பாற்கடல்/அத்தியாயம்-5

விக்கிமூலம் இலிருந்து




5

போன பக்கங்களில் நான் பயணத் தண்டவாளத்திலிருந்து பக்கவாட்டில் பிரிந்துவிட்டேனோ என்று பாடுபடுகிறதோ? இல்லவே இல்லை. இந்த வரலாற்றின் வழியே இப்படித்தான். நீயும் நானும் பாற்கடலைக் கடைந்து கொண்டிருக்கிறோம்.

அண்டை வீட்டு மாடிக்குப் பேரக் குழந்தைகள் விளையாட அப்பப்போ ஓடினாலும் ராத் ‘தாச்சுக்கல்’ தன் மடியில்தான் என்று பெந்துப் பாட்டி அறிவாள். எங்களுக்கும் தெரியும்.

பூரா, நாம் ருசியிலேயே வாழவில்லை, பூராப்பூரா ருசியின் நினைப்பிலும் வாழவில்லை. வாஸனைகளில் வாழ்கிறோம் என்று என் துணிபு. மூச்சில் ஏதேதோ மோப்பங்கள் தாமே வந்து கலக்கின்றன. பிராணன் புதுப்பித்துக் கொள்கிறது. சரி; பிறருக்கு எப்படியோ, என் உடல், மனப்பாங்கு, நான் வளர்ந்த சூழ்நிலைப்படி, இந்த வாஸனைத் தத்துவம்தான் எனக்கு வாழும் தத்துவமாக நிலைத்துவிட்டது. ஆனால் எல்லாருக்கும் இதுதான் பாதை என்று நான் படிக்க வரவில்லை.

அவரவர் பூத்ததற்குத் தக்கபடி, வாஸனை ? அதென்ன வாஸனை? இதோ அதற்காக ஒரு கதை. கதையல்ல; சொந்த அனுபவம். சுமார் இருபத்துஐந்து வருடங் களுக்கு முன் - ஏன், மேலேயே இருக்கும் - இரவு சுமார் 10-30 ரேடியோ அலறிக்கொண்டிருக்கிறது. (வழக்கப் பிரகாரம்தான், முடுக்கிவிட்டு அவரவர் தூங்கிக்கொண்டிருக்கின்றனர். வம்பு அளந்துகொண்டிருக்கின்றனர். நான் நடு முற்றத்தில் படுத்தவண்ணம் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன். கவனம், படிப்படியாக படிந்த வாய்க்காலில், ரேடியோ சத்தங்கள் எழுந்து, உருத்தெளிந்து, நடைபெறுவது நாடகம் எனத் தெரிந்தது.

எனக்குச் சாதாரணமாக ரேடியோ நாடகம் எடுபடுவதில்லை. ஆனால் அன்று நாடக ஆசிரியர் கொண்டுபோயிருக்கும் பாணியில் (யாரோ வங்காள ஆசிரியரின் தமிழாக்கம். நாடக முடிவில் தெரிவிப்பார்களே!) ஒரு சக்தி விறுவிறுத்து, கவனத்தை வசம் கொண்டது.

காசிராஜன் தீர்ப்பளித்தாகிவிட்டது. சந்திரமதி திருடியெனத் தீர்மானிக்கப்பட்டு, அவள் தலையை இதோ அரிச்சந்திரன் சீவப்போகிறான்.

பூமியிலும் வானிலும் கூட்டம் நெரிகிறது. தேவர்கள் வேடிக்கை பார்க்கக் கூடிவிட்டனர். "ஜே! ஜே! அதோ உருத்தெரியா ஜன இரைச்சலைத் தத்ரூபமாகக் கொண்டு வந்திருக்கிறான். அதிலிருந்து கணிரென்று அரிச்சந்திரன் குரல் பிரிந்து வருகிறது. அவன் கைக் கத்தியின் தீட்டிய பளபளப்பை என்னால் பார்க்க முடிகிறது.

"சந்திரமதி ! உன் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்!"

நினைத்துக்கொள்கிறாள். அவளுடைய இஷ்ட தெய்வம் யார்? (!)

விசுவாமித்ரர் ஓடி வருகிறார். கடைசி நிமிஷத்தில் அவனை, இத்தனை சோதனைகளிலிருந்து மீட்டுவிடும் ஒரு பொய்க்குக் கெஞ்சுகிறார்.

அந்த ஒரு பொய்.

கட்டம் பரபரப்பாய்த்தானிருக்கிறது. மசிந்து விடுவாரோ? ஜெயிப்பு அவருடையதுதானா?

'அரிச்சந்திரா அரிச்சந்திரா! எங்களைக் கைவிட்டுடாதே!

இந்தப் புதுக்குரல்கள் எங்கிருந்து? அரிச்சந்திரன் திகைக்கிறான்.

"நீங்கள் யார்?"

"அரிச்சந்திரா! நாங்கள் உன் பிதுர்க்களடா! எங்களைக் கைவிட்டுடாதே! இப்போ சறுக்கினையோ, உன் ஒரு பிழையால், இந்தக் குலபதியைத் தொட்டு வழிவழியாகக் கரையேறியிருக்கும் அத்தனைபேரும் மீளா நரகத்துக்குத் தள்ளப்படுவோம். அடே, குழந்தே! எங்களைக் கைவிட்டுடாதே!”

கிடக்கையில் என் உடல் கட்டையாக விறைத்து விட்டது. தொண்டையை அடைத்தது. ‘நான்’ - நான் - என்னிலிருந்து ஒரு 'நான் புறப்பட்டு விம்மிக் கொண்டே.

பால்ரோசம். உள்ளூர அமைதியான ஒரு சீறல் சப்தம் ஓர் ஆக்ரோஷத்தின் படமெடுப்பு. இன்னும் விம்மிக்கொண்டே.

இந்த விம்மல் ’நான்’ என்னுடைய நான்தான். என்னின்று வந்த நான். நானும் இதைச் சேர்ந்தவன் தான். ஆனால் நான் இதனுள் அடங்கியவன். இது நானின் விசுவரூபம் தணலிலிருந்து சுழித்துக்கொண்டே

மேலெழும்பிய

அகிற்புகையின் வியாபகத்தில் உருப் பிதுங்கின ராக்ஷஸம். நெருப்பில்லாமல் புகையில்லை. இந்தக் கங்கு, பரம்பரை அஸ்தியில் எங்கோ செருகிக்கொண்டு, கனன்று கொண்டேயிருக்கும் பரம்பரை ஆஸ்தி. prometheus சொர்க்கத்தினின்று நமக்காக மூங்கில் குழாயில் அடைத்துக்கொண்டு வந்த தீ. எல்.ஐ.சி. சின்னத்தில் ஒரு உள்ளங்கைகளுள் ஏந்தல் காக்கும் குடும்பச்சுடர். ஒலிம்பிக் தீப்பந்தம். அன்றே என் பாட்டி, என்னையும் என் தம்பியையும் செல்லமாக அழைத்த பெரிய தீவட்டி, சின்ன தீவட்டி. மூன்றாவது கண்ணின் திறப்பு. சாவுக்கும் பிறப்புக்கும் இடைக்கோடின் முகடு. இந்த ’நான்’-இல் நான் நான் நான் நான் நான் நான் நான் நான் நான் பல கோடி பிம்பங்களில் நானும் ஒரு பிம்பம். என் ஆரம்பம், அர்த்தம், முடிவு, நோக்கம், பெருமை, இதுவேதான் நான்’ எனும் என் வெளியீடல்இதுவே அம்முவாத்து அகந்தை அவள் எங்களவள். ஆகையால் மற்றதெல்லாம் எங்களுக்கு திரணமாத்திரம் எனும் ஒரு ஸர்வ தோரணை மஹா பிகு.


ஸத்யோஜ்யோதிஷி
    ஜிஹோமி ஸ்வாஹா;
தாராமல் இருப்பாளோ
    அவள் எனன
சத்தியம் மறந்தவளோ ?
    பூம் பூம் பூம் ஸ்வயாகாரத்தின்
சங்கநாதம்.

இருங்கள், இருங்கள், பொறுங்கள், மூச்சிறைக்கிறது. இருபத்துஐந்து வருடங்களுக்கு முன்னின் நினைவுக் கூட்டல் அல்லவா? கூட்டவே வேண்டாம். அன்றின் அழுத்தல் இன்னும் குறையவில்லையே!

இதைத்தான் நான் வாஸனை என்கிறேன்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே. பாரதி சொல்வது மட்டும் என்ன?

அவர்கள் விந்தையில் ஆயிரம் எண்ணங்கள், ஆசைகள் எவர், யாவர் என்று விளக்கியும் கூற வேண்டுமா?

நான், நான் மட்டுமல்ல, என் குடும்பச் செருக்கு. அதுவும் எனக்குச் சொந்தமல்ல.

என்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒப்பிலா நகை, அதை நான் அணிந்ததால், அது என்னை ஆண்டு, நான் வாழ்ந்தபின், என் பின்னோருக்கு விட்டுச் செல்லும் சாஸனம். இது நான் கண்ட அமுதம்.

பாற்கடலை நீயும் நானும் கடைந்தோம்.
எனக்காக நீ, உனக்காக நான், எனக்காக நான்.
நமக்காக நாம்.
கடைந்தோம்.
அமுதம் வந்தது.
நான் கலசமானேன்.
என் கரண்டி என் பேனா,
நான் பரிமாறுகிறேன்.
உண். இனி நாம் தேவர்.
—இதை நான் வாஸனை என்கிறேன்.
நான் என் தாத்தாவின் பேரன்
என் அப்பன் மகன்
என் தாய் வயிற்றில் தோன்ற
பாக்கியம் செய்தவன்.

—இதை நான் வாஸனை என்கிறேன்.

இன்றைய குடும்ப வாழ்க்கையில் இந்த மணம் மறந்து போய்க் கொண்டிருப்பதுதான் என் கொடிய வேதனை.

'சுஜி இந்த வருஷம் காலேஜ் போறாள்னு அவளுக்கு அவாத்துலே நைலக்ஸ் தாவணி நாலு வாங்கியிருக்கா பாரு! கண்ணைப் பறிக்கிறது. தவிர ஷெர்வாணி கம்மீஸ், நாமும் இருக்கோம்!”

“தெரியுமோன்னோ? இல்லே இல்லேன்னு சொல்லிண்டு கடைசியில் அவாத்திலும் - டிவி வாங்கியாச்சு. அடுத்த மாஸம் - ஃப்ரிஜ்"

“நாலு பையன்களும் சம்பாதிக்கிறான்கள். சேத்து வெச்சுக்கறான்கள். அல்பம் மாதிரி அவர் அப்பா, அவர்கள் சம்பளத்துக்குப் பங்குக்கு வரதில்லை. கணக்கும் கேட்பதில்லை. பிறத்தியாரிடமிருந்து நாம் கற்றுக்க வேண்டியது எவ்வளவோயிருக்கு”

மேலே இரைந்து கிடக்கும் நட்சத்திரங்களில், என் மூதாதையர் அப்பா அம்மாவுடன் என்று போய் நானும் சேர்வேன்?

"அவாளைக் கவனிச்சையோ ? முகத்தில் ஒரு பணக்காரக் களையிருக்கு!”

அப்போ பணக்காரா வேறே, பணக்காரக் களை வேறேயாக்கும்!

இரண்டும் வெவ்வேறாய் சொல்பவர்களுக்கே தெரிகிறது போலும்!

"நம்மைவிடப் பச்சையாக எதிர்வீட்டில் வாழ்கிறார்கள் என்பதைச் சொல்லியே தீருவேன்; பொறாமைப்படுகிறேன் என்று அர்த்தமல்ல. உண்மையைச் சொல்கிறேன். நான் உண்மை விளம்பி"

ஏற்றத்தாழ்வுகளை ஒப்பிட்டுப் பேசுவது பொறாமையல்லேல் வேறு எது பொறாமை ? நான் இன்னும் ஒருபடி மேலேயே போகிறேன். பிறர் வசதிகளைப் பேசத் தோன்றுவதே காழ்ப்புதான் என்று சொல்வேன். பிறரிடம் கண்ட நற்குணங்களைப் பேசுவோம். பெரியாரைப் புகழ்வோம்.

பங்கமிலாது வாழ அந்த வாழ்வு பெற, நாணயமான முறையில், நம் உழைப்பு, முயற்சி பற்றிப் பேசுவோம்.

தங்க அணிலைக் கண்டால், ‘எங்கே புரண்டாய்? என்று விசாரிக்கமாட்டோம். அதன் தோலை உரிக்க என்ன வழி! அதனால்தான் தங்க அணில் கண்ணில் படுவதில்லை.

என்று நாம்,

நம் வீட்டுப் பழையது,
நான் தொடுத்த முழம்,

ஆத்தாளுக்கும் அகமுடையாளுக்கும் அங்கச்சிக்கும் நான் எடுத்த புடவை நூறு புடவைதான். ஆனால் என் உழைப்பு, என் அன்பு, என் சக்தி, எங்கள் கெளரவம், என்று பெருமை கொள்கிறோமோ, வீட்டில் இருப்பவர் எல்லோரும் அப்படி நினைக்க வேண்டும். திருப்திப்பட வேண்டும். பெருமைப்பட வேண்டும். இதுவரை தெரியாவிட்டால் இனிமேலாயினும் பழகிக்கொள்ள வேண்டும். ஒன்று தெரிய வேண்டும்; நன்றி பெருகப் பெருக அங்கு சுபிக்ஷமும் பெருகும். அங்கு ராமராஜ்யம் நடக்கிறது. அந்த வீட்டைப் பிதுர்க்களின் ஆசீர்வாதம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அஞ்சலி செய்வோம்.

கடமை என்பது ஒருவழிக் கடன் அல்ல.

"அப்பா! Vicco-turmeric இல்லாமல் இனி ஒரு நிமிஷம்கூடத் தள்ள முடியாது.”

"ஒரு பத்துநாளைக்கு சோப்பைத் தள்ளு. பயத்த மாவைத் தேய்த்துக்கொள்” - என்றால் கேட்பாளா?

"அப்பாவுக்குக் காசு ஒண்ணுதான் குறி!”

வாஸ்தவந்தான். இல்லாத குறைதான். வேடிக்கை Vicco turmeric போட்டுக்கொண்டாலும்தான் களைக்கிறது. காலேஜ் குமாரி ஆகிவிட்டால் மரியாதையும் காற்றில் பறந்துவிடுகிறது.

மானத்தோடு வாழ்வதைப் பெரிதாக அந்த நாளில் கருதினார்கள்.

வசதிகளின் பெருக்கம்தான் இப்போ வாழ்க்கையின் குறிக்கோள். கடன் வாங்கியோ, ஏமாற்றியோ, எப்படியோ, ஜப்தி ஆகிறவரையில் அனுபவித்தது லாபம்.

மதிப்பீடுகள் மாறுகின்றன எனும் பொதுத் தீர்ப்பில் எல்லாமே அடங்கிவிடுமா?

இத்தனையும், குழந்தே, எங்களைக் கைவிட்டுடாதே என்று அன்று ரேடியோ நாடகத்தில் கேட்ட அலறலின் எழுச்சிதான். குட்டிக்கதை என்றுதான் ஆரம்பித்தேன்; ஒப்புக்கொள்கிறேன்.

மன்னிப்பு - கேட்கமாட்டேன்.

சிறுகையூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கினாலே லால்குடிதான். ரோடுக்கு வந்து கொஞ்சதூரம் நடந்து, ஐயன் வாய்க்கால் பாலம் தாண்டியதும் ஐயனார் கோயில் உள்ளேயே கறுப்பண்ணன் ஸ்ன்னதி.

ஐயனார் சிவனுக்குப் பிறந்ததால் பெருந்திருவுக்கும் மகன்.

கறுப்பண்ணன் பெருந்திருவின் பணியாள்.

பெருந்திருவைச் சார்ந்தவர்கள் என்கிற முறையில் அம்முவாம் இந்தத் தெய்வங்களையும் தன் வழிபாட்டில் சேர்த்துக்கொண்டது; அதற்கே உரித்தான வழிபாடு மோஸ்தரில்;

பாட்டனார், ஐயனாரைத் தோத்தரிக்கிறார்:


நஞ்சிருக்கும் நெஞ்சிருக்கும்
     நாரியோடு பாகருக்கும்
மஞ்சிருக்கும் வண்ணநெடு மாயருக்கும்
     மஞ்சன் என உற்ற ஐயனார்
அப்பன் உண்டு துணை எனக்கு
     மற்றெவர்க்கும்
அஞ்சேன் மனம்.

ஒரு சமயம்.

வாளாடியில் தங்கை வீட்டுக்குப் போய்விட்டு, தாத்தா லால்குடிக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். இரவு வெகு நேரமாகிவிட்டது. இப்போ இரண்டு நிமிஷங்களுக்கு ஒரு முறை திருச்சி ரோடில் பஸ்கள் பறக்கின்றன. அந்த நாளில் பஸ்ஸா, மாட்டு வண்டியா, தெருவிளக்கா, ரோடா?

அமாவாசை வேறு.

எனக்கு இப்பவும் ஒரு ஏக்கம். இந்த நாளில் மையிருட்டு என்பதையே பார்க்க முடிவதில்லையே. முகத்துக்கெதிரே கையைப் பிடித்தால் கை தெரியாதாமே! மரங்களை வெட்டிச் சாய்த்துவிட்டால் நட்சத்திர வெளிச்சம் காட்டிக் கொடுத்துவிடுகிறது.

சுருக்கப் போய்விடலாம் என்று எண்ணி, படிந்த பாதையை விட்டுக் குறுக்கே எங்கோ புகுந்திருக்கிறார். அப்படி, இப்படி, இரண்டு திருப்பத்தில், வழியும் தப்பிப்போச்சு, சிறிதுநேரம் நடந்தபின் ஒரு பெரிய சப்பாத்திக்கள்ளி, வழி விடாமல் குறுக்கே நிற்கிறது. இனி செய்ய என்ன?

“பெருந்திருவே கறுப்பண்ணா!”

இந்தக் குடும்பத்தில் நாபிக்கொடி வீறல் அது ஒன்றுதான்.

”ஆதிமூலமே!” யானையின் அலறல்.

"ஹே, ஹ்ருதய கமலவாஸா!"அதுவரை இடுப்பில் நுனியைப் பிடித்துக்கொண்டிருந்த கைகள் தலைக்கு மேல் தூக்கிவிட்ட நேரம். அவனும் அதற்காகத்தானே காத்துக்கொண்டிருக்கிறான்! அது என்ன ருசியோ?

The Lord is my Shepherd I shall not want.

‘RUSTOM!‘ ரஸ்டமின் வீரமுத்திரை கர்ஜனை

“பெருந்திருவே கறுப்பண்ணா!"

இந்தக் குடும்பத்தின் டங்கார த்வனியும் அதுதான்.

தூரத்தில் ஒரு வெளிச்சப் புள்ளி தோன்றிற்று. நெருங்கி வந்ததும் அந்த ஆள் கை லாந்தரை அப்பா முகத்தெதிரே பிடித்தான்.

“யாரது? இந்த நிசியில் நடுக் காட்டில்?”

தலையில் முண்டாசு, பரந்த நெற்றியில் பட்டையாக உதிரி விபூதிமேல் குறுக்கே தீட்டிய குங்குமம், குத்துமீசை குழிமேலாய். இடுப்பில் நிஜார். கையில் சாட்டை. மார்பில் சந்தன வாசனை. மேட்டுவிழிகள் பொறி பறந்தன.

“வழி தப்பிப் போச்சு அப்பா !”

”நேர் வழிவிட்டு உம்மை யார் குறுக்கே திரும்பச் சொன்னது? கள்ளர் பயம் பேச்சு நடமாடறது தெரியுமல்ல?”

“தெரியுமப்பா !”

”சரி என் பின்னாலேயே வாங்க”

நிமிஷமாக பழக்கமான பாதை வந்துவிட்டது. ஒரு பத்து கஜ தூரத்துக்கு முன்னால் ‘லொடக் லொடக்’ இரட்டை மாட்டு வண்டி

”இனி, போவீரா? வழி தெரியுமா ?”

“தெரிஞ்சதப்பா. நீ நன்னாயிருப்பே !”

”இனி இப்படியெல்லாம் குறுக்கில் இறங்காதீங்க. உமக்கு அது தேவையில்லை!”

திருப்பத்தில் ஆள் மறைந்துவிட்டான். அவன் சென்ற திக்கிலிருந்து ஜல் ஜல் கால் சிலம்போசை, அடுத்துக் குதிரையின் குளம்புச் சத்தம்.

எட்ட எட்ட எ.ட்...ட...

தாத்தா வார்த்தைகளில், வந்த ஆளைப் பார்ப்போம்.


”தலைப்பாகும், சீறாவும் தாரும் தடம் தோள்
   சிலைப் பாரமும் கைச் சமுதாடும்
நினைத்த கழற் காலன்.
   நினைத்த விடம் காணக்

கறுப்பண்ணன்
    எக்காலும் துணைக்கு வருங்காண்”

பிரதி இரவும் மன்னிப்பாட்டி மேற்கூறிய இரு பாக்களையும் சொல்லி எங்கள் படுக்கைக்கு இரு தெய்வங்களையும் காவல் வைத்துவிடுவாள்.

னால், தாத்தா, வாளாடி வழியில் வகையாக மாட்டிக்கொண்டார் என்பது தவிர, சுபாவத்தில் பயந்தாங்கொள்ளி - இன்னொரு தினுசில்.

கொல்லைப்பக்கம் போய் வருவார்.

”ஏய்!” (இது அந்தக் காலத்துத் தோரணை) காலில் என்னவோ சுருக்குன்னுது. ரெண்டு மிளகு கொண்டுவா!”

“செருப்புப் போட்டிருக்கேள். எப்படி சுருக் கென்னும்?”

“கொண்டுவான்னா கொண்டுவா! தர்க்கம் பண்ற சமயத்தைப் பாரு!” (கொண்டுவந்து கொண்டேதான் மன்னிப்பாட்டி கேட்கிறாள் பாவம். என்றுமே இடிசொல் படுவதற்கென்றே வாழ்க்கைப்பட்டவள்)

”என்னடி தித்திக்கிற மாதிரியிருக்கு, விசுவநாதஞ் செட்டியை அழைச்சுண்டு வா. காலில் விறுவிறுன்னு ஏர்ற மாதிரியிருக்கு; முழங்காலுக்கு வந்துடுத்து.” கண்டசதையைக் கிள்ளிப் பார்த்துக்கொள்வார்.

செட்டி வந்து நாடியைப் பார்ப்பான். ”நீங்கள் சொல்றபடியிருந்தால், இதுக்குள் என்னென்னவோ நடந்திருக்கனுமே! நாடி கல்லாட்டம் ஒடறது. பித்த நாடி தூக்கல்லே, எனக்கொண்ணும் தெரியலியே!”

”உனக்கென்னடா தெரியும்! இப்போ லசுஷ்மி இங்கிருந்தால் உன்மாதிரி மசமசப்பாளா?”

”வாஸ்தவந்தான், லக்ஷமி அம்மா நாடி பிடிக்கிறதிலே வரப்ரசாதி. ஆனால் அவா இப்போ இங்கே இல்லே. நீங்க வாளாடிக்கே நடந்தே போய் அவளைப் பிடிக்கச் சொல்லிக் கேட்டுக்கலாம்.”

“ஒஹோ! அதிகப்ரஸங்கம் வேறயா? விஷய சூன்யமானாலும்!”

விசுவநாதன் செட்டியென்ன எல்லாருமே கேட்டுப்பார்கள் அந்தநாள் அப்படி.

இதற்குள் மன்னி, செருப்பில் தைத்துக்கொண்டிருந்த சப்பாத்தி முள்ளைப் பிடுங்கி, பணிவுடன் நீட்டுவாள்.

”சரி, சரி உள்ளே போ! இதென்ன சதிர்க் கூடமா ?”

மன்னி உன்னுடைய நட்சத்திரப் பதவி, தாத்தாவை விட உயர்ந்ததாய் இருக்கணும்; ஆனால் நீ அங்கு இருக்கமாட்டாய். தாத்தா காலடியில் இடம் தேடியிருப்பாய். அங்கு போயும் உன் தலையெழுத்து அப்படி,

தாத்தாவை நினைக்கும் அதே மூச்சில் ஐயாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை. தாத்தாவுக்கு மூத்தவர். குணாதிசயங்களில் தாத்தாவுக்கு நேர் எதிர். பயம் என்றால் வீசை விலையென்ன?

அவரும் நள்ளிரவில் போயிருக்கிறார். சினிமாக் கொட்டகையிலிருந்து நண்பர்களுடன் திரும்பி வருகையில், பாதை குறுக்கே விழுந்து கிடந்த பழுதையை மிதித்து, அது நொடியில் காலில் நாலு சுற்று போட்டுவிட்டது. கண்ணிமைக்கும் நேரத்திலும் மின்னலில் காலைச் சுற்றியதன் பல் பதியுமுன் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு, விட்டுப்போன பேச்சைத் தொடர்ந்து சர்வ சகஜமாகப் பேசிச் சிரித்துக்கொண்டு வந்தாராம். கூட வந்தவர்கள் சாக்ஷி.

”ஐயாவா? ஐயோ!” - வாயைப் பொத்திக் கொள்ளத் தவிர வேறு அவர்களுக்குத் தோன்றவில்லை.

மறுநாள் அதே இடத்தில் பிடாரன் கருநாகம் பிடித்தானாம்.

எட்டடி இது வெறும் நாகம் என்று கட்சி கட்டலாம். கட்டுபவர்கள் கட்டட்டும்.

ஐயாவுக்குப் படிப்பு வாஸனையோ, எழுத்து வாஸனையோ கிடையாது. இடுப்பில் ஒரு வாழைப் பட்டைக்கத்தி எப்பவும் செருகியபடி இருக்கும். படுக்கையில்கூட பக்கத்தில் அதுதான் அவருடைய மந்திரக்கோல். தாழ்க்கோல், காவல், வேலைக்காரன். குரு எல்லாம். அவருக்குச் சொன்னபடி கேட்கும்.

அவருக்கு உற்ற வயதில் மனைவி இறந்துபோனபின் இரண்டு குழந்தைகளுடன் தாத்தாவிடம் வந்து தங்கினவர்தான். மறுவிவாகம் செய்துகொள்ளவில்லை என்பதுகூடப் பெரிதல்ல. அவர் இருந்தவரை (நீண்ட வயதும் இருந்தார்) சதா மெல்ல அலைந்து கொண்டிருக்கும் ஊர் வாய் அவர் மேல் துளி மாசு கற்பிக்க வில்லை.

கோபம் வந்துவிட்டால் வாயில் வந்தபடி பேசுவார். மெய் கூசும். தன்னிடம் நியாயம் ஒடுங்குவது தெரிந்ததும் அதட்டி எதிராளியை அடக்கிவிடுவார். கைகூட மிஞ்சிவிடுவார்.

பரோபகாரி கூழுக்குப் பாடி, கோலம் போட்டால் வழியில் போகும் பெண்டிர் ஜோலி மறந்து அதிசயித்துப் பார்த்துக்கொண்டு நிற்பர். கூடை முடைவார். ஓலைக் கூரை பின்னுவார். துடைப்பக் குச்சியிலிருந்து இழை ஈர்க்கெடுப்பார். முதல் செடி நட, தென்னங்கன்று வாழைக்கன்று வைக்க அவரை அழைப்பார்கள். கிணற்றில் சொம்பு விழுந்துவிட்டதா ? ஐயாவை அழைச்சுண்டு வா; கொல்லையில் பாம்பா? குடத்தில் பிடித்துவிடுவார். பையன்கள் அவருக்குச் சஹா. கீழத்தெரு கோடியாத்தில், சிப்பாய்க்கலகம் பார்த்த சீதாப்பாட்டியிலிருந்து, எதிர் வீட்டுப் பண்டாரி சிவராமன் தனக்குப் பிறக்கத் தவங்கிடக்கும், இன்னும் வயிற்றில் பூச்சி வைக்காத சிசுவரை எல்லாருக்கும் ஐயா.

வேண்டாத விஷயஞானம் அதிகப்படி,

ஐயா ஐம்பது தாண்டியபின் லால்குடி கோயிலில் மெய்க்காவல் வேலை கிடைத்தது. (வாட்ச்மேன்) இந்தத் திடீர் அதிர்ஷ்டத்துக்குக் காரணம் தனித்துத் தெரியவில்லை. பலவாயிருக்கலாம். தமிழ்ப்பண்டிதர் குடும்பத்தின்மேல் இருந்த மதிப்பாயிருக்கலாம். ஒருநாள் விடாமல் ஐம்பது வருடங்களுக்கு மேல் அர்த்தஜாமம் பார்த்த குடும்பமாச்சே, தமிழ்ப்பண்டிதரிடம் படித்த பையன் தர்மகர்த்தாவாக ஆகியிருக்கலாம். ஐயா மேலேயே இரக்கமாயிருக்கலாம். அவரைக் கண்டு பயமாயுமிருக்கலாம். ”டேய் நீ இன்னிக்குக் கோயில் தர்மகர்த்தா. நாலுபேர் உன்னைப் பார்க்க வரா, போறா. ஆனால் உன் அப்பன் எப்படியிருந்தான், என்ன பண்ணினான். அவன் மூடு சூளை என்னன்னு எனக்குன்னா தெரியும்!”

ஐயாவுக்கு blackmail பண்ணவேண்டும் என்கிற எண்ணம் அறவே கிடையாது. அப்படியென்றால் என்ன என்றே அறியார். ஆனால் தன் ரிஷிகோபத்தில், நாலுபேர் நடுவில் என்னத்தையாவது அவிழ்த்து விட்டால் அது நிஜமா, பொய்யா? ருசு பின்னால், மான நஷ்ட கேஸ் போட்டாலும் ஐயாவிடம் என்ன வசூலாகும் ? நடுத்திண்ணையில் என் கதி. என் கெளரவம் என்ன ஆறது? அவரோ நாக்கில் நரம் பில்லாத மனுஷன்.

மத்தியானம் பட்டைச்சாதம் நாலு - அளவு, தயிர், தாளிதம் எல்லாமே கணிசம். தவிர மாதச்சம்பளம், அது நேரே மன்னி கைக்கு வந்துவிடும் ஐயா சொன்னபடி

விசேஷ தினங்களில் உபயக்காரர்கள், வேண்டிக் கொண்டவர்கள் மண்டகப்படியில் பாயஸம், வடை, சுண்டல், சர்க்கரைப் பொங்கலில் அவர்களாகக் கொடுக்கும் பங்கு. தேங்காய்மூடி, சில்லரை, மடப்பள்ளி யிலிருந்து ஸன்னதிக்கு நைவேத்தியத்தைக் கொண்டு வந்து வைத்தால், படி உண்டு. ஐயாவின் பொடிமட்டை செலவுக்கு இடுப்பில் நிமிண்டிக்க இன்னும் என்ன வேண்டும்?

இந்தச் சம்பிரதாய செலவுகளுக்கு அபிஷேகக்காரன் பிசுகமாட்டான். பிசுகுவதால் சப்தரிஷி நாதரிடம் கஷ்டப்பட்டு சம்பாதித்த புண்ணியத்தில் குறைந்து போனால் பிறகு தான் இழைக்கும் அக்கிரமங்களுக்குப் பிராயச்சித்தம் எப்படி,

வெள்ளிக்கிழமை மாலை மட்டும் குறைந்தது நாலு சஹஸ்ரநாமம். அதற்கேற்றபடி அபிஷேகம். நைவேத் தியங்கள் நடக்கும். ஐயா கொடுத்ததை வாங்கிக்கொள்வார். சண்டை பிடிக்க மாட்டார். Don't Care.

”சமயத்துக்குக் கொடுக்கிறாளா பாருடா! நீங்கள் சேர்த்துவைத்து வீடு கட்டி வாழுங்கடா, தரித்திரப்பசங்களா !”

ஐயா வேலை பார்த்தவரை வீட்டின் ஓநாய்ப் பசி குறைந்து, பட்டினிச் சோர்வு கலைந்து, குடும்பத்துக்கே சற்று முகத்தெளிவுதான்.

தலைச் சிக்கெடுத்து, கோதி வாரி, முகம் மழித்து, பட்டை விபூதிக் குழைத்துத் தரித்து, டவாலியில் கையில் கிழங்குமாதிரி வெள்ளிப் பூண் போட்ட தடி (அர்த்தஜாமம் ஆனவுடன் தர்மகர்த்தா இரண்டையும் பிடுங்கிக்கொண்டு விடுவான்) யுடன் நிற்கையில் ஐயா களைதான்.

எல்லோரும் போனபிறகு வௌவாலுக்கும் துரிஞ்சலுக்கும், அவைகளிடும் புழுக்கைக்கும்தான் ஐயா காவல். நடராஜர் ஸன்னதிக்கெதிரே தூணடியில் துண்டை விரித்து, ஐயா காலை நீட்டிவிடுவார்.

பெருச்சாளி குடைந்து மடப்பள்ளியில் பாத்திரம் ஏதேனும் உருளும். கோயில் குளத்தினின்று குபிரென்று பாசி நாற்றம் கிளம்பும். பேரென்னவோ சிவகங்கை! நந்தவனத்தில் திடீரென்று பட்சி ஏதோ ‘க்றீச்...' பாம்பு பிடிச்சுடுத்தா?

ஆனால் இந்த மெய்க்காவல், முதல் ஜாமத்திலேயே மூணாம் ஜாமத்தின் அயர்ந்த குறட்டையில் நடக்கிறது.

ஆமாம்; மெய்யாகவே காவல் காக்க என்ன இருக்கிறது? நடராஜாவின் பஞ்சகச்சத்தை எவனாவது உருவிக்கொண்டு போக வரப்போறானா? விக்ரகத் திருட்டு இன்னும் Fashionஇல் வரவில்லை. திருடனே அதுபற்றி இன்னும் நினைக்கக்கூட ஆரம்பிக்கவில்லை. களவு, தனிக்கலையாக, அதன் அந்தஸ்துக்கு வரவில்லை.

ஒருநாள், ஐயா காவல் முடித்து, காலை வீடு திரும்ப வில்லை. ஆனால் அதுபற்றிக் கவலைப்படுவதற்கில்லை.

பல் குச்சியை வாயில் மாட்டிக்கொண்டு எங்கானும் போயிருப்பார்.

எவனேனும் கடலைக்காய் கொல்லைக்காரன், வேர்க்கடலை தருவதாகச் சொல்லியிருக்கலாம்.

அல்லது வாழைத்தோட்டக்காரன் தார் தருவதாகச் சொல்லியிருப்பான்.

கரும்பு ஆலையில் சக்கரம் சுற்றினால் வெல்லக் கட்டி கிடைக்கும். ஐயாவுக்கு வெல்லம் என்றால் உயிர்.

ஆனால் இந்த வீட்டில் எவ்வளவு வந்தால் என்ன? ஆடு அப்போ, மாடு மத்தியானம்.

எச்சுமிப் பாட்டிக்கு மட்டும் இருப்புக் கொள்ளவில்லை. 'ஐயா ஏன் வரவில்லை ? எனக்கென்னவோ பண்றதே!' என்று அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு கூடத்துக்கும் தெருவுக்குமாக அலைந்தாள்.

வாசல் திண்ணையில் தாத்தா, வழக்கம்போல் பாட்டு நோட்டில் மூழ்கியிருந்தார்.

”ஐயா வராண்டா!”

ஐயா தனியாக வரவில்லை. குடிகாரன்மாதிரி அவர் தள்ளாடி இரண்டுபேர் பிடித்துக்கொண்டு வந்து கூடத்தில் விட்டதும், தடாரென்று தரையில் சாய்ந்தார். தொட்டுப் பார்த்தால் ஜுரம் மழுவாய்க் காய்ந்தது.

“பெருந்திரு ஸன்னதிக்குப் போற வழியிலே நெனப்பில்லாமல் கிடந்தார்”

”ராமசாமி! ஐயாவுக்கு நாடி விழுந்துடுத்தடா !”

அத்தைப்பாட்டியின் அபயக்குரல் கேட்டு அப்பா அதான் தாத்தா திண்ணையிலிருந்து ஓடிவந்தார். அதுவரை ஐயா வந்ததுகூட அவருக்குத் தெரியாது. பாட்டு நோட்டில் அவ்வளவு ஆழ்ந்திருந்தார்.

அத்தை, ஐயாவைத் தோளில் சார்த்திக் கொண்டாள். ஐயாவுக்குக் கண்கள் செருகின.

”ஐயா என்ன ஆச்சு?”

ஐயாவுக்குத் தொண்டை ஒரே அடியாய்க் கம்மிப் போச்சு, அவர் வாய்க்குச் செவி வைத்துக் கேட்டால் ஏதோ பதினைந்தாயிரம் வருடங்களுக்கு முன்னால், பதினெட்டாயிரம் மைல்களுக்கப்பாலிருந்து ஒரு குரல் தீனமாக வந்தது.

“பெருந்திரு சன்னிதானம் வாசற்படியில் படுத்திருந்தேனா, வெடுக்குனு முழிப்பு வந்தது. உள்ளூர ஏதோ உஷார் சிலிர்ப்பில் வர முழிப்பு எதிரே யாரோ நிக்கறா. உடம்பில் அத்தனை உறுப்புகளும் விழிச்சுண்டு பதறி எழுந்து உட்கார்ந்தேன். யார் இது? எப்படி வந்தாள்? அகல் சுடரில் உருவம் தெரிஞ்சது.

சிவப்புப் பட்டுப் பாவாடை. மேலே பச்சைப் பட்டுத் தாவணி. தோளில் பச்சைக்கிளி.”

தாத்தா கை, வாய் பொத்திக்கொண்டது. ”நேத்தைய கடைசி அலங்காரம், ஜவுளிக்கடை ஜம்புநாதன் செட்டியின் அபிஷேகம்!”

”மூக்குத்தி என்கிற பேரிலே சின்னதும் பெரியதுமா ரெண்டு நட்சத்திரங்கள் ஜ்வலிக்கிறதுகள். அந்தக் கண்களின் ஒளி...” ஐயா கண்களைப் பொத்திக்கொண்டு விலங்குபோல் தலையை உதறிக்கொண்டார்.

கடல் இருட்டின்மேல் மணிக்கூண்டு கதிர்ப் பாய்ச்சல் –

லால்குடி சுற்று வட்டாரத்தைத் தாண்டாத ஐயா, மணிக்கூண்டையும் கடலையும் எங்கு பார்த்தார்? எப்போ பார்த்தார்? முதலில் இந்த பாஷையே ஐயாவுடையது இல்லை.

”கண்களின் ஒளி வீச்சின் கூசல் அதன் பின்னால் அந்த முகத்தைச் சரியாகப் பார்க்கவிடலே. முகம் கோட்டுக்குள் அடைச்ச நிழலாப் போச்சு. ஆனால் அந்தக் குறுஞ்சிரிப்புக்கூடவா ஒளி வீசும்? இடுப்பில் ஒரு கை, மறு கையில் சாட்டைபோல் பின்னலைச் சுழட்டிண்டு.”

”நான் திகிலாயிட்டேன். இருக்கிற தைரியத்தை, மனசை ஒண்ணு கூட்டிண்டு கண்ணை இறுக மூடிண்டு “யாருடி நீ? இங்கே எப்படி வந்தே? பெருந்திரு மேல் ஆணையா சொல்றேன் இங்கேயிருந்து ஓடிப்போ !”

”கடகடன்னு சிரிக்கிற சத்தம் கேட்டது. ஓடிப்போற கொலுசின் ஓசை கர்ப்பக்ருஹத்துள் ஒடி மறைஞ்சுடுத்து. அப்புறம் என்ன ஆச்சு தெரியாது.”

தலை தொங்கிப்போச்சு. தாத்தா ஐயாவைக் கட்டிண்டு, விக்கி விக்கி அழுதார்.

”ஐயா, குடி கெடுத்தையேடா! ஆயுசுக்கும் நான் என் பாட்டு நோட்டைக் கட்டிண்டு என்னத்தைக் கண்டேன்? யாருக்குமே கிட்டாத பாக்கியம் உனக்குக் கிட்டியும், எட்டி உதைச்சுட்டே. இனிமேல் இந்தக் குடும்பத்துக்கு விமோசனம் உண்டோ?”

ஐயா படுக்கையை விட்டு எழுந்திருக்க மாதம் சென்றது. பிறகு அவர் வேலைக்குத் திரும்பவில்லை. திரும்பவும் பழையபடி பழைய ஐயாதான். வீட்டில் வெல்லப்பானையைத் தூக்கிண்டு ஓடிண்டு, மாற்றான் கொல்லையைக் கொள்ளை அடிச்சுண்டு, அடிச்சதைப் பசங்களுடன் பங்கிட்டுண்டு, திரும்பவும் வெறுங்கையை வீசிண்டு, சிரிச்சுண்டு, சீறிண்டு, வெகுளியா, எல்லோருக்கும் வேண்டியவராய், தனக்கு உதவாக்கரையாய் - தன் வேளை வந்து சாகிறவரை அப்படியே...

'எனக்கு - என்னுடையது' எனும் தனிச் சொந்தங்களிலிருந்து விடுபட்டு, அதனாலேயே எல்லாமே தனக்குச் சொந்தமாகி, பொறுப்பற்ற, கவலையற்ற அதுபோன்ற வாழ்க்கை கிட்டல் அரிது. பொறாமைக்கு உரியது.

ஞானசித்தி இலாது, கௌபீனத்தோடு மட்டும், தரிசன சித்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பாற்கடல்/அத்தியாயம்-5&oldid=1532529" இலிருந்து மீள்விக்கப்பட்டது