பல்லவப் பேரரசர்/சமய மாற்றம்

விக்கிமூலம் இலிருந்து

5. சமய மாற்றம்

தமிழகத்தில் சமயநிலை

ஏறத்தாழச் சங்க காலத்தின் இறுதியாகிய கி.பி. 400க்கு முற்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் பல சமயங்கள் இருந்தன. அவை சைவ சமயம், வைணவ சமயம், பெளத்த சமயம், சமண சமயம் முதலியனவாகும். அவை ஒன்றோடு ஒன்று போரிடாது சமரசமாகவே வாழ்ந்து வந்தன.

சங்க காலத்திற்குப் பிறகு சோழ - பாண்டிய நாடுகள் களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்ட காலத்தில் சமணம் தலை தூக்கியது. பாண்டிய நாடாண்ட களப்பிரர் சமணத்தைப் போற்றி வளர்த்தனர்; வைதிக நெறியையும் சைவத்தையும் வளரவிடவில்லை; ஒரு பிராமணனுக்கு விடப்பட்ட - பிரமதேய உரிமையைப் பறிமுதல் செய்தனர் என்று வேள்விக்குடிப்பட்டயம் விளம்புகிறது. மூர்த்திநாயனார் என்பவர்க்கு, சோமசுந்தர்க் கடவுள் கோவிலுக்கு நாளும் சந்தனச்சாந்து கொடுக்கச் சந்தனக் கட்டைகள் கிடைக்காதவாறு செய்தனர் என்று பெரிய புராணம் புகல்கின்றது. பாண்டிய நாட்டில் உள்ள மலைகளில் சமண முனிவர்கள் வாழ்ந்துவந்தார்கள். சமணப் புலவர் பலர், மதுரையில் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் ஒரு சங்கத்தைக் கூட்டினர் எனின், பாண்டிய நாட்டில் சமணம் நன்கு பரவி இருந்தது என்பதை அறியலாம்.

சமண மடம்

சோழ நாட்டிலும் திருவாரூர், பழையாறை முதலிய இடங்களில் சமணர் பரவி இருந்தனர்; தொண்டை நாட்டில் வெடால், சிற்றாமூர், கூடலூர், திருப்பாதிரிப்புலியூர், காஞ்சி முதலிய இடங்களில் பரவி வாழ்ந்தனர். திருப்பாதிரிப்புலியூரில் இருந்த சமண மடம் ஒன்று தென்னிந்தியாவிற் புகழ்பெற்று விளங்கியது. அதனில் புகழ்பெற்ற சிம்மசூரி, சர்வநந்தி என்ற திகம்பர சமணப் பேரறிஞர் வடமொழியிலும் பிராக்ருத மொழியிலும் வல்லுநராய் விளங்கினர்; பிராக்ருத மொழியில் இருந்த சமண நூல்களை வடமொழியில் பெயர்த்தெழுதினர். காஞ்சி வடமொழிக் கல்லூரி வைதிகர்க்குச்சிறப்புச் செய்தவாறு, திருப்பாதிரிப்புலியூர் மடம் சமணர்க்குச் சிறப்பளித்தது. ‘லோகவிபாகம்’ என்ற சமண நூல் இந்த மடத்தில் செய்யப்பட்டது. அப்பொழுது சிம்மவர்மன் என்ற இடைக்காலப் பல்லவன் அரசனாக இருந்தான் என்று அந்த நூலின் முகவுரையிற் கண்டுள்ளது. மஹேந்திரவர்மன் தான் இந்த மடத்தைப் பெரிதும் ஆதரித்து வந்தான். இவ்ன் தன் ஆட்சியின் முற்பகுதியில் சமணப் பற்றுடையவனாக இருந்தவன்.

திருநாவுக்கரசர்[1]
(கி.பி. 580–660)

இளமைப் பருவம்

தென் ஆர்க்காடு ஜில்லாவில் திருக்கோவலூர்த் தாலுகாவில் உள்ள திருஆமூர் என்னும் திருப்பதியில் புகழனார் என்ற வேளாளர் இருந்தார். அவர் மனைவியார் பெயர் மாதினியார் என்பது. இவர்கட்குத் திலகவதியார் என்ற மகளார் இருந்தார். ஆண்மகவு இல்லாமையால் பெற்றோர் சிவபெருமானைத் தவம் கிடந்தனர். பிறகு ஒர் ஆண்மகவு பிறந்தது. அவருக்கு மருள்நீக்கியார் என்று பெயரிட்டு வளர்த்தனர். திலகவதியார்க்கு உற்ற வயது வந்ததும் அவரைச் சிறந்த போர்வீரரான கலிப்பகையார் என்பவர்க்கு மணம் பேசினர். மணத்திற்கு முன் வேற்றரசன் படையெடுப்பைத் தடுக்கக் கவிப்பகையார் அரசனால் அனுப்பப்பட்டார். அவர் வருவதற்குள் புகழனாரும் மாதினியாரும் காலமாயினர். பின்னர்ப் போருக்குச் சென்ற கலிப்பகையாரும் கொல்லப்பட்டார். இதனை அறிந்த திலகவதியார் இறக்கத் துணிந்தார். அவ்வமயம் தம்பியாரான மருள்நீக்கியார் வேண்ட, சிறுவரான அவரை வளர்ப்பது தமது கடமை என்று எண்ணி இறப்பது தவிர்ந்தார் சிறந்த ஒழுக்கத்துடன் சிவ பூசையில் ஈடுபட்டு வாழ்ந்துவந்தார். மருள்நீக்கியாரும் தமிழ்ப்புலமை பெற்றுச் சிவபக்தியுடன் வாழ்ந்தார்.

சமண வாழ்க்கை

மருள்நீக்கியார் சமணர் சொற்பொழிவுகளைக் கேட்டார்; அச்சமயத்தில் எவ்வாறோ அவருக்குப் பற்று உண்டானது. அதனால் அவர் திருப்பாதிரிப்புலியூர் மடத்திற்குச் சென்றார்; ஆடையற்ற திகம்பர சமண முனிவராக மாறினார்; பல ஆண்டுகள் அங்குத் தங்கிச் சமண சமயக் கொள்கைகளையும் பிற உண்மைகளையும் உணர்ந்தார், சமண முனிவர் பாராட்டுக்கு உரியவராகித் தருமசேனர் என்ற பட்டமும் பெற்றார்; பெளத்தரைப் பலவாதங்களில் வென்று புகழ் பெற்றார். அவரது மத மாற்றத்தை அறிந்த திலகவதியார் திருவதிகையில் உள்ள சிவபெருமானிடம் முறையிட்டுத் தம் தம்பியை மீட்டும் சைவ சமயத்தில் திருப்பியருளவேண்டும் என்று வரம் கிடந்தார். அவ்வம்மையார் அங்கு ஒரு மடம் அமைத்துக் கொண்டு தவ வாழ்க்கை வாழ்ந்துவந்தார். இந்நிலையில் மருள்நீக்கியார் என்ற தருமசேனர் பாடலிபுரத்துச் சமண மடத்தில் சிறந்த சமணசமயத் தலைவராக இருந்து வந்தார். தருமசேனரது புகழை நமது மஹேந்திரவர்மன் நன்கு அறிந்திருந்தான்.

பல்லவ நாட்டுச் சமயநிலை

மருள்நீக்கியார் தருமசேனராகச் சமண மடத்தில் வாழ்ந்தபொழுது பெளத்தமும் சைவ வைணவங்களும் செல்வாக்கில் குன்றி இருந்தன. கிருஷ்ணையாறு முதல் காவிரியாறுவரை அரசாண்ட மஹேந்திரனே சமணன் எனின், எந்த மதம் அவன் அரசியலில் செல்வாக்கைப் பெற முடியும் என்று நாம் சொல்லவும் வேண்டுமா? சமண சமயமே பல்லவ நாட்டில் மிக்க செல்வாக்குப் பெற்று விளங்கியது. ஏனைய சமயங்கள் பெயரளவில் இருந்து வந்தன.

சூலை நோய்

இந்நிலையில் திடீரென்று தருமசேனர்க்குக் கொடிய வயிற்று வலி உண்டானது. அதன் பெயர் சூலைநோய் என்பது. வயிற்று எரிச்சல், வயிறு உளைதல், புளித்த ஏப்பம் வருதல், மயக்கம் உண்டாதல், குடரை முறுக்கல் முதலிய தொல்லைகளை உண்டாக்குதல் அதன் இயல்பு. அக்கொடு நோயால் தருமசேனர் பெருந்துன்பப்பட்டார். சமண முனிவர்கள் மந்திரவலியால் அதனைப் போக்க முயன்றனர்; பின்னர் மருந்து வகையால் போக்க - முற்பட்டனர். அவர்கள் முயற்சி பலன் அளிக்கவில்லை.

தமக்கையாரை அடைதல்

சூலைநோயின் கொடுமை மிகுதிப்பட்டது. தருமசேனர். யோசனையில் ஆழ்ந்தார். அப்பொழுது அவருக்கு மனத்தெளிவு ஏற்பட்டது; தமது நிலையைத் திருவதிகையில் சிவத்தொண்டு செய்துவந்த தமது தமக்கையாருக்குச் சொல்லி அனுப்ப விழைந்தார்; அவ்வண்ணமே செய்தார். தமக்கையார் ‘இதுவும் சிவனருள்’ என்று எண்ணித் தம்பியார் வருகையை ஆவலோடு எதிர்நோக்கி இருந்தார். தருமசேனர் திகம்பர சமண கோலத்தைக் களைந்து வெள்ளையாடை உடுத்து, இரவில் சென்று, “நமது குலம் செய்த நற்றவத்தின் பயன் அனையீர், என் உடலை வருத்தும் கொடிய சூலைநோய்க்கு வருந்தி யான் உம்மைச் சரண் அடைந்தேன். நான் பிழைக்கும் வழியைக் காட்டி அருளுக” என்று வேண்டி, அவர் மலர்போன்ற பாதங்களிற் பணிந்தார்.

மத மாற்றம்

அருள் நோக்கமுடைய அவ்வம்மையார் தம்பியாரை எழுப்பி, “அப்பனே திருவதிகைப் பெருமானைப் பாடவா; செல்வோம்; அவனே நினது கொடுநோயை நீக்கவல்லவன்” என்றார்; என்று, சிவபெருமானை நினைந்து திருநீற்றைத் தந்தார்:“நான் பிழைத்தேன்” என்று சொல்லிக்கொண்டு மருள்நீக்கியார் அதன்னைப் பெற்றுப் பெருமகிழ்ச்சியுடன் உடல் முழுவதும் பூசிக்கொண்டார். பிறகு இருவரும் திருக்கோவிலை அடைந்தனர்; பக்தியுடன் கோவிலை வலங்கொண்டனர். அப்பொழுது மருள்நீக்கியார் சிவபிரான்மீது பாடல்கள் பாடும் உணர்வு பெற்றார்; உணர்வு பெற்று, இறைவன்மீது கொண்ட பேரன்பினால் உள்ளம் உருக, “கூற்றாயினவாறு விலக்ககலீர்” என்று தொடங்கி ஒரு பதிகம் பாடினார். அதனில், “நான் பிறந்தது முதல் உம் திருவடிகளையே எண்ணியிருந்தேன்; தமிழோடு இசைபாடல் மற்ந்தறியேன். என் வயிற்றை வருத்தும் கொடிய சூலைநோயைப் போக்கி, என் பிழையைப் பொறுத்து ஆட்கொண்டருள்வீர்” என்று வேண்டினார்.

“நாவுக்கரசன்”

அவ்வமயம், “நாவுக்கரசன்” என்னும் சொல் கோவிலிலிருந்து எழுந்தது. அதுமுதல் மருள்நீக்கியார் திருநாவுக்கரசர் எனப் பெயர் பெற்றார். இறைவன் திருவருளால் அவரது சூலைநோயும் மறைந்தது. அன்று முதல் திருநாவுக்கரசர் சிவ சின்னங்களை அணிந்து, திருவதிகைப் பெருமானைப் பேரன்புடன் பணிந்து திருப்பதிகங்களைப் பாடிவந்தார்; தினந்தோறும் திருக்கோவிலைச் சுத்தம் செய்யும் திருத்தொண்டில் ஈடுபட்டார்.

சமண முனிவர் மனக்குழப்பம்

தங்களிடைச் சிறந்த மதவாதியாக இருந்த தருமசேனர் திருவதிகைக்குச் சென்று மதம் மாறிய செய்தியைப். பாடலிபுரத்துச் சமண முனிவர் கேள்விப்பட்டனர் “வயிற்றுவலியைப் போக்கச் சமணரால் முடியவில்லை. அதனால் தருமசேனர் - சிவபெருமானை வேண்டினார். நோய் நீங்கிவிட்டது; அவர் உடனே சைவர் ஆனார் என்னும் செய்தி எங்கும் பரவினால், சமணத்தில் பொது மக்களுக்கு இருந்த பற்றுக்குறையும் அல்லவா? அதனால் சமணர் செல்வாக்கும் ஒழிய இடமுண்டாகும். மேலும், சிறந்த படிப்பாளியும் தர்க்கவாதியுமான தரும்சேனர் சைவப் பிரசாரத்தைப் பலமாகச் செய்யத் தொடங்கிவிடுவர். இவற்றை எல்லாம் சமண முனிவர் நன்கு யோசித்தனர்; என்ன செய்வது என்பது தெரியாமல் மனக்குழப்பம் அடைந்தனர் முடிவில் ஒருவாறு யோசனை செய்து, தம் அரசனான மஹேந்திரவர்மனிடம் சென்று கூறத்துணிந்தனர்.

சமணரும் பல்லவனும்

உடனே பாடலிபுரத்திலிருந்த சமண முனிவர் பல்லவன் கோநகரமான காஞ்சியை அடைந்தனர்; மஹேந்திரவர்மனை நேரிற் கண்டனர்; கண்டு, “அரசே! நமது தருமசேனர் சூலைநோயால் வருந்தியவரைப் போலப் பாசாங்கு செய்தார்; நாங்கள் மருந்துகள் கொடுத்தோம் மந்திரங்கள் ஒதினோம். அது தீரவில்லை என்று சொல்லி, ஒருவர்க்கும் தெரியாமல் அவர் திருவதிகை சென்று சைவராக மாறிவிட்டார்; அதனால் நினது சமயம் ஒழித்தார்” என்றனர். உடனே பல்லவன் வெகுண்டெழுந்தான் “சைவ சமயத்தைச் சேர நோயை ஒரு போர்வையாகக் கொண்டு, புகழ்பெற்ற நமது சமயத்தை அழித்தொழிக்கவே அவர் சென்றனர். போலும். அங்ஙனம் சென்றிருப்பின், அவர்கு ற்றமுடையவரே ஆவர். அவரை என்ன செய்யலாம்? கூறுக” என்றான். உடனே, கொலைபுரியா நிலைகொண்ட சமண முனிவர் அரசனை நோக்கி, “அரசே! தலைநெறியாகிய சமண சமயத்தை அழித்து, உன்னுடைய பழைமையான கட்டுப்பாட்டையும் ஆணையையும் அவமதித்த அறிவற்ற அத்தரும, சேனனைத் தக்கவாறு தண்டிப்பதே தக்கது” என்றனர். அரசன் அமைச்சரை அழைத்து, “நீவிர் திருவதிகைக்குச் சென்று இவர்கள் கூறும் தருமசேனன் என்பவனை இங்கு அழைத்து வருக” என்று பணித்தான்.

அரசரும் அமைச்சரும்

அமைச்சர் திருவதிகை அடைந்தனர் தருமசேனர் திருநாவுக்கரசராக இருந்ததைக் கண்டனர்; பணிவுடன் தம் அரசன் கட்டளையைத் தெரிவித்தனர். திருநாவுக்கரசர், “நாம் யார்? நும் அரசன் யாவன்? அவனிடம் நாம் வரவேண்டிய காரணம் என்ன? சிவனடியார்கள் அரசன் ஆணைக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்லரே! நாம் அரசனைக் கண்டு. அஞ்சோம். நாம் ஈசனுடைய குடிகள் வேறெவர்க்கும் குடி அல்லோம்” என்று பலவாறு பேசினர்.அமைச்சர், அவர் காஞ்சிக்கு வராவிடில் தமக்குத் தண்டனை கிடைக்கும் என்பதை அறிவித்தனர். “அங்ஙனமாயின், வருவேன்,” எனக் கூறித் திருநாவுக்கரசர் பல்லவ அமைச்சருடன் காஞ்சி மாநகரை அடைந்தார்.

பலவகைத் தண்டனைகள்[2]

நீற்றறையில் இடுதல்

“தருமசேனரைக் கொணர்ந்தோம்” என்று அமைச்சர் கூறக் கேட்ட அரசன், “அவனை யாது செய்யலாம்?” என்று சமண முனிவரைக் கேட்டான், அவர்கள், “அவனை நீற்றறையில் இடுக” என்றனர். அரசன் அருகில் இருந்தவரைப் பார்த்து,“அவ்வண்ணம் செய்க” என்றான். உடனே அரசனுடைய ஆட்கள் திருநாவுக்கரசரை நன்றாக எரிந்துகொண்டிருந்த நீற்றறையில் அடைத்துக் கதவை மூடிவிட்டனர்.

உள்ளே அடைப்பட்ட திருநாவுக்கரசர் சிவ பெருமான் திருவடிகளை நினைந்தவண்ணம் தம்மை மறந்து,

“மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றவே
ஈசன் எந்தை இணையடி நீழலே”

என்னும் திருப்பதிகம் பாடிக்கொண்டு இருந்தார். இவ்வாறு ஏழுநாள்கள் கழிந்தன. எட்டாம்நாள் அரசன் சமண முனிவரை அழைத்து, “நீற்றறையைத் திறந்து பாருங்கள்” என்றான். அவர்கள் திறந்து பார்த்து அதிசயித்தனர்; அரசனிடம் சென்று, “ஐயனே, அவன் எவ்வாறோ பிழைத்திருக்கிறான். அவனுக்கு விடம் ஊட்டலே தக்கது” என்றனர்.

நஞ்சூட்டல்

சமணச் சார்பு கொண்ட மஹேந்திரவர்மன் அதற்கு உடன்பட்டான். வேலையாட்கள் பால் அமுதில் விடம் கலந்து, அதனைத் திருநாவுக்கரசர்க்கு அளித்தனர். அப்பெரியவர் உண்மையை உணர்ந்து, “நஞ்சுண்ட சிவபெருமானைத் தேவனாகக் கொண்ட அடியவர்க்கு நஞ்சும் அமுதாகும்” என்று கூறி, அப் பாலடிசிலை மகிழ்ச்சியோடு உண்டு மகிழ்ந்திருந்தார். இதனை அறிந்த சமண முனிவர் அஞ்சினர்; “இவன் பிழைத்தல் நமக்கெல்லாம். இறுதியேயாகும்” என்று எண்ணி, வேந்தன்பால் சென்று, “தருமசேனன் மந்திரத்தில் தேர்ந்தவன்; அதனால் உயிர் பிழைத்திருக்கிறான். அவனை நினது மதயானையின் முன்னிலையில் விடுவதே தக்கது” என்றனர்.

யானையை ஏவுதல்

திருநாவுக்கரசர் ஒரிடத்தில் அமர்த்தப்பட்டார். அவரை நோக்கிக் கொல்களிறு ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டது. உடனே வழியிலிருந்த பொதுமக்கள் ஒடி ஒளிந்தனர். அக்கொடிய மதயானை தன் துதிக்கையைத் தூக்கியபடி வந்தது. அது தன்னை நோக்கி வருதலைக் கண்ட திருநாவுக்கரசர் சிவபெருமானை நினைந்து, “சுண்ணவெண்சந்தனச் சாந்தும்” என்று தொடங்கும் திருப்பதிகம் பாடினார். அவ்வளவில் அந்தக் கொடிய யானை அச்சிவனடியாரை வலம் வந்தது; எதிரில் தாழ்ந்த்து பின்பு எழுந்தது; அவரை விட்டு விலகிச் சென்றது. அதன்மீதிருந்த பாகர் அதனைக் குத்தித் துன்புறுத்தித் திருநாவுக்கரசர் மீது ஏவ முயன்றனர். அந்த யானை சீற்றம் மிகுந்து, பாகரை இழுத்துக் கீழே தள்ளி மிதித்துக் கொன்று நகரத்தைக் கலக்கியது. இதனை உணர்ந்த அரசன் பெருந்துயர் கொண்டான்.

கல்லிற் கட்டிக் கடலிற் பாய்ச்சல்

யானைக்குத் தப்பிப்பிழைத்த சமண முனிவர் மஹேந்திரனை அடைந்தனர்; அடைந்து, “அக்கொடி யோனைக் கல்லிடைக் கட்டிக் கடலில் எறிதலே தக்கது” என்றனர். உடனே வேந்தன் ஆட்களை நோக்கி, “அவனைப் படகில் ஏற்றிச் சென்று கல்லிற்கட்டிக் கடலில் போட்டு விடுக” என்று ஆணையிட்டான். அவர்கள் அங்ஙனமே செய்து மீண்டார்கள்.

கடலில் வீழ்த்தப்பட்ட திருநாவுக்கரசர்,

“சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருத்தக் கைதொழக்
கற்றுணைப்பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணையாவது கமச்சி வாயவே”

என்னும் திருப்பதிகம் பாடினார்

திருவருள் துணையால் கல் தெப்பமாக மிதந்தது. திருநாவுக்கரசர் அதன்மீது அமர்ந்து இறைவனைப். பாடிக்கொண்டே திருப்பாதிரிப்புலியூர்க் கரை ஓரமாக வந்து கரை[3] ஏறினார்; ஏறி, நேராகத் திருப்பாதிரிப்புலியூர்ச் சிவபெருமான் திருக்கோவிலை அடைந்தார்; அடைந்து தொழுது, “ஈன்றாளு மாயெனக் கெந்தையுமாய்” என்று தொடங்கும் திருப்பதிகத்தை உள்முருகப் பாடினார். அப்பதியில் இருந்த சைவத் தொண்டர்கள் அடியவரை வரவேற்று உபசரித்தார்கள்.

பின்னர்த் திருநாவுக்கரசர் திருப்பாதிரிப்புலியூரை விட்டு திருமாணிக்குழி, திருத்தினைநகர் ஆகியவற்றைத் தரிசித்துக் கெடில நதியைத் தாண்டித் திருவதிகையை அடைந்தார். அப்பதியில் இருந்த சிவனடியார்கள் ஊரை அலங்கரித்து, திருநாவுக்கரசரை வரவேற்றனர். அப்பெரியவர் திருவதிகை வீரட்டானேஸ்வரரைப் பாடித் தொண்டு செய்துவந்தார்.

மஹேந்திரன் மதமாற்றம்

திருநாவுக்கரசர் வரலாறு முழுவதையும் தக்கார் வாயிலாகக் கேள்வியுற்ற மஹேந்திரவர்மன் தான் அவருக்குச் செய்த கொடுமைகளை எண்ணி எண்ணி மனம் வருந்தினான்; தன் தண்டனைகள் அனைத்தையும் திருத்தொண்டின் உறைப்பாலே வென்ற அவரது சிவபக்தி மேன்மையை எண்ணி எண்ணி வியந்தான். உடனே அவன் உள்ளம் சிவத்தைத் துணையெனக் கொண்டது. அவன் குடிகள் . சைவப்பற்று மிக்குடையராதலைக் கண்டான், தானும் சைவன் ஆனான்.

குணபர ஈஸ்வரம்

மஹேந்திரன் சைவன் ஆனவுடன் பாடலிபுரத்தில் இருந்த சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடிக்கச் செய்தான், அச்சிதைவுகளைத் திருவதிகைக்குக் கொண்டு வரச் செய்தான். அங்குத் திருநாவுக்கரசர் திருவுள்ளம் மகிழவோ, என்னவோ, தெரியவில்லை; அச்சிதைவுகளைக் கொண்டு சிவன்கொவில் ஒன்றைக் கட்டினான். அதற்குத் தன் பெயர் தோன்றக் “குணபர ஈஸ்வரம்” என்று பெயரிட்டு மகிழ்ந்தான்.

இவ்வாறு மஹேந்திரன் கட்டியதாகக் கூறப்படும் இக்குணபர ஈஸ்வரம் திருவதிகைப் போலீஸ் நிலையத்திற்கு எதிரே இருக்கின்றது. இன்று இஃது அழிவுற்ற நிலையில் சிறிய கோவிலாகக் காணப்படுகிறது. இதனுள் உள்ள பெரிய லிங்கம் மஹேந்திரன் காலத்ததென்பதில் ஐயமில்லை. மஹேந்திரன் அழித்ததாகக் கூறப்படும் பாடலிபுரத்துச் சமண மடத்தின் சிதைவுகள்,[4] திருப் பாதிரிப்புலியூரிலிருந்து திருவகீந்திரபுரம் (திருவந்தி புரம்) போகும் பாதையில் காணக்கிடக்கின்றன. அங்குச் சமண தீர்த்தங்கரர் சிலை ஒன்று இன்றும் இருந்து வருகின்றது. மஹேந்திர வர்மனுக்குப் பிறகு, புகழ்பெற்ற பாடலிபுரத்துச் சமண மடத்துச் செய்தி ஒன்றும் எந்த நூலிலும் குறிக்கப்படவில்லை. இதனை நோக்க, பெரிய புராணக் கூற்றுப்படி, அது மஹேந்திரனால் அழிக்கப்பட்டு விட்டதென்றே கருதவேண்டுவதாக இருக்கின்றது.

கல்வெட்டுச் சான்று

மஹேந்திரன் திருச்சிராப்பள்ளி மலைமீது ஒரு கோவிலைக் குடைந்தான்; அங்கு ஒரு பெரிய லிங்கத்தை எழுந்தருளச் செய்தான்; அதற்கு எதிர்ப்புறத்துப் பக்கத்துண்கள் இரண்டில் இரண்டு வடமொழிக் கல்வெட்டுகளை வெட்டுவித்தான். அவற்றுள் ஒன்று, காவிரி வருணனையை நிரம்பக் கூறி, “விரும்பத் தக்க குணங்களையுடைய காவிரியாற்றைக் கண்டு தன் கணவனான சிவபெருமான் அக்காவிரியாகிய நங்கைமீது காதல் கொள்வானோ என்று அஞ்சியவளாய் மலையரசன். மகளான உமையவள், தன் பிறந்தகத்தை விட்டு இம்மலைமீது நின்று, “இவ்யாறு பல்லவனுடையது” என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றாள். குணபரன் வானளாவும் இம்மலைக் கோவிலைச் சிவனுக்காக அமைத்தான். குணபரன் அரசாட்சியில் மனுவை ஒத்தவன். அவன் சிவனை உள்ளத்தில் நிலை நிறுத்திய புருஷோத்தமன். அவன் நிகரற்ற இந்த லிங்கத்தை மலைமீது வைத்து, இம்மலையைப் பயனுடையதாக்கினான்” என்ற செய்தியையும் குறிப்பிட்டுள்ளது.

மற்றொரு கல்வெட்டு, “குணபர அரசன் லிங்கத்தைப் பூசிப்பவன். ஆதலின், இதற்கு எதிர்முறையில் இருந்த அவனது அறிவைத் தன்பால் திருப்பிய இந்த லிங்கத்தின் புகழ் உலகமெல்லாம் பரவட்டும்”[5] என்பது.

சிறந்த சிவ பக்தன்

இவ்விரண்டாம் கல்வெட்டுச் சான்றை நன்கு நோக்குக. “இதற்கு எதிர்முறையில் இருந்த அவனது அறிவைத் தன்பால் திருப்பிய லிங்கம்” என்பது கவனிக்கத் தக்கது. இத்தொடர் பெரிய புராணத்துள் கூறப்படும் . மஹேந்திரனது மத மாற்றத்தை உறுதிப்படுத்துதல் காணலாம். இவன் சைவனாகாமல் சமணனாகவே இருந்திருப்பின், திருநாவுக்கரசர் தொண்டை நாட்டில் சைவப் பிரசாரத்தைத் தீவிரமாக நடத்தியிருத்தல் இயலாது. ஆனால், அவரது சைவப் பிரசாரம் தீவிரமாகப் பரவியதை நோக்க, அரசன் சைவனாகி, அப்பிரசாரத்திற்கு வேண்டிய ஆக்கம் அளித்தான் என்பது நம்பவேண்டுவதாக இருக்கிறது. மஹேந்திரன் சிறந்த சிவபக்தனாக இருந்தான் என்பது மேற்சொன்ன கல்வெட்டுகளாலும், இசையைப் பற்றிய கல்வெட்டிற் காணும் “சித்தம் நமசிவாய” என்னும் தொடராலும் நன்கறியலாம்.


  1. இவை திருநாவுக்கரசர்வரலாறு.பெரியபுராணம் அப்பர் தேவாரம் இவற்றுட் குறித்துள்ளபடியே தரப்பட்டுள்ளது.
  2. இங்ஙனம் தம் கொள்கைகட்கு மாறுபட்டாரைப் பலவாறு துன்புறுத்தல் பண்டை நாளில் உலகம் எங்கும் நடைபெற்றுவந்த நிகழ்ச்சியே ஆகும். சாக்ரடிஸ் விஷம் குடிக்கச் செய்யப்பட்டதும், இயேசுநாதர் சிலுவையில் அறையுண்டதும், மார்டின் லூதர் பல தண்டனைகளுக்கு ஆளானதும் காண்க. இந்நிகழ்ச்சிகள் வரலாற்று நிகழ்ச்சிகள்; அக்கால நிலைக்கேற்ப நடந்தவை. இந்நிகழ்ச்சிகள் பற்றி இக்காலத்தில் விவாதம் வேண்டுவதில்லை.
  3. ‘கரை ஏற விட்ட குப்பம்’ என்பது பாதிரிப்புலியூரை அடுத்து - இருக்கின்றது.
  4. சமணக் கட்டடச் சிதைவுகளும் குணபர ஈஸ்வரமும் வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்கள் ஆதலால், அவற்றைப் பாதுகாத்த்ல் அரசாங்கத்தார் - பொதுமக்கள் கடமையாகும்.
  5. S.I.I. Vol.I. 33 and 34.