பாற்கடல்/அத்தியாயம்-7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
அத்தியாயம்-7

மீண்டும் ஞாபகத்துக்கு (எனக்கு அல்ல!) :

என் பாட்டனாரும் அவர் உடன்பிறந்தோரும்.

1. ஐயா, The Legend. எல்லோருக்கும் மூத்தவர்.

2. எல்.ஏ. ராமஸ்வாமி ஐயர்: என் பாட்டனார்; லால்குடி போர்டு ஸ்கூல் தமிழ்ப்பண்டிதர்.

3. எல்.ஏ. சிதம்பரம் ஐயர்: போலீஸ் இலாகா - குமாஸ்தாதான்; ஆனால் அவருக்கு எட்டுக் கண்ணும் விட்டெறிந்தது. கான்ஸ்டபிள், ஸ்ப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் வரை அவரவர் காரியங்களுக்கு ஒழுங்கு நடவடிக்கையிலிருந்து தப்புவதிலிருந்து பதவி உயர்வுக்குக் குறுக்கு வழி, கோணல் வழி வரை) இவர் வாசலில் காத்துக் கிடப்பார்கள். ஆபீஸ் நெளிவு சுளிவுகள் அற்றுப்படி, ஆங்கிலத்தில் சூரன். மேலதிகாரி ஆங்கிலேயன். அவர் கை காட்டிய இடத்தில், கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போடுவான். காம்ப் க்ளார்க் மேல் அவ்வளவு அபார நம்பிக்கை. எத்தனையோ பேருக்கு வழி திறந்துவிட்டிருக்கிறார்; அடைத்தும் இருக்கார் (இலாகா அப்படி). இத்த னைக்கும் படிப்பு மெட்ரிகுலேஷன் வரைதான்.

4. எல்.ஏ. சுந்தரம்: உப்பு இலாகா.

5. லசுஷ்மி: புக்ககம் லால்குடி பக்கத்தில் வாளாடி யில். கைநாடி பிடித்துப் பார்த்து உடல்நிலை சொல் வதில் அவ்வளவு நிபுணியாம். அவளுக்குச் சொல்லிக் கொடுத்த வைத்தியனே அவளிடம் யோசனை கேட்கும் அளவுக்குத் தேறிவிட்டாள். வெகு சீக்கிரத்தில், விளை யாட்டாக ஆரம்பித்ததுதான்.

"அதெல்லம் அம்சம். என் வீட்டில், பரணில் நாடிசாஸ்திரம் பற்றி மட்டுமே, அடுக்கடுக்கா புஸ்தகங் களும், ஒலைச்சுவடிகளும் கிடக்கு, பாட்டனார் படிச்சது. நானும் படிக்காமல் இல்லை. ஆனால் லக்ஷமி அம்மாளின் தரிசனம் எனக்குக் கிட்டுமா?”

6. எல்.ஏ. ஜகதீச ஐயர், பி.ஏ.பி.எல். இவர் வக்கீ லுக்குப் படித்ததாகத் தெரியுமே ஒழிய, தொழில் நடத் தினதாகத் தெரியவில்லை. வயிற்றுக் கோளாறில் நொந்த முகம். தினம் பொரித்த குழம்பு, பத்தியச் சாப்பாடு.

7. ப்ரவ்ருத்த ஸ்ரீமதி புக்ககம் லால்குடிக்கு அடுத்த ஆங்கரையில்.

8. எல்.ஏ. பிச்சு: கடைக்குட்டி, போலீஸ், தாத்தா இறந்த சமயம், இவர் லால்குடிக்கு ஈமச்சடங்குகளுக்கு வந்திருந்தபோது நான் முதன்முதலாகப் பார்த்தது. எனக்கு அப்போது வயது 10, 12 இருக்குமா? இல்லை; இன்னும் குறைவுதான். (ஏழு, எட்டு?) அவர் அதிகமாக யாருடனும் பேசிக் கலகலப்பாக இருந்ததாகத் தெரிய வில்லை. ஆஜானுபாகு, தலையில் அடர்த்தியான கன்னங்கரேல் மயிர். பரந்த முகத்தில் குத்துமீசை, (அல்லது கொத்துமீசையா? என்னவோ எலுமிச்சம் பழத்தை நுனியில் வைத்துப் பார்க்கிறதாமே! அந்தக் காலத்து பாஷை, போலீஸ் ஆனதால் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது)

அடுத்து இருபது இருபத்துஐந்து வருடங்களுக்குப் பின்னர்தான் மறுபடியும் பார்க்க வாய்த்தது. வேலையி லிருந்து ஒய்வுபெற்று லால்குடி வாசத்துக்குத் திரும்பி விட்டார். மாயாபஜார் ராக்ஷஸன் மாதிரி இருந்தார். முன்னுக்கும் பின்னுக்கும் ஏகத்தாறாகத் தள்ளி, உடல் சரிந்துவிட்டது. தலையிலும், மீசையிலும் பழைய கரேலும் பொலிவும் இன்னும் இருக்குமா? ஆனால் முகத்தின் இயற்கை கம்பீரமும், பின்னால் உத்தியோக ரீதியின் பலனாக அந்த கம்பீரத்தின் மேல் அதிகா ரத்தின் வார்ப்பும் போய்விடுமா?

"ஒஹோ, சப்தரிஷி பிள்ளையா?” தொண்டையில் மணல் நறநறத்தது. "அம்மாப்பெண் மாதிரியே இருக்கையே! பேஷ், எங்களுக்கு உன் தாயார் ரொம்ப உசத்தி. செல்லம். அம்மா எப்படியிருக்காள் ?”

இவர் ப்ரதாபங்களுக்கு இந்த வரலாற்றில் இட மில்லை. ஆனாலும் தனிக்கதை பெறும். அசாத்திய தைரியம். ஒரு கொள்ளைக் கூட்டத்தையே தனியாக வளைத்துவிட்டாராம்!

சிதம்பரம் ஐயர், சுந்தரம் ஐயர், பிச்சு ஐயர் நன்றாகச் சம்பாதித்தனர். அவர்கள் தொழில் பார்த்த இலா காக்கள் அப்படி.

ஐயாதான் தனக்கு உதவாத, ஊருக்குச் செல்லப் பிள்ளை.

தாத்தா (உஷ்! காது கேட்டால், கனவில் வந்து அதட்டுவார். ‘என்னடா தாத்தா? நீதான் வயசுக்கு முன்னால் தலை நரைச்சு கிழவனாயிட்டே!) அவர் உண்டு; அவர் பாட்டு நோட்டு உண்டு.

வக்கீலய்யா, எப்படியோ முண்டி அடித்து, பி.எல். தேறினாரே ஒழிய, தொழிலில் அதிர்ஷ்டமில்லை.

ஜி. சுப்ரமணிய ஐயருக்கு மாப்பிள்ளை ராசி கிடையாது.

இந்தக் குடும்பத்தில் ஆண் - பெண் அனைவருமே, ஏதோ உக்கிரம் படைத்தவர்கள். வெளித் தெரியா விட்டால், உள் புழுங்கும் உக்கிரம். காவிய நாயகம் உண்டோ இல்லையோ, காவியத்தன்மை படைத்த வர்கள். எல்லோருடைய தன்மையிலும் ஏதோ விபரீதமும் - (விரல் வைத்துச் சொல்ல முடியாது) - கட்டு மாத்திரை உரை சொட்டு மருந்துபோல் கலந் திருந்தது. அடிப்படை குரூரம்கூட என்று சொல்வேன். தவிர, தனி வர்க்க எண்ணம். (Clannishness).

காரம், பூரம் எல்லாம் சேர்ந்துதான் உயிர் காக்கும் லேகியம் அல்லது சூரணம் ஆகிறது.

பாற்கடலின் கடையலில் வாசுகி கக்கிய விஷத்தை ஆண்டவன் எடுத்துக்கொண்டான் எனினும் ஒரு சிறிதேனும் கடலில் கலவாது இருந்திருக்குமா? அதுவும் பின்னர் திரண்ட அமிர்தத்துடன் கலந்துதானே இருக்கும்? இல்லையென்று நான் நம்பத் தயாராக இல்லை. என் எண்ணம் என் உரிமை - (சரி, சரி, வண்டி ஸைடிங் மாறுகிறது, கவனி!)

ஆனால் வீட்டுக்கு வீடு, குடும்பத்துக்குக் குடும்பம் அவரவர்களுக்குத் தங்களைப் பற்றி எண்ணம் இப்படித் தான் இருக்குமோ என்னவோ? எண்ணச் செருக்கு ஏறத்தாழ, அவ்வளவுதானே! இதுகூட இல்லாவிடின், பின் எப்படி? இத்தனை செருக்குகளின் திரட்சிதானே மானுடத்தின் பெருமிதம்!

பெரியோரைப் புகழ்வோம்.

ஆண்களுக்குப் பொதுவான, அடித் தலைமுறை களுக்கும் இறங்கிவிட்ட ஒரு அங்கசேஷ்டை உண்டு. பத்மாஸன ஆரம்பத்தில், ஒரு காலை மடித்து, அந்தத் தொடைமீது மறுகாலைப் போட்டு, பாதத்தை ஆட்டிக் கொண்டு, நிமிர்ந்த முதுகுடன் மணிக்கணக்கில் உட்கார்ந்தவண்ணம் (சினிமாவில் வில்லன் 'ரிஷி” மடாதிபதி போஸ்) அது அரைப்பட்டினியோ, கால் பட்டினியோ, பேச்சிலோ, உட்கார்ந்திருக்கும் நிலை யிலோ மிடுக்குக் குறையாது. வாசற்படி இறங்கி, யாரையும் கைதாழ்ந்து கேட்க மாட்டார்கள். உதவு பவர்கள் தங்கள் கெளரவமாக பாவித்தல் வேண்டும். பேச்சிலும் அதிகாரம். இது என் தகப்பனார் பார்த்த கோணம். நான் சிறியன். ஆனால் பொதுவாக அந்தக் கூட்டத்தின் வணங்காமுடித் தன்மையை என்னால் மனக்கண்ணில் பார்க்க முடிகிறது.

இந்த அட்டஹாசக் குழாம் நடுவே ஒரே வரி சொருகிய 'ப்ரவர்த்த ஸ்ரீமதி எனும் பெயர், கண் தப்பியிருப்பின், அமிர்தமய்யர் பேறுகளின் எண்ணிக்கை முழுப்பெறாது. அவள் என் அம்மாவைப் பெற்ற பாட்டி அவள் கீர்த்தி பெரிதாகையால் தனியாகச் சொல்லும் நிலை கொண்டது.

வெள்ளைப் பீங்கான் நிறம். கன்னங்கள் அசல் பீங்கான்கள் போலவே பளபளக்குமாம். (வேறேதும் நினைத்துக்கொள்ள வேண்டாம்), ஜலம் விழுங்கினால் நெஞ்சில் கண்ணாடிபோல் தெரியுமாம். அவள் நிறத்துக்குப் பார்த்தவர்களின் அலங்கார பாஷை. இவளுக்கு நைடதம், நன்னூல் பாடம் என்று ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்.

பயன்?

ஆங்கரையில் சம்பந்தம். பெரிய குடும்பம். வேளைக்கு ஆளுக்குக் கால்படி அரிசி வேணும். அதற்கு வக்கும் இருந்தது. ‘மூடி வைத்துக் கல்யாணம் பண்ணி விட்டார்கள். பேசு மொழிக்குப் பெண்டிர் சொல். கவனி - ஆரம்ப எழுத்தாளர்களுக்கு என் சூத்திரம் அதில் சிந்தும் கனம், கேலி, செறிவு ஆண்களுக்கு சாத்தியமில்லை)

எள்ளும் பச்சரிசியும் கலந்தாற் போன்ற ஜோடிப் பொருத்தம். அழகு பார்த்தா அந்த நாள் திருமணங்கள்! புகுந்த வீட்டில் பெண் வயிறு பசியாமல் சாப்பிடு வாளா? அதைவிட முக்கியம், ஊர் வாயில் புகுந்து புறப்படு முன் வீட்டை விட்டுப் பெண்ணை எப்படி யேனும் கழற்றிவிடு.

நடராஜ ஐயருக்குக் காலில் சக்கரம். வீட்டைவிட்டு அப்பப்போ காணாமல் போய்விடுவார். பல மாதங்கள் கழித்துத் திரும்பி வருவார். மறுபடியும் 'அம்பேல். போகும்போது பண்டங்களைக் கழற்றிப் போனார். அல்ல, எடுத்துக்கொண்டு போனார். ஏன் போனார்? நான் உங்களைக் கேட்கிறேன். சில வீடுகளில் இதுபோல், செல்லாக்காசு ஒன்று இருக்கும். மளிகைக் கடைக்கார னிடம் கொடுத்து மாற்றிவிட்டதாகச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்போம். காய்கறிக் கடைக்காரனிடமிருந்து அதே காசு திரும்பி வந்துவிடும். வீட்டுக்கு வந்து சில்லரையை எண்ணிப் பார்க்கும் போதுதான் தெரியும். அதிர்ஷ்டக் காசு என்று தேற்றிக் கொள்வதா? ஐயோ. ஸ்ரீமதியின் அதிர்ஷ்டமே!

இதுதான் ‘ஸஸ்பென்ஸ். நடராஜ ஐயர் கஞ்சா அடிப்பார். இடது உள்ளங்கையில் இலைச்சூர்ணத்தை வைத்து வலது கட்டைவிரலால் தேய், தேய். நிமண்டு, மறுபடியும் தேய். பதம் காணும்வரை இப்படியே செய்து கொண்டிரு. அனுபவிக்கப்போகும் 'பங்'கின் எதிர்பார்ப்பில் இப்பவே கண்ணில் ஒரு செருகல். புகைத்துப் புகைத்துப் பொலிவிழந்து போன முகத்தில் நாளடைவில் வெந்நீர் அண்டாக் கரிபோல் கன்னங் களில் சேர்ந்துவிட்ட ஒர் அசடு. கூடவே, மாட்டிக் கொண்டோம், கழற்றிக்கொள்ள முடியவில்லை, பார்த்தையா எனும் உண்மையான சோகம்….

ஆச்சு ஆச்சு. இனிப் பொறுக்காது. எடு குழாயை, அத்தோடு ஒட்டிய துணியுடன் பற்றவை பற்றவை. வத்திப்பெட்டி இந்தச் சமயத்துக்கு மறந்துபோனால், அல்லது அதன் கடைசிக் குச்சியில் இருந்தால், அதுவும் கிழித்த சுருக்கில் 'சுர்ர்ரோடு - புஸ்க்" ஆனால் - இந்தச் சமயத்துக்கு நரகம் இதைவிட இல்லை.

புக் புக், புகு புகு, புக்டக். அப்பாடி, அம்மாடி! என்ன சுகம்! என்ன சுகம், பெகு ஸுக், பெகு ஸுக், மஞ்சி ஸுகம் மஞ்சி ஸுகம். உலகத்தின் அத்தனை பாஷைகளிலும் அந்த சுகம். அதையும் தாண்டி ஆனந்தம். சொர்க்கம்? யாருக்கு வேணும்? பின் வேறு எங்கு இருக்கிறேன்?

இதெல்லாம் அப்பா - அண்ணா சொன்னது. லாசராவுக்குத் தானாகவே இந்த "கெத்து வந்துவிடுமா? அண்ணா, பார்ப்பதற்கு - ஏன், சுபாவத்திலேயும் சாதுதான். ஆனால் அவரிடம் ஒரு 'வெள்ளை’க் கபடு உண்டு. தான் சிக்கமாட்டார். ஆனால் ? எதிராளிக்கு விலா தைக்கும்படி ஆகிவிடும்.

மேற்கூறிய சடங்கை, படிப்படியாக அதன் கடைசி சித்திவரை வீட்டுள் பண்ண முடியாது. வாய்க்கால் கரையோரம், துவைக்கும் கல், பாழ்மண்டபம், சில இடங்களில் தென்னங்கொல்லையிலோ, சப்பாத்திப் புதரிலோ, அடர்த்தி நடுவில் பறவைக் கூடுபோல் கிடைக்கும் ஒதுக்கிடம் - இதுபோல் மறைவு தேடியாக வேண்டும். முதலில் கஞ்சா சம்பாதிக்கணும். அவர் ஊர் ஊராய்த் திரிந்ததே கஞ்சா வேட்டையில்தானோ என்னவோ?

பொறுத்துப் பார்த்து, இது தேறாத கேஸ் என்று தெளிந்ததும், சகோதரர்கள் கழற்றிவிட்டனர். அரசப் பழக்கத்துடன் ஆண்டிப் பிழைப்பு தீவிரமாயிற்று. வீட் டுக்கு வந்தால், சாப்பாட்டோடு சாப்பாடு; தனியாகப் பண்ணிப் போடுவது என்ன தட்டுக் கெட்டுப்போகிறது? அந்த நாளிலேயே இல்லாதவருக்கும் இருக்கப்பட்ட வருக்கும் வித்தியாசம் அளவில்தான். வகையில் அல்ல. அனேகமாக எல்லார் வீட்டிலும் பானை நிறையச் சோறு. சட்டி நிறையக் குழம்பு, (ஆம், மண்பாண்டச் சமையல்தான். இப்போது அதற்கு ஒட்டல்களில் தனி விளம்பரம். தனிக்கட்டணம் கூடவோ என்னவோ) சட்டி நிறையக் கீரை, ஒருவேளை சுட்ட அப்பளாம், மூலையில் பழையது. வகைவகையாகப் பண்ணிப் போடவும் தெரியாது. வகைகளும் வழக்கில் இல்லை.

ஐயா யாத்திரையில் சொல்லாமல் கிளம்பும்போது வயிற்றில் பூச்சியை வாங்கிக் கொண்டு, திரும்பி வரும் போது 'குழந்தையைப் பார்த்தேளா? என்று ரவிவர்மா படத்தில் மேனகை போல் ஏந்திக்கொண்டு அவரும் ரிஷி போல் ஒரு கையால் கண்ணை மூடிக்கொண்டு, மறுகையால் தள்ளிக்கொண்டு. (அந்தப் போஸ்" கொடுக்கவில்லை. ஆனால் காட்டிய அக்கறை அவ்வளவுதான்) ஸ்ரீமதிக்குத்தான் அந்த வாழ்க்கை அலுத்துவிட்டதோ, இல்லை, அங்குதான் இனி அவளுக்கு மதிப்பு இல்லையோ - ஒருநாள், ராமசாமி அண்ணாவிடம், ஐந்து குழந்தைகளுடன் - இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள் - வந்துவிட்டாள்.

பின்னர் ஒருநாள் - நடராஜ ஐயர் இம்மையின் தேடலில் படும் அவஸ்தை காலதேவனுக்கே காணப் பொறுக்காமல், அவருடைய சீட்டைத் தேடிக் கண்டு எடுத்துவிட்டான். ஸ்ரீமதி தன் பேறுகளுடன் இங்கேயே வேரோடிப் போனாள்.

மூத்த பிள்ளைக்கு அடுத்துப் பெண்; அடுத்து என் அம்மா, அப்புறம் சுப்ரமணியன், சுந்தரம்.

பொதுவாகவே, இதுபோன்ற துர்ப்பாக்கியவதிக்குக் குடும்பத்தில், அவள் வயது கடந்த செல்லம் கிடைத்து விடும். இதை என் சொந்த அனுபவத்திலிருந்தும் சொல்கிறேன். ஸ்ரீமதியை இமைபோல்தான் காத்தனர். செல்லம் என்றால் என்ன? சொல் ஆதரவும், இருக்கிற கஞ்சியை வஞ்சமில்லாமல் வந்தவளுடன் பங்கிட்டுக் கொள்வதும்தான். தமிழ்ப்பண்டிதர் வீட்டில் வேறென்ன தனியாகக் கிடைத்துவிடும் ? ஒருவருக்கொருவர் பாட்டுக்கள் பரிமாறிக்கொள்ளலாம். அதுதான் நடந்தது.

ஆணுக்குச் சரியாக இலக்கிய விசாரம் பேசும் அறிவாற்றல், குண இயல்பு படைத்த பெண்மணி ஒரு பாக்கியம். அந்த வீட்டில் அடிக்கடி சின்னத்தனங்கள் பேச்சிலோ செயலிலோ நிகழா. ஒரு தோரணையிலேயே வண்டி ஒடும். ஆங்கரையில் இதே விலாசம் ஏது?

ஏதோ கையிலும் கழுத்திலும் இருந்த ஒன்று, அரை - பொன்னோ, காக்காப் பொன்னோ - பூட்டி, முதல் பெண்ணை, உடன் பிறந்தவர்மார் உபயத்தில் கட்டிக் கொடுத்தாச்சு. ஆங்கரைப் பையன், வேலை தபால் இலாகாவில்.

என் தகப்பனாருக்கு அத்தையைக் கண்டால் பயம். ஒருசமயம் கடையில் உப்பு வாங்கிவரச் சொன்னாளாம். இவர் ஏனம் கொண்டுபோகாமல், கடைக்காரனிடம் காகிதம் இல்லாமலோ இஷ்டமில்லாமலோ, எரிச்ச லோடு மடியில் ஏந்தப் பண்ணிவிட்டான். அண்ணா அப்போ என்ன, சின்னப்பையன் - இடுப்பு முண்டுத் தலைப்பை அப்படியே பிடித்துக்கொண்டே கவனத்தைச் சொந்த ஆகாயத்தில் பறக்க விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து மடியை உதறியதும் எண்ணி எட்டு உப்புக்கற்கள் உதிர்ந்தனவாம். அத்தை அன்று கொடுத்த விளாசலில் - அடேயப்பா? அத்தை பொல்லாதவள்.

என் அம்மாவும் தன் அம்மாவைப் பற்றி ஒரு கதை வழங்கியிருக்கிறாள்.

ஒரு நாளிரவு, வாசல் திண்ணையில் அவள் அம்மா வும் எதிர் வீட்டுப் பாட்டியும் பேசிக்கொண்டிருந் தாளாம். பக்கத்தில் ஒரு பிள்ளை குப்புறப் படுத்துக் கொண்டிருக்கிறான். மடியில் மறு பையனை உறங்கப் பண்ணிக்கொண்டிருக்கிறாள். அம்மா திண்ணைத் தூணைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாளரம்.

"இன்னிக்கு அடைக்கு அரைச்சேன். நாட்டுப்பெண் தட்டினாள். இரண்டு விண்டு வாயில் போட்டுண்டேன். ராமா, கிருஷ்ணா, இன்னிப்பொழுது கழிஞ்சது. விடிஞ்சால் நாளைக்கு வேறே பொழுது. வேறே படியளப்பு!”

இரண்டு என்றால் நாலு என்று கொள்ள வேண்டும். இது பாஷையில் திரிசமம்.

"ஸ்ரீமதி ! உனக்கு இன்னிக்கு என்ன பலகாரம்?"

"தோசை.”

"தோசையா?" - என் அம்மா ஆச்சரியமுற்றாள். அவளுக்கு வயது அப்போது ஐந்தோ, ஆறோ.

"சாதமே இல்லை, தோசையாம்!”

அன்று அரிசிக்காரி யோகாம்பாள் வரவில்லை. அவள் வரவில்லையானால் அன்றைய பாடு அவ்வளவு தான். ஏதோ பிராமணக் குடும்பம் என்று ஈவு இரக்கம் பார்ப்பாள். பணம் சற்று முன்னே பின்னே வாங்கிக் கொள்வாள். அந்த அன்னபூரணித் தாயும் வராவிடின் அன்றைய படியளப்பு ஆகாசம்தான்.

"திண்ணை இருட்டில் என் அடித்தொடையில் அம்மா ஒரு திருகு திருகியிருக்காள் பாரு. இப்போ நினைச்சாக்கூட அழுகை வரது."

ஸ்ரீமதியின் விஸ்வரூபம் அம்மு வாத்து முழு முத்திரை யுடன் அவள் மரணத் தறுவாயில்தான் வெளிப் படுகிறது.

என் தாய்க்கு அப்போது வயது பதின்மூன்று/ பதினாலு வயதுகளை உத்தேசக் கணக்கிலே ஒப்பிட்டுப் பார்க்கையில் ஸ்ரீமதிப் பாட்டி நாற்பது தாண்டினாளோ, சந்தேகம். ஒன்றிரண்டு கூடக் குறைய இருக்கலாமோ என்னவோ?

வீட்டில் யாருக்கோ திவசம். அதுசமயம் வழக்கப் படி குழுமும் அம்முவாத்துக் கூட்டம் இன்னும் பூராகக் கலையவில்லை.

திவசம் கழிந்த மூணு நாட்களுக்கு வீட்டில் பட்டினி தெரியாது. மூலைப் பழையதிலும், சுண்டான் குழம் பிலும் இரண்டு மூன்று நாட்கள் வண்டி தூம்தடாகா' வில் ஒடும்.

சுண்டக் குழம்பு ஆரம்பத்தில் நன்றாய்த்தா னிருக்கும். நானும் சாப்பிட்டிருக்கிறேன்.

பெரிய கற்சட்டி, அம்முவாத்து மியூஸியம் பீஸ் நானும் பார்த்திருக்கிறேன். அது உடைந்தபோது மன்னிப் பாட்டி அழுதாள்.

திவசத்தின் மிச்சம் மீதிக் குழம்பு, ரஸம், கூட்டு, பதார்த்த வகைகளுடன் இன்றியமையாத கீரையையும் புழக்கடையிலிருந்து பிடுங்கிச் சேர்த்து, இன்னும் கொஞ்சம் எண்ணெயையும் கூட்டிக் காய்ச்சி, சுண்டக் காய்ச்சி அன்றன்று குறையக் குறைய மீதியை இன்னும் காய்ச்சிக் காய்ச்சி மீண்டும் carry over ஐக் காய்ச்சி சுண்டச் சுண்ட அதற்கு ஒரு கறுப்பு கண்டு, ஆறின நிலையில் ஏடு புடைத்துக்கொண்டு, அப்புறம் ஒரு பழம் வாடை வீச ஆரம்பித்ததும், ஜாடை தெரிந்து கொள்ளாமல் அல்லது தெரிந்துகொள்ள மறுத்து - எல்லாம் இல்லாக் குறைதான் - உனக்காச்சு எனக் காச்சு என்று வகை பார்த்தால், அந்தக் கறுப்பு, அன்று பாற்கடலைக் கடைந்ததும் படர்ந்த நீலத்தை விழுங்கிய காலகண்டனையும் கவிழ்க்கவல்ல கரி என வேளை தவறி அடையாளம் கண்டுகொண்டு என்ன பயன்?

மூன்று நாட்கள் வயிற்றுப்போக்கில், குடல் சதையையே பிய்த்துக்கொண்டு வருவதுபோல் (நடந்ததும் அதுதானோ என்னவோ?) திருகித் திருகி அப்படி ஒரு வலி, அதிஸாரம் என்று அதன் பெயராம்.

ஆஸ்பத்திரியென்றால் அக்கரைச் சீமையென்று பயப்படும் நாட்கள். அங்கு நம் வருகைக்காகக் காத்திருக்கும் யமனுக்குத் தெரிந்த பாடாக, வீடு தேடி வரும் யமனே மேல். வேளை வந்துவிட்டது வந்து விட்டான். நல்ல யமன் ஊசிக்காதில் நுழையுமளவுக்கு உயிரோட்டம் குறுகிவிட்டது ஸ்ரீமதிக்குத் தெரிந்து விட்டது.

பணக்காரன் சுவர்க்கத்துள் நுழைவது ஊசிக்காதில் ஒட்டகம் நுழைவதைக் காட்டிலும் கடினம். அம்மு அகத்தில் அதுபோன்ற பணக்காரப் பிரச்சினைக்கு வழி கிடையாது.

ஆனால், இந்த ஊசிக் காதுதான் உயிர் இரண்டறக் கலக்கும் அகண்ட ஏரியின் முகத்துவாரம். அங்குதான் காதற்ற ஊ சியும் வாராதுகாண் கடைவழிக்கே. திருவெண்காடர் சொல்லித்தான் ஸ்ரீமதிக்குத் தெரிந்து ஆக வேண்டியதில்லை.

"அண்ணா ராமண்ணா" குரலில் தனி கணிர். கண்ணாடி உடையப்போவது போல், பயம்? பயம் தந்த தைரியம்? இந்த நாள் பாஷையில் ஹிஸ்டீரியா?

"இங்கேதான் இருக்கேன், ஸ்ரீமதி" தாத்தாவுக்கு இந்தத் தங்கைமேல் எப்படியும் தனி உசிர்,

"அண்ணா! நான் நாளைக்காலை தாண்ட மாட்டேன்! அம்மாப்பெண் எங்கே? அம்மாப் பெண்ணே!” அம்மாப் பெண் கையைப் பிடித்து, அண்ணன் கையில் கொடுத்து, "என் பெண்ணை சப்த ரிஷிக்குத்தான் நீ பண்ணிக்கணும்!”

"இப்போ என்ன அதைப்பத்தி? நாளைக்கு நடக்கப் போறதை யார் கண்டது?” மன்னி நீட்டி முனகினாள். அவளுக்குத் தன் பிள்ளைக்குப் பரிசப் பணம் வாங்க வேண்டும் என்று ஆசை இருக்காதா? மூத்த பிள்ளை. எப்.ஏ.க்குப் படித்துக்கொண்டிருக்கிறான். [*]

------

[*] அப்போதையக் காலம் மெட்ரிகுலேஷனுக்கு அடுத்து FA இரண்டு வருடக் கல்லூரிப் படிப்பு. PUCக்கு ஈடாக இருக்கலாம். அதுவும் 10+2வாக மாறிவிட்டது. ஆனால் அந்த FAக்கு இந்த 10+2 என்ன, இன்றைய BA. உறை போடக் காணுமா? அதன், அஸ்திவாரமே வேறு.

----

ஸ்ரீமதி காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரிய வில்லை. “நாலுபேர் நாலு சொல்வா. நீ கேட்கப்படாது. ஏற்கெனவே தகப்பனில்லாத குழந்தைகள். இதோ நானும் விட்டுட்டுப் போயிடப் போறேன். என் பெண் தெரியாத இடத்தில் புகுந்து கண் கலங்கினாள் என்று இருக்கக்கூடாது. நல்லதோ பொல்லாதோ அவள் இந்த விட்டுக்கே வாழ்க்கைப்-படட்டும். நான் இப்போ உன்னைக் கேட்கிறபடி நீ நடப்பதை நான் தெய்வமாக இந்த வீட்டைச் சுற்றிப் பார்த்துண்டு இருப்பேன். என்ன சொல்றே ?”

"அப்படியே பண்ணிக்கிறேன் ஸ்ரீமதி!”

“என் மற்றக் குழந்தைகள் எங்கே?"

சுப்ரமணியம், சுந்தரத்தை ஒருமுறை அனைத்துக் கொண்டு, முத்தமிட்டு, தன்னிடமிருந்து மெதுவாகத் தள்ளினாள். "இனிமேல் என்னிடம் வராதேயுங்கள். என்னைப் படைச் சவனைச் சந்திக்க நான் தயாராகணும்!” அவ்வளவுதான். சுந்தரகாண்டத்தை எடுத்து வைத்துக்கொண்டு இரவின் மிச்சப் போதுக்கு வியாக்யானம், வின்யாசம், கவிநயம், பொருள்நயம், சொல்நயம், மனோதத்துவ ஆராய்ச்சி.

"ஏன் அண்ணா, இந்த அனுமனைப்போல் தன்னடக்கம் உண்டா, இதை நம்பும்படியாக இருக்கா? அவன் சீதையைக் கண்டுபிடித்துக் கொடுக்காவிட்டால், கதை என்கிற ரீதியில் அதற்கடுத்த யுத்தகாண்டம் கிடையாது. பட்டாபிஷேகம் கிடையாது. உத்தர காண்டத்தை விட்டுத்தள்ளு; அது வண்ணான் வண்ணாத்தி அக்கப்போர்; நடந்துபோன காரியங் களுக்குச் சாக்குகள்; சமாதானங்கள் - ஆனால் இந்த ஹனுமான் ஒரு ஆச்சரியமான சிருஷ்டி. ராம ஜெபத்தின் சொரூபமே அவன்தானே ! ராம - இரண்டெழுத்து வார்த்தைதான். ஆனால் மந்திரம்னு எடுத்துண்டால், வெறும் உச்சரணை - திரும்பத் திரும்பச் சொல்வதற்கே என்ன சக்தி ! அப்புறம், எத்தனையோ சக்திகளுக்கு உறைவிடமாக இருந்தும் தன்னை மறந்திருந்தானாம்! அப்போ ஞாபகப்படுத்தற வன் ஞாபகப்படுத்த வேண்டிய முறையில் ஞாபகப் படுத்தினால் மனித சக்திக்கு எல்லையே இருக்காது போல இருக்கே! அதற்கு எடுத்துக்காட்டுதானே ஆஞ்ச னேயன், குரு என்கிறவன் புதுசா என்ன உபதேசம் பண்ணுகிறான் ? புதுசாக உபதேசிக்கவே என்ன இருக்கு? ஞாபகப்படுத்துகிறவன் குரு. அப்படித்தானே? தன் உணர்வு என்பதுதானே அனுமத் ப்ரபாவம்"

விழிகள் தளும்ப தாத்தா வாயடைத்து உட்கார்ந் திருக்கிறார். அணையப்போகிற சுடர் கடைசிக் கொழுந்து விடுகிறது. இனி இதுபோல் பேச்சு ஏது?

சொன்னபடியே பொலபொலவென விடிநேரத்தில் அடங்கிக்கொண்டே வரும் மூச்சில் கடைசியாகக் கெட்ட வார்த்தை:

"ஹா - லா - ஸ் - யம்!” மூத்த பிள்ளை பக்கத்தில் இல்லை. சென்னையில் draughtsman course-க்குப் படித்துக் கொண்டிருந்தான்.

மாரே வெடித்துவிடும் போல் தாத்தா விக்கி அழுதாராம். ஆண்பிள்ளை அழுதால் இன்னமும்கூட அது பயப்படக்கூடிய விஷயம். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. ஆனால் இது ஒல மணி, நல்லதற்கல்ல.

நான் இந்தக் குடும்பத்தில் பிறந்தவன்தான். ஆனால் சற்று ஒதுங்கி நின்று இவர்களைப் பார்க்க முயல்கிறேன். யார் இவர்கள் - ஆண், பெண் அடங்கலாக? லேசாகப் பேய் கலந்த தெய்வீகங்களா ? அல்லது அதன் ‘உல்ட்டாவா? எனக்கும் ஆரேஞ்ஜ் ஸிக்னல் விழுந்தாகி விட்டது. ஆனால் இன்னமும் இவர்களைச்'சிந்திக்கச் சிந்திக்கப் புது வியப்பே காட்டுகிறார்கள்.

இவர்கள் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு மிகைப் பட்ட தன்மை (abnormality) இருந்தது. அது இவர்கள் பரிணாமத்தை 3-Dஇல் பிதுக்கிற்று. அந்தப் பரிணா மத்தின் விவரம்தான் என்ன ?

இவர்களிடம் ஒரு மேடை ஆக்கிரமிப்பு இருந்தது. யமனிடமிருந்துகூட மேடையைப் பிடுங்கிக்கொள்ள வேண்டும். இது என் கடைசி நிமிஷம். இது என்னு டையது. கடைசிவரை இது என்னுடையதாகவே இருத்தல் வேண்டும்.

என்னுடைய வேளை (moment of truth) வரும்போது இவர்களுக்குரிய வாரிசாய் நான் உயர்வேனா? என் எழுத்து அதற்கு எனக்குக் கை கொடுக்குமோ?

இவர்கள் யதார்த்தத்துக்குச் சற்று புறம்பானவர்கள். இவர்களிடம் ஒரு unreality கமழ்ந்தது. அதனால் இவர்கள் பொய்மையர்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் உலகத்துக்கும் இவர்களுக்கும் பிணைப்பில் ஏதோ ஒரு நரம்பு அறுந்திருந்தது. தாம்புக்கயிறு திரி பிரிந்தாற்போல் எந்த நிமிடமேனும் கயிறு அறுந்து வாளி மூழ்கிவிடக் கூடும்.

வாழும் வாழ்க்கையையே நடைமுறையில் இலக்கிய மாக மாற்ற முயன்றார்களோ?

இவர்களிடம் ஒரு தன்னழிப்புணர்வு மறைந்து கிடந்ததோ ? உலகில் சாவின் விளைவுக்கே காரணம் death-wish என்று ஒரு வாதம் ஏற்கெனவே வழக்கில்

இருந்து வருகிறது. அது இவர்களிடம் அழுத்தமான விளம்பல் கண்டிருந்ததோ ?

தன்னழிவு மூலம் அமரத்வம், மரணம்-? பூ!

பெருந்திரு, குலதெய்வம் - இன்னொரு பூ! நம்மையே அவளிடம் ஒப்படைத்தாகி விட்டது. நம் நிலைமை அவளுக்குத் தெரியாதா? அவளை நாம் என்ன வரம் கேட்பது? அப்புறம் குலதெய்வம் என்கிற பட்டம் என்ன வேண்டிக்கிடக்கு? அதைவிட அரிசிக் காரி யோகாம்பாளுக்கு தூபம் போட்டால் கைமேல் பலன் உண்டு.

"நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்.”

விரோதம், குரோதம் பாராட்டினாலும், கடைசி வரை அதுவேதான். அப்படித்தான். வளைந்தே கொடுக்கமாட்டோம். ஆனால் இத்தனைத் தர்க்கம் குதர்க்கம் என் அறிவின் - அல்ல - அறிவு என்று நினைத்துக்கொண்டிருக்கும் அசடின் அதிகப்பிரசங்க மாக இருக்கலாம்.

'பிழைக்கத் தெரியாத கூட்டம்! அண்ணா புழுங்கு வார். அப்பாவின் தகுதிக்கு அவர் காலத்துப் பெரிய மனுஷாளைக் கொஞ்சம் நைச்சியம் கட்டிக்கொண்டு போயிருந்தாரானால் வித்வத் பிரகாசித்திருக்கும்; குடும்பம் உருப்பட்டு இருக்கும். எங்கள் ஜாதகமே திசை மாறியிருக்கும். கால்மேல் கால் போட்டுக்கொண்டு, “ஏ எச்சுமி, இந்தப் பாட்டில் இந்த வரி எப்படி? ஏ சீமதி, நீ என்ன சொல்றே?" என்று திண்ணை தர்பார் நடத்திக் கொண்டிருந்தால் ஆகிவிட்டதா?

அரேரே எச்சுமி வந்துட்டாளா? இவள் தாத்தாவின் தங்கை லகஷ்மி அல்ல. இது வேறு எச்சுமி. இவர் வாங்குகிற பதினஞ்சு ரூபாய் சம்பளத்தில் ஒரு அந்தஸ்து லசுஷ்மி. அப்படியேனும் லக்ஷ மிகரம் உண்டா ? யோகாம்பாள் அளக்கிற படியில் சில சமயங்களில் பங்குக்கு வந்துவிடுவாள்.

லக்ஷ்மியை முதன் முதல் அவள் அடையாளத்தடன் பார்த்தபோது அவள் கிழவியாகிவிட்டாள். "இப்போ இப்படி ஆயிட்டேனே என்று பார்க்காதே. அந்தக் காலத்தில்." என்று தனக்குத் தானாவது பீற்றிக்கொள்ளு மளவுக்குச் சிதைந்த களைகூட அவளிடம் ஏதுமில்லை.

பிரம்மோத்ஸவத்தின் போது ஊர்வலத்துக்குப் பின் கோயிலுள் நடராஜா சன்னதிக்கெதிரே உத்ஸவரை இறக்கி, அங்கே நாயனக் கச்சேரி, கும்மி கோலாட்டம் பரத்நாட்டியம், தேவாரம், கேளிக்கை, உபசாரங்கள் நடக்கும். அங்கிருந்து பள்ளியறைக்கு எழுந்தருளப் பண்ண மணி ஒன்று, இரண்டு ஆகிவிடும்.

அந்தச் சமயத்தில், பழைய பாரம்பரிய உரிமையில் கும்மியடிக்கும் தேவதாசிக் கூட்டத்தில் லக்ஷமியும் கலந்துகொள்வதைப் பார்த்திருக்கிறேன்.

"குழந்தைகள் சோற்றுக்கு ஆலாப் பறக்கிறதுகள். இதில் இது ஒண்ணுதான் குறைச்சல். குடிக்கிறதுக்குக் கூழ் கூட இல்லை. ஆனால் கொப்பளிக்கிறது 'பன்னீர்’.

அண்ணாவுக்கு மிக மிக வெறுப்பு.

கொடிது கொடிது வறுமை கொடிது.

அதனினும் கொடிது இளமையில் வறுமை.

வறுமையால் வீட்டுச் சூழ்நிலை, பட்டினிகள், பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுக்காமலே, சொல்லிக் கொடுக்கத் தெரியாமலே, உபாத்தியாயர் களின் கொடுமை, பின் வந்தவர்களைக் காட்டிலும் அவரை அதிகம் பாதித்துவிட்டன என்று சொல்ல வேணும். ரோசம், நுட்பமான மனம் உடையவர்கள் பாடு என்றுமே கஷ்டம்தான்.

இளம் வயதில் அவருக்கும் பாட்டிக்கும் இடையே ஒரு வாக்குவாதத்தை அடிக்கடி சொல்வார்.

“மன்னி, பண்டாரி மாமி முறுக்கு சுத்தறாளே, வாசனை மூக்கைத் துளைக்கிறதே. நம்மாத்தில் ஏன் சுத்தக்கூடாது? நீ எப்போ சுத்தப்போறே ?”

"நீ பெரியவனாகி, உத்தியோகம் பண்ணி, சம்பா திச்சுக் கொண்டுவந்து என்னிடம் கொடு. பண்டாரி மாமியைவிட பேஷா பண்ணறேன்!"

"நான் சம்பாதித்தபின் இவளிடம் வந்து கொடுத்து இவள் முறுக்கு பண்ணறவரை காத்திருக்கணுமா? நேரே ஹோட்டலுக்குப் போறேன்!”

அண்ணா பேச்சு சில சமயங்களில் சாப்ளின் தமாஷ் போல் இருக்கும். கேட்டவருக்கு உதட்டில் சிரிப்பு வெடிக்கையிலேயே, நெஞ்சில் பக்கென்று ஒட்டை விழும். இது பேச்சு சாமர்த்தியமல்ல. வயிற்றுக் கொடுமையில், ஒழுங்கை உள் தந்த இருளின் தஞ்சத்தில் மானம் வடித்த கண்ணிரில் ஊறிப்போய், நேரிடையாக நெஞ்சம் திறந்த வாக்கு.

இப்போதோ -

காலேஜிலிருந்து, ஆபிஸிலிருந்து, இல்லை வெட்டிக்கு வெளியே சுற்றிவிட்டு வந்து உள் நுழைந்ததும்,

“என்ன இன்றைக்கு, இட்டிலிதானா டிபன்?”

"அடே, என்கையாலேயே அரைச்சேண்டா, அரவை மெஷினில் கொடுத்தால் புளிச்சுப்போகுமேன்னு சட்னி அரைச்சிருக்கேன். உடைத்த கடலை சட்னி சுட்ட கத்தரிக்காய் கொத்ஸ" வேறே!” தாயார் கெஞ்சுகிறாள்.

சமையலறையில் இது நடக்கிறது.

வாசற்பக்கம் என் அறையில் (சிறையில்) நான் உட்கார்ந்திருக்கிறேன்.

காக்ஷிவியின் கொடுமை மட்டும் எனக்கு வடி கட்டுகிறது.

உடல் ஒருதரம் குலுங்குகிறது. உள்ளம் சுருங்கு கிறேன். தப்புப் பண்ணிவிட்டாற்போல் தலை குனி கிறேன். இன்று மெளனவிரதம் வேறு வாய் அடைத்துப் போயிற்று. வாய் இருந்தால் மட்டும் நான் என்ன செய்ய முடியும்? இது, இந்தத் தலைமுறை. இதற்குப் பசியின் அவா அடைத்துவிட்டது. புதுமையின் அவா மட்டும் திறந்துகொண்டது. அடங்காத அவா.

அண்ணா சொன்ன கதை ஞாபகம் வருகிறது.

புருஷன், மனைவி; பெரிய குடும்பம். கணவன் வீட்டை விட்டு ஓடிவிட்டான். பல வருஷங்கள் கழித்துத்தான் திரும்பி வந்தான். குழந்தைகள் பெரியவர் களாக வளர்ந்துவிட்டார்கள்.

"இதுகளை நானும் இல்லாமல் எப்படி வளர்த் தாய்?" என்று வியப்புடன் கேட்டானாம்.

"நீங்களும் இல்லை. என்னவோ புல்லையும், மண்ணையும் போட்டு வளர்த்தேன்!” என்றாளாம்.

*புல்லைக் கொடுத்து வளர்த்தாயா ? என்ன அக்கிரமம்? இதுகளுக்கு இப்படி நாக்கை வளர்க் கணுமா? அதுவும் நான் இல்லாத சமயத்தில்! இது கட்டுப்படியாகுமா?” என்று கணவன் கோபம் பொங்கி வழிந்தானாம்.

என் தந்தையின் கதைகளே கொஞ்சம் அலர்ஜி தான்.

-------------------------

"https://ta.wikisource.org/w/index.php?title=பாற்கடல்/அத்தியாயம்-7&oldid=514145" இருந்து மீள்விக்கப்பட்டது