உள்ளடக்கத்துக்குச் செல்

பாற்கடல்/அத்தியாயம்-15

விக்கிமூலம் இலிருந்து




15

ந்த ஞாபகசக்தி விவகாரத்தையொட்டி, இன்னும் கொஞ்சம்.

மதுரை சர்வகலாசாலையில் - 1978-இல் என்று நினைக்கிறேன் - இதுமாதிரி விஷயங்களில் தேதிகளில் நான் ப்ளாங்கி - என் எழுத்து பற்றி ஒரு முழுநாள் கருத்தரங்கு (Seminar) நடைபெற்றது. என் புத்தகங்கள் அந்த யுனிவர்ஸிடியில் எம்.ஏ. வகுப்புக்கு விதிக்கப்பட்டிருந்தன. என்னையும் அழைத்திருந்தார்கள், கேள்விகளுக்கு பதில் சொல்ல.

அங்கு என் ஆரம்ப உரையில், என் பல்லவியைப் படித்தேன். ”நான் என்னுடைய பதினெட்டு பத்தொன்பதாவது வயதில் எழுதத் தொடங்கியபோது, நான் பிரசுரிக்கப்படுவேன்; தொடர்ந்து பிரசுரிக்கப்படுவேன்; என்னை முழு புத்தகங்களாகப் பார்ப்பேன்; என் புத்தகங்கள் கல்லூரிகளுக்கு விதிக்கப்படும். என்னுடைய அறுபத்திரண்டு அறுபத்து மூன்றாவது வயதில் கருத்தரங்கில் இன்று உங்கள் எதிரில் நிற்கப் போகிறேன் எனக் கனவிலும்கூட நான் எதிர்பார்த்திருக்க முடியாது.”

லா.ச.ரா.வின் எழுத்து, அதன் பல கோணங்களில் சிறுகதை, நாவல், பாத்திரப் படைப்பு, நடை, வெளியீட்டு உத்திகள், தத்துவம் (!) இத்யாதி - அலசப்பட்டன. இதற்கு என்றே வேறு கல்லூரிகளிலிருந்து அழைக்கப்பட்டிருந்த விரிவுரையாளர்கள் - தயாரித்துக்கொண்டு வந்திருந்த ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தார்கள். சில சிலாகித்தன; பல கண்டித்தன. கடிக்க முயன்றன. ஒன்றிரண்டில் என் மண்டை உருண்டது.

ஆனால், எழுத்து அச்சில் பொதுச் சொத்தாகிவிட்ட பின், பூச்செண்டுகளுக்கும் அழுகல் முட்டை வீச்சுகளுக்கும் எழுத்தாளன் தயாராக இருக்கத்தான் வேணும். பதில் சொல்வது அவன் இஷ்டம். சொல்லாமல் இருந்தாலும் அவன் இஷ்டம். ஆனால் தடுக்க முடியாது.

இதழ்கள் என்கிற தலைப்பு வரிசையில், ஒரு கதை. கதாநாயகனின் முழு வாழ்க்கையும், அவனுடைய குழவி நிலை நினைவிலிருந்து சாவு வரை கதாநாயகனின் கண்ணோட்டத்திலேயே தன்னிலை ஒருமைப் பெயரில் (First Person Singular) பார்க்கப்படுகிறது.

ஆய்வாளர் கதையின் குரல் வளையைப் பிடித்த இடம்.

“ஆசிரியர், கதாநாயகனின் முதல் முதல் நினைவாக அவன் தாய்ப்பால் குடிப்பதை அவகாசமாகவே விஸ்தரிக்கிறார். அந்த அளவுக்கு முதல் நினைவு. அதுவும் சுய வெளியீட்டில் எப்படிச் சாத்தியமாகும்? இதைப் படிப்பவன் நம்பி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசிரியர், First person Singular முறையில் எதிர்பார்ப்பது நியாயமல்ல.”

இது அவர் பிராதின் அப்பட்ட பாஷை அல்ல; சாராம்சம். சற்று அநாவசியமான சூடாகத்தான் படிக்கும் குரல் இருந்தது என்பது என் அபிப்பிராயம்; ஆனால் அது அவரவர் உரிமை; மேடைப் பாணி.

கதையில் குறிப்பிட்ட பகுதியைக் கீழே தருகிறேன்:

இருந்தாற் போலிருந்து எங்கள் வீட்டுச் சமையலறையைக் காண்கிறேன்.

அடுப்பெதிரில் அம்மா உட்கார்ந்திருக்கிறாள். குழந்தையாய் அவள் மடியில் நான் படுத்திருக்கிறேன். என் முகத்தை மூடிய மேலாக்கைத் தள்ளிவிட்டுத் திரும்பி, அடுப்பிலாடும் தீயை வியப்புடன் நோக்குகிறேன். என் உதட்டோரத்தில் பால் வழிகிறது.

அடுப்பிலிருந்து அக்கினி, தன் எண்ணிறந்த கைகளை நீட்டி என்னை அழைக்கிறது, நீலமும், சிவப்பும், அரக்குமாய்ச் சாயங்கள், தீயின் விளிம்பிலும் நடுவிலுமாய்ப் பிறந்து வழிந்து, ஒன்றோடு ஒன்று இழந்து, விதவிதமான உருவங்களையும் முகங்களையும் தீட்டி, அழித்துச் சலிக்காமல் மறுபடியும் அழைக்கின்றன.

பார்த்த முகங்கள், பாராத முகங்கள்.

இவ்வேழு மாதங்களுக்குள் நான் எவ்வளவு முகங்கள் பார்த்திருக்க முடியும்? ஆனால் இவ்வேழு மாதங்களுக்குள் நேர்ந்த முகங்கள் அல்ல இவை. ஏழாயிர வருடங்களின் முகங்கள்.

நான் அளித்த பதில்:

“ஏழு மாதத்தில் என் தாய்ப்பால் அனுபவத்தை நினைவு பூர்வமாக எழுதினேன் என்று நான் - கதாநாயகனின் வாய் மூலமாகச் சாதிக்க முடியுமா? அது சாத்தியமா இல்லையா என்கிற அளவுக்கேனும் எனக்கு புத்தியில்லையா ? ஆனால் பிற தாய்மார்களிடம், பிற குழந்தைகள் பால் அருந்துவதையும், அவ்வளவு தூரம் போவானேன்? எனக்குப் பின் என் உடன் பிறப்புகள் அம்மாவிடம் பால் குடித்துக்கொண்டு அடுப்பு நெருப்பைப் பார்ப்பதை நான் பார்த்திருக்கிறதை வைத்துக்கொண்டு, நானும் வேறு எப்படி இருந்திருக்க முடியும்? என்கிற சந்தேகமற்ற நம்பிக்கையில் எழுதினேன். குழந்தையின் சிந்தனை நான் விவரித்தபடி ஓடியிருக்குமா? (ஏழு மாத முகங்கள் அல்ல இவை, ஏழாயிர வருடங்களின் முகங்கள்) அவரவர் யூகத்துக்கு ஏற்றபடி (anybody's guess). குழந்தைக்கு என்ன தோன்றியிருக்கும்? சாயங்களைக் கண்டதா? முகங்களைக் கண்டதா ? எதைக் கண்டாலும் தத்துவமாகச் சிந்தித்ததா? யாருக்குத் தெரியும்? சிந்திக்கவே அதனால் முடியுமா? நினைவுப் பாதையில் அந்த இடம் இன்னும் நம் பாதம், படாத பூமி. ஆகையால் கதாசிரியன் புகுந்து விளையாடும் விளையாடக்கூடிய இடம் அதுதான். அதுவே குற்றமாயின், அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. கதை தொடர்ந்து எனக்கு வளரும் இடமாக நான் அதை எடுத்துக்கொண்டு விட்டேன்.

அதே கதையில் கடைசிக் கட்டத்தில் கதாநாயகன் இறந்தபின்னரும் அவனுடைய தொடர்ந்த சிந்தனையை மட்டும் சித்தரித்திருக்கிறேன். ஸார் அந்த இடத்தையும் உண்மைக்குப் புறம்பானது என்று ஏன் கண்டனம் செய்யவில்லை? மறந்துவிட்டாரா? இல்லை, அந்தப் பகுதி அவர் கவனத்துக்குத் தப்பிவிட்டதா? அல்லது அதை ஏற்றுக்கொண்டு விட்டாரா? இதை சர்ச்சையாக வளரவிடாமல், இது சம்பந்தமாக ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்.

காளிதாசனுக்கும் முந்திய, அல்லது இதிகாச காலத்திலிருந்தே, விமர்சகர்களின் சம்மதத்துடன் (Poetic license) காவியச் சலுகை என்று ஒன்று வழங்கி வருகிறது. இந்தச் சலுகை தரும் இடத்தின் காரணமாகத்தான், இலக்கியங்களைப் பரிமளிக்கச் செய்யும், உவமான உவமேயங்கள், கற்பனைகள், அலங்காரங்கள் ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றன.

கணித சாஸ்திரத்தில் பரிச்சயமுள்ளவர்கள் ஜியோமதியில் Construction என்கிற பிரயோகத்தைப் புரிந்துகொள்வார்கள். அதாவது ஒரு நிரூபணையின் நிமித்தமாக, கணிதத்தில் ஏற்கெனவே இல்லாத குறிப்பாகக்கூட உணர்த்தாத ஒரு புதுக்கோட்டையோ புதுக்கோணம் அல்லது வளைகோட்டையோ (arch) வரையவோ, அல்லது ஏற்கெனவே இருக்கும் கோட்டை நீட்டவோ வேண்டி வரும். இந்தப் புது நிர்மாணம் இல்லாமல் நிரூபணையே முடியாது. இலக்கியத்தில் poetic license இதேபோல்தான்.”

கருத்தரங்கில் நான் அளித்த பதில் இம்மட்டுடன் தான். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை ஏறக்குறைய ஐந்து வருட அவகாசத்தில் சாதக விளைவாய்க் கூடியிருக்கும் சொல்முறை அனுபவத்தில் இன்னும் கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன்.

கதையில் அடுத்து நான் குறிப்பிட்ட பகுதி இதோ.

வருகிற வருடமும் வழக்கம்போல் இதே தினத்தன்று காலை மிஸ் ஹெர்மாயின் யானைத் தலையளவு பூச்செண்டுடன் உள்ளே நுழைகிறாள்.

”ஹல்லோ மிஸ்டர் ராம், குட்மார்னிங்! நீங்கள் சிரஞ்சீவியாக இருக்க வேண்டும். இந் நன்னாள் திரும்பத் திரும்ப வர வேண்டும்!”

அவள் வார்த்தைகள் தடைபடுகின்றன. நான் எழுந்திருக்கவில்லை. என்னுடைய கண்கள் மூடியிருக்கின்றன.

என்னிடம் வந்து தாதுவைப் பிடித்து இதயத்தில் செவி சாய்த்துக் கேட்கிறாள்; கை துவண்டு விழுகிறது.

என் கைகளை எடுத்து மார்மேல் சேர்த்து வைத்துச் சிலுவையின் குறியில் தன் தோள்களையும் நெற்றியையும் தொட்டுக்கொள்கிறாள்.

அவள் உதடுகள் அசைகின்றன. போர்வையை என் தலைமேல் இழுத்துவிட்டுப் பூச்செண்டை என் பக்கத்தில் வைத்துவிட்டு, அடிமேல் அடி வைத்து வெளியே செல்கிறாள்.

நான் உள் ப்ரக்ஞையின் ஒரே இதழில், உயிர் வெள்ளத்தில் மிதந்து செல்கிறேன்.

எழக்கூடிய கேள்விகள்.

1. வருகிற வருடம் நடக்கப் போவதை இப்பவே எப்படி -

2. கண்ணை மூடிக்கொண்டே, மிஸ் ஹெர்மாயினின் செயல்களை நான் எப்படிப் பார்த்திருக்க முடியும்?—

3. போர்வையை அவள் என் தலைமேல் இழுத்து விட்டபின். மேற்படி மேற்படி.

இந்த இடத்தில்தான் Poetic License பேசுகிறது. கதாசிரியன் தன் கைவரிசையைக் காட்டக் கை கொடுக்கிறது. கதாநாயகனின் உயிர் பிரிந்த பின்னும் அவன் உயிரோடிருப்பது போன்ற பாவனை முறையா? உயிர் பிரிந்தால் பிரியட்டுமே! பிரிந்த பின்னரும் அவனுடைய ப்ரக்ஞை மட்டும் தொடர்வதற்கு இடம் கொடுத்து என்னதான் நடக்கிறது பார்ப்போமே!

ஏதோ போதனா புத்தகத்திலிருந்து நான் படிக்கவில்லை. எழுத்தனுபவத்தில் சொல்கிறேன். கற்பனை என்பது வெறும் கப்பு. 'Gas’ காற்றாடி விடுவதல்ல; இஷ்டத்துக்குக் கயிறு திரிப்பதல்ல. அதற்கும் பிரமாணங்கள், பிரமாணிக்கங்கள் உண்டு. நித்தியத்துவத்துக்கு நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் காலவரைகளைத் தாண்டி, எண்ணத்தின் வன்மையில், சாதுர்யத்தில் நிகழ்ச்சியை அதன் வரம்புக் கோட்டினின்று விடுதலை செய்து, விரிவு கண்ட அந்தத் தடத்தில் என்ன நடக்கிறது, நடக்கக்கூடும் என்பதை அனுமானத்தில் காண்பதுதான் கற்பனை. It is not anybody's guess. It is Calculated. Watch out for test tube reaction in experimental idea-chemistry (ஆங்கிலத்தில் திடீரென நழுவிவிட்டதற்குப் பொறுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய தற்சமய உள் எழுச்சிக்கு என்னால் தமிழைச் சுற்றிச் சுற்றி வர முடியவில்லை. ஆங்கிலத்திலும் என் முயற்சி பற்றவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது) கரணம் தப்பினால் மரணத்தில், கழைக் கூத்தாடி ஒரே மூர்ச்சத்தில் முயலும், ஒண்ணு - ரெண்டு மூணு - நாலாவது உச்சி அந்தர் பல்டி. மேகங்களுள் உரு மறைந்து கீதக்குரல் மட்டும் எட்டும் வானம்பாடியின் அந்தர்த்தியானம்.

குறிப்பிட்ட இந்த இதழ்கள் கதைப் பாணி, 'நான்' என்கிற முறையில் அமைந்த விஸ்தரிப்பில் நானும் எதிர்பாராத ஏதோ ஒரு கவிதைத் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டே போகையில், கதாநாயகன் இறந்துவிட்டதால் கதைப் போக்குக்காகப் படர்க்கைக்கு (Third Person) மாறினால் கவிதைக் கமழ்ச்சிச் சிதைவால், எனக்குக் கதையே போச்சு.

Poetic license பற்றி இந்த அளவுக்குச் சொல்ல முனைந்தது இளம் எழுத்தாளர்களுக்குப் பயன்படாதா என்கிற சபலந்தான்.

கடை விரித்தேன்...

மீண்டும் சொல்கிறேன். கதை சொல்லும் வகைகளில் யதார்த்த முறையும் உண்டு; ஆனால் அதன் பெயரில் இழைக்கப்படும் தீம்புகளில், இலக்கியத்தில் சுகாதாரம், மென்மைகள், லக்ஷியங்கள், மானுடத்தின் மாண்பான உறவுகள், செளந்தர்யங்கள் கலைந்து, கசங்கி, ஏதோ ஒரு முறையில் அவை மேல் ஒரு தினுசான, அருவருப்பான மிருக ரோமம் படர்ந்து - என்ன, மீண்டும் ஜங்கிளா?

'Reality,' Truth (யதார்த்தம், உண்மை) இரண்டும் ஒன்றல்ல.

கர்ப்பத்தில் பரீக்ஷித்துக்கு விஷ்ணுவின் தரிசனம் கிட்டியதாக பாரதம் சொல்கிறது.

பிரஹலாதன் தாய்க்கு நாரதர் விஷ்ணுவின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டிருந்த போது கர்ப்பத்தில் பிரஹலாதன் 'ஊங்' கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்தானாம்.

நாம் பூர்வ ஜன்மத்தில் இந்து மதக் கோட்பாடுகளின்படி நம்பிக்கை உள்ளவர்கள். ஏழு மாத முகமல்ல, நெருப்பின் சாயங்களில் ஏழாயிர வருட முகங்களைக் கண்டேன் என்று கதையில் வருகையில், இந்தப் பின்னணியில் எதை யதார்த்தம், எதைச் சத்தியம், எதைக் கற்பனை என்பது? அனுமான தரிசனத்துக்கு, இந்த ஞானபூமியில், பகவான் ராமகிருஷ்ணர் அடைந்த நிர்விகல்ப சமாதியிலிருந்து, இலக்கியம் வரை இடம் உண்டு.

பட்டணத்து வாழ்க்கையில் எனது மிகமிக இளமை நினைவுகள் எவை?

பெங்களூர்ப் புழுதியைக் காலிலிருந்து உதறிவிட்டு மறுநாள் காலை சென்னையில் அந்தக் காலை வைத்ததால் நான் உடனே விருக்ஷமாக மாறிவிட முடியுமா? நினைவு நூல் நுனியைச் சிக்கிலிருந்து என்னால் இயன்றவரை இழுக்கிறேன்.

எழும்பூர் ஸ்டேஷனிலிருந்து ஜட்காவில் - தக்கடா, புக்கடா, கடகடா, கடகடா, சக்கரத்தின் விட்டங்களிடையே ஜாட்டிக்கோலைக் கொடுத்து வண்டிக்காரன் எழுப்பும் சப்தம் - குழந்தைகளுக்குத் தனிக் குஷி - வீடு வந்தாச்சு.

குடுகுடுவென்று ஒரு ஸ்திரீ ஓடிவந்து எங்களை ஒவ்வொருவராக முதலில் அணைத்துக்கொண்டு, உருப்படி உருப்படியாகக் கீழே இறக்குகிறாள்.

“வாங்கோடா என் கண்களா?” அந்த வரவேற்பு இன்னும் மறக்கவில்லையே!

“வாங்கோ மன்னி! அண்ணாவை வாங்கோன்னு சொன்னேன்னு சொல்லுங்கோ மன்னி!”

“ஒரே வழியாக வந்துட்டோம் பார்வதி! நீ செளக்கியமா?”

பார்வதி சித்தி, சிறுகூடாக, மடிசார் கட்டிக் கொண்டு, மரப்பாச்சி மாதிரி –

“குழந்தைகளா, சமையலாயிடுத்து, சாப்பிட்டுடுங்கோ. மத்தியானம் குளிப்பாட்டி விடறேன், குழாயில் தண்ணி வந்தால்.“

திருவல்லிக்கேணி அருணாசல ஆச்சாரித் தெருவில் அன்றிலிருந்தே தண்ணீருக்குத் தகராறுதான். குழாய்க்கு அடிக்கடி சுவாஸம் கட்டி இழுக்கும். ஆனால் குடித்தனங்களுக்குக் குறைவில்லை. பட்டணத்தின் மர்மமே இதுதான்; ஆயிரம் அசௌகரியங்களிடையே அத்தியாவசியங்களைக்கூடத் தியாகம் பண்ணிக்கொண்டு நெரிசலே ஆனந்தம். வேறு வழியில்லை என்று இப்போது சொல்லிக் கொள்ளலாம். ஆனால் வழியிருந்த போதும் தேடிக் கொள்ளவில்லை. அவர்களுக்கு இஷ்டமில்லை.

பார்வதி சித்தியை அன்று நான் முதன்முதலாகக் காண்கையில், அவளுக்கு வயது பதினெட்டுக்கும் குறைவாகத்தான் இருக்கும். ஏற்கெனவே நான் முன் பகுதிகளில் தெரிவித்திருந்தபடி, அவளுக்கு முழங்காலில் புற்றுநோய் கண்டு, கிடந்து இறக்கையில் நாற்பதைக்கூட எட்டிப் பிடிக்கவில்லை என்றே என் நினைப்பு. நோயினின்று தனக்கு மீட்சி இல்லை என்று திரிபறத் தெளிவான பிறகு நோய்க் கொடுமையால் அந்திமக் காலத்தில் மனங்கசந்து போனாள். எனினும் எங்கள் பார்வதி சித்திபோல் தங்கமான சித்தி கிடையாது.

சித்தி பற்றி ஒரு சுவாரஸ்யமான கதாம்சம்: அவளுடைய கலியான தினத்தன்று அவளைக் கன்னிகாதானம் செய்துவிட்டுப் போன தாய் தந்தையர் அன்றிலிருந்து பிறகு அவள் செத்தாளா இருக்கிறாளா என்று எட்டிக்கூடப் பார்க்கவில்லை. அதே நிலையில் அவள் செத்தும் போனாள் எனில் இக்காலத்தில் யாரேனும் நம்புவார்களா? நம்புவார்களோ மாட்டார்களோ, உள்ளது என்னவோ அப்படித்தான். எட்டுப் பெண்களுக்கு நடுவில் அவள் ஒருத்தி ஸ்வாமி! கைவிட்டுக் கழிந்தால் போதும், விட்டது ஒண்ணு என்கிற தத்துவம் ஸ்வாமி! என் தாயைக் காட்டிலும் அவள் நித்தியமானவள் என்றே எனக்குத் தோன்றுகிறது. அவளும் பிறந்த வீட்டைப் பற்றி ஒரு நாளேனும் நினைத்ததாகத் தெரியவில்லை. என் மனைவி ஐம்பதை எப்பவோ கடந்தாச்சு. ஆனால் மாதம் ஒரு முறையேனும் மயிலாப்பூர் போகத் தவறுவதில்லை. (அது என் பாக்கியம்!) இவள் போன்றவர்களுக்குப் பார்வதி நிலை புரியுமோ? சந்தேகந்தான்.

அம்முவாத்துக் கிறுக்குகளில் இதுவும் ஒன்று: வந்த மருமகளுக்குப் பிறந்த வீட்டுச் சலுகை ப்ராப்தமே இல்லை என்பதால், அவளை இழிவாகப் பேசவில்லை. நடத்தவில்லை. கஞ்சியோ, கூழோ, பட்டினியோ இருப்பதற்குப் பங்குக்கு வா. இல்லாததைக் கேட்டால் அது இங்கு இல்லை என்பதுதான் அவர்கள் கொள்கை. ஆனால் பார்வதி இந்த வீட்டுள் நுழைந்தபோது பட்டினிக் கட்டம் எல்லாம் தாண்டியாகிவிட்டது. சித்தப்பாவுக்கு Postal Audit (இப்போது DAG Audit) Posts and Telegraphs இலாகாவில் வேலை. அப்போது சம்பளம் ரூபாய் நாற்பதோ என்னவோ?

அண்ணாவுக்கு உடனேயே முஸ்லிம் உயர்தரப் பள்ளியில் வேலை கிடைத்துவிட்டது. அந்தப் பள்ளி இப்போது சொந்தக் கட்டடத்தில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இயங்குகிறது. அதனுடைய அன்றைய இடம் அண்ணைா சாலையில் (பழைய மவுண்ட் ரோடு) இன்றைய காயிதே மில்லத்தின் இடம் என்று நினைக்கிறேன். அல்லது ராயப்பேட்டையிலா? நாங்கள் குழந்தைகள் எங்களுக்கென்ன தெரியும்? இந்தச் சமயத்துக்குக் குழந்தையாயிருப்புது செளகரியமாக இல்லை? நினைவுப்பாதையில் ஒரு கோணம் அல்லது ஒரு கோணல்.

நாங்கள் வந்துவிட்டபின் அருணாசல ஆச்சாரித் தெருவில் இடம் பற்றவில்லை. ராயப்பேட்டையில் ஆண்டித் தெருவுக்குக் குடித்தனம் மாறிற்று.

பின்கட்டு எங்களுக்கு. முன்கட்டில் ஒரு பாலக்காட்டு பிராமணக் குடும்பம்; தலைவர் அதே தெருவின் மறுகோடியில், அதே சாரியில், ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனைப் பார்த்துக்கொண்டு ஒரு காப்பி ஹோட்டல் நடத்திக் கொண்டிருந்தார்.

ராமையர் பிள்ளையும் ராமனே. அவருக்கு ஒரு பிள்ளை, ஒரு பெண் என்று தோன்றுகிறது. மாமி கஷ்கு முஷ்கு. இவர்கள் இந்த வரலாறுக்கு முக்கியமில்லை என்றாலும், பெண் பெயர் தங்கம் என்று சொல்லி என் ஞாபக சக்தியைச் சவாரி பழகிப் பார்க்கிறேன். மாமா, மாமி, இரண்டு குழந்தைகள், மாமா தம்பி வீரராகவன் அந்தக் குடும்பத்து நபர்கள்.

பெண்ணும் குண்டுதான். ஏன் குண்டாக இருக்க மாட்டார்கள்? பிரதி தினமும் காலையில் ஒரு பெரிய தூக்கு டப்பாவில் இட்டிலி, சட்டினி, இன்னொரு டப்பாவில் சாம்பார். யானை மண்டையாட்டம் (பித்தளையா? வெண்கலமா?) கூஜாவில் காப்பி - ஹோட்டலிலிருந்து வந்துவிடும். இந்நாள் விலைதான் பெரிசு, காற்றில் பறக்கவிடுகிற மாதிரி இருக்கிறதே. அந்த இட்டிலி அந்நாள் நாணயம் அரையணாவுக்கு ஒண்ணு; உள்ளங்கை கொள்ளாது. இரண்டு இட்டிலி சட்டினி சாம்பார் (எண்ணெய் இலவசம், சில இடங்களில் நெய் கூட ஒரு முட்டை ஸாங்ஷன்) அடிச்சு அரையணா அரை கப் காப்பி அடிச்சால் மதியம் உணவுவேளை வரை அநாயாசமாகத் தாங்கும்.

அதிலும் ஹோட்டலிலிருந்து வீட்டுக்கு வரும் இட்டிலி காப்பி, ஸ்பெஷல், முதலாளி குடும்பத்துக் கல்லவா? கேட்கணுமா?

மாமி ரொம்ப நல்லவள். இட்டிலியை ஒரு பாத்திரத்தில் போட்டு வெஞ்சனங்களுடன் பின் கட்டுக்குப் பெண்ணிடம் சில சமயங்கள் அனுப்புவாள். நாங்கள் காக்கைகளுக்கு மேல் அடித்துக் கொள்வோம். ‘மானம் போறது!’ என்று அம்மா எங்கள் முதுகில் (முதுகுகளிலா?) அறைவாள்.

நாங்கள் வசம் கண்ட பூனைகளாகி விட்டோம். ஹோட்டலிலிருந்து வரும் டிபனை மோப்பத்திலேயே அறியும் சக்தி எங்களுக்கு வந்துவிட்டது. இடையில் சித்தப்பா காவலையும் 'டேக்கா' கொடுத்துவிட்டு முன்கட்டில் ஆஜராகிவிடுவோம். அவர்கள் பங்கு போட்டுச் சாப்பிடுவதைக் காக்கை மாதிரி பார்த்துக் கொண்டிருப்போம்.

மாமியும் கொடுப்பாள்.

மாமியும் குழந்தைகளும் தின்ன முடியாமல் தின்று திணறிப்போன மிச்சத்தைத் துண்டம் துண்டமாகக் காக்கைக்கு எறிகையில், எங்களுக்கு வயிறு எரியும். முன் கட்டுக்கு வரும் காக்கைகள் வாடிக்கைக் காக்கைகளோ? தனிப் பருமனாக எங்களுக்குத் தோன்றும்.

பின் கட்டுக்குத் திரும்பினதும், சித்தப்பா எங்களைத் திட்டிக்கொண்டு எள்ளுருண்டையாகக் (குள்ளபட்டா) குதிப்பார். அதெல்லாம் நிமிஷமாகத் துடைத்தெறிந்து விடுவோம். மானம் பார்த்தால் இட்டிலி கிடைக்குமா? ஆனால் சித்தப்பா குதிப்பதையும், சத்தம் போடுவதையும் பார்த்தால் பயமாய் இருக்கும்.

அதேபோல் பிற்பகல், பொட்டலங்கள் (பஜ்ஜி, பகோடா, தோசை) காபி ஸகிதம் வந்து சேரும். ஆனால் அதற்கு மட்டும் சில சமயங்களில், சமையலறைக் கதவு மூடிக்கொள்ளும். ஏமாந்து திரும்புவோம். அந்தத் தோசை விள்ளல் மேல் உருளைக் கிழங்கை வைத்துக் கிடைக்காதா என்கிற ஆசைதான்.

மனம் இல்லாமல் எழுந்து மாமி பதினோரு மணிக்கு சமையலைத் தொடங்குவாள்.

வீரராகவன் விழிகள் கண்முன் எழுகின்றன. சிமிழ் போன்று, பெரிய அழகிய, ரப்பை சுருண்ட இமைகளுடன் ஏதோ சோகம் ததும்பும் சாம்பல் விழிகள் Close upஇல், திரையை அடைத்து, அதனால் நெஞ்சை அடைக்கும் side pose Charles Boyer, கமலஹாஸன் கண்கள். அண்ணன் தம்பிகள் இருவருமே யாருடனும் தமக்குள்ளும் அதிகம் பேசிக் கொள்ள மாட்டார்கள். ஏதோ வருவார்கள், போவார்கள். ஊஞ்சலில் உட்கார்ந்து நடுவில் செல்லத்திலிருந்து வெற்றிலை போட்டுக்கொள்வார்கள். முறுக்கானும்தான். சிவபுரி வாசனைத் துண்டுப் புகையிலை அல்ல. பாலக்காட்டுச் சுருள் புகையிலை, நெடி ஊரைத் தூக்கும்.

நாங்கள், இன்னும் ஒன்றிரண்டு வீடுகள் தவிர ஆண்டித்தெரு பூரா ஆங்கிலோ இந்தியக் குடும்பங்கள் தாம்.

எங்கள் வீட்டுக்கு நேரே வசித்த குடும்பத்தில் புருஷன் மனைவி இரண்டே பேர்கள்தாம். அவளை எல்லோரும் அம்மி என்று அழைப்போம். அவள் இயற் பெயர் Amy என்று இப்போது தோன்றுகிறது. அம்மியாவது? ஆட்டுக்கல் மாதிரிதான் உடம்பு இடை, அடித்தாங்கல் எல்லாம் பெரிது! அவளுடைய குடும்பப் பெயர் இன்றுவரை தெரியாது. இருவரும் வாட்ட சாட்டம். ஐம்பது, ஐம்பத்தைந்து வயது இருக்கும். குழந்தை குட்டி கிடையாது. குழந்தைகள் என்றால் மிகவும் ஆசை.

அவள் வீட்டில் அரை டஜன் பூனைக்குட்டிகள் வளர்ந்தன. எதிர்பாராத இடங்களில் எதிர்பாராத சமயங்களில் அவை திடுக் திடுக்கென ஓசைப்படாமல் முளைப்பது தமாஷாயிருக்கும். சில சமயங்களில் திக் திக்கென்றுகூடக் கட்டிலில் மெத்தையில் இரு தலையணைகளுக்கிடையில், Table lamp இன் பெரிய Lampshadeஇன் இருட்டில் கண்கள் மட்டும் நிகுநிகு, மேசை இழுப்பில் அமுக்கி வைத்திருக்கும் ஆடைகளுக்கு அடியில், அடுப்பங்கரைச் சாம்பல் கதகதப்பில் திடீரென Ventilator இலிருந்து தொப்பு - 'மியாவ்' - அதில்தான் எத்தனை boredom அம்மியின் தோள்மேல் ஒன்று வாலை விரைத்துக்கொண்டு நிற்கும். அவள் பாட்டுக்குக் கைக்காரியத்தைக் கவனித்துக் கொண்டிருப்பாள்.

ஆனால் பொதுவாக அவள் அதிகம் வீட்டு வேலை செய்வதாக எங்களுக்குத் தோன்றவில்லை. சதா எங்களோடு பேசிக்கொண்டோ, எங்கள் விளையாட்டுகளை கவனித்துக்கொண்டோ, வெறுமனே உட்கார்ந்து கொண்டிருப்பதாகத்தான் தோன்றிற்று. இப்போது நினைவுகூட்டி எடை கட்டிப் பார்க்கையில், அம்மி துரைசானி கொஞ்சம் சோம்பேறிதான். ஆயில் ட்ரம் மாதிரி அந்த உடம்பை வைத்துக்கொண்டு, அது எப்படி வணங்கும்? ஆனால் சமைக்காமல் அடுப்புச் சாம்பல் கதகதக்குமா? சாப்பிடாமல் உடம்பு அப்படிப் பருக்குமா?

Drainage, gas அடுப்பு, பேசும் படங்கள் இன்னும் வராத நாட்கள்.

ராயப்பேட்டை நெடுஞ்சாலையில், மவுண்ட் ரோடில், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னையின் இதர பிரதம பாகங்களில் டிராம் ஒடிற்று.

“கண கணாங் - கணகணாங்..“ டிரைவரின் காலடியில் மணியோசை, இதோ நினைவில் எழுகிறது. இரவு வேளைகளில் மேலே மின்சாரக் கம்பியைத் தொட்டுக்கொண்டு போகையில் நீல மின்பொறிகள் பந்து பந்தாக, முடிச்சு முடிச்சாக 'விச்விச்' எனச் சத்தமிடும். ஒன்று திண்ணமாகக் கூற முடியும். என் குழந்தைகளும் உங்கள் குழந்தைகளும் ட்ராம் பார்த்ததில்லை. முக்கி முக்கி விரட்டினாலும் வேகம் பத்து, பன்னிரண்டு மைல்களுக்கு மேல் எட்டாது. நடுத்தெருவை அடைத்துக் கொண்டிருந்தாலும் டிராம் விபத்துக்களால், உயிர்ச் சேதங்கள், காயங்கள் கூட நேர்ந்ததாகத் தெரியவில்லை.

ஒரு கண்டக்டர் முகம், இன்னும் மறக்கவில்லை. அடர்ந்த புருவங்கள் அடியில் தணல் விழிகள். எடுப்பான நாசி. முக்கியமாக அந்த மீசை செழிப்பாக வளர்ந்து காதடியில் அதற்கென்றே இறங்கிய கிருதாவுடன் கலந்து ஒட்டிக்கொண்டது. கன grand. ராணா ரஞ்சித்சிங், ராணா ப்ரதாப்சிங் - சரித்திரப் புத்தகப் படங்களில் சந்திக்கும் முகம்போல் தோற்றத்தை ஜாக்கிரதையாகப் பயிர்செய்து கொண்டிருந்த போதில், அந்த ஆள் தமிழன்தான் என்று பின்னால் தெரியவந்தது.

டிராமை எடுத்தபின் பல டிரைவர்கள், கண்டக்டர் குடும்பங்கள் நசித்துப் போனதாகத்தான் ஞாபகம். அவர்களுக்கு வேறெந்தத் தொழிலும் தெரியாது. பஸ்ஸுக்கும் அவர்களால் மாற முடியாது! அந்த நெரிசலுக்கும், ஆபீஸ் நேரக் கெடுபிடிக்கும், அடாவடி நியாயங்களுக்கும், நிமிட நேரத்தில் மரியாதைகள் கசங்கிப் போவதற்கும், அவர்களால் ஒருநாளும் பழக்கமாக முடியாது. நிச்சயமாக அவர்கள் கௌரவமானவர்கள்.

எதிர்எதிராக இரண்டு டிராம்கள் கடக்கையில் ஒரு டிரைவரின் உதடு அசையும். எதிர்வண்டி டிரைவரின் புருவங்கள் உயரும்; ஏதோ சேதி பரிமாறப்பட்டுவிட்டது. எனக்கு அப்பவே தோன்றிற்று - டிரைவர்கள் மூலம் டிராம்களே பேசிக்கொண்டன.

”கனகனாங் கனகனாங் கணகணி கணாங்"”வழி விடப்பா, டிராமுக்குக்கூட அல்ல. மரியாதை மிகுந்த அந்த நாட்களுக்கு.

இரவு வேளையில், சில சமயங்களில் அங்கிருந்து மிஞ்சின குழம்பு, ரஸம் அம்மிக்குச் சீர் போகும். சொல்லி அனுப்பித்தால், நொட்டாங்கு அடிக்காமல் அவளே வந்து வாங்கிக் கொள்வாள் "ஆ! ப்ராமின்ஸ் குக்கிங்? நல்லா ஆச்சே! John likes especially your pepper water very much!” அம்மியைக் காட்டிலும் எங்களுக்குத்தான் மகிழ்ச்சி கூட. ஏனங்கள் திரும்பி வருகையில் ஒரு தரம்கூடக் காலியாக வரா. Plum cake, திராக்ஷைகள் ஏராளமாகப் பதித்த bun. Basra பேரீச்சம் பழம் (பார்த்திருக்கிறீர்களா? கர்ச்சூரிக்காய், வாதாம் கொட்டை, (பார்த்திருக்கிறீர்களா?) பச்சை வாழைப் பழம் -

ப்ராக்கெட்டுக்குள் இருப்பதற்குக் கோபித்துக் கொள்ளக்கூடாது. அது குழந்தை ராமாமிருதத்தின் கொக்கரிப்பு.

அம்மி எங்கள் வீட்டுள் நுழையும்போதே அவள் முன்னால் நர்த்தனமாடிக்கொண்டு வருவோம்.

“நேக்கு, நேக்கு, நேக்கு.“

“பக்கிப் பொணங்கள்! பனாதைகள்! காணாததைக் கண்டமாதிரி அலையறதுகள்! மானம் இல்லை, வெட்கம் இல்லை, ரோசமில்லை!“

அந்த நாள் தமிழில் அர்ச்சனை இப்படித்தான் போலும்.

வீட்டில் குழந்தைகளே அம்மிப் பெண் குழந்தைகள்தான். அம்மாதான் திட்டுவாள். திட்டிவிட்டு அம்மாவே ரோசப்படுவாள். வேடிக்கையாக இல்லை?

சித்தி வயிற்றில் இன்னும் அன்னம் வைக்கவில்லை. ஆம் அதென்ன பாஷை ?

அம்மியின் கணவனுக்கு ஸ்பென்சரில் வாச்மேன் வேலை. காலை ஏழு, ஏழரை மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால், மாலை ஐந்தரை, ஆறுக்குத்தான் திரும்புவான். கையில் அம்மி கொடுத்த பார்சல் (அவள் அடுப்புக் கதகதப்புக்குக் காரணம்) தெருமுனையில் அவன் தலை மறையும் வரை வாசலில் நின்றுகொண்டு கையை ஆட்டிக்கொண்டே இருப்பாள். ஒருநாள் கூட மாறாத, எங்களுக்கும் பார்க்க அலுக்காத சடங்கு.

அபூர்வமாக என்றேனும் மாலையில் சடுதியாக வீடு திரும்பிடில், இருவரும் வாசல் தாழ்வாரத்தில் நாற்காலிகளைப் போட்டுக்கொண்டு அவள் socks அல்லது sweater ஊசிகளால் பின்னிக்கொண்டிருக்க, ஐயா வாயில் சுங்கானுடன் (pipe) இருவரும் மணிக்கணக்கில் அப்படியே உட்கார்ந்திருப்பர். இது என்ன சம்பாஷணை ? ஆனால் இருவரிடையிலும் ஏதோ போக்கு வரத்து (Communication) நடந்துகொண்டுதான் இருந்தது. இப்போது நினைத்துப் பார்க்கையில் என்ன அற்புதமான நிலை! அந்த ஆள் குரலைக் கேட்டதாகவே எனக்கு ஞாபகமில்லை.

அண்ணா - என் தந்தை - பின்னால் எப்பவோ எனக்கு விவரம் தெரிந்த வயதில், பேச்சுவாக்கில் சொன்னார். அம்மியின் கணவன் பக்கா ஆங்கிலேயன். அம்மி ஆங்கிலோ இந்தியன். ஆகையால் அவர்கள் சந்ததிக்கு அவன் தாய்நாட்டில் இடம் கிடையாது. சரி, அம்மியுடன் அவன் திரும்பியிருந்தால் அவளுக்கும் அங்கு மதிப்பு கிடையாது (Oh, Mister! you don't know. Our class Consciousness is worse than your caste feeling) அம்மி அங்கே போய் அவமானப்படுவதை விட, இங்கிலாந்தைத் துறக்கத் தீர்மானித்து விட்டான்.

My land is no longer mine.

ஆணழகன். அம்மி போல் பீப்பாய் அல்லன். லேசாக வெள்ளி படர்ந்த மீசை, தலையில் Sailor தொப்பி. கழுத்தைச் சுற்றி muffler, முதல் உலக மஹா யுத்தத்தில் போர் முனையில் duty பார்த்தவன். சும்மா சுட்டுத் தள்ளியிருப்பான். எங்களுக்கு எங்களுடைய ஆண்டித்தெரு வயதில் அதுதான் முக்கியம்.

“My land is no longer mine.”

அவன் சொல்லக் கேட்டு அண்ணா, பிறகு எப்பவோ, எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் வாக்கில் சொன்னது. ஓரிரண்டு இடையினங்கள்; அவற்றுடன் மெல்லினங்கள் மலிந்து, இழைக்கும் ஓசை நயங்களுடன் பின்னணியில் ஒற்றை ஸாரங்கியின் சோகத் தேம்பல், மூச்சின் கேவல் கேட்கவில்லை?

கேட்கும் செவியைப் பழக்கிக்கொள்ள - அல்லது, நான் பழக்கிக் கொண்டதற்கு ஓர் உதாரணம்.

பெரியோரைப் புகழ்வோம்.

அம்மியின் கணவனைக் குறிப்பிடுகிறேன்.

எனக்கு இரண்டாவது தம்பி ஆண்டித் தெருவில் பிறந்தான். ஹோட்டல்கார மாமி வாசல் பக்கத்து அறையை ஒழித்துக் கொடுத்தாள். (பின்னர் நாங்களே அதை எடுத்துக்கொண்டு விட்டோம்).

பிரசவம் (வழக்கம் போல்) வீட்டில்தான் நடந்தது. மன்னிப் பாட்டி, midwife உதவியுடன். ஆனால் என்ன கோளாறென்று தெரியவில்லை. முறைப்படி அம்மாவை ஸ்நானம் செய்வித்து வீட்டுக்குள் அழைத்துக் கொள்ளவில்லை. புண்ணியாவாசனம் நடக்கவில்லை. ஒரு ஜவ்வரிசிப் பாயசம்கூட வைக்கவில்லை.

திடீரென்று ஒருநாள் வாசலில் ஜட்கா வந்து நின்றது. அம்மாவை மன்னி தாங்கிக் கொண்டு வந்து ஏற்றித் தானும் ஏறிக்கொண்டாள். வண்டி பறந்தது. பின்னால் அண்ணா சைக்கிளில் கூடவே போனார். குழந்தையையும் கூடவே.

”சித்தி! அம்மாவை எங்கே அழைச்சுண்டு போறா ?”

”உஷ்... குழந்தைகளா, விளையாடப் போங்கோ.”

அம்மா அப்போ போனவள்தான்.

மன்னி இரவு வீட்டில் படுக்கவில்லை. காலை ஒன்பது மணி வாக்கில் அவசரமாக வந்து, பல் விளக்குகிறாள்; காபி, ஸ்நானம். அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, இரவுக்குத் தனக்கு எதையோ கட்டி எடுத்துக்கொண்டு போகிறாள். மறுபடியும் அவளைப் பார்க்க முடிவது மறுநாள் காலைதான்.

அண்ணா பள்ளிக்கூடம் போகிறார். சித்தப்பா ஆபீஸ் போகிறார்.

சித்தி சமைக்கிறாள். வீட்டுக் காரியம் பார்க்கிறாள். முடிந்தபோது முன்கட்டு மாமியுடன் கிசுகிசு. நான் அந்தப் பக்கம் வந்தால் பேச்சே அடங்கிவிடுகிறது.

சிவாவும் பானுவும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நான்தான் இருப்புக் கொள்ளாமல் வீட்டுள் சுற்றிச் சுற்றி வருகிறேன். வெறிச்சோன்னு இருக்கு. காடுன்னா இப்படித்தான் இருக்குமா ? ஏதோ பயம்மா. அம்மா இங்கேயே எங்கேனும் ஓர் அறையில் ஒளிஞ்சுண்டு கண்ணாமூச்சி காட்றாளா? அம்பிப் பாப்பா? அக்கறை இல்லை. அம்மாதான் வேணும்.

”அண்ணா, அம்மா எப்போ வருவா ?”

”எல்லாம் வருவாள். போடா என்னைத் தொந்தரவு பண்ணாதே.”

இதென்ன தாத்தா - அதான் அப்பா - இல்லை, அதான் தாத்தா, முன்னே பின்னே தெரியாமே, திடீரென்று ஊரிலேருந்து வரா? அந்த ஆறடியும், கற்பூரக் கொழுந்து போன்ற அந்தச் சிவப்பும், நிமிர்ந்த முதுகையும் (உபமானங்கள் இப்போதவை) அன்றுதான் முதலாகப் பார்க்கிறேன் போலும். ஏதோ தைரியம் என் உள் புகுவதை உணர முடிகிறது.

அன்று மாலை ஆஸ்பத்திரியிலிருந்து அவர் வீடு திரும்பியதும் அவருடைய நோட்டுப் புத்தகத்தில் மணிமணியாக எழுதிக் கொண்டிருக்கிறார். மனசில் ஆயிரம் சந்தேகங்களுடன் அவரை அணுகுகிறேன்.

“தாத் - அப்பா, அம்மா எப்போ வருவா?”

“அதே கேள்வியைத்தான் இப்போ நான் அவளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.”

“எவளை ?”

முகம் நிமிர்ந்து என்னைப் பார்க்கிறார். லேசாகப் புன்முறுவல் பூக்கிறார். என் தலைமேல் கையை வைக்கிறார். கை சுடுகிறது.

எனக்குத் திடீரென்று அழுகை வருகிறது. கூடவே சிரிப்பும் வருகிறது.

அதுதான் அவளோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பாற்கடல்/அத்தியாயம்-15&oldid=1534372" இலிருந்து மீள்விக்கப்பட்டது