பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/பேசாதவர் பேசினார்

விக்கிமூலம் இலிருந்து

16. பேசாதவர் பேசினார்

ஏதோ பெரிய காரியத்தைச் சொல்லப் போகிறவர் போல் வலுவில் தன்னைக் கூப்பிட்டனுப்பித் தன் உள்ளங்கையில் கருவேல் முள்ளைக் குத்திய மகாமண்டலேசுவரரின் செயலைக் கண்டு வெளியே பொறுமையாக இருப்பதுபோல் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள்ளே அடக்கமுடியாத வெகுளி உண்டாயிற்று சீவல்லப மாறனுக்கு. அவன் மனம் உணர்ச்சிவசப்பட்டுக் கொதித்தது.

சே! சே! பொம்மை செய்வதற்காகக் களிமண்ணைப் பிசைந்து வைத்த குயவன் தன் நிலை சோர்ந்து அதே களி மண்ணில் தலைக்குப்புற வழுக்கி விழுவதுபோல் அறிவின் ஆற்றலால் எட்டுத் திக்கும் விட்டெறிந்து ஆள்வதாக எண்ணிக்கொண்டு பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டு விடுகிறார்கள் சிலர். அரிய பெரிய அறிவாளியின் மனமும் கைகளும், சில சமயங்களில் எளிய சிறிய காரியங்களை நினைத்தும் செயல்பட்டும் தடுமாறி விடுகின்றன. அறிவில்லாதவனிடத்தில் இருக்க முடியாத அவ்வளவு பலவீனங்களும் அறிவுள்ளவனிடத்தில் நிரம்பிக் கிடக்கின்றன. தேனைக் குடிப்பதற்குப் போன ஈ தேனுக்குள்ளேயே விழுந்து முழுகி விடுவதுபோல் தண்ணீரில் விழுந்தவனைக் காப்பாற்றப் போனவனும் தண்ணிரில் விழ நேர்வதுபோல் காமம், குரோதம், பொறாமை, சுயநலம் இவையெல்லாம் கூடாதென்று சொல்லிக்கொண்டே இவைகளைத் தவிர வேறு பண்பையே கடைப்பிடிக்காத அறிவாளிகள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் உலகில்? இந்த உலகத்தில் சாதாரண மனிதன் கவலையில்லாமல் வயிற்றுக்குச் சோறும், உடலுக்குத் துணியும் பெற்று ஊருக்குக் கெடுதல் செய்யாத சாதாரண அறிவுடன் நிம்மதியாக வாழ வேண்டுமானால் முதல் காரியமாக அறத்தையும் கருணையையும் மறந்து, மனம் மரத்துப்போன அறிவாளிகள் அத்தனை பேரையும் கழுவில் ஏற்றிக் கொன்றுவிட வேண்டும். உலகத்துக்கு அத்தனை கெடுதல்களையும் நினைவுபடுத்திச் சொல்லிக் கொடுப்பவர்கள் இவர்கள்.’

உள்ளங்கையில் குமிழிட்டு உருண்டு நின்ற ஒரு துளி இரத்தத்தைப் பார்த்துக்கொண்டே இவ்வளவு ஆவேசமான நினைவுகளையும் நினைத்துப் பார்த்துவிட்டான் சீவல்லபன். கையைப் போலவே அவன் முகமும் கோபத்தால் சிவப்பேறிவிட்டது. பேசத் துடிக்கும் வாயோடும் பேசுவதற்குப் பயந்த மனத்தோடும் மகாமண்டலேசுவரருக்கு முன்பு நின்றுகொண்டிருந்தான் அவன். அம்புகள் பாய்வதுபோல் ஊடுருவிப் பார்க்கும் அவருடைய இணைவிழிகளின் பார்வை அவனைக் கட்டுப்படுத்தி நிறுத்தியிருந்தது.

அமைதியாக அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே நின்ற மகாமண்டலேசுவரர் மெல்ல நகை புரிந்தார். “சீவல்லபா! நீ நினைத்தது சரிதான், வரம்புக்குட்படாத அறிவின் கனம் உள்ளவர்களால் உலகத்தில் மற்றவர்களுக்கு எப்போதுமே வேதனைதான். உங்களைப் போல் உடல் வன்மையையும், உடல் உழைப்பையும் நம்பி வாழும் வீரர்கள் வாழ்க்கை வேகமாக ஓடிக்கொண்டிருக்க வேண்டும் என்று மட்டும் ஆசைப்படுகிறீர்கள். என்னைப் போல் மனத்திண்மையையும், மன உழைப்பையும் நம்பி வாழ்பவர்கள் வாழ்க்கை ஒவ்வொரு கணமும் நின்று நிதானித்துச் சிந்தனையோடு தேங்கிப் போய்க் கொண்டிருக்க வேண்டுமென்று நினைக்கிறோம். அறிவுக்கும், ஆண்மைக்கும் அவையிரண்டும் தோன்றிய நாளிலிருந்து நடந்து வரும் போராட்டம்தான் இது.”

அவருடைய சொற்களைக் கேட்டதும் சீவல்லபமாறன் திடுக்கிட்டான். ஏ! அப்பா! இவருடைய கண்களுக்கு முன்னால் நிற்கிறவன் மனத்தில்கூட ஒன்றும் நினைக்க முடியாது. போலிருக்கிறதே என் எண்ணங்களை எனது முகத்திலிருந்தே எப்படித் தெரிந்துகொண்டார் இவர்? என்று மலைத்தான். அவன்.

சிரித்துக்கொண்டே மெதுவாக நடந்து அவன் அருகே வந்து சுதந்திரமான உரிமையோடு அவனை முதுகில் தட்டிக்கொடுத்தார் அவர். -

“மெய்க் காவற்படைத் தலைவனே! நீ கவலைப் படாதே. என்னுடைய அறிவின் கனம் உனக்கு எந்தவிதமான கெடுதலையும் எப்போதும் உண்டு பண்ணாது. அதை எண்ணி நீ அஞ்சவேண்டியதே இல்லை. ஆயிரம் வேல்களாலும், வாள்களாலும் நாம் சாதிக்க முடியாத காரியத்தை ஒரு சொல்லால் ஓர் எழுத்தால் அறிவாளி சாதித்துவிடுகிறானே என்ற பொறாமை படை வீரனுக்கு ஏற்படுமானால் அதன்பின்

உலகில் அரசர்கள் இருக்கமாட்டார்கள். அமைச்சர்கள் இருக்க மாட்டார்கள். என்னைப்போல் மகாமண்டலேசுவரர்கள் இருக்க மாட்டார்கள். தளபதி வல்லாளதேவனையும், உன்னையும் போல் ஆள்கட்டுள்ள படைத்தலைவர்கள் மக்களையும், அறிவாளிகளையும் அடக்கி ஒடுக்கிவிட்டுத் தங்களைத் தாங்களே அரசர்களாக்கிக் கொண்டுவிடுவார்கள். எதிர்காலத்தில் பல நூறு தலைமுறைகளுக்குப்பின் இப்படிப்பட்ட படைவீரர் ஆட்சி உலகெங்கும் ஏற்பட்டாலும் ஏற்படும். ஆனால், இந்தத் தலைமுறையில் மகாராணி வானவன் மாதேவியும், என் போன்றோரும் உயிரோடு இருக்கிறவரை இந்த நிலை வரவேண்டாம். வரக்கூடாது. வரவிடவும் மாட்டேன்.” - இந்தச் சொற்களைக் கூறும்போது மகாமண்டலேசுவரருடைய முகத்தைப் பார்க்க வேண்டுமே? என்ன ஒளி! என்ன அழுத்தம்! எவ்வளவு உறுதி!

ஏனடா இந்த மனிதரிடம் அகப்பட்டுக் கொண்டோ மென்று எண்ணி வெலவெலத்து நடுங்கிப் போனான் மெய்க்காவற்படைத்தலைவன். மகாமண்டலேசுவரருடைய மனத்தில் ஒரு விஷயம் தைத்து அதைப்பற்றி அவர் பேசத்தொடங்கி விட்டாரென்றால் பின்பு அதை எதிர்த்துப் பேசி வாதாடுவதற்கு இன்னொரு மகாமண்டலேசுவரர் பிறந்து வந்தால்தான் உண்டு.

“சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச் சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து”

என்று சொல்வன்மையைப் பற்றிக் கூறியது அவருக்கே பொருந்தும். இடையாற்றுமங்கலம் நம்பி கூறுகிற ஒரு வார்த்தையை வெற்றி கொள்ளும் மற்றோர் வார்த்தையை மற்றொரு மனிதர் கண்டுபிடித்துப் பேசுவதற்கு இல்லை. தம் சொல்லை வெல்லும் மற்றொரு சொல்லை அவரே கண்டுபிடித்துச் சொன்னால்தான் உண்டு. நினைப்பில், பேச்சில், செயலில் அப்படி ஓர் ஈடு இணையற்ற சாமர்த்தியம் அமைவது மிகவும் அபூர்வம்.

முதல் முதலாகக் கடலைப் பார்க்கும் சிறுபிள்ளையின் பிரமி ப்போடு மகாமண்டலேசுவரரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு பேசாமல் நின்றுகொண்டிருந்தான் அவன். -

“சீவல்லபா! நீ பச்சைக் குழந்தையில்லை. உன்னைக் கூப்பிட்டு உன் கையில் ஒரு முள்ளைக் குத்தி அதை இன்னொரு முள்ளால் எடுத்துக் காட்டி இவ்வளவு செய்த பின்பு தான் உனக்கு உண்மையை விளக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. வாயாற் சொல்லி விளக்கியிருந்தாலே உனக்குப் புரிந்திருக்கலாம். ஆனால் நான் ஏன் அப்படிச் செய்தேன், தெரியுமா? ஒரு கருத்தை மனத்தில் பதிக்க வேண்டுமானால் அந்தக் கருத்தின் நினைவு பசுமையாக இருக்கும்படி எதையாவது செய்துதான் ஆக வேண்டி யிருக்கிறது. குழந்தைத்தனமான காரியங்களானாலும் அவற்றைச் செய்துதான் சில மெய்களைப் புரியவைக்க முடிகிறது. இந்த மாதிரிக் குழந்தைத்தனம் இருப்பதால் தானே சத்தியத்தையும் தருமத்தையும் காப்பாற்றுவதற்காகச் சில அறிவாளிகள் கதையும், கவியும் எழுதிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது? உன் கையில் முள்ளால் குத்தி விட்டதாக நீ என்மேல் வருத்தப்பட்டுக் கொள்ளாதே வா, போகலாம். நான் கூறியபடி நீ தயார் செய்திருக்கும் வீரர்கள் ஐம்பது பேர்களையும் போய்க் காண்போம். அவர்கள் காவற்படை மாளிகையில்தானே தங்கியிருக்கிறார்கள்?” என்று அவனை உடன் அழைத்துக்கொண்டு அரண்மனைக் காவற்படை மாளிகைக்கு விரைந்தார் மகாமண்டலேசுவரர்.

“சீவல்லபா: வடக்கு எல்லையில் கரவந்தபுரம், கொற்கைப் பகுதிகளில் ந்ம் பகைவர் உண்டாக்கும் கல்வரங்களையும், குழப்பங்களையும் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். நாம் அவர்களை எண்ணிப் பயமும், பதற்றமும் அடைவதற்காக உடனடியாகப் படையெடுப்பு நடக்க இருப்பது போல் ஒரு மிரட்டலைச் செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். கன்னம் வைத்துத் திருடப்போகிற திருடன் தந்திர சாலியாக இருந்தால் கன்னத்துவாரத்துக்குள் முதலில் தன் தலையை நீட்டமாட்டான். உள்ளே சொத்துக்கு உரியவர் விழித்துக் கொண்டிருக்கிறாரா, இல்லையா என்று சோதிப்பதற்காக ஒரு குச்சியில் பழைய மண் சட்டியை மாட்டித் துவாரத்தின் வழியே நீட்டுவான்; ஆள் விழித்திருந்தால் அவன் நீட்டிய சட்டியைத் திருடனின் தலையாக எண்ணி உள்ளிருப்பவர் ஓங்கிப் புடைப்பார். சட்டி உடைகிற சத்தம் கேட்டுத் திருடன் ஒடித் தப்பித்துக் கொள்ளுவான். இது போன்ற வேலையைத்தான் வடதிசை அரசர்கள் இப்போதுநம் மிடத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் ஒன்றுமே அறியாமல் துரங்கிக் கொண்டிருக்கிறோமென்பது அவர்கள் நினைப்பு. வைரத்தை வைரத்தால் அறுக்கப் போகிறேன். முள்ளை முள்ளால் எடுக்கப் போகிறேன். சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெல்லப் போகிறேன். அவர்கள் கற்றுக்கொடுத்த பாடத்தை அவர்களுக்கே திரும்பக் கற்பிக்கப்போகிறேன். சிந்திக்கவும், சூழ்ச்சி செய்யவும், திட்டமிடவும் அறிவுள்ளவர்கள் தென்பாண்டி நாட்டில் கிடையாதென்று தீர்மானித்து விட்டார்கள் போலிருக்கிறது. சோழ நாட்டில் சோறு இருக்கிறது. சேர நாட்டில் யானைகள் இருக்கின்றன. பாண்டி நாட்டில் தமிழ் அறிஞர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். இந்த நாவலந் தீவிலேயே சிறந்த அறிவாளிகள் தொண்டை நாட்டிலும், தென் பாண்டி நாட்டிலும் இருக்கிறார்கள். தொண்டை நாட்டு அறிவாளிகள் எதையும் மன்னித்துவிடும் இயல்புள்ள சான்றோர்கள். ஆனால், பாண்டி நாட்டான் பாதகத்தை மன்னிக்க மாட்டான். தென்திசை எல்லாத் தீமைகளையும் அழித்தொழிக்கும் காலனுக்குச் சொந்த மென்பார்கள். அதே தென்திசையில் தான் இப்போது நாமும் இருக்கிறோம்."-காரியங்களைக் கண் பார்வையிலேயே சாதித்துக்கொண்டு போகிற மகா மண்டலேசுவரர் அன்று மெய்க்காவற் படைத் தலைவனிடம் சற்று அதிகமாகவே பேசினார்.

நாட்டின் உயிர் நாடியான படைகளை ஆளும் பொறுப்புள்ளவர்கள் தம் மேற் சந்தேகப்படும்படியாகத் தான் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக மகா மண்டலேசுவரருக்கு ஒரு பயம் உண்டாகிவிட்டிருந்தது. தளபதி வல்லாளதேவன் மனத்தில் தம்மைப் பற்றி அவ்வளவாக நல்ல எண்ணம் இல்லையென்று அவரே அறிந்திருந்தார். ஆபத்துதவிகள் படைத் தலைவன் மகர நெடுங்குழைக்காதனுக்கும் அவர் மேல் ஓரளவு பகை இருந்தது. சீவல்லபமாறனையும் அப்படிப் பகைத்துக் கொண்டால் இந்த மூவருமே தமக்கு எதிராக ஒன்றுகூடி

மாறுபடுவார்களோ என்ற உள்பயம் அவருக்கு ஏற்பட்டது. தொடக்கத்தில் சீவல்லபனும் அதற்கேற்றாற்போல் நடந்துகொள்ளவே அவனும் ஆகாதவனாகிவிடுவானோ என்ற அச்சம் அந்தக்கணமே சூழ்ந்து கொண்டது அவரை.

அந்தக் கணத்திலிருந்தே அவனைத் தட்டிக்கொடுத்து அவனோடு அதிகமாகப் பேசத் தொடங்கிவிட்டார் அவர். துணிவு வந்துவிட்டால் அறிவுள்ளவனுக்கு ஆயிரம் யானைப் பலம் ஏற்படுகிறது. பயம் வந்துவிட்டால் அவனைவிடக் கோழை உலகத்தில் வேறு எவனும் இருக்க முடியாது. மகாமண்டலேசுவரர் அன்று நடந்து கொண்ட விதம் இந்த உண்மைக்குப் பொருத்தமாக இருந்தது.

சீவல்லபமாறனோ உண்மையில் அவருடைய கண் பார்வைக்கே பயந்து நடுங்கிக்கொண்டிருந்தான். தளபதி, ஆபத்துதவிகள் தலைவன், எல்லோருக்குமே அவர் மேல் பிணக்கு இருந்தாலும் அந்தப் பேரறிவுக்கு முன்னால் தலைவணங்கிவிடுகிற நடுக்கம் நிச்சயமாக உண்டு. ஆனால் அப்படியிருந்தும் அவர் அவர்களை எண்ணிப் பயந்துகொண்டு தான் இருந்தார். யானைக்குத் தன் பலம் தெரியாதல்லவா? சங்ககாலத்தில் கிள்ளிவளவன் என்றொரு அரசன் இருந்தான். அவனுடைய கண்பார்வைக்கு நினைத்ததைச் செய்து முடிக்கும் ஆற்றல் இருந்ததை -

“நீ உடன்று நோக்கும்வாய் எரிதவழ

நீ நயந்து நோக்குவாய் பொன்பூப்ப செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும்

வெண்திங்களுள் வெயில் வேண்டினும் வேண்டியது விளைக்கும் ஆற்றலை” -

என்று ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர் மிகையாகப் புகழ்ந்து பாடியிருந்தார். அப்படிப்பட்ட வேண்டியது விளைவிக்கும் ஆற்றல் தம் கண்களுக்கு இருந்தும் மனத்தின் ஒரு மூலையில் வேண்டாத வீண் பயத்தை எண்ணிப் பயப்படும் அறிவுள்ளவனுக்கே சொந்தமான தாழ்வு மனப்பான்மையும்

வெளிக்குத் தெரியாமல் மகாமண்டலேசுவரரிடம் ஒளிந்து கொண்டிருந்தது. .

பேசிக்கொண்டே சென்று அவரும் சீவல்லபமாறனும் அரண்மனைக் காவற்படை மாளிகைக்குள் நுழைந்தனர். மாளிகை முன்றிலில் சீவல்லபன் தேர்ந்தெடுத்து நிறுத்திவிட்டு வந்திருந்த வீரர்கள். ஐம்பதின் மரும் அணிவகுத்து நின்றுகொண்டிருந்தனர்.

“இதோ இவர்கள்தான், தாங்கள் கூறிய செயலுக்காகத் தேர்ந்தெடுத்து நிறுத்தப்பட்டிருப்பவர்கள்” - சீவல்லபன் அவர்களைச் சுட்டிக்காட்டினான். மகாமண்டலேசுவரர் அந்த வீரர்களுக்கு முன்னால் ஒரு சொற்பொழிவே செய்துவிட்டார். “அன்பார்ந்த மெய்க்காவற்படை வீரர்களே! நீங்கள் சூழ்ச்சியும், சாதுரியமும் மிக்க பெரிய காரியத்தைச் செய்யப் பெறுவதற்காக அனுப்பப்படுகிறீர்கள். உயிரின் மேலும் உடலின் மேலும் பற்றுள்ளவராக இருந்தாலும் துணிவோடு செல்லுங்கள். முன்பு பாண்டி நாடாக இருந்து இப்போது வடதிசையரசர்களினால் கைப்பற்றி ஆளப்படும் பகுதிகளிலும், கோனாட்டுக் கொடும்பாளுரிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் கூட்டமாகவோ, தனித் தனியாகவோ சென்று மறைந்திருந்து உங்களால் இயன்ற குழப்பங்களையும் கலவரங்களையும் செய்யுங்கள். நாம் அவர்கள்மேல் படையெடுக்கப் போவதாகவும், பிறகு ஈழத்திலிருந்தும், சேர நாட்டிலிருந்தும், நமக்குப் பெரும் படையுதவி கிடைக்கப்போவதாகவும் செய்திகளைப் பரப்பி அவர்களை நம்பவையுங்கள். நீங்கள் ஒருவர் கூட முடிந்தவரை எதிரிகள் கையில் அகப்பட்டுக் கொண்டு விடாமல், இந்த வேலைகளைச் செய்யவேண்டும். தப்பித்தவறி யாராவது அகப்பட்டுக் கொண்டால் சதையைத் துண்டு துண்டாக்கினாலும் உண்மைகளைச் சொல்லி நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகத்தைச் செய்யக்கூடாது. நம் நாட்டு வடக்கு எல்லையில் கொற்கையிலும், கரவந்தபுரத்திலும், அவர்கள் செய்கின்ற குழப்பங்களைப்போல் நீங்கள் அங்கே போய்ச் செய்யவேண்டும். அவ்வப்போது அங்கே உங்களுக்குக் கிடைக்கும் உளவுச்

செய்திகளை இங்கே எனக்குத் தெரியுமாறு அனுப்பவேண்டும். இந்தக் காரியங்களை யெல்லாம் நன்றாகச் செய்து உயிர் தப்புவதற்கு உங்களுக்கு என்னென்ன திறமைகள் வேண்டுமென்று தெரியுமா? முதலாவதாகப் பொய்களை உண்மைகள்போல் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். சமயத்துக்கு ஏற்றாற்போல் வேடமிட்டு நடிப்பதற்குத் தெரிந்திருக்க வேண்டும். மிகமுக்கியமான மூன்றாவது திறமை உயிர், உடல், பொருள் எதையும், எந்த விநாடியும் இழக்கத் தயாராகயிருக்க வேண்டும். அவ்வளவுதான்! இறுதியாக உங்களுக்கு நான் கூறும் எச்சரிக்கை ஒன்று உண்டு. இங்கிருந்து இந்தக் காரியத்தைச் செய்வதற்காக இன்று நீங்கள் புறப்பட்டுச் செல்வது கூடியவரையில் பரம இரகசியமாகவே இருக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் புறப்பட்டுச் செல்வதற்கு முன் கடைசியாக மிக வேடிக்கையான முறையில் உங்கள் திறமையைப் பரீட்சை செய்து பார்க்கப் போகிறேன்” என்று சொல்லிவிட்டுக் குறும்பாகச் சிரித்தார்.

“அந்தச் சோதனை யாதோ? சீவல்லபமாறன் விநயமாகக் கேட்டான். - . -

“உங்களில் யாருக்கு அதிகப் பொய் கூறும் திறமை இருக்கிறதென்று பரீட்சை செய்யப்போகிறேன்.”

அவருடைய இந்தச் சொற்களைக் கேட்டு எல்லோரும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டனர். -

“சுவாமி! மெய்க்காவற் படை வீரர்களிடம் பொய் சொல்லும் திறமையை எதிர்பார்த்தால் தங்களுக்குப் பெருத்த ஏமாற்றம்தான் கிட்டும்!” - ..”, “ “ . . . . . .

“பரவாயில்லை, சீவல்லபா உலகத்தில் பொய் சொல்லத் தெரியாத ஆட்களே கிடையாது. நன்றாகப் பொய் கூறத் தெரிந்த கூட்டத்தில் இருந்துதான் கவிகள், கதாசிரியர்கள், பெளராணிகர்களெல்லாம் உருவாகிறார்கள். எங்கே, பார்க்கலாம்? முதலில் உன் திறமையைக் காண்கிறேன். அழகாக ஒரு பொய் சொல்.” • . . “ ..

சீவல்லபன் நாணித் தலை குனிந்தான். அவனால் முடியவில்லை.

“நீ தோற்றாய்” என்று சொல்லிவிட்டு அடுத்த வீரனைக் கேட்டார் அவர்! அவன் ஒன்றும் புரிந்து கொள்ள முடியாமல் ஏதோ உளறினான்.

“சே சுகமில்லையே? உங்களில் ஒருவருக்குக் கூட அழகாகப் பொய் சொல்லத் தெரியவில்லையே?’ என்று உதட்டைப் பிதுக்கினார் மகாமண்டலேசுவரர். அப்போது அந்த வீரர்களில் கோமாளி போன்ற முக அமைப்பும் கோணிய வாயும் நீளமான மூக்குமுள்ள ஒரு வீரன் முன் வந்தான். .

“நான் சொல்லுகிறேன் ஒரு பொய்!” “எங்கே சொல் பார்க்கலாம்!” அவன் சிரித்துவிடாமல் சொன்னான்; “என்னைப் பெற்ற அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கல்யாணமாகும் போது நான் சிறு பையனாயிருந்தேன். அப்பா அம்மாவுக்குத் தாலி கட்டுகிற போது நான் அம்மாவின் மடியில் ஏறி உட்கார்ந்துகொண்டு பக்கத்தில் வைத்திருந்த உலக்கையின் கொழுந்தை கிள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஊர்வலத்துக்குக் கொம்புள்ள குதிரை ஒன்றாவது கிடைக்கவில்லையே என்று எல்லோரும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் உடனே ஒடிப்போய்த் தெருக்கோடியிலிருந்த மலடியின் எட்டாவது மகனிடம் சொல்லிக் கொம்புள்ள குதிரைக்கு ஏற்பாடு செய்தேன்.” -

“அபாரம்: அற்புதம்! இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்து இதே திறமையோடு இந்த தமிழ்நாட்டில் நீ பிறந்தால் அந்தக் காலத்துக்கே நீதான் மகாகவியாக இலங்குவாய். என்ன அருமையான பொய்!” மக்ா மண்டலேசுவரர் கூறினார். அவரும் மற்றவர்களும் நெடுநேரம் அடக்கமுடியாமல் வயிறு குலுங்கச் சிரித்தார்கள். சிரிப்பு முடிந்ததும் மகாமண்டலேசுவரரின் கண் பார்வை சீவல்லபமாறனுக்குக் கட்டளையிட்டது. அவன் அந்த வீரர்களை அவர்களிடம் ஒப்பித்த காரியத்தைச் செய்யப் புறப்படுமாறு ஆணையிட்டான்.