பல்லவப் பேரரசர்/கோவில்களும் சிற்பங்களும்

விக்கிமூலம் இலிருந்து
9. கோவில்களும் சிற்பங்களும்

கோவில் அமைப்பும் தூண்களும்

நரசிம்மவர்மன் தன் தந்தையைப் போலவே கோவில்கள் அமைப்பதில் விருப்பங்கொண்டவனாக இருந்தான். இவன் முதலில் தந்தையைப் பின்பற்றிக் குடைவரைக் கோவில்களை அமைத்தான்; பிறகு பாறைகளையே கோவில்களாக அமைத்தான். இவனுடைய கோவில்களில் இவனுடைய விருதுப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோவில் முன் மண்டபச் சுவர்களில் அழகிய சிலைகளும் வரிசை வரிசையாக அன்னப் பறவைகளும் சிறுமணிக் கோவைகளும் செதுக்கப் பட்டிருக்கும். மஹேந்திரன் தூண்கள் நீள் சதுரமாக இருக்கும். ஆனால், இவனுடைய தூண்கள் அங்ஙனம் இரா. அவற்றின் போதிகைகள் உருண்டு காடிகள் வெட்டி இருக்கும். போதிகைக்குக் கீழ் - தூணின் மேற்புறம் உருண்டும் பூச்செதுக்கப்பட்டும் இருக்கும். தூண்களின் அடிப்பாகம் அமர்ந்த சிங்க உருவமாக இருக்கும்; சிங்கங்கள் தலைமீது தூண்கள் நிற்பனபோன்ற காட்சி அளிக்கும். சிங்கங்கள் திறந்த வாயுடன் இருக்கும். இத்தகைய சிங்கத் தூண்களைக் காஞ்சி - வைகுந்தப் பெருமாள் கோவிலிற் காணலாம்.

I. குடைவரைக் கோவில்கள்

நாமக்கல் கோவில்

சேலம் ஜில்லாவில் உள்ள நாமக்கல் மலையில் வனக கடைவரைக் கோவில் ஒன்று இருக்கின்றது. அது பெருமாள் கோவில். அதன் சுவர்களில் புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் அழகிய வேலைப்பாட்டுடன் விளங்குகின்றன.

திருச்சிராப்பள்ளி மலைக்கோவில்

இம்மலையின் தென்மேற்கு மூலையில் உள்ள குடைவரைக் கோவில் இம்மன்னன் காலத்தது. அதுவும் பெருமாள் கோவிலே ஆகும்.அதன் மூன்று சுவர்களிலும் உள்ள சிற்பங்கள் பார்ப்ப்வர்க்குத் திகைப்பூட்டவல்ல அற்புத வேலைப்பாடு கொண்டவை. சிவன், பிரமன், இந்திரன், துர்க்கை, கணபதி என்பவர் உருவங்கள் நன்கு செதுக்கப்பட்டுள்ளன. கோவில்முன் மர விட்டங்கள் போலக் கல்லில் அமைத்துள்ள வேலைப்பாடு கண்டு களிக்கத்தக்கது. இக்கல் விட்டங்களின் நுனியில் பெருவயிறு கொண்ட ‘குபேரன்’ உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

பிற கோவில்கள்

திரிசிரபுரத்தை அடுத்த திருவெள்ளறை, குடுமியான் மலை, திருமெய்யம் ஆகிய இடங்களில் உள்ள குடைவரைக் கோவில்களில் வைணவ சம்பந்தமானவை இவன் காலத்தனவாகும்.

மாமல்லபுரத்து மண்டபங்கள்

மாமல்லபுரத்தில் உள்ள மகிடாசுர மண்டபம், வராக மண்டபம், திரிமூர்த்தி மண்டபம் ஆகிய மூன்றும் நரசிம்மவர்மன் அமைத்த குடைவரைக் கோவில்களே. ஆகும். இவற்றில் உள்ள சிற்பங்கள் கண்ணைக் கவரத் தக்கவை. வராக அவதாரம், வாமன அவதாரம், கஜலக்ஷ்மி, துர்க்கை இவர்தம் உருவச்சிலைகள் அழகிய வேலைப்பாடு கொண்டவை.

சாளுக்கிய வேலைப்பாடு

இக்கோவில் அமைப்பு, தூண்கள் அமைப்பு, மேற்சொன்ன சிற்பங்களின் வேலைப்பாடு இவை அனைத்தும் சாளுக்கியருடைய கோவில்களை நன்கு பார்வையிட்ட பிறகு உண்டானவை. நரசிம்மவர்மன் வாதாபியைப் பதின்மூன்று வருடகாலம் கைக்கொண்டிருந்தான். அல்லவா? அக்காலத்தில் சாளுக்கிய நாட்டிலிருந்த குடைவரைக் கோவில்களையும் சிற்ப வேலைப்பாட்டையும் கண்டு மகிழ்ந்து, அந்த அழகிய அமைப்பில் மேற்சொன்னவற்றை அமைத்திருத்தல் வேண்டும். இவ்வேலைக்குச் சாளுக்கிய நாட்டுச் சிற்பிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.


II. ஒற்றைக்கல் கோவில்கள்

இவை ‘கோவில்கள்’ என்பதை அறியாமல் மாமல்லபுரத்து மக்கள் ‘தேர்கள்’ எனத் தவறாக வழங்கினர். இவை ஐந்தாக இருத்தலைக் கண்டு தருமராஜன் தேர், பீமசேனன் தேர், அர்ச்சுனன் தேர், சகதேவன் தேர், திரெளபதி தேர் எனப் பெயரும் இட்டுவிட்டனர். இதனைப் பின்பற்றியே ஆராய்ச்சியாளரும் சுட்டி விளக்கலாயினர். இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.


1. தருமராஜன் தேர்

இது சிவன் கோவில் ஆகும். இது மூன்று தட்டுகளைக் கொண்ட விமானத்தை உடையது. இரண்டாம் தட்டின் நடுவில் மாடப்புரை வெட்டப் பட்டுள்ளது. அதன் அடியில் சோமாஸ்கந்தர் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. இக்கோவில் விமானம் ஆராய்ச்சிக்குரியது. இதன் வளர்ச்சியே காஞ்சி - கயிலாசநாதர் கோவில் விமானமாகும்; அதன் வளர்ச்சியே தஞ்சை - இராஜராஜேஸ்வரத்தின் விமானமாகும்.

2. மசேனன் தேர்

இதுவும் சிவன்கோவிலே ஆகும். இதன் மேற்கூரை அமைப்பும் சாளர அமைப்பும் பெளத்த விஹார அமைப்பை ஒத்துள்ளன. விமானத்தைச் சுற்றி வழி விடப்பட்டிருக்கிறது. மேல் இடம் 45 அடி நீளம் உடையது. 25 அடி அகலம் உடையது 26 அடி உயரம் உள்ளது. இதன் தூண்கள் சிங்கத் தூண்கள்.

3. அர்ச்சுனன் தேர்

இது தருமராஜன் தேரைப்போன்றது.இதுவும் சிவன் கோவிலே ஆகும். இது புத்தப்பள்ளி அமைப்பைக் கொண்டுள்ளது; பதினொரு சதுர அடிஅமைப்புடையது. இதன் விமானம் நான்கு நிலைகளைக் கொண்டதாகும்.

4. சகதேவன் தேர்

இது பெளத்தர் கோவிலைப்போன்ற அமைப் புடையது. சாளுக்கிய நாட்டில் ‘அய்ஹொளே’ என்னும் இடத்தில் உள்ள துர்க்கையின் கோவில் இந்த அமைப்புடன் காண்கின்றது. இதுபோன்ற விமானம் திருத்தணிகையில் இருக்கின்றது. அது ‘துரங்கானை மாடம்’ போன்ற அன்மப்புடையது.

5. திரெளபதி தேர்

இது கிராமதேவதையின் கோவில் போன்றது. இதன் அடித்தளம் பதினொரு சதுர அடி உயரம் பதினெட்டு அடியாகும். இங்குள்ள துர்க்கைச் சிலையில் அமைந்துள்ள வேலைப்பாடு வியக்கத்தக்கது. கல்யானை, கல்சிங்கம், நந்தி என்பன பார்க்கத்தக்கவை: அழகிய உருவில் அமைந்திருப்பவை.

III. சிற்பங்கள்

மகிடாசுர மண்டபம்

துர்க்கையம்மன் மகிடாசுரனைக் கொல்வதாகக் காட்டப்பட்டுள்ள சிற்பம் நரசிம்மவர்மன் காலத்தில் வேறெந் நாட்டிலும் காணப்படாததாகும். எனவே, அது பல்லவர்க்கே உரிய தனிச் சிற்பமாகும். துர்க்கை தன் வாகனமான சிங்கத்தின்மீது அமர்ந்து, எருமைத்தலை கொண்ட அசுரன்மீது அம்புகளைப் பொழிகின்றாள். அவளைச் சுற்றிலும் அவளுடைய படைவீரர் நிற்கின்றனர். அவ்வாறே அசுரனைச் சூழ அவனுடைய வீரர் நிற்கின்றனர். இப்படைகள் இருத்தல் இக்காட்சியைச் சிறப்பிக்கின்றது. இக்காட்சியை அமைத்த சிற்பிகள் கூரிய அறிவும் சிற்பத்திறனும் வாய்க்கப்பெற்றவர்கள் என்பதில் ஐயமில்லை.

கோவர்த்தன மலை

தனிப்பாறைகள் மீது செதுக்கப்பட்டுள்ள காட்சிகள் சில, நரசிம்மவர்மன் காலத்தன என்று அறிஞர் கருதுகின்றனர். அவற்றுள் ஒன்று கண்ணன் கோவர்த்தன மலையை எந்திக் கோபாலரையும் பசுக்களையும் காக்கும் காட்சியாகும். மலையைத் த்ாங்கியுள்ள கண்ணனும் அவன் பக்கத்தில் நின்றுள்ள பலராமனும் பெரியவராகக் காட்டப்பட்டுள்ளனர். மற்றவர் உருவிற். சிறியவராகக் காண்கின்றனர். அம்மக்களுடைய கவலைகொண்ட முகமும் சிறிது தெளிவுற்ற மனநிலையும் நன்கு காட்டப்பட்டுள்ளன. இவ்வுருவங்கட்கு இடையே ஆயர் வாழ்க்கையைக் குறிப்பிடும் சில காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று கறவைக்காட்சி, ஒருவன் பால் கறக்கிறான்; பசு தன் கன்றை நக்குகிறது. இந்தச் சிற்ப வேலைப்பாடு தெளிவாகவும் அழகாகவும் அமைந்துள்ளது. கங்கைக் கரைக் காட்சி

இஃது ‘அர்ச்சுனன் தவம்’ எனத் தவறாகக் கூறப்படுகிறது. இங்குள்ள காட்சிகளுள் குறிப்பிடத்தக்கவை ஆறு, அதன் நடுவில் நாகர் நீராடுதல் - மறையவன் ஒருவன் தண்ணிரை ஆற்றில் முகந்து செல்லல் - மான்.ஒன்று நீர் அருந்த ஆற்றண்டை வருதல் - ஆற்றுக்கு மேற்புறம் இரண்டு.அன்னப் பறவைகள் நீராட நிற்றல் - கீழ்ப்புறம் உள்ள பெருமாள் கோவிலைச் சுற்றித் தவத்தவர் பலர் இருத்தல் - இத்தவமுனிவரைக் கண்டு பூனை ஒன்று பின் கால்கள் மீது நின்று முன்கால்களைத் தலைக்கு மேல் சேர்த்து யோக நிலையில் நிற்றல் - அதனைக் கண்ட எலிகள் அச்சம் நீங்கி மரியாதையோடுஅதனைப் பணிதல் என்பன. இக்காட்சிகள் கண்ணைக் கவரத் தக்கவையாகும். இவை இமயமலை அடிவாரத்தில் கங்கைக்கரைக் காட்சிகள் என்பது அறிஞர் கருத்து. பூனை தவம் செய்தலைக் காட்டிக் காண்பார்க்கு நகைச்சுவை ஊட்டிய சிற்பிகளின் நுண்மதி பாராட்டற் பாலதன்றோ?

விருதுப் பெயர்கள்

நரசிம்மன் இங்ஙனம் அமைத்த குகைக் கோவில்களிலும் ஒற்றைக்கல் கோவில்களிலும் தன் - விருதுப்பெயர்களை வெட்டுவித்திான். அவற்றுள் குறிக்கத் தக்கவை. மஹாமல்லன், ரீபரன், ரீமேகன், பூரீநிதி, இரணஜயன், அத்தியந்தகாமன், அமேயமாயன், நயநாங்குரன் என்பனவாகும்.

மஹாமல்லபுரம்

மஹாமல்லன் என்ற நரசிம்மவர்மன் தன் பெருநாட்டுக் கடற்றுறைப் பட்டினமான மல்லையைப் புதுப்பித்து, அதற்கு மஹாமல்லபுரம் என்று தன் பெயரிட்டான். அப்பெயர் நாளடைவில் சிதைந்து ‘மஹாபலிபுரம், மாவலிவரம்’ எனப் பலவாறு வழங்குகின்றது. மஹாபலிக்கும் இந்நகரத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பது அறியத்தக்கது.