பாண்டிமாதேவி/மூன்றாம் பாகம்/வெள்ளூர்ப் போர்க்களம்
18. வெள்ளூர்ப் போர்க்களம்
வெள்ளுர்ப் போர்க்களத்தில் இருந்த பாண்டியப் பெரும்படையும், அதற்கு உதவியாக வந்திருந்த சேர நாட்டுப் படையும், குமாரபாண்டியனுடைய எதிர்பாராத திடீர் வருகையைக் கண்டு பெருமகிழ்ச்சி எய்தின. இளவரசனின் வரவு
அவர்களுக்குப் புதிய நம்பிக்கையையும் துணிவையும் அளித்தது. அதே சமயத்தில் தளபதி வல்லாளதேவன் ஏன் இன்னும் வரவில்லை என்ற ஐயப்பாடும் எல்லோருடைய மனங்களிலும் உண்டாயிற்று. சாதாரண வீரர்கள் மனத்துக் குள்ளேயே அந்தச் சந்தேகத்தை அடக்கிக்கொண்டு விட்டார்கள். பெரும்பெயர்ச்சாத்தனும், அவனுக்கு அடுத்த நிலையிலிருந்த சிறு படையணித் தலைவர்களும், தளபதி ஏன் போர்க்களத்துக்கு வரவில்லை? என்ற கேள்வியைக் குமாரபாண்டியனிடமே கேட்டு விடுவதற்குச் சமயத்தை எதிர்பார்த்துத் துடித்துக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் காலை விழிஞத்திலிருந்து புறப்பட்டிருந்த குமார பாண்டியனும் அவனுடன் வந்த வீரர்களும் மறுநாள் அதிகாலையில் வெள்ளுரை அடைந்துவிட்டார்கள். -
அவர்கள் அங்கே சென்ற நேரம் பொருத்தமானது. அன்றைய நாட்போர் தொடங்குவதற்குச் சில நாழிகைகள் இருந்தன. இரு தரப்புப் படைகளும் களத்தில் இறங்கவில்லை. அவரவர்களுடைய பாசறையில் தங்கியிருந்தனர். அதனால் மகிழ்ச்சியோடு ஒன்று கூடி ஆரவாரம் செய்து குமாரபாண்டியனை வரவேற்பதற்கு வசதியாக இருந்தது. பாண்டியப் படைகளுக்கு நீண்ட தொலைவு பரந்திருந்த படைகளின் கூடாரங்களில் தனித் தனியே தங்கியிருந்த வேறு வேறு பிரிவைச் சேர்ந்த வீரர்களெல்லாரும் ஆவலோடு ஓடி வந்தனர். சிரித்த முகமும் இனிய பேச்சுமாகக் குதிரையிலிருந்து கீழே இறங்கி வந்த குமாரபாண்டியனைப் பார்த்த போது சில நாட்களாகத் தொடர்ந்து போர் செய்து களைத்திருந்த வருத்தமெல்லாம் போய்விட்டதுபோல் இருந்தது அவர்களுக்கு. குமாரபாண்டியனை வரவேற்கு முகமாக வாள்களையும், வேல்களையும் வலக் கரங்களால் உயர்த்திப் பிடித்து வாழ்த்தொலிகளை முழக்கினார்கள். முகத்தில் மலர்ச்சி நிறையத் தன் வீரர்களை நோக்கி ஆரவாரத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு கையமர்த்தினான் இராசசிம்மன். பெரும்பெயர்ச்சாத்தனும், படையணித் தலைவர்களும் அவன் தங்குவதற்கு அமைந்திருந்த பாசறைப்பாடி வீட்டுக்கு அவனை அழைத்துச் சென்றனர். “இளவரசே! தளபதி இதுவரை ஏன்
பன. தே. 44
போர்க்களத்துக்கு வரவே இல்லை? என்ன காரணமென்று தெரியாமல் மனம் கலங்கிக் கொண்டிருக்கிறோம் நாங்கள்!” என்று எல்லோருடைய சார்பாகவும் கரவந்தபுரத்துப் பெரும்பெயர்ச்சாத்தன் அந்தக் கேள்வியைக் கேட்டபோது, அதுவரை குமார பாண்டியனுடைய முகத்தில் நிலவிக் கொண்டிருந்த மலர்ச்சி மங்கி மறைந்தது. அந்தக் கேள்விக்கு என்ன மறுமொழி கூறுவதென்று தயங்கிக் கொண்டே பெரும்பெயர்ச்சாத்தன் முதலியவர்களுடைய முகங்களை ஏறிட்டுப் பார்த்தான் அவன். மகாமண்டலேசுவரர் விழிஞத்துக் கடற்பாறைக் கருகில் தன்னிடம் தனிமையில் பெற்றுக் கொண்ட வாக்குறுதிகள் அவன் மனத்தில் தோன்றிப் பயமுறுத்தின. “கரவந்தபுரத்துக் குறுநில மன்னரே! நீங்கள் கேட்ட கேள்விக்கு ஒரு வகையில் குறிப்பான பதிலை மட்டும்தான் இப்போது என்னால் கூற முடியும். அதற்கு மேல் என்னிடம் விளக்கம் கேட்காதீர்கள். தளபதி வல்லாளதேவன் எதிர்பாராத சில காரணங்களால் இந்தப் போரில் கலந்து கொள்ள முடியாமற் போய்விட்டது. அதற்காகக் கவலைப்படாமல் நன்றாகப் போர் செய்து வெற்றியோடு திரும்பவேண்டியது நம் கடமையாகும்” என்று பொதுவாகப் பதில் சொல்லித் தன்னை அவர்களுடைய சந்தேகச் சூறாவளியிலிருந்து மீட்டுக் கொண்டான் குமார பாண்டியன். .
அவன் கூறிய மறுமொழியைக் கேட்டபின் அதற்குமேல் அதைப் பற்றி அவனிடம் விசாரித்துத் தெரிந்துகொள்ள முடியாது என்று மெளனமானான் பெரும்பெயர்ச்சாத்தன். தளபதி வரவில்லை. இனி வரவும் மாட்டார் என்ற செய்தி மெல்ல மெல்ல எல்லாப் படை வீரர்களுக்கும் தெரிந்து விட்டாலும் குமாரபாண்டியனுடைய வரவு அக்குறையை ஓரளவு நீக்கியது. பின்பு அவர்களுடைய பேச்சு போர்க்களத்து நிலைகளைப் பற்றிச் சுற்றி வளர்ந்தது. அன்று வரையில் நடந்திருக்கும் போரில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வு விவரங்களைக் குமாரபாண்டியனுக்கு விவரித்துச் சொன்னார்கள் பெரும்பெயர்ச்சாத்தன் முதலியவர்கள். அதிகக் காயங்களை அடைந்து வோர் செய்யும் ஆற்றல் குன்றி பாசறையில் படுத்த படுக்கையாக இருந்த சேரநாட்டுப் படைத் தலைவனைப் போய்ப்
பார்த்து ஆறுதல் கூறினான் குமாரபாண்டியன். தன் தரப்புப் படைகளின் அணித் தலைவர்கள் எல்லோரையும் கலந்து சிந்தித்தபின் எதிர்த் தரப்புப் படைகளின் வலுவை முறியடிப்பதற்கு ஏற்றவிதத்தில் இரண்டு விதமாகப் படை வியூகத்தைப் பிரித்தான். கரவந்தபுரத்து வீரர்களும் சேர நாட்டு வீரர்களும் அடங்கிய கூட்டத்துக்குப் பெரும்பெயர்ச்சாத்தன் தலைவனானான். தென்பாண்டிப் படை வீரர்கள் அடங்கிய ஐந்நூறு பத்திச் சேனைக்கும் குமாரபாண்டியன் தானே தலைமை தாங்குவதென்று ஏற்பாடு செய்துகொண்டான். சக்கசேனாபதியும் ஈழ நாட்டுப் படைகளும் வந்தால், அப்படியே மூன்றாவது படைவியூகமாக அமைத்துக் கொள்ளலாம் என்பது அவன் தீர்மானமாயிருந்தது. எதிர்த் தரப்புப் படைகளோ ஐந்து வியூகங்களாக ஐம்பெரும் தலைமையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று குமாரபாண்டியன் பெரும்பெயர்ச்சாத்தனிடம் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தான். ஐந்து வியூகப் படைக்கும் மூன்று வியூகப் படைக்கும் ஏற்றத்தாழ்வு அதிகம்தான். ஆனாலும் போர்த் திறனும், சூழ்ச்சி வன்மையும் இருந்தால் மூன்று வியூகப் படை வீரர்களால் ஐந்து வியூகப் படை வீரர்களை ஏன் வெல்லமுடியாது? முடியும் என்றே நம்பினான் குமாரபாண்டியன்.
பயணம் வந்த அலுப்பையும் பொருட்படுத்தாமல் அன்றைக்குப் போரிலேயே தானும் களத்தில் தோன்றுவதென்று உறுதி செய்து கொண்டான் அவன். பாசறையிலேயே நாட்கடன்களை முடித்துக் கொண்டு போர்க்கோலம் பூண்டான். மார்பில் கவசங்களை அணிந்தபோது பழைய போர்களின் நினைவுகளும், வெற்றி அநுபவங்களும் மனக்கண் முன் தோன்றின.
குமரித் தெய்வத்தையும், தன் அன்னையையும் நினைத்து கண் இமைகளை மூடித் தியானத்தோடு கைகூப்பி வணங்கினான். பட்டு உறை போர்த்த வட்டத் தட்டில் வைத்துப் பெரும்பெயர்ச்சாத்தன் மரியாதையோடும் பணிவோடும் அளித்த வாளையும் கேடயத்தையும் எடுத்துக் கொண்டபோதே குமாரபாண்டியனின் கரங்கள் போர்த் துடிப்பை அடைந்து
விட்டன. அவன் உடலிலும் உள்ளத்திலும் வீராவேச உணர்ச்சி பொங்கி நின்றது. பாசறைக்கு வெளியே நின்ற ஆயிரக்கணக்கான வீரர்கள் குமாரபாண்டினைப் போர்க் கோலத்தில் காண்பதற்குக் காத்திருந்தார்கள்.
மிக உயரமான பட்டத்து யானையின் பிடரியில் அம்பாரி வைத்துப் பாசறை வாயிலில் கொணர்ந்து நிறுத்தியிருந்தான் பாகன். அரசவேழமாகிய அந்தப் பிரம்மாண்டமான யானையின் பொன் முகபடாம் வெயிலொளியில் மின்னிற்று. அதற்கப்பால் நூல் பிடித்து வரிசை நிறுத்தினாற்போல் குதிரைப் படைகளும், யானைப் படைகளும் அணிவகுத்து நின்றன. காலாட் படை வீரர்கள் பிடித்த வேல்களின் நுனிகள் கூரிய நேர்க்கோடுபோல் வரிசை பிழையாமல் தெரிந்தன. அதற்கும் அப்பால் தேர்ப் படைகள் நின்றன. குமாரபாண்டியன் போர்க்கோலத்தோடு பாசறை வாசலில் வந்து நின்றபோது உற்சாக ஆரவாரம் திசை முகடுகளைத் துளைத்தது.
உடனிருந்த பெரும்பெயர்ச்சாத்தன் பட்டத்து யானையில் ஏறிக்கொள்ளுமாறு வேண்டினான். “எனக்கு ஒரு நல்ல குதிரை இருந்தால் போதுமே போர்க்களத்தில் இந்த ஆடம்பரங்களெல்லாம் எதற்கு?” என்றான் குமார பாண்டியன். “இளவரசே! நாளைக்கு உங்கள் விருப்பம்போல் குதிரையோ, தேரோ எடுத்துக் கொள்ளலாம். இன்று நீங்கள் யானையில்தான் களத்துக்கு எழுந்தருளவேண்டும். தென் பாண்டிப் படைகளுக்குப் பொறுப்பான தலைமையில்லை என்றெண்ணி இறுமாந்து கிடக்கும் நம் பகைவர்களெல்லாம் நீங்கள் வந்துவிட்டதைக் கண்டு அதிர்ச்சி அடையவேண்டும். குதிரையோ, தேரோ வைத்துக் கொண்டால் உங்களை யான்ையின் மேற் பார்க்கிற மாதிரி அவ்வளவு நன்றாக அவர்களால் பார்க்க முடியாது. மேலும் உயரமான இடத்திலிருந்து தாங்கள் காட்சியளித்துக் கொண்டே யிருந்தால்தான் நம் வீரர்கள் பார்த்து உற்சாகம் அடையமுடியும்” என்று பெரும்பெயர்ச்சாத்தன் வேண்டிக் கொண்டான். குமாரபாண்டியனால் மறுக்க முடியவில்லை. யானைமேல் ஏறி அம்பாரியில் அமர்ந்து கொண்டான். மற்றப் படை முதன்மையாளர்கள் குதிரைகளில் ஆரோகணித்துச்
சூழ்ந்தனர். போர் தொடங்குவதற்கு அறிகுறியான கருவிகள் முழங்கின. யானைமேல் அமர்ந்து களம் நோக்கிச் சென்றபோது குமாரபாண்டியனுடைய முகத்தில் வீரம் விரவிய ஒருவகை அழகின் கம்பீரம் தவழ்ந்தது. தென்பாண்டி வீரர்களின் ஊக்கம் அந்த முகத்தை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் நான்கு மடங்காகப் பெருகியது.
எதிர்ப்பக்கத்தில் வடதிசைப் பெரும் படையும் பெரு முழக்கங்களோடு களத்தை நோக்கிப் பாய்ந்து வந்து கொண்டிருந்தது. ஒன்றோடொன்று குமுறிக் கலக்க வரும் இரண்டு கடல் விளிம்புகளெனப் பயங்கரமாகத் தோன்றியது. படைகளின் சங்கமம், வீரர்களின் குரல்கள், வாத்திய முழக்கங்கள், ஒடும் ஓசை, கரி பரிகளின் ஒலம், தத்தம் தரப்பின் வாழ்த்து ஒலி-எல்லாமாகச் சேர்ந்து களம் பிரளய ஓசையின் நிலையை அடைந்தது. படைக் கடல்கள் ஒன்று கலந்தன. போர் தொடங்கிவிட்டது. வழக்கம்போல் அலட்சியமாகப் பாசறைகளிலிருந்து திரும்பிப் போர்க்களத்துக்கு வந்த வடதிசை மன்னர்கள் ஐவரும் எதிர்ப்பக்கத்தில் யானைமேல் ஆரோகணம் செய்துவரும் குமாரபாண்டியன் இராசசிம்மனைக் கண்டு தி ைகத்தனர். மருண்ட கண்களால் சோழன் கொடும்பாளுரானைப் பார்க்க அவன் கண்டன் அமுதனைப் பார்த்தான். கண்டன் அமுதன் அரசூருடையானைப் பார்க்க, அவன் பரதுருடையானைப் பார்த்தான். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட அந்தப் பார்வை, “இனி நாம் அலட்சியமாக இருப்பதற்கில்லை” என்று தங்களுக்குள் குறிப்பாலேயே பேசிக்கொள்வது போலிருந்தது. ஒரு கணம்தான் வியப்பு, திகைப்பு, எல்லாம். போர்க்களத்தின் பிரளயத்துக்கு நடுவே ஆச்சரியப்பட்டுக்கொண்டு நிற்க நேரம் ஏது? போரைக் கவனித்து அதில் ஈடுபட்டார்கள் அவர்கள். புதிய துணிவும், ஊக்கமும் பெற்ற காரணத்தால் அன்றைக்குப் போரில் தென் பாண்டிப் படைகளின் கைகள்தான் ஓங்கியிருந்தன. மறு நாளும் அதே நிலை. குமாரபாண்டியன் வந்த மூன்றாவது நாள் காலைப் போர் தொடங்குகிற சமயத்தில் சக்கசேனாபதியும் ஈழ நாட்டுப் படைகளும் வந்து சேர்ந்து கொண்டார்கள். வடதிசைப் படைத்
தலைவர்களுக்கு அது இரண்டாவது அதிர்ச்சியாக அமைந்தது. கொதிப்போடு போர் செய்தனர் அவர்கள்.
தீவினை வயத்தால் அன்றைக்குப் போர் முடிந்து பாசறைக்குத் திரும்பும்போது குமாரபாண்டியனும், சக்கசேனாபதியும், அவர்களுடைய வீரர்களும் சோர்வும் துயரமுமாகத் திரும்பினர். காரணம். அன்று நடந்த போரில் கரவந்தபுரத்து அரசனும், மாவீரனுமாகிய பெரும் பெயர்ச்சாத்தன் மாண்டுபோனான். எதிர்த் தரப்புப் படையிலிருந்த கீழைப்பழுவூர்க் கண்டன் அமுதன் குறி வைத்து எறிந்த வேல் பெரும் பெயர்ச்சாத்தனின் உயிரைக் குடித்துவிட்டது. அன்று காலையில் சக்கசேனாபதி படைகளோடு வந்து சேர்ந்து கொண்டிருக்காவிட்டால், பெரும்பெயர்ச்சாத்தன் மரணத்துக்குப் பின் தன்னம்பிக்கையையே இழந்திருப்பான் குமாரபாண்டியன். அடுத்தடுத்து இரண்டு அதிர்ச்சிகள் தென் பாண்டிப் படைகளைத் தளர வைத்தன. பெரும்பெயர்ச்சாத்தன் களத்தில் போரிட்டு இறந்துபோன அதே தினம் இரவு, படுகாயங்களை அடைந்து பாசறையில் படுத்த படுக்கையாக இருந்த சேர நாட்டுப் படைத்தலைவனும் உயிர் விட்டுவிட்டான். இந்த இரு அதிர்ச்சிகளிலிருந்தும் மீட்டுப் படைகளைத் தைரியப்படுத்துவதற்காக அன்று இரவு முழுவதும் குமாரபாண்டியனும், சக்கசேனாபதியும் உறக்க மின்றி அலைந்து உழைத்தனர். வாட்டமடைந்திருந்த கரவந்தபுரத்து வீரர்களையும், சேர வீரர்களையும் ஊக்க மூட்டுவதற்குப் பெரும்பாடுபட்டனர். சோர்வும், சோகமும் கொண்டிருந்த படைவீரர்களுடைய பாசறைக்குத் தானே நடந்து போய்த் தைரியம் கூறினான் இராசசிம்மன். இவ்வளவும் செய்த பின்பே கலக்கமில்லாமல் மறுநாள் விடிந்ததும் களத்திற் புகுந்து போர் செய்ய முடிந்தது அவர்களால், பெரும்பெயர்ச்சாத்தன் இறந்து போனதால் பழையபடி படைகள் இரண்டே வியூகங்களாகக் குறுக்கப்பட்டன. அப்போது சக்கசேனாபதியே அவனைக் கலங்க வைக்கும் அந்தக் கேள்வியைக் கேட்டுவிட்டார். “தலைமையேற்கப் படைத் தலைவர்கள் இல்லையென்று ஏன் படை வியூகங்களைக் குறுக்குகிறீர்கள்? தளபதி வல்லாள தேவனை வரவழைத்து நெருக்கடியைத் தவிர்க்கலாமே?” என்று சக்கசேனாபதி கேட்டபோது, அவருக்கு மறுமொழி கூறும் வகையறியாது தயங்கினான் அவன்.
“சக்கசேனாபதி! அதைப் பற்றி இப்போது உங்களிடம் பேசும் சக்தியற்றவனாக இருக்கிறேன் நான். ஆனால் நீங்களும் தெரிந்து கொள்ளவேண்டிய சமயம் வரும்போது அந்தச் செய்தியை உங்களிடம் சொல்வேன். இப்போது என்னை விட்டுவிடுங்கள்” என்று பதில் கூறியபோது அவரிடம் ஏதோ ஒரு துயரமான வேண்டுகோளைக் கேட்பது போன்றிருந்தது அவன் குரல்.
சக்கசேனாபதிக்கும் அவனுக்கும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேச்சு நடந்த அன்று இரவு நடுயாமத்தில் எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் பாண்டிப் படைகளின் பாசறைகள் இருந்த பகுதியில் திடீரென்று ஒரு பெருங் குழப்பம் உண்டாயிற்று. கூக்குரல்களும், கூட்டமுமாகச் சிலர் திடுதிடுவென ஓடுகிற ஒலியும், தீப்பந்த வெளிச்சமுமாகக் கலவரம் எழுந்தது. சக்கசேனாபதியும் குமாரபாண்டியனும் எழுந்து அது என்னவென்று பார்ப்பதற்காகச் சென்றனர்.