பாண்டிமாதேவி/முதல் பாகம்/மதிவதனி விரித்த வலை

விக்கிமூலம் இலிருந்து

32. மதிவதனி விரித்த வலை

இருட்டி வெகுநேரமாகிவிட்டது. தென்னை மரங்களின் தோகைகள் காற்றில் ஆடும் ஓசையும், கடல் அலைகளின் இரைச்சலும் தவிரச் செம்பவழத் தீவு அமைதி பெற்றிருந்தது. பாலில் நனைத்து எறிந்த நீலத்துணி நெடுந்துரத்துக்கு விரித்துக் கிடப்பதுபோல் கடல் நிலா ஒளியில் மிக அழகாகத் தெரிந்தது. தென்னங்கீற்றுக்களிடையே நுழைந்து நிலவுக் கதிர்கள் நிழலினிடையே தரை மகளின் செம்மேனியில் தேமல் விழுந்ததுபோல் எவ்வளவு அழகாகப் பதிகின்றன?

கூடாரத்தின் வாயிலில் இராசசிம்மனும், சக்கசேனாபதி யும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். இராசசிம்மனின் மடியில் மாலையில் வாங்கிய அந்த வலம்புரிச்சங்கு இருந்தது. “சக்கசேனாபதி! இந்தச் சங்குதான் எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தீர்களா!” அதன் வழவழப்பான மேல் பாகத்தை விரல்களால் தடவியபடியே கூறினான் இராசசிம்மன். சக்கசேனாபதி அவன் முகத்தை உற்றுப் பார்த்து விஷமத்தனமாகக் கண்களைச் சிமிட்டினார்.

“சங்கு மட்டும்தானா அழகாக இருக்கிறது! அதைக் கொடுத்த..." சொல்ல வந்ததை முழுவதும் சொல்லி முடிக்காமல் மறுபடியும் சிரித்தார் அவர்.

“சரிதான்! நீங்களே என்னைக் கேலி செய்ய ஆரம்பித்து விட்டிர்களா ?”

"கேலியில்லை, இளவரசே! அந்தப் பெண் உண்மையிலேயே.”

“போதும் வருணனை! உங்களுக்குத் தலை, மீசை எல்லாமே நரைத்திருப்பது மறந்து போய்விட்டது போலிருக்கிறது.”

அவர் தன்னை வம்புக்கு இழுப்பதைத் தடுப்பதற்காக அவரையே வம்புக்கு இழுத்தான் இராசசிம்மன்.

“தலை, மீசை நரைத்து விட்டால் பெண்களைப் பற்றிப் பேசக்கூடாதென்று எந்த அறநூலில் சொல்லியிருக்கிறது? அந்தப் பெண் என் கைகளையா ஓடிவந்து பிடித்துக் கொண்டாள்? இளவரசருடைய வாலிபக் கைகளைத் தானே அவள் வலுவில்...”

"எவனோ அன்னக்காவடிப் பயல் ஆயிரக்கணக்கில் விலை பெறக்கூடிய சங்கைத் தூக்குகிறானே என்று பயந்துபோய்க் கையைப் பிடித்திருக்கிறாள்?”

“நியாயந்தானே ? அவளுக்குத் தெரியுமா, நீங்கள் தென்பாண்டி நாட்டு இளவரசர் என்று?”

“தெரிந்திருந்தால்...!”

“கையைப் பிடித்திருக்கமாட்டாள். அப்படியே காலடியில் விழுந்து வணங்கியிருப்பாள்!”

“அப்படியானால் தெரியாததே நல்லதாகப் போயிற்று.” இராசசிம்மன் சிரித்தான். சச்சசேனாபதி அவனுக்குப் பயந்து பெரிதாக வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்.

“இளவரசே! நீங்கள் என்ன நினைத்துக் கொண்டாலும் சரி, நான் விளையாட்டுக்காகச் சொல்லவில்லை. இந்தத் தீவில் எல்லாப் பெண்களுமே அழகாகத்தான் இருக்கிறார்கள்.”

“சக்கசேனாபதி அவர்களே! மறுபடியும் நினைவூட்டுகிறேன். உங்களுக்குத் தலை நரைத்துவிட்டது. நீங்கள் இந்தப் பேச்சுப் பேசாதீர்கள்!”

“ஏன் சொல்ல மாட்டீர்கள் இளவரசே ஐம்பத்துக்கு மேல் வயது ஆகிவிட்டதென்ற தெம்பில்தானே என்னை இப்படிக் கேலி செய்கிறீர்கள்? நானும் உங்களைப்போல் வயதுப் பிள்ளையாக இருந்தால்...!”

“இருந்தால் என்ன? அப்படி ஆவதற்கு வேண்டுமானால் காயகல்ப மருந்து சாப்பிட்டுப் பாருங்களேன்.” இளவரசனின் கேலிச் சிரிப்பு பலமாக ஒலித்தது.

“எனக்கு உங்களோடு 'வாலிபப் பேச்சு' பேசிக்கொண்டிருக்க நேரமில்லை. காலையில் அருணோதயத்துக்கு முன்பே கப்பல் புறப்படவேண்டும். ஆக வேண்டியவைகளைக் கவனிக்கிறேன்” என்று எழுந்திருந்தார் சக்கசேனாபதி.

பகலில் அலுப்புத்திர நன்கு உறங்கியிருந்ததனால் இராசசிம்மனுக்கு உறக்கம் வரவில்லை. நிலா ஒளியில் தீவின் கரையோரமாகச் சிறிதுதுரம் நடந்து சென்று திரும்பலாமென்று எண்ணினான். சேனாபதியும், மற்ற ஆட்களும் கூடாரத்திலிருந்து சாமான்களைக் கப்பலில் ஏற்றுவதும், கப்பல் இயந்திரங்களைச் சரிபார்ப்பதுமாக வேலையில் மும்முரமாக முனைந்திருந்தார்கள்.

இராசசிம்மன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கையில் அந்தச் சங்கையும் எடுத்துக் கொண்டு கரையோரமாக நடந்தான். சில இடங்களில் கடலுக்கு மிக அருகிலே அலை நீர்த்துளிகள் மேலே தெறிக்கும்படி பாதை கடலைத் தொட்டாற்போல் இருந்தது. இன்னும் சில இடங்களில் தாழை மரங்களும், புன்னை மரங்களும் அடர்த்தியாக வளர்ந்து பக்கத்தில் கடல் இருப்பதே தெரியாமல் மறைத்துக் கொண்டிருந்தன. சுழித்துச் சுழித்து வீசும் காற்றுக்கும் அலை இரைச்சலுக்கும் நடுவில் தனியனாக நடந்து சென்று கொண்டிருந்த இராசசிம்மனுக்கு மனத்தில் எத்தனையோ விதமான சிந்தனைகள் உண்டாயின. அழகான இடங்களைப் பார்த்தால் உள்ளத்தில் அழகான ஆழமான சிந்தனைகள் உண்டாகின்றன. சிந்தித்துக் கொண்டே நீண்ட தூரம் நடந்து விட்டான் இராசசிம்மன்.

அந்த இடத்தில் கரையின் தரைப் பரப்பு வளைந்து தெற்கு முகமாகத் திரும்பியது. திருப்பத்தில் ஒரு வேடிக்கையான காட்சியை இராசசிம்மன் கண்டான். கடலுக்கு மிக அருகில் சற்றே தாழ்வான பள்ளம் ஒன்றில் அழுத்தமாகவும், நெருக்கமாகவும் இரும்புக் கம்பிகளால் பின்னப்பட்டிருந்த வலை ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. வலையின் நான்கு மூலைகளிலும் கட்டப்பட்டிருந்த தேர்வடம் போன்ற கயிறுகள் மேலே உள்ள புன்னை மரத்து உச்சியில் தேர்ச்சக்கரம் போன்ற ஒரு மர இராட்டினத்தில் இணைக்கப்பட்டிருந்தன. இராட்டினத்தைச் சுற்றினால் வலை சுருட்டிக் கொண்டு மேலே எழும்பிவிடும். இராட்டினத்துக்குப் பக்கத்தில் மரத்தின் அடர்த்தியில் யாரோ உட்கார்ந்து கொண்டிருப்பது போலிருந்தது. இராசசிம்மன் அந்தக் காட்சியை வேடிக்கை பார்த்து விட்டுத் தெற்குப் புறமாகத் திரும்பி நடந்தான்.

திருப்பத்தில் கரையோரமாக இன்னொரு பாய்மரக் கப்பல் நின்று கொண்டிருப்பது அவன் பார்வையில் பட்டது. அதைப் பார்த்ததும் அவன் வேறுவிதமாகச் சந்தேகப்பட்டான். வழி தெரியாமல் சுற்றி வளைத்துத் தீவை வலம் வந்து பழையபடி தங்கள் கப்பல் நின்றுகொண்டிருந்த இடத்துக்கே வந்து விட்டோமோ என்று மலைத்தான் அவன்.

ஆனால் அந்தக் கப்பலின் பாய்மரத்து உச்சியில் பறந்து கொண்டிருந்த கொடி அவன் சந்தேகத்தைப் போக்கியது. புலியும், பனைமரமும் ஆகிய இலச்சினைகள் பொறித்த கொடி அது.

இராசசிம்மன் சிறிது அருகில் நெருங்கி அந்தக் கப்பலைப் பார்த்தான். 'அந்தக் கப்பல் அங்கே எப்போது வந்தது? ஏன் அப்படி ஒதுக்குப்புறமான இடத்தில் நிற்கிறது?' என்று சிந்தித்தான் அவன்.

“யார் ஐயா அது கரையில் நிற்கிறது?" என்று அதட்டுகிறாற் போன்ற குரலில் கேட்டுக் கொண்டே அந்தக் கப்பலின் மேல் தளத்திலிருந்து யாரோ இரண்டு மூன்று பேர்கள் இறங்கி வந்தார்கள்.

“நான் ஒரு வழிப்போக்கன், ஐயா! சும்மா கப்பலை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றேன்” என்று அவர்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டே இராசசிம்மன் அங்கிருந்து மெதுவாக நகர முயன்றான். அந்தக் கப்பலில் இருப்பது யாராக இருந்தாலும் அப்போது அவர்கள் பார்வையில் தான் படக்கூடாது என்பது அவன் நினைவு. ஆனால் அவன் நினைத்தபடி நடக்கவில்லை; கப்பலிலிருந்து இறங்கி வந்தவர்கள் அவன் நாலைந்தடி தூரம் நடப்பதற்குள் அவனை நெருங்கி விட்டார்கள்.

இராசசிம்மன் நடையை வேகமாக்கிக் கொண்டு முந்தி விட முயன்றான். அவர்கள் அவனை முந்த விடவில்லை, “இந்தா, ஐயா, கொஞ்சம் நில்!”

அவன் நின்றான்! கப்பலிலிருந்து இறங்கி வந்த மூன்று பேர்களில் சற்றுப் பருமனான தோற்றத்தையுடைய ஒருவன் அருகில் வந்து இராசசிம்மனுடைய முகத்தை உற்றுப் பார்த்தான். தன்னோடு வந்த மற்ற இரண்டு பேர்களையும் பார்த்து ஏதோ ஒரு குறிப்புப் படச் சிரித்தான். பின்பு இராசசிம்மனைப் பார்த்துக் கேட்டான். “ஐயா! நீங்கள் யார்?”

இந்தக் கேள்வியைச் செவியுற்றதும் இராசசிம்மனுடைய உள்ளுணர்வு விழித்துக் கொண்டது. “நான் யாரென்றால். நான் நான்தான்!” .

“அது தெரிகிறது! உங்கள் பெயர்?”

“எனக்கு ஒரு பெயர் இருப்பது உண்மைதான். ஆனால் அது உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியம் என்ன?” இராசசிம்மனுடைய குரலில் கடுமை இருந்ததை அவர்கள் உணர்ந்தனர்.

கப்பலிலிருந்து இறங்கி வந்த மூன்று பேர்களும் அவனுடைய வழியை மறித்துக் கொண்டு நிற்பவர்களைப் போல் குறுக்கே நின்றார்கள். அவர்களில் ஒருவன் அவனுடைய கையிலிருந்த அந்த வலம்புரிச் சங்கைப் பார்த்துவிட்டு, “இந்தச் சங்கு உங்களுக்கு எங்கே கிடைத்தது?" என்று கேட்டான்.

அவர்கள் ஏதோ காரணத்துக்காகத் தன்னை வம்பு பேசி வழிமறிக்கிறார்கள் என்பது இராசசிம்மனுக்குத் தெளிவாக விளங்கிவிட்டது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தற்காப்பாக உடைவாள் கூட இன்றிப் பழக்கமற்ற புதிய தீவில் தனியே இரவில் உலாவப் புறப்பட்ட தவறு அப்போது தான் அவன் மனத்தில் உறைத்தது.

“நான் போக வேண்டும். என் வழியை விடுங்கள்” என்று அவர்களை விலக்கிக் கொண்டு முன்னோக்கிப் புறப்பட்டான் அவன். பின்னால் எக்காளமிட்டுச் சிரிக்கும் வெடிச் சிரிப்பொலி எழுந்தது!

“தென்பாண்டி நாட்டு இளவரசரை இவ்வளவு சுலபமாக தப்பிப் போகவிட்டு விடுகிற நோக்கம் இல்லை.”

எக்காளச் சிரிப்பும், இந்த எச்சரிக்கைக் குரலும் இராசசிம்மன் காதுகளில் நாராசமாய் ஒலித்தன. அவன் ஒட்டமும் நடையுமாக அவர்களிடமிருந்து தப்பும் நோக்கத்துடன் விரைந்தான். திருப்பத்தில் திரும்பி இரும்புவலை விரித்திருந்த அந்தப் பள்ளத்தை அவன் நெருங்கவும் அந்த மூன்று ஆட்களும் அவனைத் துரத்திக் கொண்டு வேகமாக ஓடி வரவும் சரியாக இருந்தது.

பயத்தில் அதிர்ச்சியடைந்த இராசசிம்மனும் விழுந்தடித்துக் கொண்டு ஓடினான். அடுத்த கணம் அவனுடைய உடலை ஏதோ ஒன்று வேகமாகச் சுருட்டிக் 'கிறு கிறு' வென்று மேலே தூக்கியது. மர இராட்டினம் வேகமாகச் சுழலும் ஓசை பெரிதாக ஒலித்தது.

ஓடிவந்த அவசரத்தில் பள்ளத்தில் விரித்துக் கிடந்த இரும்புக் கம்பி வலைக்குள் அகப்பட்டுக் கொண்டோமென்று விளங்கிக் கொள்ள அவனுக்குச் சிறிது நேரம் பிடித்தது. அதை உணர்ந்து கொண்டபோது அவனுடைய உடல் மிகவும் பத்திரமாக ஒற்றைப் பனை உயரத்துக்கு மேலே புன்னைமரக் கிளை வரை வெகு வேமாக இழுத்துக் கொண்டு போகப்பட்டு விட்டது.

கீழே துரத்திக்கொண்டு வந்தவர்கள் அவனைக் குறி வைத்து எறிந்த கூர்மையான வேல் பக்கத்து மரத்தில் பாய்ந்து ஆழப் பதிந்துகொண்டு அப்படியே நின்றது. துரத்திக் கொண்டு வந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அனுமானிக்கக்கூட நேரமில்லை. இரும்பு வலை கீழே கிடந்ததும், மின்னல் மின்னுகிற நேரத்துக்குள் இராசசிம்மனை மேலே மர உச்சிக்குத் தூக்கிக்கொண்டு சென்றதும் அவர்களுக்குத் தெரியாது. இராசசிம்மன் எப்படியோ மாயமாகத் தங்களிடமிருந்து தப்பிவிட்டானே என்று வியந்த அவர்கள் அந்தப் பக்கத்திலிருந்த தாழம் புதர்களைக் குடைந்து கொண்டிருந்தார்கள்.

அவர்கள் அவனைத் தாழம் புதரில் தேடிக்கொண்டிருந்த அதே சமயத்தில் புன்னை மரத்தின் உச்சிக் கிளையில் வளை குலுங்கும் அழகிய பெண் ஒருத்தியின் இரண்டு கரங்கள் அவனை வலையிலிருந்து விடுவித்துக் கொண்டிருந்தன.

“ஐயா! கவலைப்படாதீர்கள், எல்லாம் நான் இங்கிருந்து பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். அதிர்ஷ்டவசமாக நீங்கள் வலையின் குறுக்கே விழுந்து ஓடினர்கள். இல்லையானால் உங்களை நான் காப்பாற்றியிருக்க முடியாது!” என்றாள் அந்தப் பெண்.

மரக் கிளையின் மங்கலான ஒளியில் அவள் முகத்தைப் பார்த்த இராசசிம்மன், “நீயா?” என்று வியப்பு மேலிட்டுக் கூவினான். அவள் தன் சண்பக மொட்டுப் போன்ற விரல்களால் அவன் வாயைப் பொத்தினாள். 'இரையாதீர்கள். கீழே அந்த வேட்டை நாய்கள் உங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றன’ என்று மெல்ல அவன் காதருகே கூறினாள் அவள்.

மரக் கிளையில் உட்கார்ந்து அவனை வலை மூலம் தூக்கிக் காப்பாற்றிய அந்தப் பெண் வேறு யாருமில்லை. அன்று மாலை அவனுக்குச் சங்கு விற்ற பெண்தான் அவள். இரவில் கரைக்கு வரும் முதலைகளைப் பிடிப்பதற்காக அப்படி வலை விரிப்பது வழக்கமென்றும் அன்று அந்த வலை அவனைக் காப்பாற்ற உதவியதற்காகத் தான் பெருமைப்படுவதாகவும் அந்தப் பெண் அவனிடம் கூறினாள்.

"பெண்ணே ! உன் பெயரை நான் அறிந்து கொள்ளலாமோ?” என்று அவளுடைய வளைக்கரங்களைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கண்களில் ஒற்றிக்கொண்டு நன்றி சுரக்கத் தழுதழுக்கும் குரலில் கேட்டான் இராசசிம்மன்.

செந்தாமரைப் பூக்கள் போன்ற அந்தப் பெண்ணின் புறங்கைகளைத் தென்பாண்டி நாட்டு இளவரசன் சிந்திய ஆனந்தக் கண்ணிர்த் துளிகள் நனைத்தன.

“என் பெயர் மதிவதனி” என்று தலை குனிந்து நாணத்தோடு சொன்னாள் அந்தப் பெண்.

“மதிவதனி, மாலையில் ஈராயிரம் பொற்கழஞ்சுகளை வாங்கிக் கொண்டு இந்த ஒரு வலம்புரிச் சங்கை எனக்குக் கொடுத்தாய்! இப்போதோ எத்தனை ஆயிரம் பொற் கழஞ்சுகள் கொடுத்தாலும் ஈடாகாத என் உயிரையே எனக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறாய்!”

“ஐயா! பொற் கழஞ்சுகளுக்காகவே எல்லாக் காரியங்களையும் மனிதர்கள் செய்து விடுவதில்லை. இதயத்துக்காக-மனிதத் தன்மைக்காகச் செய்து தீரவேண்டிய சில செயல்களும் உலகில் இருக்கின்றன!” மதிவதனியின் குரலில் உருக்கம் நிறைந்திருந்தது.

அவர்கள் புன்னை மரத்தின் அடர்ந்த கிளையிலேயே அமர்ந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். கீழே தாழம் புதர்களில் தேடிக் கொண்டிருந்தவர்களும் ஏமாற்றத்தோடு திரும்பிப் போய்விட்டார்கள்.

“ஐயா! இனி நாம் கீழே இறங்கலாம்” என்றாள் மதிவதனி, இராசசிம்மன் மிரண்ட பார்வையால் அவள் முகத்தைப் பார்த்தான்.

மதிவதனி அவனுடைய பயம் நிறைந்த பார்வையைக் கண்டு சிரித்தாள்.

அதே சமயம் மரத்தடியில், “மதிவதனி.!.மதிவதனி! எங்கேயிருக்கிறாய்? மரக் கிளையிலேயே உறங்கிவிட்டாயா?” என்று கீழே ஒர் ஆண் குரல் இரைந்து கூப்பிட்டது.