பாண்டிமாதேவி/முதல் பாகம்/கரவந்தபுரத்துத் தூதன்
24. காவந்தபுரத்துத் தூதன்
இந்த அத்தியாயத்தின் கதை நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன்னால் நேயர்களுக்கு ஒரு சில சரித்திர உண்மைகளைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டியது அவசியமாகிறது. பாண்டியர் அரசமரபு பற்றியும், அவர் வீரச் செயல்கள் பற்றியும் சிறிது அறிந்துகொண்டால் கதையின் மேற்பகுதிகளை நன்றாக விளங்கிக்கொள்வதற்கு முடியும்.
அளவற்றுப் பரந்த காலத்தின் பேரெல்லைக்கும் எட்டாமல் விரிந்துகொண்டே போகின்ற பழமையைத் தன் குலச் செல்வமாகக்கொண்ட பாண்டியர் மரபின் முதலரசன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவின்நெடியோன் எனவும், மாகீர்த்தி எனவும் சிறப்புப் பெயர்கள் பூண்டிருந்தான் இம் மன்னன். தமிழ் மொழியின் முழு முதல் தனிநூலாகவும், இலக்கணக் களஞ்சியமாகவும் விளங்கும் தொல்காப்பியம், இவன் அவையில் பெரும் புலவராக விளங்கிய அதங்கோட்டாசிரியர் தலைமையில்தான் அரங்கேற்றம் பெற்றது. அதங்கோட்டாசிரியர் வழிமுறையினரான ஒவ்வொருவரும் பிற்காலத்தே பன்னூறாயிரம் ஆண்டுகள் அதே குடிப்பெயர்கொண்டு தமிழின் புகழ் பரவ வாழ்ந்திருக்கலாம். இந்தக் கதையில் வரும் அதங்கோட்டாசிரியர் பழைய அதங்கோட்டாசிரியரின் பிற்காலத் தலைமுறையினரில் ஒருவராக இருக்க வேண்டுமென்று கொண்டு இந்தக் கதைக்காகக் கற்பனை செய்யப்பட்ட பாத்திரமாவார்.
வடிம்பலம்ப நின்ற பாண்டியன் இந்தக் கதை நிகழும் காலத்தில் தென்பாண்டி நாட்டின் வற்றாத நீர் வளத்துக்குக் காரணமாக இருக்கும் பறளியாறு எனப்படும் பஃறுளியாற்றை முன்பு முதன்முதலாக வெட்டுவித்தான். கடல் தெய்வத்தை வழிபட்டுக்கொண்டாடும் முந்நீர் விழா என்ற விழாவை ஏற்படுத்தினான். தலைச்சங்கத்தின் இறுதியில் ஆண்ட பெரும் பேரரசனான இவன் காலத்துக்குப்பின், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற மன்னன் குறிப்பிடத்தக்கவன்.
“இவர்கள் காலத்துக்குபின் கடைச்சங்க காலத்துக்கு முன்னுள்ள கால இடைவெளி பாண்டியர் வரலாற்றின் இருள் சூழந்த பகுதியாகும். கடைச் சங்கத்தின் முதல் பாண்டிய மன்னனாகிய முடத்திருமாறன் காலத்தில் குமரிமலைத் தொடரும், குமரியாறும், குமரி நாடும் - ஆகிய தென்பாண்டி நாட்டின் தென்கோடி நிலப்பரப்பு முழுவதும் கடல் கோளால் அழிந்தது. இனிய பெருங்கனவுபோல் அழகிய சுவைக் காவியம் போல், சிறந்து இலங்கிய கபாடபுரம் என்ற நகரத்தைக் கடல் விழுங்கிவிட்டது.
முடத்திருமாறனுக்குப் பின் பதினைந்து பாண்டிய அரசர்களின் வழிமுறைக்கும் அப்பால் இறுதி மன்னனாகிய நம்பி நெடுஞ்செழியனோடு கடைச்சங்கப் பாண்டியர் மரபு. முடிந்து விடுகிறது. நம்பி நெடுஞ்செழியனுக்குப் பின் பாண்டிய நாட்டில் களப்பிரர்களின் ஆதிக்கம் ஏற்பட்டது. பாண்டியன் கடுங்கோன் தலையெடுத்த பின்பே பாண்டி நாட்டில் களப்பிரர் ஆட்சி ஒழிந்தது.
- “தன்பாலுரிமை நன்கனம் அமைத்த
- மானம் போர்த்த தானை வேந்தன்
- ஒடுங்கா மன்னர் ஒளிநக ரழித்த
- கடுங்கோ னென்னும் கதிர்வேல் தென்னன்”
என்று அவன் புகழை வேள்விக்குடிச் செப்பேடு போற்றிப் பாடியது. கடுங்கோன் முதலான பிற்காலப் பாண்டியர் வழியில் கோச்சடையன் இரணதீரன், நெடுஞ்சடையன் பராந்தகன் முதலிய புகழ்பெற்ற அரசர்களெல்லாம் ஆண்டு முடித்தபின் வரகுண மகாராசன் என்னும் ஈடு இணையற்ற பேரரசன் முடிசூட்டிக் கொண்டான். பிறவிக் கடலைக் கடக்கும் ஞானத்தோணியாம் திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகப் பெருமான் இவ்வரசன் காலத்திலேயே வாழ்ந்துள்ளார். சைவத் திருமுறைகளின் தொகுப்பாசிரியராகிய நம்பியாண்டார் நம்பி தம்முடைய கோயில் திருப்பண்ணியார் விருத்தத்தில் வரகுண மகாராசனைப் புகழ்ந்திருக்கிறார்.
வரகுண்னின் புதல்வனான சீமாறன் சீவல்லபன் தன் இரு மக்களுள் மூத்தவனான வரகுண வர்மனுக்குப் பட்டம் சூட்டிக் கொண்டான், இவனுக்கும் வானவன்மாதேவி என்னும் பட்டத்தரசிக்கும் பிறந்த புதல்வனே இந்தக் கதையில் வரும் இராசசிம்மன்.
இனி இங்கே தலைப்பில் காணும் கரவந்தபுரம் பற்றிக் காண்போம். தென்பாண்டி நாட்டுக்கும் வடபாண்டி நாட்டுக்கும் நடுவே நெல்வேலிக்கோட்டத்துத் தென்கோடியில் பாண்டியப் பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசு ஒன்று இருந்தது. கோட்டையும் கொத்தளமுமாகப் பாதுகாப்பு அமைப்புடன் கரவந்தபுரம் என்ற பெயர் கொண்டு புகழ் பரப்பியது. இந்தக் கதையில் வரும் இராசசிம்மனின் தந்தையான சடையவர்ம பராந்தகனின் காலத்தில் கரவந்தபுரத்துக் கோட்டையும். அதன் ஆட்சி உரிமையும் உக்கிரன் என்னும் குறுநிலவேள் கையிலிருந்தது. செருக்கின் காரணமாக உக்கிரன் பாண்டியப் பேரரசை அவமதித்தான். அதனால் பெருமன்னரான பராந்தக பாண்டியர் அவனை அடக்கிச் சிறைப்பிடித்துக் கொண்டு வந்தார். பாண்டியனின் சிறையில் சில திங்கள் துன்புற்றபின் ஒப்புக்கொண்டு மீண்டும் தன் கோட்டையைப் பெற்றான் உக்கிரன். அதிலிருந்து கரவந்த புரத்து ஆட்சியும் உக்கிரன் கோட்டையும் பாண்டியப் பேரரசின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருந்தன. கரவந்தபுரத்துக் கோட்டை உக்கிரனுடைய மகன் உரிமையாயிற்று.
இதன்பின் பாண்டிநாட்டு அரசியலில் இளவரசனான இராசசிம்மனுக்கும், அவன் தாய் வானவன்மாதேவிக்கும் ஏற்பட்ட குழப்பம் நிறைந்த சூழ்நிலைகளையும், வடபாண்டி நாட்டையும், மதுரையையும், வடதிசை மன்னர் வென்று கைப்பற்றியதையும், இராசசிம்மன் தலைமறைவாகச் சென்றதையும், கதையைப் படித்து வரும் நேயர்கள் அறிவார்கள். எஞ்சிய தென்பாண்டி நாட்டின் வடக்கு எல்லையாக இருந்தது கரவந்தபுரமே. தென்பாண்டி நாட்டுக் கோட்டையில் கூற்றத் தலைவர்கள் கூடியிருந்த அதே நாளில் கரவந்தபுரத்துக் கோட்டையின் வடக்கே பயங்கரமான சில சங்கேத நிகழ்ச்சிகள் நடந்தன. அதன் சிற்றரசனாக இருந்த பெரும் பெயர்ச் சாத்தன் அதிர்ச்சியடைந்துபோய் உடனே அரண்மனையில் மகாராணியைச் சந்தித்து விவரங்களை அறிவிப்பதற்காக ஒரு தூதனை அவசரமாகவும் பரம இரகசியமாகவும் அனுப்பினான். இனிமேல் கதையைப் படியுங்கள். சரித்திரச் சூழ்நிலை ஒருவாறு விளங்கியிருக்கும்.
திருநந்திக்கரையிலிருந்து கால்நடையாகப் புறப்பட்ட தளபதி எப்படியும் அன்று இரவுக்குள் அரண்மனைக்குப் போய்விடவேண்டுமென்று துடியாய்த் துடித்தான். அவன் உள்ளம் இன்ன செய்வதென்றறியாமல் தவித்தது. திருநந்திக் கரையிலோ, அதைச் சார்ந்துள்ள இடங்களிலோ பிரயாணத்துக்குக் குதிரை கிடைக்குமென்று தோன்றவில்லை. ‘முக்கியமான பல செய்திகளைப் பற்றி ஆலோசிக்க வேண்டியிருப்பதனால் மகாமண்டலேசுவரரோ, கூற்றத் தலைவர்களோ, காலையிலேயே கூட்டத்தை முடித்துக்கொண்டு ஊர்களுக்குத் திரும்பியிருக்க முடியாது. என்ன அவசரமாயிருந்தாலும் நாளைக்குத்தான் அரண்மனையிலிருந்து புறப்படுவார்கள். இப்போதே இங்கு எங்கர்வது குதிரை மட்டும் கிடைத்தால் பொழுது மங்குவதற்குள் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்துவிடலாம்! இப்படிப் பலவாறு சிந்தித்தபின் கால்நடையாகவே முன்சிறைவரை செல்வதென்றும் அங்கே யாரிடமாவது தேடிப்பிடித்துக் குதிரை வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஒரு முடிவான தீர்மானம் செய்துகொண்டு புறப்பட்டான் வல்லாளதேவன்.
சில நாட்களாகத் தொடர்ந்து பெய்த மழையின் அளவையும் சேர்த்து வெயில் வாட்டிப் பிழிந்து கொண்டிருந்தது. சாலையின் இருமருங்கிலும் மரங்கள் மட்டும் இ ல்லாமல் இருந்தால் தளபதி நடந்து சென்றிருக்கவே முடியாது. நாஞ்சில் நாட்டின் சிறப்புகளிலெல்லாம் சிறப்பு அதன் அற்புதமான சாலைகள். ஒவ்வொரு சாலையும் ஒரு பசுஞ்சோலையாகக் காட்சியளிக்கும். சத்தியத்தின் முன்னும் பின்னும் அறம் காரணத்துணையாக நிற்பதுபோல் சாலையின் இருபுறமும் சிறிதும் வெயில் நுழைய முடியாதபடி அடர்ந்த மரங்கள் பசுமைக்குடையாக நின்றனவென்றால் நிழலுக்குக் கேட்கவ வேண்டும்?
முன்சிறையை நோக்கிச் சாலையில் நடந்துகொண்டிருந்த போது சாலையின் இருபுறமும் அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டான் தளபதி, பச்சைப் பசும்பாய் விரித்தாற் போன்ற நெல் வயல்கள், அவற்றின் இடையேயுள்ள நீர்ப் பள்ளங்களில் தீப்பிடித்ததுபோல் மலர்ந்துள்ள பல செந்நிற மலர்கள், கரும்புத் தோட்டங்கள், கதலிக்காடுகள், கன்னிப் பெண்ணினைப்போல் கலகலத்துப் பாயும் சிற்றோடைகள்! என்ன வளம்! என்ன அழகு! வாழ்நாள் முழுவதும் அந்தத் தென்பாண்டி நாட்டுக் காட்சிகளில் ஒரு புதிய அழகு பிறந்து கொண்டிருப்பதுபோல் தோன்றியது.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சங்ககாலத்தில் ஒரு சிறைப் பெரியனார் என்ற புலவர் நாஞ்சில் நாட்டைப் பற்றி வருணித்துப் பாடியிருக்கும் புறநானூற்றுப் பாடலின் அழகிய கருத்துக்கள் அவனுக்கு நினைவு வந்தன.
“விதைத்த வித்துக்கள் தண்ணிர் இல்லையே என்பதனால் முளைக்காமற் போகமாட்டா. முளைத்துச் செழித்துக் கரும்பு போல் வளரும். கோடைக் காலத்தில் எங்கும் வறட்சி தென்படும்போது பெண்களின் கண்களை ஒத்த கருங்குவளை மலர்கள் பார்க்குமிடமெல்லாம் வளமாகப் பூத்துக்கிடக்கும். கறுப்புநிற அடி மரத்தையுடைய வேங்கை மரத்தின் பொன்போன்ற மலர் அரும்புகள் உதிர்ந்து மிதக்கும்படி நீர்க் கால்கள் கடலை நோக்கி ஓடும்.”
“ஆகா! இந்தப் புலவருக்குக் கருங்குவளைப் பூக்களை நினைக்கும்போதே பெண்களின் கண்கள்தானே நினைவுக்கு வருகிறது! உலகத்தில் கவிநோக்கு என்பதே இப்படித்தான் இருக்கும் போலும் ! அழகுள்ள ஒரு பொருளைப் பார்க்கும்போது அதே அழகுள்ள மற்றொரு பொருளின் நினைவை அது தூண்டி விடுகிறதோ?”
தன்னை அறியாமலே திருநந்திக்கரையில் பூ விற்றுக் கொண்டிருந்த அந்த இளம் பெண்ணின் எழில் முகம், நினைவுகள் ஓடி மறையும் அழகிய தடக்கண்கள், எல்லா வற்றையும் நினைத்துப்பார்க்கத் தொடங்கினான் தளபதி வல்லாளதேவன்.
தனக்குத்தானே சிரித்துக்கொண்டான். “சற்றுமுன் அந்தப் புலவரைப் பற்றி இகழ்ச்சியாக எண்ணினேன்! எனக்கு மட்டும் இப்போது எந்த நினைவு உண்டாகிறது? உடம்பில் இரத்தமும் உள்ளத்தில் நினைக்கும் உரமும் இருக்கிறவரை மனிதர்கள் எல்லோருக்கும் இந்த நினைவுத் தொத்துநோய் பொதுவானதுதானோ?”
சிந்தித்தவாறே முன்சிறையை நெருங்கிக் கொண்டிருந்தான் அவன். இன்னும் கால் நாழிகைத் தூரம் நடந்தால் முன் சிறையை அடைந்து விடலாம். தொலைவில் தென்படும் ஒவியம்போல் அவன் நடந்துகொண்டிருந்த சாலையிலிருந்து பார்க்கும்போது ஊர் மங்கலாகத் தெரிந்தது. எந்த ஊரையும் தொலைவிலிருந்து பார்க்கும் போது கோவிலும், கோபுரமும் வீடுகளும், மரங்களுமாக அதன் அழகே தனிக் கவர்ச்சி மிகுந்து தோன்றும். அருகில் நெருங்கி உள்ளே நுழைந்து விட்டால் அந்தக் கவர்ச்சி இருப்பதில்லை. உலகத்தில் எல்லா அழகுள்ள பொருள்களுமே இப்படித்தான். நுழைந்து பார்க்கும்போது கவலையும், துன்பமும், வேதனையும், வஞ்சனையும்தான் அவற்றுள் தெரிகின்றன.
ஊர் நெருங்க நெருங்கத் தளபதியின் மனத்தில் சிந்தனைகள் குறைந்து சொந்தக் கவலைகள் எழுந்தன. 'முன்சிறையில் எங்கே போய்த் தேடி யாரிடம் குதிரை கேட்பது? குதிரை கிடைத்தாலும் அரண்மனைக்குப் போய்ச் சேருவதற்குள் இரவாகிவிடுமே: காலையிலிருந்து கற்றத் தலைவர் கூட்டத்தில் என்னென்ன முக்கியமான செய்திகளைப் பேசி முடிவு செய்தார்களோ? அவற்றையெல்லாம் நான் அருகிலிருந்து அறிந்துகொள்ள முடியாமல் கெடுத்து என்னை, இந்தக் குட்டையன் ஏமாற்றிவிட்டானே? இனி நான் இரவில் அரண்மனைக்குப் போனாலும் அந்தரங்கக் கூட்டத்தில் நடந்தது பற்றி யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்பதும் இயலாது. என்ன நடக்கிறதோ பார்க்கலாம்' எண்ணத்தில் அவநம்பிக்கை கலந்திருந்தாலும் வல்லாள தேவனுக்கு அதனிடையே ஒரு சிறு நம்பிக்கையும் இருந்தது. "வைகறையிலேயே ஆபத்துதவிகள் தலைவன் மகர நெடுங்குழைக்காதன் தன் கூட்டத்தோடு அரண்மனைக்குச் சென்றிருப்பதனால் அவன் மூலமாக ஏதாவது நடந்த செய்திகள், பேசப்பட்ட விவரங்கள், குறிப்பாகவோ வெளிப்படையாகவோ தெரியலாம் என நம்பினான் தளபதி, மந்திராலோசனைக் கூட்டம் நடக்கிற இடத்தில் எல்லோரையும் உடனே இருக்கவிடமாட்டார்கள். ஆனால் குழைக்காதன் குறிப்புத் தெரிந்தவன். சமயத்துக்கேற்றாற்போல் சாமர்த்தியமாக நடந்துகொள்ள அவனுக்குத் தெரியும்” என்று எண்ணித் தற்காலிகமாகத் திருப்தியடைந்தான் தளபதி.
“நேரே முன்சிறை அறக்கோட்டத்துக்குப் போனால் அங்கே பகல் உணவை முடித்துக் கொள்ளலாம். அறக்கோட்டத்தில் இருப்பவன்கூட நாராயணன் சேந்தனின் தமையனான அண்டராதித்த வைணவன்தானே? அவனிடமே அவனுடைய தம்பி செய்த வஞ்சனையை விவரித்து நம்முடைய அவசர நிலையையும் கூறி ஒரு குதிரை சம்பாதித்துத் தருமாறு கேட்கலாம். நாராயணன் சேந்தனைப்போல் அடங்காப்பிடாரி இல்லை, அவன் தமையன். பரம சாது, அப்பாவி மனிதனுங்கூட. நாம் சொன்னால் உடனே கேட்பான்” என்று எண்ணியவனாக ஊருக்குள் நுழைந்து அறக்கோட்டத்துக்குச் செல்லும் பகுதியில் நடந்தான் வல்லாளதேவன்.
அறக்கோட்டத்து வாசலை அவன் நெருங்கியபோது அங்கே அண்டராதித்த வைணவனும், அவன் மனைவி கோதையும் நின்று கொண்டு யாரோ ஒரு குதிரை வீரனை வழியனுப்பிக் கொண்டிருந்தனர். குதிரையின்மேல் வீற்றிருந்தவன் அவர்களுக்கு வணக்கம் செலுத்தி விடைபெற்றுக் கொண்டு புறப்படத் தயாராயிருந்தான்.
திடீரென்று தளபதி வல்லாளதேவன் கால்நடையாக அங்கு வந்து சேர்ந்தது அவர்களுக்கு வியப்பை அளித்தது. குதிரையின்மேல் இருந்தவன் பரபரப்படைந்து உடனே கீழே குதித்துத் தளபதியை வணங்கினான். அண்டராதித்தனும் கோதையும் கூட வணங்கினர்.
“கரவந்தபுரத்துக் குறுநிலவேள் பெரும்பெயர்ச் சாத்தனிடமி ருந்து வருகிறேன். அவசர ஓலை ஒன்றுடன் அரண்மனைக்குத் தூதனுப்பப் பட்டிருக்கிறேன்" என்று தளபதி வல்லாளதேவனுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் புதியவன்.