பாண்டிமாதேவி/முதல் பாகம்/உறையூர்க் கோட்டையில் மந்திராலோசனை
10. உறையூர்க் கோட்டையில் மந்திராலோசனை
இந்தக் கதையின் ஆரம்பத்தில் கன்னியாகுமரிக் கடற்கரையில் சந்தித்த பயங்கர ஒற்றர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் நேயர்களுக்கு இருக்கும் அல்லவா? அந்த ஒற்றர்கள் வந்த நோக்கம், அனுப்பப்பட்ட விதம் இவை பற்றி இதற்குள்ளேயே ஒருமாதிரி அநுமானித்துக் கொள்ள முடிந்தாலும் இங்கே அதைப்பற்றிச் சற்று விரிவாகக் கூறிவிட வேண்டியது அவசியம்தான்.
மன்னாதி மன்னரும், தென் திசைப் பேரரசருமாகிய பராந்தக பாண்டியர் காலமானபின் வடதிசை மன்னர் பாண்டி நாட்டின் மேல் படையெடுத்ததும் குமார பாண்டியனாகிய இராசசிம்மன் ஈழத்தீவுக்கு ஒடிப்போனதும், வட பாண்டி நாடு எதிரிகளின் வசப்பட்டதும் ஏற்கனவே நேயர்கள் அறிந்து கொண்ட நிகழ்ச்சிகள்.
வடதிசை வேந்தர்களின் ஆசை வட பாண்டி நாட்டை வென்றதோடு அடங்கி விடவில்லை; அவர்கள் தென் பாண்டி நாட்டையும் கைப்பற்ற விரும்பினார்கள். முக்கியமாக அந்த விருப்பத்துக்கு மூன்று காரணங்கள் இருந்தன.
முதல் காரணம், பராந்தகனின் கோப்பெருந்தேவி உயிருடன் தப் பிச் சென்று தென் பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரரின் பாதுகாப்பில் வாழ்கிறாள் என்று அவர்கள் தெரிந்து கொண்டது. அவள் உயிருடன் இருக்கிறவரை என்றாவது எப்படியாவது தன் புதல்வன் இராசசிம்மனைத் தேடிக் கொண்டுவந்து மீண்டும் பாண்டியர் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு அவள் முயன்று விடுவாளோ என்ற பயம் அவர்களுக்கு இருந்தது. அடையாற்று மங்கலம் நம்பியும் தென்புறத்தாய நாட்டுப் பெரும் படையும் வானவன் மாதேவியோடு ஒத்துழைத்து அப்படிச் செய்ய முற்படுவதற்குள் சில சதித் திட்டங்களின் மூலம் தங்களுடைய ஆசையை முடித்துக் கொள்ளத் திட்டமிட்டனர் வடதிசை மும்மன்னர்கள். அதற்காகச் சோழன் கோப்பரகேசரி பராந்தகனும் கொடும்பாளுர் மன்னனும் அரசூருடையானும் உறையூர்க் கோட்டையில் ஓர் இரகசிய மந்திராலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். வடதிசை மும்மன்னர்களும் தங்களுடைய முக்கியமான இராஜாங்க அதிகாரிகளோடு உறையூருக்கு வந்திருந்தனர்.
சோழன் கோப்பரகேசரி பராந்தகனின் உறையூர் அரண்மனை மந்திராலோசனை சபையில் கூட்டம் பரம இரகசியமாகக் கூடியது. அழகும், இளமையும், வீரமும், ஒன்றேடொன்று போட்டி போட்டுக் கொண்டு ஒன்று பட்ட உருவம் போல் சோழனும், பிடரிமயிரோடு கூடிய சிங்கத்தைப் போன்ற, கம்பீரமான தோற்றத்தையுடைய அரசூருடையானும், காண்பவர்களைப் பயமுறுத்தும் வளமான அடர்ந்த மீசையும், நெருப்பு வட்டங்களைப் போல் சுழலும் கண்களும் யானை போல் பருத்த தோற்றத்தையுமுடைய கொடும்பாளுர் மன்னனும் அருகருகே மூன்று சிம்மாசனங்களில் வீற்றிருந்தனர். திருமந்திர ஓலைநாயகர்களும் அமைச்சர் பிரதானிகளும் சுற்றிலும் இடப்பட்டிருந்த மற்ற ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.
“இந்த மந்திரலோசனைக் கூட்டம் வடபால் நாட்டுப் பெரு மன்னர்களாகிய நமக்குள் ஒர் அவசியமான தீர்மானத்தை ஏற்படுத்தி முடிவு செய்து கொள்வதற்காகக் கூட்டப்பட்டிருக்கிறது. நாம் மூவரும், நம்முடைய படைகளுமாகச் சேர்ந்து சமீபத்தில் பாண்டி நாட்டின் வடபகுதியை வெற்றி கொண்டோம். சிறு பிள்ளையாகிய பாண்டிய இளவரசன் இராசசிம்மன் நமக்கு அஞ்சிக் கடல் கடந்த நாட்டுக்கு ஓடி விட்டான். அவனைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால் காலஞ்சென்ற பராந்தக பாண்டியனின் கோப்பெருந்தேவியும், இராசசிம்மனின் தாயுமான வானவன் மாதேவி தென்பாண்டி நாட்டில் போய் வலிமைமிக்க ஆதரவுகளோடு வாழ்ந்து வருகிறாள். அதனால் நமக்கு ஓரளவு நிம்மதிக் குறைவு ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் மூவரும் நன்கு உணர்வோம்” என்று சோழன் பேச்சைத் தொடங்கி வைத்தான். அது வரையில் ஏதோ சொல்வதற்காகத் துடித்துக் கொண்டிருந்த அரசூருடையான் ஒரு கனைப்புக் கனைத்துக் கொண்டு பேசுவதற்கு முற்பட்டான்.
“நண்பர்களே! தென்பாண்டி நாட்டையும் அங்கே மகாராணி வானவன் மாதேவிக்குக் கிடைத்திருக்கும் பலமான ஆதரவையும் சாதாரணமாக மதிப்பிட்டு விட்டு நாம் பேசமால் இருந்து விட முடியாது. அமர பதவி அடைந்து விட்ட பராந்தகனின் வீரம் உங்களுக்குத் தெரியாததன்று. அந்த வழிமுறையில் இரண்டு கொழுந்துகள் எஞ்சியிருக்கின்றன. மகாராணியையும், குமார பாண்டியனையும் தான் இப்படிக் குறிப்பிடுகிறேன். மதி நுட்டமும் அறிவாற்றலும் உடையவரான தென் பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரரின் சிந்தனையும், நாஞ்சில் நாட்டுப் பெரும்படைத் தளபதியான வல்லாளதேவனின் வீரமும், ஒன்று சேர்ந்தால் பின்பு நம்மையே கதிகலங்கச் செய்து விடுவார்கள்.”
பேசும் போது அரசூருடையான் கண்களில் உறுதியான ஒளி மின்னியது. குரலில் அழுத்தம் தொனித்தது. “அன்புக்குரிய சோழ வேந்தரே! அரசூருடைய சென்னிப் பேரரசரே! நீங்கள் இருவரும் கூறியவற்றை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். நீண்ட நேரம் பேசிக்கொண்டே கழிப்பதால் என்ன பயன்? செயலை நிறைவேற்ற வேண்டும். அதற்கு உடனடியாக ஒரு வழி சொல்லுங்கள்."
இப்படிக் கூறியவன் கொடும்பாளுர் மன்னன். அப்பப்பா ! அவன் தோற்றத்தைபோலவே குரலும் கடுமையாகத்தான் இருக்கிறது. இடி முழக்கத்தைப் போல, கையைத் தூக்கி ஆட்டி உணர்ச்சிகரமாகப் பேசினான் அவன். அந்தச் சுருக்கமான பேச்சிலும், முக பாவத்திலுமே, இவன் அதிகம் பேசுவதை விரும்பாத காரியப் புலி’ என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
“முன்பு செய்தது போலவே நாம் மூவரும் ஒன்று சேர்ந்து நாஞ்சில் நாட்டின் மேல் படையெடுத்து விடலாம்” என்றான் அரசூருடையான்.
மற்ற இருவரும் அதற்கு இணங்கவில்லை. “இப்போது தான் ஒரு பெரிய போரில் ஈடுபட்டு அலுத்துப்போன படைகளை மறுபடியும் உடனடியாகத் துன்புறுத்த முடியாது. போரைத் தவிர வேறு தந்திரமான வழிகள் எவையேனும் இருந்தால் பார்க்கலாம்’ என்று கோப்பரகேசரியும் கொடும்பாளூரானும் ஒருமுகமாக மறுத்துவிட்டனர். அங்கிருந்த மூவரசரின் அமைச்சர்கள் பிரதானிகளும் போர் யோசனையை அவ்வளவாக வரவேற்கவில்லை.
“நான் ஒரு வழி சொல்லுகிறேன். ஆனால் அது கடுமையான வழி. பயங்கரமும் இரகசியமுமாக இருக்க வேண்டியதும் ஆகும் அது!” என்று சொல்லியவாறே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து மேலே சொல்வதற்குத் தயங்கினான் கொடும்பாளூர் மன்னன். அவனுடைய தயக்கம் நிறைந்த அந்தப் பார்வையின் அர்த்தத்தை அரசூருடையானும் சோழ கேசரியும் புரிந்து கொண்டு விட்டனர்.
உடனே சோழன் கோப்பரகேசரி அங்கிருந்த மற்றவர்களுக்குச் சைகை செய்தான். அவர்கள் மெளனமாக எழுந்து மந்திராலோசனை மண்டபத்துக்கு வெளியே சென்றார்கள். மண்டபத்துக்குள் அரசர்கள் மூவரும் தனியே விடப்பட்டனர். பரகேசரியும் அரசூருடையானும் கொடும்பாளூர் மன்னனின் பக்கத்தில் நெருங்கி வந்து உட்கார்ந்தனர்.
கொடும்பாளுரான் வெறிச் சிரிப்புச் சிரித்தான். அவனுடைய கோரம் நிறைந்த பயங்கர முகத் தோற்றத்தையும் அந்தச் சிரிப்பையும் ஒன்று சேர்த்துப் பார்த்தபோது அது உடனிருந்த மற்ற இருவருக்குமே அச்சமூட்டியது. அவன் வாயிலிருந்து வெளிவரப்போகும் முடிவு என்னவென்று அறியும் ஆவலுடன் இருவரும் காத்திருந்தனர்.
ஆனால் அவனோ அவர்களுடைய ஆவலை மேலும் சோதிக்கிறவனைப் போல ஒன்றும் பேசாமல் அங்கே கிடந்த ஒலைகளில் எழுத்தானியால் கைபோன போக்கில் ஏதோ கிறுக்கத் தொடங்கினான். அரிசூருடை யானு ம் கோப்பரகேரியும் வியப்படைந்து திகைத்தனர். அவன் என்ன செய்கிறான் என்பதையே அவர்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. பார்த்துக் கொண்டே மலைத்துப்போய் அமர்ந்திருந்தனர். சில விநாடிகளுக்குள் ஆச்சரியகரமானதொரு காரியத்தைச் செய்து காட்டினான் கொடும்பாளுர் மன்னன்.
எழுத்தாணி கொண்டு மூன்று ஒலைகளிலும் கோடுகளால் சில படங்களை வரைந்து விட்டான் கொடும்பாளுர் மன்னன். சில எழுத்துக்களும் அவற்றில் தென்பட்டன. தன் மனக் கருத்தை அவன் வெளியிட்ட சாமர்த்தியமான முறை அவர்களைப் பிரம் மிக்கச் செய்துவிட்டன.
“இதோ, இவற்றைப் பாருங்கள் ! என் கருத்து விளக்கமாகப் புரியும்” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே அந்த ஒலைகளை அவர்களிடம் நீட்டினான் அவன். கொடும்பாளூர் மன்னனின் முரட்டுக் கையில் அவ்வளவு நளினம் மறைந்து கொண்டிருக்குமென்று அரசூருடையானோ, அல்லது பரகேசரியோ கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
அவர்கள் இருவரும் அவன் கொடுத்த அந்த ஒலைகளை யெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்தனர்.
முதல் ஒலையில் மகாராணி வானவன் மாதேவியைப் போல் ஓர் உருவம் வரையப்பட்டிருந்தது. அந்த உருவத்தின் கழுத்துக்கு நேரே, ஆறு முரட்டுக் கைகள் ஒரு கூர்மையான வேலை எறிவதற்குக் குறி வைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. உருவத்தின் கீழே வானவன்மாதேவியார் என்றும் எழுதியிருந்தது. இரண்டாவது ஒலையில் கடலின் மேல் ஒரு பாய்மரக் கப்பல் வேகமாகச் செல்வதுபோல் வரைந்திருந்தது. அதன் அருகில் குமார பாண்டியன் இராசசிம்மனைப் போல் ஓர் இளைஞனின் உருவம் சித்திரிக்கப்பட்டு, முதல் ஓலையில் கண்டபடியே கப்பலிலிருந்து ஆறு கைகள் நீண்டு ஒரு வேலை அந்த இளைஞனின் நெஞ்சில் பாய்ச்சுவதற்குத் தயாராக இருப்பதுபோல் வரையப்பட்டு உருவின் கீழே பாண்டிய குமாரன் இராசசிம்மன் என்று எழுதியிருந்தது.
எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத மனக் குழப்பத்தோடு மூன்றாவது ஒலையைக் கையிலெடுத்துப் பார்த்தனர் அரசூருடையானும், கோப்பரகேசரியும். அந்த மூன்றாவது ஒலையில் அவர்களுடைய இதயத்தைக் குழப்பும் மூன்றாவது புதிர் மறைந்திருந்தது. அதையும் பார்த்துத் திகைத்து விட்டனர் இருவரும்.
மூன்றாவது ஒலையில் இரண்டு ஆறுகளுக்கு இடையே ஒரு சிறிய தீவு போலவும், அதில் ஒரு மாளிகை போலவும் வரைந்திருந்தன; மாளிகை வாசலில் இடையாற்று மங்கலம் நம்பி என்று பெயர் எழுதப்பட்ட ஒர் உருவமும் வரையப்பட்டிந்தது. இந்தப் படத்திலும் ஆறு கைகள் இருந்தன. ஆனால் முன் ஒலைகள் இரண்டுக்கும் இந்த ஒலைக்கும் மிகப் பெரிய வேறுபாடு ஒன்றும் இருந்தது.
மூன்று ஒலைகளிலும் கொடும்பாளுர்க் குறுநில மன்னன் அவசரம் அவசரமாகக் கிறுக்கியிருந்த சித்திரங்களையும் எழுத்துக்களையும் பார்த்துவிட்டு அரசூருடையானும், பரகேசரியும் தலைநிமிர்ந்தனர். எதையும் விளக்கமாகப் புரிந்து கொண்டாற்போன்ற தெளிவு அவர்கள் முகத்தில் துலங்கவே இல்லை.
அதுவரையில் அவர்களையே கவனித்துக் கொண்டிருந்த கொடும்பாளுரான் “என்ன ? புரிந்து கொண்டீர்களல்லவா?” என்று மிகுந்த ஆர்வத்தோடு வினவினான்.
“கொடும்பாளுர் வேந்தர் இவ்வளவு பெரிய ஓவிய வல்லுநராக இருப்பார் என்று இதுவரையில் எனக்குத் தெரியவே தெரியாது!” என்றான் அரசூருடையான்.
“ஓவியம் மட்டுமா? சொல்லவேண்டிய செய்திகளைக் குறிப்பாக அறிவுறுத்த முயன்றிருக்கிறீர்கள். ஆனால் எங்கள் இருவருக்கும் அது அவ்வளவாகப் பொருள் விளங்கவில்லை. நீங்கள் எங்கள் சந்தேகத்தைப் போக்கி விட்டால் நல்லது!” என்று சந்தேகத்தை மனம்விட்டுக் கேட்டான் பரகேசரி.
உடனே கொடும்பாளுர் மன்னன் அந்த ஒலைகளைக் கையில் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு நடுவில் வந்து நின்றவாறு ஒவ்வொன்றாக விளக்கிக் கூறலானான். கால் நாழிகை நேரம் அவனுடைய விளக்கவுரை தொடர்ந்தது. அந்த விளக்கவுரையிலிருந்து அரசூருடை யானும், கோப்பரகேசரியும் புரிந்து கொண்ட விவரங்கள் வருமாறு: நாஞ்சில் நாட்டு மகாமண்டலேசுவரரின் ஆதரவில் புறத்தாய நாட்டுக் கோட்டையில் தங்கியிருக்கும் மகாராணி வானவன் மாதேவியைக் கொலை செய்துவிடுவது முதல் திட்டம். இலங்கைத்தீவுக்கு ஒடியிருப்பதாக எண்ணப்படும் குமார பாண்டியன் இராசசிம்மனையும் சில அந்தரங்கமான ஆட்களைக் கப்பலில் அனுப்பி அங்கிருந்து திரும்பவோ திரும்பக் கருதவோ அவகாசமின்றி அங்கேயே யாருமறியாது தீர்த்து விடவேண்டுமென்பது இரண்டாவது திட்டம். யாரை வேண்டுமானாலும் பகைத்துக் கொள்ளலாம். ஆனால் இடையாற்று மங்கலம் நம்பியைப் பகைத்துக் கொண்டால் ஒரு காரியமும் நடக்காது. புறத்தாய நாட்டுப் பகுதியைக் கைப்பற்றவோ, ஆளவோ அந்த மனிதரின் தயவு நிச்சயமாக வேண்டும். மகாராணியாரையும், குமாரர். பாண்டியனையும் கொலை செய்த பின்னரும், மகாமண்டலேசுவரரைத் தங்கள் மனிதராக்கிக் கொண்டு தன்மையாகத் தழுவி வைத்துக் கொண்டாலொழியத் தாங்கள் மூவரும் அந்தப் பிரதேசத்தில் காலடியெடுத்து வைக்க முடியாது என்று அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆகவே, இடையாற்று மங்கலம் நம்பியை மட்டும் தங்களுடைய பாராட்டு வலையில் வீழ்த்தித் தொடர்ந்து மகாமண்டலேசுவரராக இருக்கக் செய்ய வேண்டும் என்பது மூன்றாவது ஒலையில் கண்ட திட்டம்.
இப்படி மூன்று ஒலைகளிலும் கண்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் மூன்று பேருடைய பங்கும் இருப்பதனால் ஆறு கைகளை ஒவ்வொரு படத்திலும் வரைந்திருப்பதாகத் தன் திட்டங்களைக் காரண காரியங்களோடு அவர்களுக்குச் சொன்னான் கொடும்பாளுர் மன்னன்.
“எல்லாம் சரிதான்! ஆனால் மகாராணியையும், குமார பாண்டியனையும் கொலை செய்ய வேண்டுமென்பதுதான் நம்முடைய பெருந்தன்மைக்குப் பொருத்தமான காரியமாகப் படவில்லை எனக்கு” என்று அலுத்துக் கொள்வது போன்ற குரலில் மற்ற இருவரின் முகத்தையும் பார்த்துக் கொண்டே சொன்னான் அரசூருடையான்.
“அரசூருடையார் கூறுவது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. இடையாற்று மங்கலம் நம்பியை வேண்டுமானால் நம்முடைய சூழ்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவரே நமக்கு ஒத்துழைக்க இணங்கிவிட்டாரானால் எங்கோ கண்காணாத இடத்தில் மறைந்து கிடக்கும் பயந்தாங்கொள்ளி இராசசிம்மனும், வானவன்மாதேவியும் நன்மை என்ன செய்துவிட முடியும்? உயிரோடிருந்தாலும் அவர்கள் நடைப்பினம் போன்றவர்களே. அப்படியிருக்கும் போது அவர்களைக் கொலை செய்வதற்காக நாம் நம்முடைய நேரத்தை வீணாகச் செலவழிப்பானேன்?” என்று பரகேசரியும் கொடும்பாளூர் மன்னனைப் பார்த்துக் கேட்டான்.
அரசூருடையான், பரகேசரி இருவரையும் பார்த்துக் கொடும்பாளுரான் சிரித்தான், “நண்பர்களே! காரியத்தைச் சாதித்துக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த அநாவசியமான கருணையெல்லாம் இருக்கக்கூடாது. மேலும் நாம் நினைப்பதைப்போல இடையாற்று மங்கலம் நம்பி அவ்வளவு விரைவில் நம்முடைய சூழ்ச்சிக்கு வசப்பட்டுவிட மாட்டார். இராசசிம்மனும், மகாராணியும் தொலைந்து விட்டால் மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பியைக்கூடப் பொருட் படுத்தாமல் காரியங்களைச் செய்கிற துணிவு நமக்கு ஏற்பட்டு விடும்” என்று மேலும் அவன் வற்புறுத்திக் கூறினான்.
அரசூருடையானும், பரகேசரியும் எத்தனையோ விதங்களில் விவாதித்தனர், மறுப்புக் கூறினர். புறத் தோற்றத்தைப் போலவே அகத் தோற்றத்திலும் முரட்டுத்தன்மையும் பிடிவாதமும் உள்ள கொடும்பாளுர் மன்னன் தன்னுடைய கருத்தையே நிலைநிறுத்திப் பேசினான். இவனுடைய பேச்சின் போக்கைப் பார்த்தால் விட்டுக் கொடுக்கும் தன்மைக்கு அணுவளவும் இடம் இருப்பதாகப்படவில்லை.
அரசூருடையானும், பரகேசரியும் தங்களுக்குள் எப்போதும் ஒத்துப்போகும் தன்மை யுடையவர்கள். கொடும்பாளுரானின் பிடிவாத குணம் அவர்களுக்கு முன்பே தெரிந்ததுதான். கேவலம், இந்தச் சிறிய விஷயத்துக்காக மனம் வேறுபட்டுப் பிரியவோ, ஒற்றுமைக் குலைவை ஏற்படுத்திக் கொள்ளவோ அவர்கள் விரும்பவில்லை. விந்திய மலைக்குத் தென்பால் குமரிக் கடல் ஈறாகவுள்ள சகலப் பிரதேசங்களிலும் தங்கள் மூவருடைய கொடிகளும் பறக்க வேண்டுமென்பதுதான் அவர்களுடைய ஆசை. அந்த மாபெரும் ஆசையை எந்த வழியில் பூர்த்தி செய்துகொள்ள வேண்டுமானாலும் அதற்கு அவர்கள் சித்தமாகத்தான் இருக்கிறார்கள். “என்ன சொல்கிறீர்கள்? இந்த ஏற்பாட்டுக்கு நீங்கள் ஒத்து வந்த்ால்தான் நான் உங்களோடு சேர்ந்தவன். இல்லையானால் என்னுடைய வழியை நான் தனியே வகுத்துக் கொண்டு போக வேண்டியது தான்” என்றான் கொடும்பாளுர் மன்னன்.
அரசூருடையானும், பரகேசரியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்தனர். சிறிது நேரம் “நீங்கள் கற்சிலைகளைப் போல வாய் திறவாமல் இப்படி மெளனமாக உட்கார்ந்திருப்பதற்காகவா நான் சிரமப்பட்டு இந்த ஒலைகளை எழுதினேன்? எனக்கு விடை வேண்டும்!”
உள்ளங் கைகளைத் தட்டிப் புடைத்து மீசை துடிதுடிக்க ஆத்திரத்தோடு இரைந்து கத்தினான் முன்கோபியான கொடும்பாளுர் மன்னன்.
“கொடும்பாளூர் மன்னரே ! கவலைப்படாதீர்கள். எதற்காக ஆத்திரமடைகிறீர்கள்? உங்களுடைய யோசனையை எதற்காகவேனும், எப்பொழுதேனும் நாங்கள் மறுத்திருக்கிறோமா? உங்கள் திட்டப்படியே செய்வோம்” என்று பரகேசரி கூறியபின்புதான் கொடும்பாளுரானின் முகத்தில் தோன்றிய கடுகடுப்பும், ஆத்திரமும் மறைந்தன.
“மிகவும் நல்லது ! உங்கள் திட்டப்படியே யாவும் நடைபெறட்டும்! நானும் பரகேசரியும் மனப்பூர்வமாக ஒத்துழைக்கிறோம். இப்போது மேலே செய்யவேண்டிய காரியத்தைச் சொல்லுங்கள். குமார பாண்டியனையும், வானவன் மாதேவியையும் ஒழிப்பதற்கு என்ன செய்யப்போகிறீர்கள்? அரசூருடையானின் இந்தக் கேள்வி சற்றுத் தணித்திருந்த கொடும்பாளூர் மன்னனின் கோபத்தை உடனே மீண்டும் கிளப்பி விட்டுவிடும் போலிருந்தது.
“என்ன செய்யப் போகிறீர்கள்? என்று என்னை மட்டும் பார்த்துக் கேட்கிறீர்களே; யோசனையை நான் சொல்லி விட்டேன். இனிமேல் செய்ய வேண்டியதை மூன்று பேர்களுமாகச் சேர்ந்துதான் செய்யவேண்டும். அரசூருடையார் என்னை மட்டும் நீங்கள் நீங்கள் என்று சுட்டிக்காட்டிப் பேசுவதில் பயனில்லை!” என்று சீறி விழுவதுபோல் இரைந்தான் கொடும்பாளுர் மன்னன்.
அதன் பின்னர் அவனைச் சுய நிலைக்குக் கொண்டு வந்து பேசி முடிப்பதற்குள் ஒரு மத யானையை அடக்குவதற்குப் படவேண்டிய அவ்வளவு சிரமங்களையும் அநுபவித்து விட்டனர் சோழன் பரகேசரியும் அரசூருடையானும்.
உறையூரில் மந்திராலோசனைக் கூட்டம் நடந்த மறுதினம் மாலை நாகைப்பட்டினத்துக் கடல் துறையில் ஒரு காட்சியைக் காண்கிறோம். கரையில் ஒரு பெரிய பாய்மரக் கப்பல் ஈழ நாட்டுக்குப் புறப்படுவதற்குத் தயாராக நிற்கிறது. பாய்மரத்தின் கூம்பில் கப்பலுக்கே அழகு செய்வது போலப் புலி, பனை ஆகிய சின்னங்கள் ஒன்றாகப் பொறிக்கப்பட்ட கொடி ஒன்று காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.
கரையில் கொடியிலே கண்ட அந்தச் சின்னங்களுக்குரிய மாபெரும் வேந்தர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள், ஆம்! நாம் உறையூர் அரண்மனையில் சந்தித்த அந்த மூவரும்தான். அவர்களுக்கு எதிரே சிவப்புத் தலைப்பாகை அணிந்த ஆறு வீரர்கள் அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்தனர். கொடும்பாளுர் மன்னன் அந்த வீரர்களிடம் உபதேசம் செய்வது போலக் கைகளை ஆட்டியும், கண்களைச் சுழற்றிப் புருவத்தை வளைத்தும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் அப்படி என்னதான் முக்கியமான செய்தியை அவர்களுக்குக் கூறிக் கொண்டிருக்கின்றான் ? அருகில் நெருங்கிச் சென்று நாமும்தான் அந்தச் செய்தியைக் கேட்டுத் தெரிந்து கொள்வோமா!
“அடே! நீங்கள் மூவரும் பரம ஜாக்கிரதையாக இந்தக் காரியத்தை முடித்துவிட்டுத் திரும்பி வரவேண்டும், முத்தரையா! இரும்பொறை, செம்பியர் - நீங்கள் ஏறிச் செல்லுகிற இந்தப் பாய்மரக் கப்பல் நேராக மேல் கடற்கோடியிலுள்ள விழிளும் துறைமுகத்தில் கொண்டுபோய் உங்கள் மூவரையும் இறக்கிவிட்டு விட்டு அப்புறம்தான் ஈழத்துக்குப் போகும். உங்களோடு வருகின்ற மற்ற மூவரும் கப்பலோடு அப்படியே ஈழ நாட்டுக்குச் சென்றுவிடுவார்கள். உங்களைப் போலவுே அவர்கள் ஈழத்தில் போய் ஒரு செயலை முடித்துக்கொண்டு வெற்றிகரமாகத் திரும்பவேண்டும். எக் காரணத்தைக் கொண்டும் உங்கள் செயலை முடிப்பதற்குமுன் நான் கொடுத்த ஒலையை இடையாற்று மங்கலம் நம்பியிடம் சேர்த்துவிடக்கூடாது!” என்று எச்சரித்தான் கொடும்பாளூர் மன்னன்.
அந்த வீரர்கள் அவன் கூறியவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு மரியாதை செலுத்துகிற பாவனையில் தலை வணங்கினர்.
அப்போது அந்தப் பாய்மரக் கப்பலைச் செலுத்தும் மாலுமி வந்து கும்பிட்டான். “பிரபூ! கடலில் காற்று அதிகமாக இருக்கும்போதே புறப்பட வேண்டும். இல்லையானால் எத்தனை பாய்களை விரித்தாலும் பயனில்லை. நேரமாகிறது, இவர்களை ஏற்றிக்கொண்டு புறப்படுகிறேன். எங்களுக்கு விடை கொடுங்கள்” என்று கொடும்பாளூர் மன்னரிடம் பணிவான குரலில் அவன் வேண்டிக் கொண்டான்.
சற்றுத் தள்ளித் தங்களுக்குள் ஏதோ பேசியவாறு நின்று கொண்டிருந்த அரசூருடையானும், சோழன் பரகேசரியும் நெருங்கி வந்தனர்.
கிங்கரர்களைப் போலத் தோற்றமளித்த அந்த ஆறு வீரர்களும் பாய்மரக் கப்பலின் முதல் தளத்தில் ஏறி நின்று கொண்டனர். கரையில் நின்று தங்களையே பார்த்துக் கொண்டிருந்த அரசர்கள் மூவரையும் கடைசி முறையாக வணங்கினர்.
அதே சமயத்தில் தேர்வடம் போல் இழுத்துக் கட்டியிருந்த நங்கூரக்கயிறு அவிழ்க்கப்பட்டது. சிகரத்தில் அசைந்தாடும் கொடியுடனே மிகவும் பெரிய வெண்ணிறப் பறவை ஒன்று தண்ணிர்ப் பரப்பை ஒட்டினாற் போலச் சிறகுகளை அடித்துக்கொண்டு பறப்பது போல் கப்பல் கடலுக்குள் நகர்ந்தது.
“நண்பர்களே! இன்னும் பதினைந்தே தினங்கள்தான். நம்முடைய மனோரதம் நிறைவேறிவிடும்!” என்று கொடும்பாளுர் மன்னன் அரசூருடை யானையும் பரகேசரியையும் பார்த்துக் கூறினான்.