பாண்டிமாதேவி/இரண்டாம் பாகம்/கூற்றத் தலைவர்கள் குறும்பு

விக்கிமூலம் இலிருந்து

36. கூற்றத் தலைவர்கள் குறும்பு

மகாராணியாரிடமும், மகாமண்டலேசுவரரிடமும் அவமானப்பட்டு, ஒப்புரவு மொழி மாறா ஒலை ஏற்றுக் கொள்ளப்படாமல் ஊர் திரும்பிய பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால் மாறனார் தம் குறும்புகளைத் தொடங்கினார்.

ஒரு மனிதன் தன்னிடம் இருக்கும் பண்புகளையும், செல்வத்தையும் கெடுத்துக்கொண்டு, தன்னையும் தீயவழிகளில் ஈடுபடுத்திக்கொள்கிற அளவு பொறாமை அவனைக் கெடுத்துவிடும்.

“அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும்”

என்று குறளாசிரியர் பாடியதற்கு இலக்கியமாக மாறியிருந்தார் கழற்கால் மாறனார். தம்முடைய சதிக்கு உடந்தையான கூற்றத் தலைவர்களை மறுபடியும் பொன்மனைக்கு வரவழைத்தார் அவர். அருவிக்கரைக் கூற்றத்து அழகிய நம்பியார், பாகோட்டுக் கூற்றத்துப் பரிமேலு வந்த பெருமாள், தோவாழைக் கூற்றத்து நன்கணிநாதர் ஆகிய மூவரும் இரண்டாம் முறையாகப் பொன்மனைக்கு வந்தார்கள்.

கழற்கால் மாறனாருக்குச் செல்வாக்கைக் காட்டிலும் செல்வம் அதிகமாக இருந்தது. ஒளியும் அழகும் நிறைந்து ஊருக்கே தனிக்கவர்ச்சி பூட்டிக்கொண்டிருக்கும் அவருடைய மாளிகைக்கே அந்த ஊரின் பெயரை இட்டுச் சொல்லலாம் போலிருந்தது. அத்தகைய ஒளி நிறைந்த மாளிகையில் கூடி இருள் நிறைந்த எண்ணங்களைச் சிந்தித்தார்கள் கூற்றத் தலைவர்கள்.

“நான் அப்போதே நினைத்தேன்; பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. இடையாற்றுமங்கலம் நம்பி நம்முடைய எதிர்ப்பை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார் என்று முன்பே எனக்குத் தெரியும்” என்று பரிமேலுவந்த பெருமாள் பேச்சைத் தொடங்கினார்.

“அது பெரிய மலை ஐயா! அதைச் சரியவைக்க வேண்டுமானால் பூகம்பத்தைப் ப்ோல் வலிமையான பெரிய எதிர்ப்புக்கள் ஒன்று கூடி வீழ்த்தவேண்டும். நாம் நான்கு பேர்கள் அந்த மலைக்கு முன் எந்த மூலையோ?” என்றார் நன்கணிநாதர்.

“இப்படி வெளிப்படையாக ஒப்புரவு மொழிமாறா ஒலையைக் கொண்டுபோய் மகாராணியாரிடம் கொடுத்து அவர் ஏற்றுக்கொள்ள மறுத்தது நமது பெரும் பலவீனம். நாம் யாரை எதிர்க்கிறோமோ, அவருக்கே நம்முடைய எதிர்ப்புத் தெரிந்து விட்டது. இப்படியெல்லாம் வருமென்று தெரிந்திருந்தால் வெளிப்படையாக எதையும் செய்யாமல் மறைமுகமாக எதிர்ப்பு வேலைகளைச் செய்திருக்கலாம் நாம்” என்றார் அழகிய நம்பியார். - .

எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டே வீற்றிருந்த கழற்கால் மாறனாருக்கு எரிக்சல் எரிச்சலாக வந்தது. மகாமண்டலேசுவரரைப் பற்றி அப்போது யாராவது வாய் ஓயாமல் தூற்றிப் பேசினால் அவருக்கு ஆறுதலாக இருக்கும் போலிருந்தது. ஆனால் எல்லாருமே அவரைத் துற்றுவதாக எண்ணிக் கொண்டு அவருடைய பெருமையை உயர்த்திப் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பேச்சினால்தான்

அவருடைய மனத்தில் கொதிப்பு மூண்டது. கொதிப்போடு பேசலானார் அவர்:-"முதலில் மகாமண்டலேசுவரருக்கு வேண்டாதவர்கள் எல்லோரையும் நம்மோடு சேர்த்துக் கொள்ளவேண்டும். கட்சி கட்டிக்கொண்டு கிளம்பினால் தான் எதையும் திடமாக எதிர்க்க முடியும். தளபதி வல்லாள தேவனுக்கும், மகாமண்டலேசுவரருக்கும் ஏதோ சில பிணக்குகள் இருப்பதாகத் தெரிகிறது. தென்பாண்டி நாட்டின் படைத் துறையைச் சேர்ந்த வேறு சிலருக்கும் இதேபோல் அவர்மேல் ஒருவிதமான வெறுப்பு இருக்கும் போலும். அவற்றையெல்லாம் நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.”

“மாறனாரே! நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம், தளபதி வல்லாளதேவன் மகா மண்டலேசுவரரை வெறுக்கிறான் என்பதற்காக நம்மை ஆதரிப்பான் என்று நாம் எதிர்பார்ப்பது தவறு. மகாமண்டலேசுவரர் என்ற பதவியையும், வளைந்து கொடுக்காத அறிவையும்தான் அவன் வெறுக்கிறான். நாமோ . அந்தப் பதவியையும், அந்த மனிதரையும் அந்த அறிவையும் எல்லாவற்றையுமே வெறுக்கிறோம். வல்லாளதேவன் சூழ்ச்சி களையும் அதிகாரத்தையும் எதிர்ப்பவனாக இருந்தாலும் கடமையையும், நேர்மையையும், ஒரளவு போற்றுகிறவனாக இருப்பான்” என்று பரிமேலுவந்த பெருமாள் கழற்கால் மாறனாருக்கு மறுமொழி கூறினார். * ,

‘நான் சொல்லுவது என்னவென்றால் எட்டுத் திசையிலிருந்தும் ஒரே குறியில் கூர்மையான அம்புகளைப் பாய்ச்சுவதுபோல் மகாமண்டலேசுவரர் மேல் எதிர்ப்பு களையும், துன்பங்களையும் பாய்ச்சவேண்டும். அவற்றைத் தாங்க முடியாமல் அவராகவே பதவியிலிருந்து விலகி ஒடவேண்டும்.” - - -

“மாறனாரே! அவர் அப்படித் தாங்கமுடியாமல் விலகி ஓடிவிடுவாரென்று நீங்கள் நினைப்பதே பிழையான நினைவு. நாமெல்லாம் சில சந்தர்ப்பங்களில் விழித்துக் கொண்டிருக்கும் போதே தூங்கிவிடுவோம். ஆனால் அவரோ தூங்கிக்

கொண்டிருக்கும்போதும் விழித்திருப்பார். அவரை ஏமாற்றுவது அவ்வளவு எளிதில்லை” என்று நன்கணிநாதர் மறுபடியும் மகாமண்டலேசுவரரின் புகழ் பாடத் தொடங்கியபோது கழற்கால்மாறனாரின் முகம் சுருங்கிச் சிறுத்தது. அந்த முகத்தில் கடுமையான வெறுப்புப் பரவியது. “முதல் காரியமாக எதிரியின் பெருமையைப் புகமும் இந்த ஈனத்தனம் நம்மிடமிருந்து ஒழியவேண்டும்” என்று உரத்த குரலில் எரிந்து விழுந்தார் பொன்மனைக் கூற்றத் தலைவர். அந்தக் குரலிலிருந்த வெறுப்பின் வேகம் மற்ற மூன்று பேரையும் நடுங்கச்செய்தது. மூன்று பேரும் தாங்கள் பேசுவதை நிறுத்திக்கொண்டு மெளனமாக இருக்கத் தலைப்பட்டனர். கழற்கால் மாறனாரும் அந்த மெளனத்தைத் தான் விரும்பினார். அம்மூன்று பேரும் தமக்கு அடங்கியிருந்து தாம் சொல்பவற்றை மட்டும் கட்டளைகளைப் போல் கேட்க வேண்டுமென்றே அவர் விரும்பினார். அவர்கள் பதில் சொல்வதையோ சொந்த அபிப்ராயங்களைச் சொல் வதையோ அவர் விரும்பவில்லை.

“ஒப்புரவு மொழி மாறா ஒலையை ஏற்றுக்கொள்ள மாட்டேன்” என்று கூறியதுமே நாம் ஒத்துழையாமையும் எதிர்ப்பும் புரிவோம் என்பதை மகாராணியிடம் சொல்லி விட்டுத்தான் வந்தேன். நான் மகாமண்டலேசுவரரையும் அருகில் வைத்துக்கொண்டே முன்பு எனக்கு அளிக்கப் பட்டிருந்த தென்னவன் தமிழ்வேள் பாண்டிய மூவேந்த வேளார்’ என்ற பட்டத்தையும், ஏனாதி மோதிரத்தையும் திருப்பியளித்துவிட்டேன். அப்போது அந்த இடையாற்றுமங்கலத்து மனிதர் என்னைக் கேவலப்படுத்திப் பேசிய பேச்சுகளை நினைத்தால் இப்போதுகூட என் இரத்தம் கொதிக்கிறது” என்று சொல்லிக் கொண்டே வந்தவர், பேச்சை நடுவில் நிறுத்திக்கொண்டே அந்த மூன்று பேருடைய முகங்களையும் பார்த்துக்கொண்டார். -

பின்பு மேலும் தொடர்ந்து கூறலானார்:-"இனிமேல் மகாமண்டலேசுவரருக்கு எதிராக நாம் செய்யவேண்டிய

காரியங்களைச் சொல்கிறேன். தென்பாண்டி நாடு முழுவதும் பரவலாக அவர்மேல் ஒருவிதமான அதிருப்தி உண்டாகும்படி செய்யவேண்டும். பாண்டிய மரபின் அரசுரிமைப் பொருள்கள் காணாமல் போனதற்கு மகாமண்டலேசுவரருடைய கவனக் குறைவுதான் காரணமென்று எல்லோரும் நினைக்கும்படி செய்யவேண்டும். இளவரசன் இராசசிம்மன் நாட்டுக்கு வந்து மகாராணியாரைச் சந்திக்கவிடாமல் அவனை எங்கோ கடல் கடந்து போகும்படி துரத்தியிருப்பவரும் அவர் தானென்று செய்தியைத் திரித்துப் பரப்பவேண்டும். அவருடைய கவனக்குறைவால்தான் கொற்கையில் குழப்பம் விளைந்தது, அவருடைய கவனக் குறைவால்தான் பகைவர் படையெடுப்பு நிகழப்போகிறது, அவருடைய கவனக் குறைவால்தான் மகாராணியின் மேல் யாரோ வேலெறிந்து கொல்ல முயன்றார்கள் என்று எல்லாச் செய்திகளையும் அவர்மேல் அதிருப்தி உண்டாக்குவதற்கு ஏற்ற விதத்தில் நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். போர் ஏற்பட்டு அதற்காகப் படை வீரர்கள் திரட்டுவதற்கு நம்முடைய கூற்றங்களுக்கு மகாமண்டலேசுவரரின் பிரதிநிதிகளாக எவரேனும் வந்தால், படைவீரர்களை அவர்களோடு சேரவிடாமல் நாம் தடுக்க வேண்டும். இவ்வளவையும் செய்வதற்கு உரிய துணிவு நமக்கு ஏற்பட வேண்டும். அந்தத் துணிவு எனக்கு இருக்கிறது. உங்களுக்கும் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.”

“மாறனாரே! எங்களுக்கு அந்தத் துணிவு இதுவரையில் ஏற்படவில்லை. இப்போது நீங்கள் வற்புறுத்திச் சொல்கிறீர்கள். அதனால் நாங்களும் அந்தத் துணிவை ஏற்படுத்திக் கொள்கிறோம். போராடத் துணிந்த பின் தயங்கிக் கொண்டிருக்க முடியாதல்லவா?” என்று நிதானமாக மறுமொழி கூறினார் பரிமேலுவந்த பெருமாள்.

“முடிந்தால் உங்களில் யாராவது ஒருவர் தளபதி வல்லாள தேவனையும் இரகசியமாகச் சந்தித்துப் பேசிப் பாருங்கள். அவனும் மகாமண்டலேசுவரரை எதிர்க்கும் ஒரு காரியத்திலாவது நம்மோடு சேருவானா, இல்லையா என்பது தெரிந்துவிடும்” என்று கழற்கால் மாறனார் சொன்னபோது, வேறு வழியின்றி ஒப்புக் கொள்ளுகிறார்போல் அந்த மூன்று பேருடைய தலைகளும் மெல்ல அசைந்தன.

அன்று பொன்மனைக் கூற்றத் தலைவர் மாளிகையில் மற்ற மூன்று கூற்றத் தலைவர்களுக்கும் பிரமாதமான விருந்து உபசாரம் நடைபெற்றது. நால்வகை உண்டிகளும், அறுசுவைப் பண்டங்களும், முக்கனிகளுமாக அப் பெருவிருந்தை உண்ட போது மற்ற மூன்று கூற்றத் தலைவர்களுக்கும் அந்த வயதான மனிதர்மேல் நன்றி சுரக்கத்தான் செய்தது. அவ்வளவு உபசாரங்களைச் செய்கிறவருக்காக நன்றியோடு உழைக்க வேண்டுமென்ற ஆவலும் எழுவது இயற்கைதானே? கழற்கால் மாறனாரைச் சில நாட்களாவது மகாமண்டல்ேசுவரர் பதவியில் இருக்கச் செய்து பார்க்க ஆசைப்பட்டார்கள் அவர்கள்.

அந்தக் கூட்டம் நடந்த சில தினங்களுக்குப்பின் சூரியோதயத்துக்கு முன் நாய்கள் குரைப்பதுபோல், ஒவ்வொரு கூற்றத்திலும் மக்கள் மதிப்புக்குரியவராயிருந்த மகாமண்டேலசுவரரைப் பற்றிக் குறும்புத்தனமான கெடுதல் பிரசாரங்கள் இரகசியமாக ஆரம்பமாயின.