவரிடம் இருக்கும் எல்லாரிடமுங் முரட்டுத்தனமாகப் பேசுபவராக இருப்பார். பழகுபவராக இருப்பார். அவரால் வேறு பிறர் நம் வினைக்குத் துணையானவர்கள், நம்பால் நல்லிணக்கம் கொள்ளத் தயக்கம் கொள்ளலாம். கடிநாய் ஒன்றைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பவரிடம், எப்படிப் பிறர் நெருங்கிப் பழகத் தயங்குவார்களோ, அப்படி அவருக்காக நம்மிடம் பழகுவதற்குச் சிலர் தயங்கலாம். அப்படிப்பட்ட தன்மையுடையவர்களையும் நாம் துணையாகக் கொள்ளுவது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

13. மரத்தைப் போன்றவர்கள்

இனி, இன்னொரு வகையானவர் இருப்பார். அவரிடம் அன்பிருக்கும் அறிவிருக்கும், பண்பும் இருக்கும். பொதுநல உணர்விருக்காது. தன்னலவுணர்வே, தானே அல்லது தன்னோடு சேர்ந்த சிலரே எல்லா நலன்களையும் பெற வேண்டும் என்னும் கரவுள்ளம், கடுகு உள்ளம் இருக்கும். இதுவும் ஒருவகைப் பண்புக் குறைவுதான். அவரையும் நாம் அவ்வளவு எளிதில் துணையாகக் கொண்டுவிடக் கூடாது. ஏனெனில் அன்பைவிட, ஒருவினை முயற்சிக்கு அறிவு தேவையானது. அதேபோல் அறிவைவிட ஒருவர்க்குப் பண்பு தேவையானது. பண்பு இல்லாதவர் தன்னலவுணர்வுடன் இருப்பார். தன்னலவுணர்வுள்ளவர் கொடியவராகவும் மாறுவார். எனவே ஒருவர் எவ்வளவு சிறந்தவராக இருப்பினும் அவர் பண்பில்லாதவராக இருப்பின் அவரை மரத்துக்குச் சமம் என்பார் திருவள்ளுவப் பெருந்தகை.

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண் பில்லா தவர்

(997)

மக்கட் பண்பு என்பது மக்கட்கு நலம் செய்கிற பண்பு. மக்கள் அனைவரையும் ஒன்றாக மதிக்கின்ற பண்பு மக்களுக்காக உழைக்கின்ற பண்பு. அவர்களின் பொருட்டுத் தன் நலத்தை இழக்கின்ற பண்பு. இத்தகைய பண்பு இல்லாதவர் எவ்வள்வு பெரிய அறிவாளியாக இருப்பினும் அவரை நாம் மதிக்க வேண்டியதில்லை. போற்ற

வேண்டியதில்லை. ஒரு மரம் நின்று கொண்டிருந்தால் நாம் எப்படி அதைப் பார்த்தும் பாராமல் போவோமோ, அதுபோல் அவரை நாம் பார்த்து மதிக்காமல் போகலாம் என்பது அவர் கருத்து.

ஒரு மரமானது, தன் கீழாக வேறு ஒரு மரத்தை வளர விடாது. அதற்கு வேண்டிய சாரத்தையும் இதுவே உறிஞ்சிக் கொள்ளும். பின்னர் அஃதெப்படி வளரும், அதுபோல் அறிவிருந்து பொது மக்களுக்கு நலஞ்செய்யும் பண்பில்லாதவன், அவ்வறிவின் திறத்தால், அதன் சூழ்ச்சியால், அவனைச் சுற்றியிருப்பவர்களையும் சுரண்டி வாழத்தக்கவனாகவே இருப்பான். அவர்களுக்கு நலஞ்செய்பவனாக இவன் இருப்பான் என்று சொல்ல முடியாது. இவனுண்டு. இவன் வேலைகள் உண்டு என்று இருப்பான். இவனும் இவன் குடும்பமும் மட்டுமே வாழ்ந்தால் போதும் என்றிருப்பான். பிறருடைய செயல்களைப் பற்றி இவன் கவனம் செலுத்த மாட்டான். செலுத்தினாலும் அவர்களைப் பற்றி அக்கறை காட்டமாட்டான். அவர்களின் செயல், நடைமுறைகள் இவைபற்றி எரிச்சல் அடைவான். மகிழ்ச்சியடைய மாட்டான். இத்தகையவனையே மக்கட் பண்பில்லாத மரம் என்று திருள்ளுவப் பேராசான் கூறுவார்.

14. எவ்வளவில் தேர்ந்தாலும் வேறாக இருப்பவர்கள்

இனி, ஒருவனை அன்பும் அறிவும் பண்பும் உடையவனாகக் காண்பதோடு மட்டுமின்றி, அறம், செல்வம் உடையவனாகவும் நாம் காணமுடியும். அத்தகைய நாம் விரும்பும், அல்லது நம் வினைக்கு வேண்டிய வகையில் அமைந்த சிறப்புக் கூறுகள் பல அமைந்தவனாக ஒருவன் இருந்து, அவனை நாம் நம் வினைக்குத் துணையாகக் கொண்டாலும், அவ்வினை நிலைகளில் பலவாறு மாறுபட்டு விடலாம் என்பார் திருக்குறள் பயந்த செம்மலார்.

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர்.

(514)

என்னும் வாயுரை அது.

எனவே, எல்லாத் தகுதியும் உடைய ஒருவரை நம் வினைக்குத் துணையாகக் கொள்வது அரிதினும் அரிதாகும். அத்தகையவர்களே உண்மையானவர்களாக இருத்தல் இயலும். அப்படிப்பட்டவர்களைத் திருக்குறளில் பல பண்புப் பெயர்களால் குறிப்பார் திருவள்ளுவப் பெருமான். அவர்களையே 'நல்லாற்றின் நின்ற துணை' (41) என்று பெருமைப்படுத்துவார். 'வாழ்பவர்' (5, 240) என்பார். 'சான்றோர்' (69, 115, 657) என்பார். இன்னும் அத்தகையவர்களை அன்புடையார் (72), 'பணிவுடையார்' (95), 'இன்சொல்லர்' (95), 'மாசற்றார்' (106, 311, 800),

'செப்பம் உடையவர்' (112), 'தக்கார்' (114), 'தெளிந்தார்' (143), 'செவ்வியார்' (169) 'ஒத்ததறிவார்' (214), 'நயனுடையார்' (216), 'பெருந்தகையார்' (217), 'குலனுடையார்' (223), அளவறிந்தார், (288), 'அறிவுடையார்' (427, 816, 430), பெரியார் (443), 'ஒள்ளியவர்' (487),'நடுக்கற்ற காட்சியவர்' (654), 'நீரவர்' (அறிவுடையர்),(782), 'பண்புடையாளர்' (783, 996), 'பழிநாணுவார்' (794), 'எல்லைக் கண் நின்றார்' (805) 'இற்பிறந்தார்' (951), 'குடிப்பிறந்தார்' (952, 954), 'குலத்தில் பிறந்தார்' (954), 'மானம் உடையார்' (970),'பெருமை உடையார்' (974), 'பாடறிவார்' (பெருமையறிவார் (955), 'நல்லவர்' (1011) என்று பலவாறாக வியந்து போற்றுவார்.

இத்தகையவர்களே உலகியல் அறிந்தவர்கள். உயிருக்குத் துணையாக நிற்பவர். அவர்களே வினைக்குத் துணையாக இருக்க இயலும் என்பது குறிப்பால் உணர்த்தப் பெற்றவராவர். அவர்களைத் தேர்ந்து தெளிவது கடினம். இருப்பினும் அவர்களையே கொடுத்தும் கொளல் வேண்டும். (867), உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல் வேண்டும் (703).

இனி, வினைக்குப் பொருந்திய காலம், இடம் முதலியவற்றைத் தேர்தல் குறித்து அடுத்த பகுதியில் பேசுவோம்.