பாற்கடல்/அத்தியாயம்-2

விக்கிமூலம் இலிருந்து


2

ரு சமயம்.

அயோத்யா மண்டபம்.

ஸ்ரீராமநவமி உத்ஸவம்.

மதுரை சோமு.

களை கட்டியாச்சு. உருப்படிகளின் போக்கில் சபையோரையும் பக்க வாத்யங்களையும் தன்னுடைய ப்ரத்யேக பாணியில் ஏதோ ஒரு பாட்டுக்கு ஆவலைத் தூண்டிவிட்டு (என்னுடைய சொந்த ஆசை, மதுரையை அரசாளும் மீனாகூழி மாநகர் காஞ்சியில் காமாக்ஷி" வராதா? கானடாவில் கம்பீரமாய்த் தேர் அசையும்) சடக்கென்று, “லொகஸ"சகா ம்ருதங்க தாளமு’ என்று எடுத்தாரே பார்க்கலாம்! தொடையைத் தட்டிக் கொண்டே எல்லாரும் கேட்க, கரகரத்த குரலில்,

“நல்ல பாட்டு, தானாகவே வாயிலிருந்து குதிச்சிடிச்சி” அன்று அந்தப் பாட்டு சக்கைப் போடு.

அதுபோல, இத்தோடு இதுவும் சேர்ந்ததே. ஆனாலும் இப்போ ஒரு இடைமறிப்பு. 'அமுதசுரபி'யின் முப்பத்து நான்காவது ஆண்டு பிறந்த விழாவில் கலந்துகொள்வோம். என் பல்லவி: “பெரியோரைப் புகழ்வோம்.”

அப்போதுதான் நாலுபேர் கண்ணோட்டத்தில் என் எழுத்து பட்டுக்கொண்டிருந்த சமயம். கண்ணைத் தடுத்து, கவனத்தையும் நிறுத்திய சமயங்களும் நேர்ந்து கொண்டிருந்த சமயம், அப்போ குடும்பம் திருவல்லிக்கேணியில் ஜாகை, ஒருநாள் ஓர் அழகிய வாலிபர் வீட்டுக்கு வந்து, “என் பெயர் லக்ஷமணன். நேஷனல் கேர்ல்ஸ் ஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராக வேலை பார்க்கிறேன். ராஜன் எலக்ட்ரிக் பிரஸ் முதலாளியின் ஆதரவிலும் உற்சாகத்திலும் ஒரு மாதப் பத்திரிகை தொடங்கவிருக்கிறோம். முதலிதழுக்கு உங்கள் கதை தேவை. சந்திரோதயத்தில் உங்கள் 'அபூர்வ ராகம்’ படித்தேன். ஆஹா!" —

பிறகு கண்டேன். வித்வான் வே. லக்ஷமணனுக்குத் தோற்றம் மட்டும் கவர்ச்சி அல்ல, அதனினும் வசீகரம் அவர் பேச்சு, குரல் வெல்வெட். ‘அடாடா’க்களும் 'ஆஹா'காரங்களும் அவர் சம்பாஷணையில் அள்ளித் தெளித்திருக்கும். அவரைவிடப் பல வருடங்கள் நான் மூத்தவன் என்றாலும் கைதட்டலுக்குக் காத்திருக்கும் நாட்கள்.

அப்போ என் எழுத்துக்கு ஒரு இக்கட்டான கட்டம், என்னைத் திட்டிக்கொண்டே என்னைப் படிக்கும் ஒரு வட்டம் உருவாகிக்கொண்டிருந்தது.

“என்னய்யா இந்த மனுசன், என்னத்தை எழுதறான்? என்னத்தைச் சொல்ல வரான் ? புரிய மாட்டேன்குது. புரியல்லியா விட்டுத் தொலைன்னு தூக்கி எறியவும் முடியல்லே. படிச்சு முடிச்சபின் வயித்தை என்னவோ சங்கடம் பண்ணுது. படிச்ச நினைப்பில் நாலுதரம் புரண்டாச்சு, ஆனால் தூக்கம் வரல்லே.”

இதுபோன்ற வசைமாரிக்கு ஆளாகிக் கொண்டிருந்தேன்.

"பிறருடைய போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் என் எழுத்து அப்பாற்பட்டது” என்று எழுத்தாளன் சொல்லிக் கொள்ளலாம். அது ஒரு கட்டத்துக்குப்பின் உண்மையாகவுமிருக்கலாம். ஆனால் எழுத்தாளனும் மனுஷன்தான். "என் எழுத்து அத்தனையும் மாணிக்கம்; வாசகர்கள் அதற்கு லாயக்கற்றவர்கள்” என்று சாதிக்காமல், தர்க்கம் முற்றினால் கோதாவில் இறங்காமல், தன் எழுத்தில் தன்னம்பிக்கையை மௌனத்தில் நிலைநாட்டினால் பெரிசு. ஆனால் பாராட்டை வேண்டாம் என்கிற மறுப்பை யாரும் நம்ப வேண்டாம். எங்களுக்கும் முதுகு தட்டல் பிடிக்கும், வேணும்.

வேகமாக எழுத வராதவன் நான். அப்பொவேனும் உத்தியோகத்தின் மேல் பழி. இப்போ எனக்குப் பொழுது கூட இருக்கிறது. அப்போவிடக் கூட எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் சப்ளை சக்திக்கு எனக்கு எப்பவும் போதாது. சிலருக்குப் பாடச் சொன்னால் பாட வராது. வெந்நீர் அறை வித்வத்தை வைத்துக்கொண்டு என்னால் பத்திரிகையின் அவசரத்துக்கு ஈடு கொடுக்க முடியுமா?

ஆனால் லக்ஷமணன் சார் அப்போது என்னைச் சந்தித்து, கதையின் கட்டத்தை நாஸுக்காக விசாரித்துக் கொண்டு, என்னை உற்சாகப்படுத்தி ('ஆஹா ! அடாடா!) நான் கேலி பண்ணவில்லை. அத்தனையும் எனக்கு வேண்டித்தானிருந்தது) ‘அமுதசுரபி’யின் முதலிதழுக்குக் கதையையும் வாங்கிக்கொண்டு போய்விட்டார் என்றால், அது அவருடைய சாமர்த்தியத்துக்குச் சான்று.

கதையும் தன்னை எழுதிக்கொண்டது.

’பூர்வா’ வெளிவந்தது எனக்கு ஒரு முகூர்த்த வேளை. என் வாசக வட்டம் விரிவடைந்தது. "பூர்வா ஒரு புதுவிதமான கவிதா சிருஷ்டி" - ’ஃப்ரீஇண்டியா’ ஒரு சக பத்திரிகை, அதுவும் ஆங்கிலப் பத்திரிகையில் என் எழுத்து பற்றிய முதல் விமர்சனம், பாராட்டாகவும் அமைந்ததென்றால், அதைப் படித்துவிட்டு நாலுபேர் என்னைப் படித்து விசாரிக்கவும் வருவதென்றால் (ஏதேது, நம்ம ராமாமிருதமா?) என்னைக் கட்டிப்பிடிக்க முடியுமா ?

பூர்வாவின் கதை - இல்லை, நான் சொல்லப் போவதில்லை. பூர்வாவுக்குப் பின் இரண்டு தலைமுறைகளாயினும் தோன்றிவிட்டன. இன்றைய வாசகர்களுக்குத் தெரியப்படுத்துவது பத்திரிகையின் கடமை என்று ஆசிரியருக்குத் தோன்றினால், அவருக்கு அக்கறையிருந்தால் அவர் மறுபடியும் பதிப்பிக்கட்டுமே! மறுபதிப்புக்கு இப்போதைய எழுத்து நிலவரத்துக்கும் விஷயத்துக்கும் பாணிக்கும் புதுத் தகவலாகவே தோன்றக்கூடிய என் கதைகள் பல, ’அமுதசுரபி’யில் வெளிவந்திருக்கின்றன. இதுவும் அவருக்குத் தெரிந்த விஷயம்தான்.

இன்னமும் ’பூர்வா’ இலக்கிய வட்டாரங்களில் பேசப்படுவதே, கதையின் உரத்துக்குச் சானறு. ’ஜனவி, யோகம், புற்று, பூர்வா’ என்று வாசகர்களின் அன்பான அடுக்கு வரிசையில் சேர்ந்துவிட்டது என்று மட்டும் சொல்லிக்கொண்டு பூர்வா விஷயத்தை முடித்துக் கொள்கிறேன்.

என் கய புராணத்தைப் பற்றிக் கூடிய வரை உஷாராய்த்தானிருக்கிறேன். ஆனால் இந்தக் கட்டங்கள் இந்த வரலாற்றில் தவிர்க்க முடியாதவை. எழுத்தில் ஈடுபாடே ஒரு சுயபுராணம். சுயஹிம்சை புராணம்.

’அமுதசுரபி’யை மிதக்கவிட்டு, வித்வான் வே. லக்ஷ்மணன் போய்விட்டார். ஆனால் அதன் ஆதவன், அடுத்துவந்து அப்போதிலிருந்து ஆசிரியராகத் திகழும் ஸ்ரீ வேம்பு என்று அடித்துச் சொல்கிறேன். ’குருவும் தாரமும் தலைவிதி’ என்று பழமொழி. பத்திரிகைக்கும் அவருக்கும் தொந்தத்திற்கும், இந்தப் பழமொழிக்கும் என்னைப் பொறுத்தவரை துளிக்கூட வித்தியாசமில்லை. இந்த முப்பத்துமூன்று வருடங்களில், பத்திரிகைக்காக, அவர் கடந்திருக்கும் மேடு பள்ளங்கள், மைல் கற்கள், தாங்கியிருக்கும் சிலுவைக்கு நான் சாக்ஷி. நானும் அவரைப் படுத்தியிருக்கிறேன். ’அமுதசுரபி’ உடன், ஆசிரியராக வேம்பு பிணைந்திருக்கும் கதை அதுவே ஒரு குட்டி அரிச்சந்திர புராணம், ஒரு பாற்கடல்தான். வேம்புவும் ஒரு விடமுண்ட கண்டன்தான்.

கஷ்டங்கள் தீர்ந்தன.

கதாநாயகன் கதாநாயகியை மணந்துகொண்டு பிறகு எல்லோரும் சௌக்யமாக வாழ்ந்தனர், கதை முடிந்தது. கத்திரிக்காய் காய்த்தது, கற்கண்டு இனித்தது,

என்பதெல்லாம் குழந்தையைத் தூங்கப்பண்ணச் சரியாயிருக்கலாம். ஆனால் முடிந்த கதையே கிடையாது. நடுவில் நின்றுபோன கதை உண்டு. ஆனால் முடிந்த கதை கிடையாது. அப்படியென்று ஒன்று இருந்தால் உலகம் எப்பவோ முடிந்துபோயிருக்க வேண்டும். உலகம் அழிந்து போயிற்று என்று சொல்ல ஒருவன் மட்டும் மிஞ்சியிருந்தால் கூட, உலகம் தொடர்கதைதான்.

பேனா என் வயிற்றுப்பிழைப்பு அன்று. நான் அர்ப்பணித்துக்கொண்ட எழுத்தாளன் அல்லன். ஆனால் வேம்பு அர்ப்பணித்துக்கொண்ட பத்திரிகை ஆசிரியர். அதுவும் ஒரே பத்திரிகைக்கு அதிலும் ’அமுத சுரபி’க்கு என்பதை யாரும் நிரூபிக்கத் தேவையில்லை, வேம்பு உள்பட, அர்ப்பணித்துக்கொள்வதென்றால் என்ன என்று அவரைக் கண்டு அறிந்துகொள்ளலாம். இனிமேலும் என்னை நான் அர்ப்பணித்துக் கொள்ள மாட்டேன்.

வேம்புக்கு ’அமுதசுரபி’ இன்னும் குழந்தைதான், தனக்குப் பிறந்த குழந்தையைக் காட்டிலும் வளர்ப்புக் குழந்தைதான் அதிக பாசத்தை, கஷ்டத்தை வாங்கிக் கொள்கிறது. ஆனால் ’அமுதசுரபி’ நமக்கு, தன் முப்பத்து நாலாவது வயதில் தன் முழுமையை அடைந்து குடியும் குடித்தனமுமாய், கணவன் உள்பட எல்லாரையும் அட்டம் செலுத்தும் முழுமாதாகத்தான் காக்ஷி அளிக்க முடியும்.

என் குரல் இனி உர்த்தண்டமாய்த்தானிருக்கும். இன்னும் நான் புக்ககத்துக்கு வந்த புதுநாட்டுப்பெண் அல்ல. அந்த அடக்கமும் அமரிக்கையும் யாரும் என்னிடமும் இனி எதிர்பார்க்க முடியாது. பிறந்தகத்துக்கும் போகமாட்டேன்.

விசேஷங்களில் குத்துவிளக்கு ஏற்ற, வெற்றிலை பாக்கு முதல் நமஸ்காரம் வாங்கிக்கொள்ள, சுமங்கலிப் பிரார்த்தனை, சுபாஷிணி பூஜை இத்யாதிகளுக்கு எனக்குத் தகுதி வந்தாச்சு.

வேம்புவுக்கு நான் ஐஸ் வைப்பதாக நினைக்க வேண்டாம். நான் ஆயிரம் எதிர்பார்த்தாலும் அவர் நடத்துவதைத்தான் நடத்துவார் என்பது எனக்கு அனுபவ பூர்வம். பத்திரிகை உலகத்தின் தருமமே அப்படித்தான் போலும்!

எப்பவும் இன்முகத்துக்கும், எப்பவும் இனிய சொல்லுக்கும், குரலின் மெத்துக்கும் லக்ஷமணன், வேம்பு - இருவரில் யார் யாரை மிஞ்சியவர் என்பது எனக்கு இன்னும் திகைப்புத்தான். ’இன்றுபோய் நாளைவா’ - அதை அவர் கையாண்ட விதம் - வாய்ச் சொல் என் சிறந்த அம்சமல்ல. வேம்புவுக்கு நான் தலைவணங்குகிறேன்.

பத்திரிகைக்காக அவர் ஆற்ற வேண்டியிருக்கும் சதாவதானத்தில் அவர் முகம் சுளித்தோ, குரல் தடித்தோ இன்னும் காணப்போகிறேன். சீண்டலை வென்றவர். அவருடைய சுமுகமே அவரை ஆளும் பாணி ஆகிவிட்டது என்பது என் துணிவு.

இன்றைய எழுத்துலக ஜாம்பவான்களில் பெரும்பாலோர் ’அமுதசுரபி’யின் கலசத்தில் உண்டவர்கள்தான். நான் சுரபி வளர்த்த குட்டிதான்.

பூர்வாவைத் தொடர்ந்து எனக்குப் பேர் தந்த பல கதைகள், எழுத்தில் நான் நடத்திய சோதனைகள், பயின்ற சாதகத்தின் இடையே கிட்டிய சாதனைகள், நான் எட்ட முடிந்த ஆசைகள், முயன்ற பேராசைகள் எல்லாம் சுரபி ஆசிரியர் இடம் கொடுத்த பெருந்தன்மையால், அவருக்கு என்னிடமிருந்த நம்பிக்கை மூலம்தான், என் எழுத்துலகிற்கு ’அமுதசுரபி’ வாசற்படி.

’அமுதசுரபி’யின் உசிர்கெட்டியை, உசிர்கெட்டிக்குப் பாடுகிறேன். என் நலங்குப் பாட்டு ’அமுதசுரபி’யோடு வேம்புவுக்கும் சேர்த்துதான்.

உங்களுக்கு அவர் டாக்டர் விக்கிரமன், உரிமையாக எனக்கு வேம்பு. பெரிய சந்தர்ப்பங்களைப் புகழ்வோம்.

வெகுநாட்களுக்கு முன்னர், ஆனந்தவிகடனில் ’எங்கள் ஊர்’ என்கிற வரிசையில் லால்குடியைப் பற்றிய என் கட்டுரை வெளிவந்தது. என்னைத் தெரியாதவர்கள் கூட என்னை அதுபற்றி விசாரித்ததுகூடப் பெரிதல்ல. சிவராஜ் குருக்களையே வீடு வந்து விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

கட்டுரைக் கடைசியில், எங்கள் ஊர் மண்ணைக் கிள்ளி ஒரு சிட்டிகை எடுத்து வாயில் போட்டுக் கொள்கிறேன் என்று எழுதியிருந்தேன். அந்த வரிகள் தாம் வாசகர்களை மிகக் கவர்ந்த இடம் போலும்! என்னைச் சந்திக்கும்போதெல்லாம் அதை மட்டும் சொல்லிக்கொண்டிருப்பவர் இன்னும் இருக்கிறார்கள்.

எங்கள் ஊர், எங்கள் வீடு, எங்கள் குடும்பம், என் திருஷ்டியில் எனக்கு உழம்பலாய்த்தான் இருக்கிறது.

எங்கள் லால்குடி வீடு இப்போ எங்களுடையதல்ல. அது கைமாறிய கதை வேறு; அது இங்கு வேண்டாம். இப்போ அது சிவராஜ குருக்களுக்குச் சொந்தம். அவரும் காலமாகிவிட்டார். அவருடைய பிள்ளைகள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். கூட்டுக் குடித்தனம், நல்ல பையன்கள். எப்பவும் இதேபோல் சேர்ந்து இருக்கணும். அவர்கள் என்னை மறக்கவில்லை. சமீபத்தில் சப்தரிஷியின் பிள்ளைகளின் பூணூலுக்கு அழைப்பு வந்தது. சிவராஜ குருக்கள் அன்றிலிருந்து இது பெருந்திருப்ரசாதம்; எப்பவும் உங்கள் வீடுதான்’ என்று சொல்லும் விதத்திலேயே உள்ளம் நெகிழ்ந்துவிடும்."

சிவராஜ குருக்கள் பெருந்திருவின் அர்ச்சகர். அவர் வழியில் பூஜ்யர்.

என் தந்தையார் காலத்திலிருந்தே குடும்பம் லால்குடியை விட்டுக் கலைந்துவிட்டது. அடுத்த சந்ததி நாங்களே லால்குடிக்கு எட்ட ஆகிவிட்டோம். என் குழந்தைகளைப் பற்றிக் கேட்பானேன்! அவர்களுக்கு லால்குடி எண்ணத்திலேயே எட்ட எட்ட. இருந்தும் இன்னும் முற்றும் இற்றுப்போகவில்லை. குலதெய்வத்துக்கு வேண்டுதலை, அபிஷேகம், நம்ம ஊர் என எப்போதேனும் நெஞ்சிலிருந்து எட்டிப் பார்க்கும் ஏக்கம் இருக்கிறதே! பரம்பரை வாசனை என்பது அதுதான்.

கீழ்த்தெருக்கோடியில் கடைசி இரண்டு வீடுகளுக்கு முன், வடக்கே பார்த்த வீடு, தமிழ்ப் பண்டிதர் ராமசாமி அய்யர் வீடு. இப்போ வீட்டின் முகப்பு மட்டும் மாறியிருக்கிறது. மாடி எழும்பியிருக்கிறது. மற்றபடி உள்ளே எல்லாம் அப்போ இருந்தபடிதான். அந்த இடத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். இதோ வாசலில் ஜட்கா நின்றுவிட்டது. வாசலில் நின்று கொண்டு அம்முவாத்துக் குடும்பத்தை வேடிக்கை பார்க்க வேண்டாம்.

வாருங்கள். என்னோடு வாருங்கள். சரித்திரத்துள் நுழைவோம்.

நீண்ட திண்ணைக்கும் குட்டித்திண்ணைக்கும் மேலே ஓலைக்கூரை, வாசல் தாண்டியதும் ஒழுங்கையில் ஓர் அறை. அது சொல்லும் கதை தனி பின்னால் அதற்கு வருவோம். ரேழி தாண்டியதும் கூடம்.

சுவரில் பதித்த இரண்டு சந்தனக்கட்டைகள் மீது, சிறிய மணைப்பலகை அளவுக்கு ஒரு பழம் பலகை. ஊரிலிருந்து வந்த அனைவரும் அந்தப் பலகைக்கு விழுந்து நமஸ்கரிக்கிறோம். எப்போ ஊருக்கு வந்தாலும் எங்கள் முதல் வேலை அதுதான். இதுதான் அம்மன் பலகை.

சேவித்து எழுந்து கூடத்தை ஒருமுறை சுற்றிப் பார்க்கிறேன். இந்தப் பட்டக சாலையில் எத்தனை பெரிய ஆத்மாக்கள் நடமாடியிருக்கின்றன! நெஞ்சை அடைக்கிறது. வெளியில் நாலுபேர் சொல்லக் கேட்ட கதை, குடும்பத்தில் கேட்ட கதை, நேரே கண்ட கதை, எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து அமுக்குகையில் திரைச் சீலையின் படபடப்பு மார்பின் படபடப்பாக மாறுகிறது.

அம்முவாத்து அரங்கமேடை இதுதான்.

அமிர்தமய்யர் குடும்ப வழி, மருவலில் அம்முவாக மாறிவிட்டது. அதனால்தான் என் பெயரிலும் அந்த நாமமும் வழங்குகிறது.

கொள்ளுப் பாட்டாவும் பாட்டியும் - (குடும்பத்தில் அதற்கு முன் பெயர்கள் ஏதோ அமாவாசைத் தர்ப்பணத்தில் சொல்லத் திகழ்கின்றனவே அன்றி, அவர்களைப் பற்றிய நிச்சயமான தகவல் எல்லாம் புகைமண்டலம்) அர்த்தஜாமம் பின்னர்தான் ராச் சாப்பாடு - (அது சமையலோ, பழையதோ, மாவு சாதமோ, பலகாரமோ, பட்டினியோ - பெருந்திரு என்ன கொடுத்தாளோ அதுதான்) அதுபோல் தவறாமல் ஐம்பது அறுபது வருடங்கள் நடந்திருக்கின்றன. பால்ய விவாகம்.

அப்போதைய அர்த்தஜாமம் இப்போ நடக்கிற ஆபீஸ் நேரமல்ல. ஒன்பது மணிக்குக் கதவை இழுத்துப் பூட்டிக்கொண்டு, சாவியைத் தோளில் மாட்டிக் கொண்டு போய்விடுகிறார்களே! - அம்மனையும் சுவாமியையும் பள்ளியறைக்குக் கொண்டுபோய் விடும் போது குறைந்தது மணி பதினொன்றுக்கு மேலிருக்குமே ஒழிய, தாழ இல்லை.

கிழவரும் கிழவியும் கோயிலிலிருந்து திரும்பி வருகையில் திண்ணையிலும், தெருவிலும் கயிற்றுக் கட்டிலைப் போட்டுக்கொண்டு, அரட்டையடித்துக் கொண்டிருப்பவர்கள், அவர்கள் கடந்து செல்லும்வரை எழுந்து நிற்பார்களாம். அர்த்தஜாமம் பார்த்தவர்களைப் பார்த்த புண்ணியம். அந்த மோனக்காக்ஷி மனக் கண்ணில் எழுகையில் - Tableaux என்று சொல்வார்கள் - உடல் பூரா உள்ளே ஏதோ நீல லைட் அடிக்கிறது. விழியோரங்கள் குளுகுளுக்கின்றன.

ஐயாவைப் பற்றி அதிகம் பேசி நாங்கள் கேட்டதில்லை. ஆனால் பாட்டி –

பாட்டி ஒரு காட்டாள், வாட்டசாட்டமாய் ஸோல்ஜர் கோயிலிலும் ஆண் பிள்ளை போல் சாஷ்டாங்க நமஸ்காரம்தான் பண்ணுவாளாம். பூமியிலிருந்து பிடுங்கியெடுத்த கிழங்கு போன்று உக்கிர முகம். அந்த நாளில் அழகு பார்த்து, அழகு கேட்டுக் கலியாணம் பண்ணிக்கொள்ள முடியுமா? எல்லாம் உறவு விட்டுப்போகாமல் இருக்கப் பெரியவர்கள் பார்த்து முடித்து வைத்ததுதான்.

இரண்டு கைகளிலும் இரண்டு [1]விரைக்கோட்டை நெல்லை ஏந்திக்கொண்டு பரணில் கொட்ட, ஏணிமேல் ஏறுவாளாம். எழுத்து, படிப்பு வாசனை மருந்துக்குக் கூடக் கிடையாது. இத்தனையும் கேள்வித் தகவல். அவள் போட்டோ வீட்டில் இல்லை. அந்த நாளில் போட்டோ ஏது? இருந்தாலும் எடுக்க வக்கு இல்லை. இஷ்டமுமில்லை - எடுத்தால் ஆயுசு குறைவு.

குடும்பம் பெரிசு. ஐந்து பிள்ளைகள், இரண்டு பெண்கள். ஜீவனம் ? ஏதோ ஓர் அரைக்காணி நிலத்தில் நடந்தது. இத்தனை பேருக்கும் சாப்பாட்டுக்குப் போதுமா? அதெல்லாம் டிபன் நாளல்ல. நாஸுக்காக உள்ளங்கையில் ஈரம் படாமல் கொறிக்கிற ஆசாமிகள் அல்ல. ஆளுக்கு வேளைக்குக் கால்படி வேணும்.

ஆனால் பாட்டிக்கு மனம் ஒரு மஹால். அவள் மஹாலைப் பார்த்திருக்கமாட்டாள். சரி, தூண்களைத் தட்டிவிட்ட, ஆயிரங்கால் மண்டபம், தூண்கள் விசாலத்துக்குத் தடுப்பு இல்லையா?

ஒருநாள் இல்லாக்குறை, பகல் பட்டினி கிடந்து விட்டு இரவு உண்ண உட்கார்ந்தவள், வாசலில் ராப்பிச்சைக் குரல் கேட்டு, அப்படியே இலையோடு கொண்டுபோய் அவன் ஏந்திய முன்றானையில் போட்டுவிட்டாளாம்.

அது அவள் மனசா? அந்தக் காலத்து மனசா ? . என் அழுக்கு மனசு என்ன அறிய முடியும்?

ஆனால் கொள்ளுப் பாட்டியைப் பற்றிப் பேர் போன கதை, அவள் கறிவேப்பிலைக் கூடைக்காரிக்குப் பிரசவம் பார்த்ததுதான்.

ஒருநாள் ஒரு கறிவேப்பிலைக்காரி - அந்த நாள் கையரிசிக்குத்தான் அனேகமாக எல்லா வியாபாரமும். காசைப் பார்க்கவே கண் கூசும். தம்பிடிக்கே தழையத் தழைய வாங்கலாம், ஆனால் தம்பிடி?

கறிவேப்பிலைக்காரி நிறை மாத கர்ப்பிணி. எங்கள் வீட்டுத் திண்ணையில் கூடையை இறக்கியதும் இடுப்புவலி எடுத்துவிட்டதாம். இடுப்பைப் பிடித்துக் கொண்டு திருகாடுகிறாளாம். "அப்பா! அம்மா ! அம்மாடி!" நெற்றியில் வேர்த்துக் கொட்டுகிறது. கண் செருகுகிறது. பாட்டிக்கு விஷயம் புரிந்துவிட்டது.

”அடிப்பாவி!”

அவளை அப்படியே தோளில் சார்த்திக்கொண்டு, பாதி நடத்தி, பாதி தூக்கியபடி வாசல் கடந்து ஒழுங்கையறையுள் கொண்டுபோன பத்து நிமிடங்களுக் கெல்லாம் "வீல்.” என்று ஒரு பெரிய அலறல் ஒட்டி ஒரு புதுக்குரல்.

தெரு 'கொல்'.

”அடியே! அம்முவாத்தில் கறிவேப்பிலைக் கூடைக் காரி பிரசவண்டீ!”

மூன்றுநாள் தாயையும் குழந்தையையும் இருத்தி வைத்துக்கொண்டு பத்தியம் போட்டு; அவளுக்கு ஒரு பழம் புடவையும் கொடுத்து (தனக்கே தகராறு தம்பிக்குப் பழையது!), அனுப்பி வைத்தாளாம்.

ஊரே திமிலோகப்பட்டது. அக்ரஹாரத்தில் மூக்கில் விரலை வைக்கும், புருவத்தை உயர்த்தும் அந்நாளில் பாட்டி ஒரு டோன்ட்கேர் மாஸ்டர்.

ஆனால் அம்முவாத்துக்குப் பொறித்த முத்திரை - (வீட்டுக்கு வீடு இதுபோல் ஒரு சின்னம், அடையாளம் சீல்” இருக்குமே!) கொள்ளுப்பாட்டி, கறிவேப்பிலைக் கூடைக்காரிக்குப் பிரசவம் பார்த்த சம்பவம்தான்.

ஆனால் பாட்டி மஹா முன்கோபக்காரியாம். கோபம் வந்துவிட்டால் கண், மண், யார், எது என்று தெரியாதாம். குங்கிலியம் குபீர். ‘புஸ்' தணிந்ததும் சாதுக்கடல். பயப்பட வேண்டிய ஆசாமி.

ன் பாட்டனார் தமிழ்ப்பண்டிதர். மூத்தவர் ஐயாத்துரை- ஐயா, ஊருக்கெல்லாம் ஐயா - அவருக்குச் சுட்டுப்போட்டாலும் படிப்பு - எந்தப் படிப்பும் வரவில்லை.

மற்ற பிள்ளைகள் இடறி விழுந்து, எடுப்பார் எடுத்து மெட்ரிகுலேஷனைப் பிடிப்பதே - அதிலும் யார் யார் தேறினார்கள், கோட்டை விட்டார்கள் என்பது மூடு சூளை ஜகதீசன் ஓரளவு தேவலை, அந்த நாளிலேயே உத்யோகம் குதிரைக்கொம்பு - தகுதியும் இல்லாவிட்டால் எப்படிக் கிடைக்கும்?

இந்தக் கூட்டத்துக்கு ஒரு மட்டாய் வேலை கிடைத்தவிதமே ஒரு குட்டி வரலாறு. இந்தக் கட்டத்தை மனம் இல்லாமல்தான், சொல்ல வேண்டியிருக்கிறதே என்று சொல்கிறேன். எதோ தப்புத்தண்டா, சுவாரஸ்யம் என்று தீட்டிய செவிகள் ஏமாந்துபோகும், காரணம் என் மனம்தான்.

ப்ரசித்தி பெற்ற பெயர்களின் நிழல் எங்கள் மேல் படுவதோ, சரி என்மேல் படுவதை நான் விரும்புவதில்லை. இதென்ன அசூயை, வறட்டு ராங்கி, தவிடு தின்பதில் ஒய்யாரம் என்ன வேண்டிக்கிடக்கு? இருந்து விட்டுப் போகட்டும்.

ஸ்ரீமான் ஜி. சுப்ரமணிய ஐயர், 'ஹிந்து ஸ்தாபகர், காங்கிரஸ்காரர், சமூக சீர்திருத்தவாதி, என் சிறிய பாட்டனார் ஜகதீசனுக்கு மாமனார், இந்த வேலை வாய்ப்புக்குக் காரணமானார். அவர் உறவு வந்த விதத்தில்தான் கதை அடங்கியிருக்கிறது.

ஜி. சுப்ரமணிய ஐயருடைய பெண்களில் ஒருத்தி பாவம் - கன்னி விதவையாகி விட்டாள். அவருடைய சமூக சீர்திருத்த ஆர்வம், அத்துடன் நாட்டில் அப்போதுதான் அடிக்க ஆரம்பித்திருக்கும் காந்தி காற்று இரண்டும் சேர்ந்து, ஐயர் எங்கெங்கோ அலைந்து திரிந்து எப்படியோ ஒரு வரனைத் தேடிப்பிடித்து, ஏகமாய்ப் பணத்தைக் கொடுத்து மறு விவாகமும் பண்ணி முடித்தாலும் முடித்தார். பிடித்தது அவருக்குப் பாக்கு.

அக்கரைச் சீமைக்குப் போனாலே பிராயச்சித்தம் கேட்கும் இந்தச் சமுதாயம், அந்த நாளில் விதவா விவாகத்தைப் பொறுக்குமா? ஐயர் ஜாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டார். ஐயருக்கு வாக்குக்குக் குறைவா?

செல்வத்துக்குக் குறைவா? அடுத்த பெண்ணுக்கு வரனுக்கு ஊர் ஊராய்த் திரிகிறார். சல்லடை போட்டுச் சலிக்கிறார். சீந்துவார் யாருமில்லை. தனக்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்கும் என்று ஐயர் எதிர்பார்த்திருக்க மாட்டாரோ என்னவோ? நாளாக ஆக, அவர்லால் குடிக்கு வந்தபோது சலித்துப் போனதல்லாமல், மிரண்டும் போயிருப்பார் என நினைக்க வேண்டியிருக்கிறது.

இந்த இக்கட்டுக்களைத் தீர்க்க மத்யஸ்தர் இதற்கென்றே திரிந்துகொண்டிருப்பாரே! அமிர்தமய்யர் குடும்பமும் ஐயரும் இடை ஆள்மூலம் அறிமுகமாகி, ஜகதீசனுக்கு இன்னும் கலியாணமாகாததும், இரு குடும்பங்களின் விவகாரங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

ஐயருடன் சம்பந்தம் செய்வதால் இந்தக் குடும்பமும் சாதிவிலக்காவது பற்றி, இந்தக் குடும்பம் கவலைப்படவில்லை. வருடத்தில் மூச்சைப் பிடித்துக்கொண்டு நடத்த வேண்டியிருக்கும் வைதீகச் சடங்குகளின் செலவு மிச்சம் ஆச்சு!

ஜி. சுப்ரமணிய ஐயர் குமாரத்தி சௌ. கமலத்துக்கும் அமிர்தமய்யர் குமாரர் எல்.ஏ. ஜகதீசனுக்கும் திருமணத்துக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்:

ஜகதீசனை வக்கீலுக்குப் படிக்க வைக்க வேண்டும். சோதரமாருக்கு வேலை பண்ணி வைக்க வேண்டும்.

இந்த விக்கிரமாதித்த சோதனைகளுக்கு ஐயர் ஒப்புக்கொண்டு, எப்படி நிறைவேற்றினார் என்றால், ஐயர் ஒரு விக்கிரமாதித்தன். அவருடைய சோதனையைக் காட்டிலும் பெரிய வேதாளம் அவரைப் பிடித்துக்கொண்டிருந்ததே! பெண்ணுக்கு எப்படியானாலும் கல்யாணம் நடந்தால் சரி.

ஐயர் உதவியில் தாத்தாவுக்குப் பள்ளிக்கூடத்தில் தமிழ்ப்பண்டிதர் வேலை. ஒரு தம்பிக்கு உப்பு இலாகாவில், இரண்டு பேருக்குப் போலீஸ் டிபார்ட்மெண்டில்.

ஐயாவுக்குத்தான் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு ஏவலாளிக்குக்கூட அவர் லாயக்கில்லை; படிப்பு சூன்யம் மட்டும் அல்ல; அதிகாரத்தின் ஒழுங்குக்குப்படியும் சுபாவமும் கிடையாது.


  1. ஐந்து மரக்கால் அளவு.
"https://ta.wikisource.org/w/index.php?title=பாற்கடல்/அத்தியாயம்-2&oldid=1532436" இலிருந்து மீள்விக்கப்பட்டது