பாற்கடல்/அத்தியாயம்-10
10
இதற்கு முந்திய பக்கங்களில் மன்னிப் பாட்டியின் துயரக் கேணியில் இறங்கிய ஆதங்கம் எனக்கு இன்னமும் தணிந்தபாடில்லை. இந்த அனுபவம் என்னை பாதித்திருக்கும் அளவுக்கு வாசகனை பாதித்திருக்க முடியாது; பாதிக்கக் கூடாதென்று கூடச் சொல்லலாம் - என்றாலும் இதன் விளைவாய் மேலும் சொல்ல விழைகிறேன்.
கானல் நீர் எழுத்தைப் பருகிப் பருகித் தாபம் தீராத கவனங்கள், மன்னிப் பாட்டியைப் பற்றிய பக்கங்களை மாற்று மருந்தாகவேனும், பிடிக்காவிட்டாலும் விழுங்க வேண்டும் என்கிறேன். அதென்ன கானல் நீர் எழுத்து? இதோ :
ஃபிரிஜ்ஜில் மின்சார ஓட்டம் தாழ்ந்த ஸ்ருதி போல் அடங்கி இழைந்து கொண்டிருந்தது. பிரம்மாண்டமான டபிள் bedஇல் சுற்றிச் சிதறிக் கிடந்த வெல்வெட் தலையணைகளின் நடுவே அவள் படுத்திருந்த கோலம், ஸெலுலாயிடு பொம்மையை நினைவூட்டியது. விழித்தெழுந்து உடலை முறித்துக்கொண்டு உட்கார்ந்ததும் அவள் தன் பாதங்களை நுழைக்க, கணக்காகக் காலடியில் மொஸெய்க் தரைமேல் விரித்த ஜமக்காளத்தின் மீது ஸேட்டின் ஸ்லிப்பர்ஸ் காத்துக் கொண்டிருந்தன. கண் திறந்ததும் முதல் முழிக்கு நேர் எதிரே சுவரில் மாட்டிய படத்திலிருந்து ஆள் sizeக்குக் கமலஹாஸன் இடுப்பு வரை வெறும் உடம்பில் boxing poseஇல் பதுங்கியபடி சிரித்துக் கொண்டிருந்தான். அந்த இடது hook உயிர் பெற்று படத்திலிருந்து தாவி அவள் அவயவங்களில் எங்கு விழுமோ? எங்கு விழுந்தால் என்ன ? விழுந்த இடம் ஐயோடி! புளகாங்கிதம்தான்.
“What would you have? Stravonsky or Saturday Night fever? காஸெட்டுகளை வேகமாகப் புரட்டினான். மறுகையில் கண்ணாடித் தம்ளரில் இரண்டு ஐஸ் கட்டிகள், வாயில் சிகரெட், பேச்சில் உதடுகளின் அசைவுக்கேற்ப, மேலும் கீழும் குதித்தது சிகரெட் புகை, அவன் கண்களில் தெரிந்த புவனச் சலிப்புக்கு வளைபடி கட்டிற்று.
“Oh anything you say, But first come here Ganontust விலிருந்து லைலா முனகினாள். அந்தச் சொக்காயும் பைஜாமாக்களும் கண்ணாடியிலேயே நெயதனவா? இல்லாவிடில் வேறு என்ன material? அவளுக்குச் சற்று புத்தி தெளிந்திருந்தால், அவள் இப்போது சோபாவின் ஒரு கை மேல் ஒரு காலை உதைத்துக்கொண்டு சாய்ந்திருந்த நிலையிலிருந்து அவள் கூடக் கொஞ்சம் அடக்கம் காட்டியிருப்பாள்.
பளபளப்பான டைனிங் மேசை மேல், தலைகீழ்ப் பிம்பம் பளபளப்பு அடித்த சீனா மண் காப்பிக் கலர் கிண்ணத்தில், ஐந்து ஆப்பிள்கள் மனோகரமான லஜ்ஜையில் வெட்கித்துக் கொண்டிருந்தன. அந்தக் கன்னச்சிவப்பு 'கடி கடி' என்று அழைத்தது. ஆனால் அவை வெறும் ஆசை காட்டத்தானா ? அல்லது அவற்றை அடுக்கியிருக்கும் அழகைப் பார்ப்பவன் வியக்கவா? வீட்டு எசமானியைத்தான் கேட்க வேணும். ஆனால் அவளை மட்டும் எப்படிக் கேட்பது? கேட்பவன் தன் பட்டிக்காட்டுத் தனத்தையோ பரதைத் தனத்தையோ அம்பலமாக்காமல்...!—மிஸ் மெனாவதி, வெள்ளி Mugஇன் வளை பிடியைப் பிடித்துக்கொண்டு மறு கையால் Mugஇன் மூடியைப் பொத்திக்கொண்டு Mugஐச் சாய்த்ததும் தேனீர், கெண்டியிலிருந்து தங்க நரம்புகள் போல், பீங்கான் கோப்பையுள் பாய்ந்தது.
மாதம் ஒரு புத்தகங்களில், பல சஞ்சிகைகளில் சர்வ சாதாரணமாக பவனி வரும் வைபவங்கள் இவை. இவற்றைப் படிக்கத்தான், பவனி வருகின்றன. ஆசை விழிகளால் அல்வாத் துண்டுகளாக விழுங்கப்படுகின்றன. நடக்கட்டும் விருந்து.
ஐயா, எழுதியவர்களையும் படிப்பவர்களையும் தான் கேட்கிறேன். நம் வீடுகளில், எத்தனை இல்லங்களில் இது போன்ற - நம் இயல்பான வாழ்க்கை முறைக்கும், நமக்குக் கிட்டியிருக்கும் வாழ்க்கைத் தடத்துக்கும் பொருந்தாத வசதிகள் இருக்கின்றன? சர்க்கரைக்கும் மண்ணெண்ணெய்க்கும் Palmotinக்கும் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை நிற்கும் க்யூ வரிசைகளுக்கு இதுபோன்ற எழுத்துக்களைப் படிப்பது க்யூ நேரத்துக்கு மறதிக்கு உதவலாம் என்பது தவிர, வேறு உருப்படியான பயன்கள் இதனால் என்ன? முதிய தலைமுறைக்கு இவ்வசதிகள் தெரியவும் தெரியா; புரியவும் புரியா. இளைய தலைமுறையை அதுபோல் நினைக்க முடியுமோ? முதலில் ஆச்சரியம், பிறகு வியப்பு, பிறகு ஏக்கம், பிறகு புழுக்கம், நாளடைவில் நெஞ்சில் ஊறும் நச்சுத்தான் கண்ட பலன்.
விவரித்திருக்கும் கானல்நீர்க் காட்சிகள் அநேகமாகச் சாந்தம், சஃபையரில் 70 mm திரையில் கண்டவையே அன்றிக் கண்கூடு கூட அல்ல.சென்னையில் இந்திராநகர், இன்னும் கொஞ்சம் தள்ளித் திருவான்மியூரில் ஒரு பகுதி, அடையாறில் (Boat house Road) பங்களாக்கள். இவற்றை மட்டும் வெளிநாட்டுப் பிரயாணிகளுக்குக் காட்டிவிட்டு, 'இதுதான் இந்தியா!’ என்று ஒரு பதிவை மனத்தில் உண்டாக்கி விட்டு வந்த விருந்தாளிகளைத் தளுக்காக மறு காட்சிக்கு Tourism இலாகா அழைத்துச் செல்வதுபோல, 'இதுதான் சென்னை கூட இவை இல்லை. இந்த Magic lantern slides வெளிநாட்டுக் கடன் வாங்கப் பயன்படலாம். இவை வாழ்க்கையின் எடுத்துக்காட்டுக்கள் அல்ல.
பிராம்மணார்த்தம் சாப்பிட்டுவிட்டு உண்ட மயக்கத்தில் வாசல் திண்ணையில் படுத்து மண்டையினின்று உதிர்ந்த எள்ளைக் கையில் வைத்துக்கொண்டு கட்டிய கனவுக் கோட்டைக்குள் இந்தக் கானல்நீர் எழுத்துக்கள் எழுப்பும் காட்சிகள் ரகம் கண்டுவிடும். இந்தத் தாபங்கள் எவருக்கும் உண்டு என்பதை அப்பவே எதிர்பார்த்து, ஆனால் அவற்றின் உண்மை நிலவரத்தை வெளிப்படுத்துவதற்காக, இந்தப் பிராம்மணார்த்தக்காரன் கதை, காவடியில் கண்ணாடிச் சாமான்கள் கூடையை வைத்துக்கொண்டு, அல்நாஸர் கனவு கண்ட கதை - திரிசங்கு சுவர்க்கமேறிய கதை. இவை காரணம் இல்லாமல் முளைத்துவிடவில்லை.
“பின் மறதிக்கு வழி என்ன? உன் மன்னிப் பாட்டியின் அழுகை வாழ்க்கைதான் வாழ்க்கை என்று நீ ஓதும் வேதத்தை நாங்களும் ஓத வேண்டுமா? முதலில் கேட்டுக்கொள்ள வேண்டுமா ?”
சோகங்களுக்கு, கிட்டாததைத் தெரிந்த பின்னர் அவற்றை வெட்டி விடுவதற்குத்தான் மறதி எனும் மருந்து பிரச்னைகளுக்கு மறதி மருந்தல்ல. என்னைக் கேட்கப் போனால் உண்மையில் மறதி என்பதே கிடையாது. நினைவின் அகண்ட அலமாரியில், ஆலயத்தில், விஷயங்கள், நாளடைவில் தம் தம் இடம் கண்டு தாமே அடங்க சிருஷ்டி தந்திருக்கும் ஒரு வழி. தன்னை ஏமாற்றலுக்கு மறதியை போதையாகப் பயன்படுத்துவது ஒழுங்கல்ல. அதில் பலனுமல்ல.
மன்னி வாழ்க்கைதான் வேத வாழ்க்கை என்று எப்படிச் சொல்வேன்? ஆனால், 'உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக' என்று அவள் வாழ்க்கை அமையவில்லையே! யாருக்குத்தான் அப்படி அமைகிறது என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம் என்கிற அளவில் மட்டும் அவள் வாழ்க்கை எடுத்துக்காட்டுக்குப் பயன்படட்டுமே!
ராமன், நளன், பஞ்சபாண்டவர்கள், ஹரிச்சந்திரன், பீஷ்மன் இவர்கள் வாழ்க்கையெல்லாம் அவர்களுக்கேற் பட்ட சோதனையால், வீணாகிப் போய்விட்ட வாழ்க்கையா ? ஆனால் இதிலும் சொல்கிறேன், அவரவர் பூத்ததற்குத் தக்கபடி, அவரவர் நினைப் பதற்குத் தக்கபடி, அவர்கள் வாழ்க்கையை ஒரு சவாலாக ஏற்றுக் கொள்வதோ, தன்னைச் சுற்றி வேளைக்கு ஒரு கல்லாகக் கட்டிச் சுவரெழுப்பி, தன்னைக் காற்றும் இல்லாமல் நெருக்கப் போகும் கல்லறையாக நினைப்பதோ.
மன்னிப் பாட்டி என்னத்தை நம்பி வாழ்ந்தாளோ? நான் அவளுக்காகப் பதைபதைக்கும் அளவுக்கு அவள் தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாளோ? படைத்தவனுக்குத்தான் வெளிச்சம். விலக்க முடியாததை அனுபவித்தே தீர வேண்டும் என்பது சித்தாந்தம் இல்லையா? என் தாயின் சொல் இப்போது நினைவுக்கு வருகிறது:
“பிடித்தால் சாப்பிடு.
பிடிக்காவிட்டால் கடித்து முழுங்கு.“
துப்பு என்று அவள் போதிக்கவில்லை. பாற்கடலில் வந்த ஆலகால விஷத்தைக் கூட ஆண்டவன் வெறுமனே விட்டு வைக்கவில்லையே! பாற்கடலில் தோன்றியவற்றில் அவன் பங்கு அது.
இப்போது சோதனைகள் நமக்குக் குறைவாகவா இருக்கின்றன?
இந்தப் பக்கங்களை நான் மதுரையில் உட்கார்ந்து கொண்டு எழுதுகிறேன்.
இங்கு வந்து இருபது நாட்களுக்கு மேல் ஆகின்றன. இன்னும் நான் கோயிலுக்குள் அடியெடுத்து வைக்கவில்லை. இன்னும் அதற்கு வேளை கூடவில்லை.
முதல் முதலாக நான் மதுரையில் அடியெடுத்து வைத்தது 1969இல் என்று நினைக்கிறேன். இரவு வேளை. டவுன் ஹால் ரோடு கட்டடங்களின் ஓரமாக நடை பாதைக்காக ஓடும் சிமிட்டி மேடைமேல் (platform) சோளத் தட்டுகளில் வழிய வழிய மலைப் பழச் சீப்புகள், வேளையில்லை, போதில்லை, (plastic) கண்ணாடிச் சாமான்கள், ரிப்பன்கள், பிஸ்கட், சோடா, காப்பிக் கடைகள், இரவைப் பகலாக்கிய மெர்க்குரி வெளிச்சம், இட்டிலிக் கடைகள், இரவு ஒரு மணிக்கு ஆவி பறக்க, சுடச்சுட இட்டிலிப் பானையடியில் நர்த்தனமாடும் தீ நாக்குகள். கம்மென்று மல்லி மணம் மதுரை மல்லி, தெருவில் ஜேஜே என்று கூட்டம். ஏதோ கலியாண வீட்டுள் சரியாக முகூர்த்த வேளைக்கு நுழைந்துவிட்ட மாதிரி ஓர் உணர்ச்சி. அந்த முதல் சமயம் நெஞ்சில் பதிவானது மதுரை எனும் ஊர் அல்ல. ஆலந்தூர் சகோதரர்கள் ஸ்ரீராகத்தில் ஒரு பாட்டுப் பாடுவார்கள்.
“நாம குஸும...”
அந்தப் பாட்டை அவர்களிடம் கேட்கும்போதெல்லாம் என் மனக் கண்ணில் ஓர் உருவம் எழும். ஓர் அழகிய பெண், பின்கச்சை தெரிய மாத்வக் கட்டு கட்டிக்கொண்டு இடுப்பில் குடத்துடன் குலுக்கி நடந்து.
அதுபோலவே, மதுரையெனும் பட்டணத்தின் ஜீவன் திரண்டு, ஒரு மாது ஆகி, கொண்டையில் மல்லி, கழுத்தில் மல்லிகை மாலை, முழங்கையில், கைகளில் கால்களில் மல்லிகைச் சரங்கள்...
அதோ அவள், கூடம் கூடமாக அமைந்த வீதிகளின் நடுவே பெருமிதத்துடன் எழும் நாற்கோபுரக் கோயிலுள் ஆள்கிறாள். கூண்டுகளுள், கோபுரங்களின் ஸ்தூபிகளின் மேல் பச்சைக்கிளி தத்தித் தத்தி.
”மீனாக்ஷி!”
தடாதகைப் பிராட்டி, பாண்டிய ராஜகுமாரி.
உள்ள நெகிழ்ச்சி, மதுரையை அப்போது, அப்படிப் பார்க்க வைத்தது.
எந்த வீட்டு மொட்டைமாடிமேல் நின்று பார்த்தாலும், பெரிய கோபுரம் ஒரு பக்கம்.
அதற்கெதிரே திருப்பரங்குன்றக் கோபுரம். இரவு வேளையில் வான நட்சத்திரங்களை பூமியில் தூவி விட்டாற்போல், பொட்டுப் பொட்டாய், சிறிதும் பெரிதுமாய் வெளிச்சங்கள். மதுரையா? கலியாணக் கோலமா ?
ஒரு சமயம் மதுரையின் தெருக்களில் வழி தப்பி விட்டது. எங்கோ அவசரமாகப் போய்க் கொண்டிருக்கும் ஓர் ஆளைத் தடுத்து, ‘வடக்குச் சித்திரை வீதிக்குப் போவது எப்படி?’ என்று கேட்டதற்கு, ‘என்னோடு வாங்க என்று அவர் தன் காரியத்தையும் விட்டுவிட்டு என்னை, என் அடையாளங்களைத் தெருவில் கண்டு பிடிக்கும் இடத்தில் விட்டுவிட்டுத் திரும்புகையில், நான் அவர் எனக்காக எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு நன்றி தெரிவித்தபோது, “இது என்ன பிரமாதம்? இந்த மட்டும் கூட இல்லாவிட்டால், மதுரையின் தமிழ்ப் பண்பு என்ன ஆச்சு? எப்பவும் ஒன்று வெச்சுக்கங்க. கோயில் நகரத்தின் மையத்திலிருப்பதால் அதை ஆதாரமாக வைத்துக்கொண்டு எந்த இடத்துக்கும் போய்ச் சேர்வது சுலபம். மதுரை வாழ்க்கையே கோயிலைச் சுற்றித்தான் இயங்குது - வாரேன் ஐயா!” என்று என் பதிலுக்குக் காத்திராமலே வேகமாகத் தம் வழியில் போய்விட்டார்.
நான் கொஞ்ச நாழி இன்ப ரகஸ்யத்தில் ஸ்தம்பித்து நின்றேன். 'மதுரையின் வாழ்க்கையே கோயிலைச் சுற்றித் தான் இயங்குது!’ பக்தியில் சொன்னாரா? இருப்பதைச் சொன்னாரா? வேடிக்கையாகச் சொன்னாரா? எதுவாயிருந்தாலும் அத்தனையும் பொருந்தும் பூடகம். இவ்வார்த்தைகளையே மீனாகூழிக்கு அணிகலனாயும் கொள்ளலாம். காதில் தாடங்கமாக! கை விரல் மோதிரமாக !
இன்றும் அவள்தான் ஆட்சி புரிகிறாள். இப்பவும் தெருக்களில் இட்டிலிக் கடைகள் வியாபாரம் சுறுசுறுசுறுப்பாக நடக்கிறது. மல்லிகைச் சரங்களும் அமர்க்களமாகச் செலவாகின்றன. தெருக்களில் முன்னிலும் 'ஜேஜே'.
ஆனால் 'நாமகுஸும.’ மதுரையே ஒரு மாதுவாகமனக் கண்ணில் தோன்றினாளே - அவள் இப்போது எங்கே? தேடு தேடு என்று தேடுகிறேன். அவள் கேலிச் சிரிப்புக்கூடக் கேட்கவில்லை.
இத்தனை சாக்கடைகளும் குப்பைகளும் வீதியென்றும் சந்தென்றும் வித்தியாசம் இல்லாமல் எங்கிருந்து வந்தன? தெருக்களின் அன்றைய கம்பீரத்தையும் விசாலத்தையும் இப்போது சந்துகளின் சகதிகளும் நாற்றங்களும் ஆதிக்கம் கொண்டுவிட்டன.
"ஜடாமுனி சந்து எதுவுங்க ?” சந்தில் நின்று கொண்டே, ஒரு ஆளை மறித்துப் பரீக்ஷைக்காகவே கேட்கிறேன். பதில் பேசாமல் போய்க்கொண்டிருக்கிறான். அன்று தம் அவசர ஜோலியையும் விட்டு விட்டு, எனக்கு வழி காண்பிக்கவே வந்தவர் எங்கே போய்விட்டார்? இந்த ஆளும் சொந்த ஊரிலேயே என்னைப் போல் ஜடாமுனி சந்தைத் தேடிக் கொண்டிருக்கின்றானா?
காலையில் ஒரு மணி நேரந்தான் குழாயில் தண்ணீர் வழங்கல், மதுரை மாநகரத்து மக்கள் அத்தனை பேரும் அன்றைய தின முழுத் தண்ணீர்த் தேவைக்குச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கணேஷ் மெஸ்ஸுக்கு எதிரே உள்ள குப்பைத் தொட்டி கொள்ளாமல், பிளாட்பாரத்தில் வழிந்த எச்சில் இலைகளில் மனிதனும், நாயும் என்ன கிடைக்கும் என்று புரட்டிப் பார்க்கின்றன. மீனாக்ஷியின் மதுரையா இது?
நானே என்னை அறியாமலே Realism எழுத்தில் இறங்கிவிட்டேன். இந்த அவலத்தை விவரிப்பதற்கு - உள்ளதை உள்ளபடி, பார்த்ததைப் பார்த்தபடி - பாடுவதற்குத்தான் எழுத்தெனும் வாத்தியமா? எனக்குத் தலை சுற்றுகிறது. எங்கேனும் உட்கார இடம் - சுற்றிப் பார்க்கிறேன். எங்கே இடம் தெருவெல்லாம் கடை பிளாட்பாரம் எல்லாம் கடை, வெயில் பிளக்கிறது.
"சரிதான், நீ என்ன சுவர்க்கத்திலிருந்து நேரே இறங்கி வந்துவிட்டாயோ? வா, வா, இன்னும் ஐந்தாறு வருடங்களில் உன் அம்பத்தூரை என்ன பண்ணுகிறேன் பார்!” மனத்துக்குள் ஏதோ கேலிக் கொக்கரிப்பு கேட்கிறது. இது யார்? பாற்கடலை தேவர்களுடன் சேர்ந்து கடைந்த அமுதத்தைக் கோட்டை விட்ட அரக்கருள் ஏமாறாத இருவரில், இது ராகுவா ? கேதுவா? அமுதத்தை உண்டதால் அவர்களுக்கும் அழிவில்லையே? ஏமாந்த அரக்கர் குலத்தைப் பழிவாங்க வாரிசுகளாக - சாகா வரம் பெற்றுவிட்ட வாரிசுகள் அவர்கள்தானே? ஆகையால் இந்தப் பழிவாங்கும் போராட்டமும் சாகாவரம் பெற்றுவிட்டது. ஆகவே –
தினசரி வாழ்க்கைப் போராட்டத்தை மறக்க Escapist எழுத்து.
அல்லது
உள்ளது உள்ளபடி, இதுவேதான் உண்மை என்று அவலத்துக்கும், அருவருப்புக்கும் முரசு கொட்டும் Realism எழுத்து.இரண்டில் எதைத் தேர்ந்து எடுக்கப் போகிறாய்?
இந்தக் கட்சி கட்டல் எல்லாமே அநாவசியம். எல்லாமே விருதா. எதுவுமே நிரந்தரமல்ல. எழுத்தும் நிரந்தரமல்ல. எழுத்தால் சாதிக்கக் கூடியது எதுவுமில்லை. அமர இலக்கியமாவது? ஆட்டுக் குட்டியாவது? ஒரு Hydrogen ஓ, ஒரு Neutron ஓ. அஜாக்கிரதையில் தானாகவோ, யாரேனும் வெடிக்கச் செய்தாலோ, உங்கள் சர்ச்சைகள், சாதனைகள், சரித்திரம், நிமிடத்தில் காலி. உலகத்துக்கு எப்பவுமே அவசர நிலைதான். அதன் எத்தனையோ பொழுது போக்குகளில் எழுத்தும் ஒரு பொழுது போக்கு. தாட்சணியமில்லாமல் யோசித்துப் பாருங்கள். இலக்கியம் என்றும், எழுத்து என்றும், அந்த ism இந்த ism என்றும் ஜாதி பிரித்துக்கொண்டு ஏன் அவஸ்தைப்படுகிறீர்கள்? எழுதுவதே escapism தான், al your philosophies, your mythologies everything form the spring board of escapism.
இதுபோல, சமீபத்தில் தீவிரமாக ஒரு வாதம், எதிர்வாதம் இரண்டுக்கும் ஆள் சேர்க்கை உருவாகிக் கொண்டு வருகிறது. காரசாரமாக வசைகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இந்த கோதாவில் இறங்குவதற்கு எனக்குத் தென்பு கிடையாது. தைரியம் கிடையாது. சண்டையென்றால் காத தூரம் ஓடுபவன் நான்.
‘அப்படியானால், வாயை மூடிக்கொண்டு, இருக்கும் இடத்தில் இரும் கிழவனாரே!
இல்லை, அப்படியும் இருக்க முடியவில்லை. இருக்க மாட்டேன். என் வளையிலிருந்து லேசாகத் தலையை நீட்டுகிறேன்.Charles Dickes-ன் நாவல்கள், London சேரிகளில் மக்களின் அவல நிலையைப் போக்கக் காரணமாக இருந்தன.
H. Beecher எழுதிய Stowe எழுதிய Uncle Tom's cabin அமெரிக்காவில் அடிமைகளின் தளையறுப்பதில் பெரும் பங்கு கொண்டது.
நம் நாட்டில் பாரதியை வைத்துக்கொண்டு எழுத்தைப் பூ பூ என்றால் என்ன அர்த்தம்? இதுதான் பாரதிக்குக் காணிக்கையா?
தலையை உள்ளே தைரியமாக இழுத்துக் கொள்கிறேன்.
ஓம் சக்தி!
எனக்குப் படுகிறது. எதன் மேலும் தீர்ப்புச் சொல்வது எழுத்தின் வேலையல்ல. எடுத்துக் காட்டி, மௌன சாட்சியாகத் தங்கி நின்று, எழுத்தாளனோ, வாசகனோ தயாரானதும் அவனை வாழ்க்கைப் பிரயாணத்தின் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் வழித் துணை. இராஜகுமாரனை, அவன் இன்னும் கண்டிராத, ஆனால் தேடி வந்திருக்கும் ராஜகுமாரியிடம் கூட்டிச் செல்லும் மோனத் தாதி இளவரசி அப்படி ஆள் அனுப்பியிருக்கிறாள். தாதியே இளவரசி அல்ல. தாதியின் அழகில் இளவரசியை மறந்த ராஜகுமாரன் வந்த காரியம் குலைந்தவன்.
ஏதோ ஓர் ஆத்ம வேதனை முதல் முதலாகத் தன்னைத் தீண்டாமல், தீய்க்காமல் எழுத்து (எனும் உள் எழுச்சியின் உருவம்) வெளிப்பட முடியாது. சில இடங்களில் இந்த உள் எழுச்சி - எழுத்தின் ஸ்வரூபத்தைப் பொறுத்தமட்டில் தான் என்னுடைய இந்த விவரிப்புவேருடன் பிடுங்கிக்கொண்டு பூகம்பமாக நிகழ்கிறது. சில இடங்களில் விசன தேவதையாகக் கொஞ்சம் கொஞ்சமாகப் படர்ந்து வளர்கிறது. சில இடங்களில் பட்டுப் பூச்சி தன்னைச் சுற்றி நூற்றுக்கொண்ட நூலிலேயே தன் சமாதியைக் கண்டு விடுவதுபோல் பிரத்யேக சாந்தி (எனக்காக எழுதிக் கொள்கிறேன்) யாகக் கூடு கட்டுகிறது. எதைத் தள்ளுவது? எதைத் தழுவுவது?
Albert Schweitzer இதை Reverence for Life என்கிறார்.
யேசு, ‘உன்னுயிர் போல் மன்னுயிர்” (Love thy neighbour as thyself) என்கிறார்.
சங்கரர், ’தத்வமஸி’ என்கிறார்.
Sister Theresaவிடம் காணும் எல்லையற்ற கருணை (Compassion)யும் இதுதான்.
நேரு, 'என் அஸ்தியை வயல்களில் இறைத்து விடுங்கள்! என்று எழுதி வைத்ததும் இதுதான்.
ஆத்மாவின் தேடல் மார்க்கங்களில் எழுத்தும் ஒன்று.
உயிரின் உயிலை எழுதி வைப்பதற்கே எழுத்து.
இஸங்களை (isms) விட்டுவிட்டு நாம் வந்த வழியைக் கொண்டாடிக் கொள்வோம்.