பாற்கடல்/அத்தியாயம்-6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
அத்தியாயம்-6

என் பிள்ளைப் பருவத்தினிலே கிராமத்தில், பந்தி போஜனத்தின்போது ஒரு பழக்கம் உண்டு. பாயசம் தாண்டி மோருக்குமுன், வீட்டு எஜமான், “ஏ நாணு, ஒரு சுலோகம் பாடேன்! ஏய், எல்லோரும் கொஞ்சம் சத்தம் போடாமே இருங்கோ, நாணு சுலோகம் பாடப் போறான் - ஊம் - ஆரம்பிக்கட்டும் - யாரங்கே? பாயசம் இன்னொருதரம் பந்தி பூரா விசாரியுங்கோ."

அவ்வளவுதான். தொண்டையைக் கனைத்துக் கொண்டு,

“மாதா ராமோ மத்பிதா ராமச்சந்த்ரா ப்ராதா ராமோ.

நாணு பிடித்தாரானால், அன்று சாரீரமும் ‘வபையாக வாய்த்துக்கொண்டு, ராகமாலிகையில் இறங்கிவிட்டாரானால், மோருஞ்சாதத்துக்குக் கை காய்ந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான். தாம் பாளத்தில் சாதத்தின் மேல் ஈ அப்பும். யாரும் ஒண்ணும் செய்ய முடியாது. அந்த ஸ்லோகம் முடிந்தவுடன், "மாணிக்க வீணா முபலாலயந் தீம். நாணு இன்னொரு சுலோகத்துக்குத் தாவிவிடுவார். மோருஞ்சாதம் வேண்டாம் என்று யாரும் பந்தியை விட்டு எழுந்து செல்ல முடியாது. அந்த மாதிரி அநாகரிகத்தை யாரும் நினைக்கவே முடியாது. உடனே தேவாரம், தோடுடைய செவியன். அடுத்து, துள்ளுமத வேள்கைக் கணை யாலே' - விளாசு விளாசு என்று விளாசித் தள்ளி விடுவார். ஆடச்சொல்லி அஞ்சு பணம், ஒயச் சொல்லி ஒன்பது பணம் - ஆனால் ஒயச்சொல்ல யாருக்கேனும் தைரியமுண்டா? நாணு அவருடைய கொத்தவரைக் காய்ப் பின்னல் பிராயத்தில், காஞ்சீபுரம் நயினாப் பிள்ளையிடம் மூணுமாதம் குருகுல வாசம். அதற்குள் பாடம் வராது என்று அனுப்பிவிட்டாரா, அல்லது ஆகாத விஷமம் செய்தான் என்று அடித்துத் துரத்தி விட்டாரா? நாணுவுக்கே மறந்துவிடும் நாளாகிவிட்டது. ஆனால் தான் நயினாப்பிள்ளை சிஷ்யன் என்று முத்திரை குத்திக்கொள்வதற்கு மூணு மாதம் போதாதா! நாணு யாருக்கேனும் தம்பூரா மீட்டக்கூட மேடை யேறினதாக எனக்கு நினைவில்லை. அவருடைய வித்தை, வித்வத், அனுபவம் எல்லாம் பந்தியில் ஸ்லோகம் பாடுவதோடு சரி.

பந்தியில் ஸ்லோகம் பாடுவது, விடிவேளையில் வாசலில் சாணம் கரைத்துத் தெளிப்பது, சாப்பிட்ட இடத்தைச் சாணமிட்டு எச்சில் மெழுகுவது - வீட்டில் டேபிள் மீல்ஸ் வந்தபிறகு - இரவு படுத்துத் தூங்கிய இடத்தை மறுநாள் ஈரத்துணியால் துடைப்பது இதெல்லாம் என் பிள்ளைக்கு அடுத்த தலைமுறைக்கு நம் கலாச்சாரம் என்பது அறவே மறந்து, தகவல்ரீதியில் ஒரு சங்கதி. சிரிப்புக்குரிய சங்கதி (The Savages) யானால் ஆச்சரியமில்லை.

சரி, இது, இங்கே, இப்போ எதற்கு? விஷயத்துக்கு வருகிறேன்.

சென்ற பக்கங்களில் என் குடும்பத்தைப் பற்றியே இருப்பதால், சுய தம்பட்டத்தின் இரைச்சல் படிப் பவர்க்குச் சற்று அடங்க வேண்டாமா ? வீட்டுக் குள்ளேயே எத்தனை நாழிகை அடைந்திருப்பது! ஏற்கெனவே நான் என் எழுத்தில் குடும்பத்தை விட்டு வெளிவருவதில்லை எனும் புகாருக்கு ஆளாகியிருக் கிறேன். தெருவுக்கு வந்து சற்றுக் காற்று வாங்குவோமே! பாயசத்துக்கும் மோருஞ்சாதத்துக்குமிடையே ஸ்லோகம் லேசான intervat தெருவில் நின்று உங்கள் கைகளை மோருஞ் சாதத்துக்குக் காயவைக்கப் போகிறேன். திஜர. சொன்னது நினைவுக்கு வருகிறது.

"கதையாம், கட்டுரையாம், சரித்திரமாம்! கதை என்னடா கதை ஒருமுறை திறந்த கண்ணோடு உன் வீட்டுத் தெருவில் நடந்துவிட்டு வா. கதைக்கோ, கட்டுரைக்கோ விஷயம் கிடைச்சாச்சு! ஊர்வலம், கறுப்புக்கொடி, சட்டத்தின் தடை, எதிர்ப்பு, லத்தி சார்ஜ், துப்பாக்கிச் சூடு இவையெல்லாம் தெருவில் நடக்கும் சரித்திரமன்றி வேறு என்ன?” திஐர. பெரிய ஆள். எவ்வளவு உண்மையான வார்த்தை! கதைக்குரிய இலக்கணம் அத்தனையும் அவருக்கு அற்றுப்படி. வகுப்பு நடத்தமாட்டார். அவர் சொல்ல வந்தது யாதெனில், கதைக்குக் கரு, பார்க்கும் கண்ணுக்கு எப்பவும் காலிலேயே இடறக் காத்திருக்கிறது.

கட்டுரையின் உருவம் வேறு தவிர விஷயமும் அதே விதம்தான். கத்தரிக்காய்ப் பாவாடை (முதலில் அது பாவாடையா, அந்தக்காலத்து BA குடுமி மாதிரி அப்பளக்குடுமி நடுவில் ஆணிக் குடுமியா ? BA குடுமி என்றால் தெரியுமா? கல்லூரி மாணவன் ஆசாரம் கெடாமல் வைத்துக்கொண்டிருக்கும் அப்பளக் குடுமி நடுவில், குருவி வால்போல் இன்னொரு சின்னக் குடுமி நீள மயிருடன் வளர்ப்பான். நள்ளிரவில் எழுந்து படிக்கும்போது தூக்கம் வரும் அல்லவா? சுவரில் ஆணியில் கயிறு நுனியைக் கட்டி, மறு நுனியை, நடுக்குடுமியின் குஞ்சத்தோடு கட்டிக்கொண்டால், தூக்கத்தில் சாமி ஆடும்போது அவ்வப்போது கயிறு இழுத்து, விழிப்பைக் கொடுத்து பரீட்சைக்குப் படிப்பைக் காப்பாற்றும்) - கத்தரிக்காய்க் காம்பில் ஆரம்பித்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைத் தகராறில் கொண்டுபோய் முடிக்கலாம். இது சாக்கில் கேட்கிறேன் அல்லது கேட்டுக்கொள்கிறேன். எட்டு மாமாங்கம் காத்திருந்தாலும், இந்தப் பிரச்சினை உண்மையில் தீரப்போகிறதோ? இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா? (அல்லது குடித்ததா என்று சொல்ல வேணுமா?) என்று டிராகன் தன் மேல் உதட்டைப் பிளந்த நாக்கால், நக்கிக்கொண்டிருக்க, குழந்தை, கனவில் அம்மாப்பால் நினைப்பில் நாக்குச் சப்புக்கொட்டுவது போல, பாரதம், குரங்கு நியாயத்தின் தர்பாரைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தானா? கட்டுரையின் போக்குக்கு இதையே ஒருமாதிரி யாக எடுத்துக்கொள்ளலாம் என்று நான் நினைத்துக் கொள்ளட்டுமா? தவிர என் கொள்ளுப்பேரனுக்குச் சிரிக்க, இது சாக்கில் BA குடுமித் தகவல் கிடைச்சுப் போச்சு. “Savages! அவன் இன்னும் பிறக்கவில்லை. ஆனால் அவன் குரல் கேட்கிறது.

குடிகாரனின் தள்ளாட்டம் போல் கால்போன வழிதான் தன்வழி என்பதுதான் கட்டுரை வழி என்று முடிவு அல்ல.

மனச்சாட்சி, ஆணித்தரம், தராசின் நிர்த்தா கூடிண்யம், விஷய வெளியீட்டில் பொன் எடை போன்ற சொல் செட்டு, அதேசமயத்தில் சரளம், நையாண்டி - இப்படியும் கட்டுரைகள் உண்டு. தி.ஜரவின் பேனா விலிருந்து புறப்பட்டவையே இந்த இலக்கணங்களுக்கு சாகூஜி. வரலாறு - இது ஒரு வம்பு சமாச்சாரம். சர்வ ஜாக்கிரதையாக, சிரத்தையாகச் சேகரித்துக் கொடுத் திருப்போம். வம்சங்கள் கழிந்து ஒரு காலநேமி தோன்று வான். "இந்த ராமாமிருதம் என்னவென்று நினைத்துச் சரடு விட்டிருக்கிறான்? தமிழ்ப்பண்டிதர் ராமசாமி அய்யரை எங்கள் குடும்பத்துக்குத் தெரியாதா? என் தாத்தாவுக்குத் தாத்தா மாப்பிள்ளை வாத்தியாரிடம் படித்தவர்தானே ?” என்று Capsule ஐத் திறக்கும் முயற்சியில் இறங்கிவிடுவார். உடனே சாகூS, ஸம்மன்ஸ், சவப்பெட்டி திறத்தல், எலும்புக்கூடு ஆராய்ச்சி (ஆமாம்- இல்லை - ஆமாம் வில்வலன் வாதாபி Trick, ‘வாதாபி ஜீர்ணாபி என்று வயிற்றைத் தடவி செரித்துக்கொள்ளுமளவுக்கு நான் அகத்தியனா?) உருவேற்றத்தால் பொய்யே மெய் போலும்மே மெய் போலும்மே. மெய்யே பொய் போலும்மே பொய் போலும் மே. கடைசியில் பொய்யும் மெய்யும் சமுதாயத்தின் Fashionஐச் சேர்ந்தது. வரலாற்றில் இந்தக் கிலிகள் எல்லாம் உண்டு. வரலாறு ஒரு "பேஜாரு, சிலம்பில் சிறு பிழை என்று ராஜபாளையத்திலிருந்து விமர்சனப் புத்தகம் வெளிவந்திருக்கிறது. இளங்கோவடிகளுக்கு இடப்பொட்டில் லேசாகத் தலைவலி.

அடுத்தது உரத்த சிந்தனை. எழுத்தில் இதுபோல் ஒரு வெளியீடு, அதற்கேற்ற நடை-இப்போது ஸ்திரமும் ஆகிவிட்டது. அடிப்படையில் இது என் பேத்தி அபிதாவின் தனி உலகம். கூடத்தில் நாற்காலியெதிரில் படுத்து உருண்டவண்ணம் அவள் தனக்கே பேசிக் கொள்ள ஆரம்பித்துவிட்டால் அந்த நாற்காலியே ---

ஒருசமயம் T.V.

ஒருசமயம் அப்பாவின் ஆபீஸ்,

ஒருசமயம் Gas அடுப்பு.

ஒருசமயம் ராஜராஜேச்வரி அம்மன் கோயில் கோபுரம்.

ஒருசமயம் அவள் பள்ளியின் பின், விளையாட்டு மைதானம்.

அந்த உலகத்துள் வெளி ஆளுக்கு உரிமை கிடை யாது. ஆனால் அவள் உரக்கப் பேசிக்கொள்வதால், அனுமதியில்லாமல் நானாக நுழைகிறேன். அலிபாபா குகைக்குள் அந்தந்த ஆவாஹனத்துக்கேற்றபடி அவள் உரக்கப் பேசிக்கொள்வதால், கேட்டவர்களுக்குக் கற்பனை. ஆனால் அவளைப் பொறுத்தவரை அவள் காணும் உலகம் அவளுக்கு, அவள் எண்ணத்தின் தீவிரத்தில், அவளைச் சூழும் உலகத்தினும் உண்மை பழம்வெள்ளத்தை அடித்துச்செல்லும் புதுவெள்ளம். ஆழத்தில் காலைச் சுற்றிக்கொள்ளும் பவழக் கொடி. இதன் அணைப்பு பெரிது. நனவோடை (Stream of consciousness) aiv6avsT6) ஸ்லாவதர் டாலியின் Surrealism. நான் எனக்காகவே எழுதிக்கொள்கிறேன்’ எனும் வீறாப்பு. இடைக்கோடுகளின் அழிப்பு போகாத ஊருக்கு ஆகாத வழி - இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அது தான் சொல்லிக்கொண்டே போகிறேனே, அத்தனையும் உரத்த சிந்தனை உத்தியுள் அடங்கும்.

எந்த உத்தியை எழுத்தாளன் கையாண்டாலும் சரி, அத்தோடு இணைந்து அதேசமயம் அதைத் தன்னோடு பிணைக்கும் கட்டுப்பாடு, பொறுப்பு, உழைப்பு (discipline) அவன் பாஷைக்கு அத்தியாவசியம். A method in madness. மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை, அபிதா, நாற் காலியில் மாற்றி மாற்றிப் பார்க்கும் உருவங்கள் அவள் எண்ணத்தின் ஆக்க சக்தியில் அவளுக்கு முற்றும் பொருந்தும். அந்த உலகம் அதன் ஆக்க முறையில் ஸ்ருதி சுத்தமானது. அந்த ஸ்ருதி சுத்தம்தான் எல்லாமே. அபிதாவுக்கு அது சுலபம். பிடிவாதங்களும் அவ நம்பிக்கைகளும் கேலியும் நாளடைவில் ஏறி ஏறி முற்றிப் போன நமக்குக் கடினம். சாத்தியமே இல்லையென்று கூடச் சொல்வேன்.

கற்பனை காட்டாறாக ஒடுகிறது என்று சொல்லி விடலாம். ஆனால் காட்டாறும் கரைக்குள்தான் ஒடுகிறது. ஒருசமயம் கரை விரியலாம். உடையலாம். ஆனால் எதுவும் விளிம்பு மீற முடியாது. புதுக் கரைகள். மேடு பள்ளமாகும். பள்ளம் மேடாகும். அவ்வளவுதான். சமுதாயம் தன் இஷ்டத்துக்கு அமைத்துக்கொண் டிருக்கும் ஒழுங்குபாடு வேறு. இயற்கையின் நிரவல்வழி வேறு. பரஸ்பர ஈர்ப்புசக்தியில் காலம் காலம் கற்பாந்த காலமாக அந்தரத்தில் தாம் தனித்தனியாக இயங்கிக் கொண்டு சில கிரகங்கள் மற்ற கிரகங்களைச் சுற்றி வருவதுமே இந்த ஸ்ருதி சுத்தத்துக்குச் சான்று. ஒரு துளி அபஸ்வரம் அடித்தாலும் கவிழ்ந்து மோதி இந்த ஸ்ருதியில் இதுபற்றி உரக்கச் சிந்தனை புரிந்துகொண் டிருப்பதற்கு நாம் இருக்கமாட்டோம். The music of the spheres...

…..என்றவுடனே, நெடுநாட்களுக்கு முன் - எனக்குப் பதினைந்து வயது இருக்குமோ என்னவோ - ஒரு ஸங்கீத மையம் ஞாபகத்துக்கு வருகிறது.

மஹாராஜபுரம் விசுவனாத அய்யர் ஸபாவில் ஏதோ ஒரு ராகத்தை விஸ் தாரமாக ஆலாபனை பண்ணிக்கொண்டிருக்கிறார். முன்னணியில் வித்வான் களிலேயே பெரிய புள்ளிகள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு விழிக்கிறார்கள். ராகம் அவர்களுக்கே பிடிபடவில்லை என்றால் நாங்கள் பாமர மக்கள், அதிலும் நான் அரை டிக்கெட் எந்த மூலை? ஆனால் நாதப்பிழம்பு சபையோரைத் தன் பாகில் கட்டி, இன்னும் புறப்பட்டுக் கொண்டே யிருக்கிறது. பிடில்காரர் ஜாக்கிரதையாக, பாடகர் காட்டும் வழியே நூல் பிடித்துக்கொண்டு வருகிறார்.

திடீரென்று டைகர் வரதாச்சார்யார் எழுந்தார். சபையென்று கூடப் பாராமல் மேடைக்கு வந்து பாடகரைக் கட்டிக்கொண்டு, "அடே விசுவநாதா! தேவமனோகரியை இவ்வளவு விஸ்தாரமாக ஆலா பனை பண்ணி இன்னிக்குத்தான் கேக்கறேண்டா !”

பாராட்டுபவர் தியாகய்யர்வாளின் நேர் சிஷ்ய பரம்பரை பாடுபவர் வர ப்ரஸாதி. மனோதர்மத்துக்கு மறுபெயர் மஹாராஜபுரம். தவிர அழகன். ஸ்பா ரஞ்சிதன். வெளித்தோற்றம், உண்மையான சரக்கு இரண்டும் சேர்ந்துதான் ஒரு குறிப்பிட்ட effect முக்கிய மாக சங்கீதத்தில் விளைகின்றது. சம்பவத்துக்கு என் சாயம் அளவுமீறி ஏறுமுன் நிறுத்திக்கொள்கிறேன்.

இங்கு நான் உறுத்திச் சொல்ல முயல்வது யாதெனில், தேவமனோகரி ஆலாபனை பழக்கத்தில் வராததால் அதற்குரிய ஆரோஹண அவரோஹண ஸவரங்கள், இயக்கவரம்புகள் இல்லாமல் போய்விடுமா? அஃதில்லாமல், அதன் விதிப்பயனாய், அதை அடை யாளம் கண்டு கொள்ளல் இயலுமா? பிரண்டால் பூகம்பம் அல்லது வேறு ராகம் தேவமனோகரி இல்லை.

அதேபோல், எழுத்துக்கும் ஸ்வரம் உண்டு. அனு ஸ்வரங்கள் உண்டு. கால ப்ரமாணம் உண்டு. லயமுண்டு. மோன ஸ்வரங்கள் வேறுண்டு. எழுத்தை நான் பயிலும் விதத்தில் இது என் அனுபவம். அனுபவம் காரணமாக அனுமானம்.

ஸங்கீதம், சிற்பம், ஒவியம், பரதம், எழுத்து, சிந்தனை (ஆம்; சிந்தனைகூடத்தான்) இத்யாதிகள் ஒட்டுக் கலைகள்தாம். சூரிய ஒளி விசிறி விரிந்த VIBGYOR.

இன்று, தேவமனோகரி என்ன, புதுப்புது ராகங்கள், வாயில் நுழையாத பெயர்களுடன் பழக்கத்திலேயே இருக்கின்றன. நன்றாயுமிருக்கின்றன. இல்லையென்று யார் சொல்லுவார்?

ஆனால், அந்த நாளில் இந்த தேவமனோகரி சம்பவம் எங்களுக்குப் பெரிசு.

விழிகளில் பாஷ்பம் பெருக, "அடே விசுவநாதா !”

அப்புறம் அவரிடமே பலமுறை தேவமனோகரி கேட்டிருக்கிறோம். ஆனால் அந்தத் தருணம் கிடைக்குமா? அதுவே எனக்கு இன்னும் நெஞ்சில் மணிக்கூண்டு. என் எழுத்தை ஏற்றுக்கொள்பவர் ஏற்றுக் கொள்ளட்டும். அன்று தேவமனோகரி கேட்டேன். தேவமனோகரி உண்டு. அதனால் நானும் ஒரு ராகம். நான் எனும் ராகத்தின் வெளியீடுதான் என் எழுத்து.

"அடே விசுவநாதா !”

தருணம்.

இந்த வார்த்தை தலைகாட்டிவிட்டது. தருணத்தைப் பற்றித் தனி அத்தியாயத்துக்கே விஷயம் இருக்கிறது. வாழ்க்கையில் தருணங்கள் சேர்ந்துகொண்டேயிருக் கின்றன. அவற்றை வார்த்தைகளில் பிடிப்பது அதன் தனி ஸாகஸம், த்ரில் - அதை இப்போது எடுத்துக் கொண்டால் பாதை மாறிவிடும். மறுபடியும் வேளையும் இடமும் கொடுக்கையில் சொல்கிறேன்.

கதை, கட்டுரை, வரலாறு, கவிதை, உரத்தசிந்தனை, இவை தாண்டி, எழுத்தில் - ஏன், பரிசோதனையில் இன்னொரு கட்டம் இருக்கிறது. அதை நான் அடைந்து விட்டதாகச் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால் இருக் கிறது. அதன் சாயலை உள் பிரக்ஞையில் தூரதிருஷ்டி யாக உணர்கையில்…….

பாஷை எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. ஆனால் பற்றாத இடங்கள் வேணது உண்டு. இது சமயங்களுக்குத் தனி பாஷையே வேணும் என்பது என் கருத்து. போதாததற்கு எனக்கு ஏற்கெனவே தமிழ் போதாது. நான் தமிழ்ப்பண்டிதர் பேரன். ஆனால் நான் தமிழ் படித்தவன் அல்லன். என்னைச் சுற்றியிருக்கும் நவயுக இளம் எழுத்தாளர் சிலருக்கு இருக்கும் தமிழ்ப் பாண்டித்யம் எனக்கு பிரமிப்பாயிருக்கிறது.

நான் குறிக்கும் நிலையை ஒரளவு உணர்த்த ஆங்கில வார்த்தைகள்தான் சிரத்தையாக இப்போது தோன்றுகின்றன. Legend, fable, parable, விஷயமும், சொல்லும் விதமும் ஒன்றாகி, அதன் தாய்மையில் தோய்ந்துபோய்,

அதன் பூனூாலை அறுத்துக்கொண்டு,

மானுடம் எனும் பண்பில் மூழ்கி

ஜீராவில் ஊறி ஊறி நைந்து

போன ஜாங்கிரி போல்

உத்திகள் இற்றுப்போய்

நிபந்தனைகளிலிருந்து விடுதலை அடைந்து

எழுதினவன் எழுதினதில் மறைந்துபோய்

இது இன்னும் முற்றுப்பெறாத வாக்கியம்தான்.

ஏனெனில் இது என்றும் முற்றுப்பெறாத எண்ணம்.

இந்த ஆசை ஒரு பேராசை, பேராசை என்பதனா லேயே ஒருவேளை, துராசைகூட.

இதில் ஒரு அமானுஷ்யம், நேரில் பார்த்தாலும், அல்ல - நிரூபணங்கள் இருந்தாலும், நம்பமுடியாத தன்மை இருக்கிறது.

இந்த சாதனா வீரர்களில் --

சங்கரர், பாரதி, பரமஹம்ஸர், விவேகானந்தர், காந்தி. பாரதி வாழ்ந்துகொண்டிருந்த சமயத்திலேயே இவன்போல் ஒரு பிறப்பு உண்டா எனும் அதிசயிப்பில் இதிஹாச உலகில் புகுந்துவிடுகிறார்கள். நாட்டின் முதுகெலும்பாய் மாறிவிடுகிறார்கள்.

சுந்தரகாண்டம் கேட்கிறோம், அல்லது படிக் கிறோம். வால்மீகியையா நிமிஷத்துக்கு நிமிஷம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்? நாம் வேண்டுவது அனுமத் பலம். பெருந்திருவை தரிசிக்கிறேன். ஸ்தபதியை நினைக்கிறேனா? எழுத்து பாராயணத் தோடு கலந்துவிடல் வேண்டும்.

இதில் விசுவப் பிரேமையிருக்கிறது. "என் அஸ்தியை வயல்களில் தூவிவிடுங்கள்"-நேரு)

இதில் ஒரு ஸ்வாயாகாரம் இருக்கிறது. பிரளய காலத்தில் சிவனின் புன்னகை இதில் அரும்பு கட்டுகிறது.

பூமியின் மண்ணோடு, ஜீவனுக்கு எருவாகிவிடும் எழுத்து.

தியானத்தின் மூலம் சமாதி நிலை சாத்தியமானால்,

எழுத்து மூலம் - சொல்ல அஞ்சுகிறது - அநாம தேயத்தின் ஸர்வாகாரம்.

Legend, fable, parable.

பதவி கிடைக்குமா? கிடைத்துவிட்டாலும் ஏதோ விபத்தில் அது நியாயமில்லை என்றுகூடத் தோன்று கிறது. ஆனாலும் கிடைக்குமா?

எப்பவோ ஒரு நண்பர் சொன்னது:

குண்டலினி சக்தியின் விழிப்பு எல்லாருக்கும் உண்டு. யோகம் பயிலாவிடினும், நினைவு பூர்வமாக உணர்ந்தாலும் உணர முடியாவிட்டாலும், ஒருமுறை நிச்சயம் உண்டு. விழிப்பின் நேரமும், சமயமும் முன் அறியற்பாலதன்று. மெதுவாகச் சுருள் கழன்று, மூலாதாரத்தினின்று ஸர்ப்பம் முதுகின் நரம்புத்தண்டின் மேல் ஏறத் துவங்குகிறது. ஒரு தூரம் ஏறியபிறகு - எம்மட்டு என்று யாரே அறிவார் ? அல்லது ஏறுவதற்கு முன்னரேயோ. அதையும் யாரே அறிவார்? ஒருமுறை தன்னைச் சுற்றிப் பார்க்குமாம். அந்த நோக்கமும் என்ன ? அதற்குத்தான் தெரியும். இந்த ஸர்ப்பமே உள்ளதா? அல்லது உருவகமா? இதுவே தனி ஆராய்ச்சி. இருள், உறை கழன்று உள் ஒளியின் புறப்பாடை இம்முறையில் ஏற்றுத்_கொண்டோமானால் அது விழிப்பின் முதல் சுற்றுப். பார்வையின் விளைவாகத் தான். மனிதன் தன் பிறவியின் அவதார நேர்த்தியை (genius) அடையாளம். கண்டுகொள்கிறான். இதன் நேர்பலன், அந்தந்த மனப்பான்மைக்கேற்ப ஒவியமோ, காவியமோ, ஸங்கீதமோ, சிந்தனையோ இத்யாதி கலை ஈடுபாடு உண்டாகிறதாம்.

ஆனால் இதுவே தன்னைத் தேடலின் மிகமிக அரிச்சுவடி நிலை. ஸத்தியத்தின் சொர்க்க வாசற்கதவு மணிகளின் கிண்கிணி. கதவுகள் இன்னும் திறக்கக்கூட இல்லை. கடக்க வேண்டிய பிராகாரங்கள் உள்ளே எத்தனையோ இருக்கின்றன. அவைகளுக்கு அப்பால் ஸன்னதி, அந்த ஒளிதான் சொர்க்கவாசல் வரை எட்டியிருக்கிறது. அதற்கு இங்கேயே தங்கப் படிக்கட்டில் நெற்றி பொருத்தி இந்தப் பிறவியின் முதல் அஞ்சலி.

ஜீவனின் முத்துக் குளிப்புக்கு உறுதென்பாக, அருளப்பட்ட வரப்பிரசாதமாக, அடைந்திருக்கும் ஆற்றலே எடை காண்பவனின் விழுக்காடு. பாலை வனத்து மணலில் உச்சி வெயிலில் விழுந்துவிட்ட வைரக்கல்லைத் தேடுவது போல்தான். நடப்பது யாதெனில், லோகாயதமான வசதிகளைப் பெறுவதற் காக விழிப்பு தந்த வித்தையைக் களங்கம் பண்ணிக் கொண்டு பயன்படுத்துகையில் அல்லது விழிப்பு வந்தும் கவனம் வேறு மாறாட்டங்களில் வழி தப்பிவிடுகையில், ஸர்ப்பம் தடாலென்று விழுந்து பழைய மயக்க நிலையில் ஆழ்ந்துவிடுகிறோம். அப்புறம் என்ன? அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு, அகப்பட் டதைச் சுருட்டுடா ஆண்டியப்பாவென்று - பின்னரும் அதே மாவை அரைத்துக்கொண்டு, நாளடைவில் அடைந்த வரமும் (gift) தேய்ந்து கட்டில் காலைப் போலப் பஞ்சபாண்டவர் என்று எழுதிக் காண்பித்த கதைதான். அநேகமாய் எல்லாரும் பின் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?

மனச்சாட்சி பணயமானதற்குச் சந்தர்ப்ப சூழ்ச்சி மேல் பழி சுமத்தியாகிறது. அல்லது ஊருக்கு இளைத் தவன் பிள்ளையார் கோயிலாண்டி, பிழைக்கத் தெரியாதவன் என்று கேலி. எல்லோரும் கல்லை எறிகிறார்கள். நானும் என் பங்குக்கு எறிகிறேன். வேறு என்ன காரணம் வேண்டும்? பின்,

“பாலைவனத்தில் அநேக புஷ்பங்கள் பார்ப்பவர் அற்றுக் கன்னம் சிவக்கின்றன” என்று சொன்னவன் பைத்தியக்காரனா?

ஒன்று எப்பவும் நெஞ்சில் இருத்திக்கொள்வோம். தகுதியும் அதற்கு உரிய வெகுமதியும் - இவைகளின் வழிகளே வெவ்வேறு. துருவ தூரம் என்பதை விதியாக ஏற்றுக்கொண்டால்தான் பிழைத்தோம். லட்சியம், தகுதி, லசுஷ்மி கடாகூழ்ம் மூன்றும் ஒரிடத்தில் ஒருங்கே சேருவது என்பது வெகு அபூர்வம். அதற்கும் காரணம் இல்லாமல் போகாது. ஆனால் அதை ஆராய்ந்து அறிந்து தெளிய அதற்கு ஒரு தனித்தகுதி எய்தல் வேண்டும்.

இதனால்தான் ஞானத்தின் விடிவை அடையாளம் கண்டுகொண்ட மஹாபுருஷன் (ரமணர் போன்றவர்) தப்பித்தோம் என்று வீட்டை விட்டு ஓடிவிடுகிறான். நம்மிடம் அந்தத் திராணியிருக்கிறதா? - ஹ"ம். இந்தப் பொருமலுடன் இந்த ஏக்கம் சரி.

சரி. இருள் இறங்குகிறது. உள்ளே போகலாம்.

இருட்டில் கூடத்தில் தனியாக உட்கார்ந்திருக்கிறேன்.

மின்சாரம் அம்பேல். மனைவி பிறந்தகம் போயிருக்கிறாள்.

# # #

இன்று ஹிந்து செய்தி. சட்டத்தில் ஒரு நுணுக்கம் தெளிவாகும் வரை, பில்லா, ரங்காவைத் தூக்கு ஜனவரி நடுவரை ஒத்திப் போடப்படுகிறது. இல்லையேல் இன்று விடிகாலை தண்டனை நிறைவேறியிருக்க வேண்டும்.

# # #

காயத்ரியும் கண்ணனும் மயிலாப்பூர், சினிமாக் கலைஞர்களுக்கு ஏதோ பட்டமளிப்பு விழா.

# # #

தூக்கு தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமான குற்றம் நிகழ்ந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. பிறகு ஆசாமி களைத் தேடிக் கைதுசெய்து பின்பு, விசாரணை, தீர்ப்பு, அப்பீல், பிறகு சட்ட நுணுக்க விவகாரம், மனு மறுப்பு. உயிரின் ஊசலாடல் இன்னும் ஒயவில்லை. அவர்கள் இருவரின் மனோநிலை எப்படியிருக்கும்?

இன்று TV யில், "பொல்லாதவன். சேகர், ஸ்ரீகாந்த் திரும்ப மணி பத்தாகும்.

பில்லாவுக்கு ஜனாதிபதியைப் பார்க்க வேண்டு மாம், அவன் கொலை செய்யவில்லையாம். அவரிடம் தான் உண்மையைத் தெரிவிக்கப் போகிறானாம், பார்க்க முடியாவிட்டால்? 'சும்மா இறந்துபோகிறேன். இது என்ன பிடிவாதம்? இதில் என்ன அர்த்தமிருக் கிறது? இதுவும் ஒரு பாணியா? உண்மை என்பது 6T657607 ? What is Truth? Pontius Pilate SLL-55, Lஇரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் கேட்டு விட்டுப் போன கேள்வி இன்னும் பதிலுக்கு அலைந்து கொண் டிருக்கிறது.

வீட்டைச் சுற்றித் தண்ணிரும் சகதியும். இன்று மழை நின்றாலும், தண்ணிர் வற்றினாலும், சேறு காய ஒரு மாதம் ஆகும். மழையாவது அவ்வளவு சுருக்க, மழைக்காலத்தில் என் இஷ்டத்துக்காக நின்றுவிடுமா? ஐப்பசி கடைசியில் சம்பிரதாயப்படி குடமுழுக்குக்கு ஒரு பாட்டம் கொட்டக் காத்துக்கொண்டிருக்கிறது. வானொலி பயமுறுத்திக்கொண்டேயிருக்கிறது. இன்னும் 48 மணி நேரத்தில் - இன்னும் 36 மணி நேரத்தில். நெஞ்சில் அப்படியே வண்டல் இறங்குகிறது. பில்லா, ரங்காவுக்கும் ஒரு ஒரு நாளாக நெருங்க நெருங்க இப்படித்தானேயிருக்கும்?

பில்லா, ரங்காவுக்காக இரங்குகிறேனா, இது என் சொந்த பயமா ?

அட, நல்ல கதையாயிருக்கிறதே! என் சொந்த மனநிலைக்காக பில்லா, ரங்காவுக்காக, உலகம் நின்று விடுமா ? வெள்ளமென்றும், தீயென்றும், ரயிலென்றும் விபத்தென்றும் எவ்வளவு உயிர்ச்சேதம் நடந்துகொண்டிருக்கிறது? தவிர, ஏரோப்ளேன் hijack, தற்கொலை, இராக் - இரான் போர் அதுபாட்டுக்கு நடந்து கொண்டேயிருக்கிறது. பூகம்பம் மொத்தச் சகட்டில் வாங்கும் பலி பற்றவில்லையென்று இரானில், பிரதி தினமும் ஆளும் கட்சி பனங்காய் சீவுவதுபோல, எதிர்க்கட்சித் தலைகளைக் குலைகுலையாகச் சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறது. உயிர் மிகவும் மலிவாகி விட்டது. காய்கறிகளின் விலைதான் தலைவிரித்தாடு கிறது. வியாபாரமும் இப்போதுதான் மும்முரம்.

Life Marches On. அது யாருக்காகவும், எதற்காகவும் பார்க்கவில்லை, காத்திருப்பதில்லை.

என் தங்கையின் சடலத்துக்கு நெருப்பு வைத்து விட்டுச் சுடுகாட்டிலிருந்து திரும்பியதும் அம்மா கதறுகிறாள்; "ராமாமிருதம், எனக்குப் பசிக்கிறதேடா !” பத்து மாதம் சூளை வைத்த குழியாச்சே! அதிலிருந்து ஜ்வாலையின் ‘குபீர்’ But Life Marches On.

எது தன்னிரக்கம் ? எது உண்மையாக, மன்னுயி ருக்குப் பரிதவிப்பு?

எது கண்துடைப்பு? எது கண்ணிரைத் துடைப்பது?

Legend. Fable. Parable. என் பெரிய பாட்டனார் ஐயாவைச் சந்தேகமில்லாமல் இந்த ரகத்தில் சேர்த்து விடலாம். இதுமாதிரி ஒரு மனிதன் இருக்க முடியுமா என்று அவரிடம் ஒரு நம்பமுடியாத தன்மையிருந்தது. அத்தனை வயதிலும், ஆச்சரியத்துக்குரிய ஒரு குழந் தைத்தனம், தனக்கென்று ஏதுமில்லை. தனக்கென்று ஏதும் தேடவில்லை. வைத்துக்கொள்ளவில்லை. நாளைய கவலையுமில்லை. நேற்றையின் பச்சாதாபமும் இல்லை. இருந்தவரை அன்று அன்றைக்கே என, அவர் உடல் மனவறைகளுக்கு எட்டியவரை, ஒவ்வொரு நாளையும் பூராக வாழ்ந்தவர். அது அவருக்கு இயல்பாக அமைந்து விட்டது. ஆனால் அதையே வாழ்க்கையை வாழ ஒரு மாபெரும் உத்தி என்று நினைக்கையில் அதில் ஏதோ கவர்ச்சி legend இன் லக்ஷணங்கள் தோன்று கின்றன. எழுத்தில் மட்டும், கலைகளில் மட்டும்தானா உத்தி? வாழ்க்கையை வாழ்வது, வாழ்ந்து காட்டுவது - இதைவிடப் பெரிய உத்தி இருக்கிறதா என்ன?

இந்த அத்தியாயத்துக்கு, நனவோடை உத்தியில்,

‘எழுத்தாளனின் இலக்கிய வாழ்வில் ஒருநாள்' என்று தலைப்பு இடலாமா?

------------------------------

"https://ta.wikisource.org/w/index.php?title=பாற்கடல்/அத்தியாயம்-6&oldid=514144" இருந்து மீள்விக்கப்பட்டது