பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/படைகள் புறப்பட்டன

விக்கிமூலம் இலிருந்து

11. படைகள் புறப்பட்டன

வடதிசை மன்னர்களின் பெரும் படையை அணி வகுக்கவும் திட்டமிடவும், கொடும்பாளுரில் இரண்டு மூன்று நாட்கள் கழிந்துவிட்டன. தெற்கேயுள்ள குழப்பமான நிலைகள் ஒவ்வொன்றாகத் தெரியத்தெரிய வடதிசையரசர்களின் மனத்திடம் அதிகமாயிற்று.

படையெடுப்புக்கு முன்னால் கடைசியாக அவர்களுக்குக் கிடைத்த செய்தி ‘மகாமண்டலேசுவரருக்கும், தென்பாண்டி நாட்டின் ஏனைய கூற்றத் தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது’ என்பது ஆகும்.

“இராசசிம்மன் அரசுரிமைப் பொருள்களைத் திருடிக் கொண்டு ஓடிப்போய்விட்டான். முத்துக்குளி விழாவில் குழப்பம் நடந்துவிட்டது. மகாமண்டலேசுவரரைக் கூற்றத் தலைவர்கள்

மதிக்கவில்லை. கரவந்தபுரத்துப் படையும், தங்கள் படையும் தவிர வேறு படையுதவி இதுவரையில் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அந்தரங்கமான பிணக்கு ஒன்று தளபதி வல்லாளதேவனுக்கும் மகாமண்டலேசுவரருக்கும் மனத்தளவில் இருக்கிறது” என்ற இந்தச் செய்திகளெல்லாம் மொத்தமாகச் சேர்ந்து தங்களுடைய வெற்றிக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையைத் தென்திசையில் உண்டாக்கி வருவதாகச் சோழன் முதலிய ஐந்து வடதிசையரசர்களும் எண்ணினர். .

திட்டமிட்டிருந்தபடியே படைகளை இரண்டு பிரிவாகப் பிரித்துக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள் அவர்கள். சோழனும், கொடும்பாளுரானும் எதிர்பார்த்ததுபோல் தென்பாண்டி நாட்டுப் படைகள் மதுரைக்கோ, அதற்கு அப்பாற்பட்ட இடத்துக்கோ எதிர்கொண்டு வந்து தாக்க வில்லை. நெல்வேலிக் கோட்டத்துக்குள் புகுந்து தென்பாண்டி நாட்டு எல்லையை நெருங்குகிற வரையில் அவர்களுக்கு எதிர்ப்பே இல்லை. - -

ஆனால் வெள்ளுருக்கு அருகில் கரவந்தபுரத்துப் படை எதிர்த்து நின்றது. அதோடு சேர நாட்டுப் படை வீரர்களும் பெருவாரியான அளவில் தென்பட்டனர். வடதிசைப் படையை நடத்திக்கொண்டு வந்தவர்களுக்கு அப்போது தான் உண்மை புரிந்தது. “ஓகோ விட்டுப் பிடிக்கும் சூழ்ச்சியை மனதிற்கொண்டு பாண்டிநாட்டு படைகள் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கின்றன. ஆனாலும் மகா மண்டலேசுவர்ர் கெட்டிக்காரர்தான். சேரநாட்டுப் படை உதவி இவர்களுக்குக் கிடைத்திருக்க முடியாது என்று நாம் நினைத்து மகிழ்ந்துகொண்டிருக்கிறோம். இங்கே வந்து பார்த்தால் எதிர்த்து நிற்கும் படைகளில் அதிகமானவை சேரநாட்டிலிருந்து வந்திருக்கின்றன” என்று போர் ஆரம்பமாகு முன் களத்தில் நின்றுகொண்டு தன் நண்பர்கள் நால்வரிடமும் கூறினான் சோழ மன்னன்.

“இன்னொரு செய்தியையும் நாம் கவனிக்க வேண்டும். இது வரையில் தளபதி வல்லாளதேவனும், அவன் பொறுப்பிலுள்ள படைகளும் களத்துக்கு வந்து சேரவில்லையென்று தெரிகிறது. இதைப்பற்றியும் நாம் சிந்திக்கவேண்டும்!” என்றான் கொடும்பாளுர் மன்னன்.

அவன் கூறியது மெய்தான்! வடதிசைப் படைகளைத் தடுத்துப் போர் செய்வதற்காக நெல்வேலிக்கும் கரவந்தபுரத்துக்கும் இடையே எதிர்கொண்ட பாண்டியப் பெரும் படையில் தளபதி வல்லாளதேவன் தென்படவில்லை. கரவந்தபுரத்துக் குறுநிலவேள் பெரும்பெயர்ச்சாத்தனும், சேர நாட்டிலிருந்து வந்த படையை நடத்திக் கொணர்ந்த படைத் தலைவன் ஒருவனும்தான் போர்களத்தில் பொறுப் பானவர்களாக முன்னால் நின்றார்கள். சேர நாட்டுப் படை பொதியமலை வழியாகக் கரவந்தபுரத்தில் வந்து பெரும்பெயர் சாத்தனின் படையோடு சேர்ந்து கொண்டிருந்தது.

இரண்டு படைகளும் சந்தித்த இடத்தில் தாமதமின்றிப் போர் தொடங்கிவிட்டது. தளபதி வல்லாளதேவன் களத்தில் தென்படாததனால் அவன் எந்தக் கணத்திலும் வேறொரு திசையிலிருந்து படைகளுடன் வந்து தங்களைத் திடீர்த் தாக்குதலுக்கு ஆளாக்கலாமோ என்று வடதிசை மன்னர்களுக்கு உள்ளுற பயம் இருந்தது. எந்த விதத்தில் எத்திசையிலிருந்து திடீர்த் தாக்குதல் ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கத் தக்கபடி தங்கள் பெரும் படையைப் பிரித்து வகுத்துக் கொண்டு போரைச் செய்தனர் வடதிசை மன்னர்கள்.

அதே நிலையில் அதே இடத்தில் சில நாட்கள் போர் நீடித்தது. முதலில் இரு பக்கத்திலும் வெற்றி தோல்விகள் அதிகமின்றி மந்தமாக இருந்த போர் மூன்றாம் நாள் காலையில் நிலை மாறிவிட்டது. முதல் இரண்டு நாட்களிலும் தாக்குதலை நன்றாகச் சமாளித்த கரவந்தபுரத்துப் படை சற்றே தளர்ந்தது. சேரர் படை உடனிருந்தும் பயனின்றிப் பின்வாங்குகிற நிலைமை ஏற்படும் போலிருந்தது. பெரும்பெயர்சாத்தன் நிலைமையின் நெருக்கடியை உடனே மகாமண்டலேசுவரருக்குச் சொல்லியனுப்பினான். பாவம்! மகாமண்டலேசுவரருக்கு உண்டாகியிருந்த வேறு நெருக்கடிகளைப் பற்றி அவனுக்குத் தெரியாதல்லவா? போர்க்களத்திலிருந்து பெரும்பெயர்சாத்தன் அனுப்பிய அவசரத் துரதன் போய்ச் சேருவதற்கு முன் மகாமண்டலேசுவரரும், மற்றவர்களும் எந்த நிலையில் இருந்தார்கள் என்பதை முன்னாற் சென்று காணலாம்.

மனிதனுக்கு அறிவின் பலம் அதிகமாக ஆக தன் மேலுள்ள நம்பிக்கையும் சுயபலமும் குறைவனபோல் ஒரு பயம் அந்தரங்கமாக உண்டாவது இயற்கை.

கூற்றத் தலைவர்களின் எதிர்ப்பால் தமக்கு எத்தகைய தொல்லைகள் விளையுமென்பதை மிகக் குறுகிய காலத்திலேயே மகாமண்டலேசுவரர் புரிந்துகொள்ள நேர்ந்தது.

‘குமாரபாண்டியனும் திரும் பிவரவில்லை ! கொடும்பாளுரில் வடதிசைப் படைகள் ஒன்று சேர்ந்து விட்டதாகத் தகவல் தெரிகிறது. நம்மிடம் இருக்கிற படைவீரர்களின் தொகை குறைவு. ஆகவே தென்பாண்டி நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் கிடைத்தவரை வீரர்களைச் சேர்த்துக்கொண்டு படையின் தொகையைப் பெருக்குவது உன் கடமை. எனவே என்னுடைய இந்தத் திருமுகத்தைப் படித்தவுடன் நீயே ஊர் ஊராகச் சென்று என் விருப்பத்தைச் சொல்லிப் புதிய படைவீரர்களைச் சேர்க்கவும்” என்று மகாமண்டலேசுவரர் கோட்டாற்றுப் படைத்தளத் தளத்திலிருந்த தளபதிக்கு ஓர் அவசரக் கட்டளை அனுப்பியிருந்தார். அதற்கு முதல் நாள்தான் அம்பலவன் வேளான் இடையாற்றுமங்கலத்திலிருந்து ஆயுதங்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, மகாமண்டலேசுவரரின் திகைப்பான உண்மையடங்கிய ஒலையையும் தந்து போயிருந்தான். அவற்றால் அவர் மீது பயமும் வெறுப்பும் தளபதிக்கு உண்டாகியிருந்தாலும், கட்டளையை நிறைவேற்றப் புறப்பட்டான். தன் அதிகாரத்துக்கு உட்பட்ட சிறு படைத் தலைவர்களில் சிலரையும் உடன் அழைத்துக்கொண்டு முக்கியமான ஊர்களில் சுற்றினான் அவன். .

மூன்று தினங்களுக்குப்பின் தளபதியிடமிருந்து மகா மண்டலேசுவரருக்குக் கீழ்க்கண்ட பதில் ஒலை வந்து சேர்ந்தது.

“தங்கள் கட்டளைப்படியே படைவீரர்களை சேர்ப்பதற்கு ஊர் ஊராகச் சென்று அலைந்தேன். அலைந்ததற்குப் பயனில்லை. தங்கள் பிரதேசமாகிய மருங்கூர்க்கூற்றம் ஒன்றில் தான் சில நூறு ஆட்கள் படையில் சேர்ந்தனர். மற்ற கூற்றங்களிலெல்லாம் படையிற் சேர முன்வரவில்லை.

பா.தே. 41

அங்கங்கே கூற்றத் தலைவர்களைச் சந்தித்துப் படைக்கு வீரர்கள் சேர்க்கும் முயற்சியில் எங்களோடு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டு தங்கள் கட்டளையைக் காண்பித்தேன். அவர்களில் எவரும் ஒத்துழைக்க இணங்கவில்லை. தங்கள் பகுதிகளிலிருந்து யாரும் போருக்கு ஆட்கள் சேர்க்க விருப்பமி ல்லை என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டனர். நான் திரும்பிவிட்டேன். தங்களுடைய அடுத்த கட்டளையை எதிர்பார்த்துக் கோட்டாற்றுப் படைகளோடு காத்திருக்கிறேன்.” இந்தப் பதிலைக் கண்டு அவர் திகைக்கவில்லை. ஏனென்றால் தளபதி யின் மேற்கண்ட பதில் கிடைக்கு முன்பே மகாமண்டலேசுவரர் வேறு ஒரு வகையிலும் படை உதவிக்கு ஏற்பாடு செய்திருந்தார். மகாராணி வானவன்மாதேவி கைப்படவே படை உதவி செய்யுமாறு வேண்டுதல் திருமுகம் ஒன்று எழுதி வாங்கி, அதை மிக அவசரமாகச் சேர நாட்டுக்குக் கொடுத்து அனுப்பினார். .

அவர் எதிர்பார்த்ததைவிடச் சேர மன்னனிடமிருந் மறுமொழி கிடைத்தது. தனக்கு உடல் நலமில்லாமையால் தானே நேரில் போரில் உதவி செய்ய வரமுடியவில்லை யென்றும், தன் படைகளைப் பொதியில்மலை வழியாகக் கரவந்தபுரத்துக் கோட்டைக்கு உடனே அனுப்பி வைப்பதாகவும் சேரமன்னன் தெரிவித்திருந்தான். அதன் படியே சேரர் படைகள் கரவந்தபுரத்துக்குப் புறப்பட்டு விட்டன. -

உடனே மகாமண்டலேசுவரர் கரவந்தபுரத்துக் குறுநில வேள் பெரும் பெயர்ச்சாத்தனுக்குச் சேரர் படை உதவி வருவதைக் குறிப்பிட்டு, எந்தக் கணத்தில் வடக்கேயிருந்து பகைவர் வந்தாலும் எதிர்க்கத் தயாராயிருக்குமாறு அறிவித்து ஒரு தூதனை அனுப்பினார். : -

தென்பாண்டி நாட்டுப் படைகளையும் தளபதி வல்லாளதேவனையும் மட்டும் வடக்கு எல்லையில் எதிர்த்தாக்குதலுக்குப் போகவிடாமல் கோட்டாற்றிலேயே நிறுத்தி வைத்திருந்தார் அவர். அதற்கும் ஒரு காரணமிருந்தது. சேந்தனும் குழல்வாய்மொழியும் குமாரபாண்டியனுடன் விழிளுத்துக்கு வந்து சேரும் கப்பலை அவர் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அதைப் பற்றி

மகாராணியிடமும் கூறி அவருடைய ஆவலை வளர்த்து விட்டிருந்தார். குமாரபாண்டியன் வந்ததும், அவனைக் கலந்துகொண்டு கோட்டாற்றிலுள்ள படைகளையும், தளபதியையும், போர் முனைக்கு அனுப்பலாமென்பது மகாமண்டலேசுவரரின் நினைப்பாயிருந்தது. எந்த விநாடியில் குமாரபாண்டியன் கப்பல் தம் பெண்ணுடனும் சேந்தனுடனும் வந்து இறங்கினாலும் உடனே ஓடிவந்து அதைத் தமக்குத் தெரிவிப்பதற்காக விழிஞத்துக்கு ஆள் அனுப்பியிருந்தார் அவர். தளபதிக்குத் தெரியாமல் அவருடைய ஆள் விழிஞத்தில் காத்திருக்க ஏற்பாடு செய்திருந்தார் அவர். அவருக்குத் தெரியாமலே தன்னுடைய சார்பில் ஆபத்துதவிகள் தலைவனை விழிஞத்தில் காத்திருக்க ஏற்பாடு செய்திருந்தான் தளபதி. குமாரபாண்டியன் தம் மகளுடனும், சேந்தனுடனும் வந்து சேரவேண்டுமென்று அவர் எதிர்பார்த்தார்; குமாரபாண்டியன் தன் தங்கை பகவதியோடு விழிஞத்தில் வந்து இறங்க வேண்டுமென்று வல்லாளதேவன் எதிர்பார்த்தான். அவர்கள் இருவருக்கும் அப்பால், ஒவ்வொரு கணமும் ஆசையும் பாசமும் துடிக்கத் தாய்மைப் பேராவலுடன் மகாராணியும் அந்த வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் வெள்ளுருக்கு அருகில் இரண்டு படைகளும் கைகலந்த செய்தி தெரிந்தது. நிலைமை அவ்வளவுக்கு முற்றிய பின்பும் கோட்டாற்றிலுள்ள சேனைகளையும், தளபதியையும் போர் முனைக்கு அனுப்பாமல் வைத்துக் கொண்டிருப்பது நியாயமா என்று எண்ணித் தயங்கினார் மகாமண்டலேசுவரர். போர் தொடங்கிச் சில நாட்கள் கழிந்தபின்பும் குமாரபாண்டியன் வரவு பற்றி ஒன்றும் தெரியவில்லை. என்ன செய்வதென்று அவர் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, போர் முனையிலிருந்து பெரும் பெயர்சாத்தன் அனுப்பிய துரதன் அவசரமாக வந்து அபாய நிலையைத் தெரிவித்தான். அவன் தெரிவித்ததிலிருந்து வடதிசைப் படையை எதிர்க்கக் கரவந்தபுரத்து வீரர்களும், சேரநாட்டுப் படைகளும் காணவில்லை என்று தெரிந்தது. மகாமண்டலேசுவரரே நேரில் புறப்பட்டுக் கோட்டாற்றுப் படைத்தளத்துக்குப் போனார். அவசரமாகத் தளபதியைச் சந்தித்தார். போர் முனை நிலையைக் கூறினார். “தளபதி படைகளை மட்டும் இப்போதே அவசரமாகக் கரவந்தபுரத்துக்கு அனுப்பு. நீ சிறிது பின்தங்கிப் போகலாம். எனக்கு உன்னிடம் கொஞ்சம் பேசவேண்டும்” என்றார் மகாமண்டலேசுவரர். அவர் சொற்படியே தான் போகாமல், படைகளை மட்டும் அனுப்பிவிட்டு அவரைத் தனியே சந்தித்தான் தளபதி. மகாமண்டலேசுவரர் கண்கள் சிவக்க ஆத்திரத்தோடு அவனைப் பார்த்தார்.

“குமாரபாண்டியர் வந்து உன்னை விசாரித்துத் தீர்ப்புக் கூறுகிற வரையில் போருக்குத் தளபதியாக நீ தலைமை தாங்கி நிற்க விடமாட்டேன் நான். நீ குற்றவாளி. என் ஆணையை மீறி எனக்குத் தெரிந்தும் தெரியாமலும் பல சதிக் குற்றங்களை நீ செய்திருக்கிறாய்;” என்று திடீரென்று எரிமலை வெடித்தது போல் கடுங்குரலில் இரைந்தார் அவர் அறிவின் அடக்கத்தை மீறி அவர் ஆத்திரமாகப் பேசுவதை வல்லாளதேவன் அப்போதுதான் முதன்முறையாகக் கண்டான். அவனுடைய கண்களும் சினக்குறிப்புக் காட்டின. அவன் முகத்தில் கோபம் படர்ந்தது.