எனது நாடக வாழ்க்கை/மேனகா திரைப்படம்

விக்கிமூலம் இலிருந்து
மேனகா திரைப்படம்

கோபிச்செட்டிப்பாளைத்தில் நாடகங்கள் நல்ல வசூலில் நடந்துகொண்டிருந்தபோது, திருப்பூர் ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீசார் வந்தார்கள். நாங்கள் நடத்தி வந்த மேனகா என்னும் சமூக நாடகத்தைத்திரைப்பட மெடுக்க விரும்பினார்கள். எங்கள் கம்பெனியில் பெயரும் படக் கம்பெனியின் பெயரும் ஒன்றா யிருந்தது. இது, இரு கம்பெனிகளுக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருப்பதுபோல் காட்டியது. நாடகங்களுக்குச் சுமாராக வசூலாகி வரும் சமயத்தில் திடீரென்று நிறுத்திவிட்டுத் திரைப்படத்தில் நடிக்கச் செல்வதென்றால் மனத்திற்குக் கஷ்டமாகத்தானிருந்தது. என்றாலும் எங்கள் உருவம் பாடுவதையும், பேசுவதையும், நடிப்பதையும் நாங்களே பார்த்து மகிழக் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை இழந்துவிட விரும்பவில்லை. எனவே ஒப்புக்கொண்டோம். ஒப்பந்தம் முடிவாயிற்று. எங்கள் நால்வருக்கும், குழுவினார் அனைவருக்குமாகப் பதினாலாயிரம் ரூபாய்கள் கொடுப்பதென்று முடிவு செய்யப்பட்டது. கோபிச்செட்டிப் பாளையத்தில் சமூகச் சீர்திருத்தச் சங்கத்திற்காகப் பெரியார் ஈ. வெ. ரா. தலைமையில் பம்பாய் மெயில் நடைபெற்றது. பெரியார் நாடகத்தைப் பிரமாதமாகப் பாராட்டினார். நல்ல வசூலும் ஆயிற்று. ஏற்கனவே எங்கள் மேல் கோபம் கொண்டிருந்த பிராமணர்களுக்கு இந்த நாடக நிகழ்ச்சி மேலும் கோபத்தை மூட்டியது. கோபி முடிந்ததும் ஈரோடு வந்து சேர்ந்தோம்.

ஈரோட்டில் எம். ஆர். சாமிநாதன் ஜம்புலிங்கம் என்னும் ஒரு சமூக நாடகத்தை எழுதிக் கொடுத்தார். அந்த நாடகத்தை அவசரமாகத் தயாரித்து அரங்கேற்றினோம். இது விதவைக்கு மறுமணம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு சிறந்த நாடகம். தோழர் ஜீவானந்தம் ‘பெண்ணாரிமைக் கீதங்கள்’ என்னும் நூல் ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் “கன்னி விதவைத் துயர் நினைந்திடக் கண் கலங்கிடுமே” என்னும் ஒரு பாடலை எழுதியிருந்தார். அப்பாடல் ஜம்புலிங்கம் நாடகத்திற்காகவே எழுதப்பட்டது போல் இருந்தது. நாடகத்தில் அந்தப் பாடலைச் சேர்த்துக் கொண்டோம். எல்லோரும் பாராட்டினார்கள். நாங்கள் பம்பாய் புறப்படவிருப்பதை யொட்டிப் பல நண்பர்கள் விருந்துகள் நடத்தி வாழ்த்தினார்கள். பெரியாரும் ஒரு பெரிய விருந்து நடத்தினார். சமூகச் சீர்திருத்த சங்கத்திற்கு நாடகம் நடத்திக் கொடுத்ததற்காகப் பெரியார் ஒரு பாராட்டுக் கூட்டமும் நடத்தினார். எல்லோரும் அதிசயப்படும் படும்படியாக அவர் அந்தக் கூட்டத்தில் எனக்கு ஒரு தங்கப்பதக்கமும் பரிசளித்தார். இந்தப் பதக்கம் ஒரு பவுனில் தமது சொந்தப் பணத்தில் செய்யப்பட்டது என்பதைப் பெரியார் அறிவித்தபோது எல்லோரும் வியப்படைந்தார்கள். பெரியார் அவர்களை நன்கறிந்தவர்கள் அவரிடமிருந்து பரிசு பெறுவது எவ்வளவு பெரிய காரியம் என்பதை நன்கு உணர்வார்கள். அதனால்தான் இதை இங்கே குறிப்பிட்டேன்.

1935, செப்டெம்பர், 2ஆம் தேதி எல்லோரும் மேனகா படப்பிடிப்பிற்காகப் பம்பாய்க்குப் பயணமானோம்.

புகைவண்டி பம்பாயை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. எங்கள் எல்லோருடைய உள்ளங்களிலும் மகிழ்ச்சியின் தாண்டவம். ஆங்கிலப் படங்களைக் கண்டு அதிசயித்ததும், வட இந்தியப் படங்களைக் கண்டு மகிழ்ந்ததும், கடைசியாக நம் தமிழிலேயே படம் பேசுவதைக் கண்டு பிரமித்ததும் ஒன்றன்பின் ஒன்றாக என் மனக் கண்முன் தோன்றி மறைந்தன. ரயில் வண்டியே அல்லோல கல்லோலப்பட்டது. எல்லோருடைய நாவிலும் சினிமாப் பேச்சுதான், எடிபோலோவிலிருந்து எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி நடிப்புவரை எங்கள் நடிகர்கள் பேசித் தீர்த்துவிட்டார்கள். நான் மட்டும் மற்றவர்கள் பேச்சில் கலந்து கொள்ளாமல் இன்பக் கனவுகளில் ஆழ்ந்திருந்தேன். நமது படத்தை, நமது பேச்சை, நமதுபாட்டை நாமே சிலமாதங்களில் சினிமாத் திரையில் பார்க்கவும் கேட்கவும் போகிறோம் என்பதை எண்ணி எண்ணி என் உள்ளம் பூரித்தது.

இவர்தானம்மா உன் கணவர்!

ரெயிச்சூர் ஜங்ஷனில் ஸ்ரீஷண்முகானந்தா டாக்கீசாரின் பங்குதாரர்களில் ஒருவரான திரு, எஸ். கே. மொய்தீன் அவர்கள் பெண் நடிகையர் இருந்த பெட்டிக்கு, எங்களை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். எம். எஸ். விஜயாளுக்கு நான் அறிமுகப்படுத்தப்பட்டதும் அவர் என்னைச் சுட்டிக் சுாட்டி கே. டி. ருக்மணியிடம், “இவர்தானம்மா உன் கணவர்” என்றார். கே. டி. ருக்மணி சளைக்கவில்லை. அவர் என் தம்பி பகவதியைச் சுட்டிக்காட்டி எம். எஸ். விஜயாளிடம், “இவர்தான் உன் கணவர்” என்றார். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. மேனகா படத்தில் நூர்ஜஹானக நடிக்கும் கே. டி. ருக்மணியின் கணவனாக நானும், மேனகாவும் நடிக்கும் எம்.எஸ். விஜயாளின் கணவனாகத் தம்பி பகவதியும் நடிக்க ஏற்பாடு செய்திருந்ததை யொட்டி அவர்கள் இவ்வாறு தமாஷாகப் பேசிக்கொண்டார்கள். என்றாலும் இளமங்கையர் கணவர் என்ற பதத்தை இவ்வளவு தாராளமாக உபயோகித்தது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. சில மணி நேரம் அந்த வண்டியில் இருந்துவிட்டுப் திரும்பியவுடன் என் மகிழ்ச்சியெல்லாம் எங்கோ பறந்தோடி விட்டது. மனம் பலவிதமாகக் குழப்பமுற்றது.

இரும்பும் காந்தமும்

ஐந்தாம் தேதி காலை பம்பாய் தாதர் ரயில் நிலையத்தில் இறங்கும்வரை இதைப்பற்றிய நினைவுதான். திரைப்படம் முடிந்து திரும்புவதற்குள், அப்சரஸ் திலோத்தமையால் சகோதரர்களுக்குள் சண்டை பிடித்துக்கொண்ட சுந்தோபசுந்தார் கதி எங்களுக்கு நேராதிருக்க வேண்டுமே என்றெண்ணிப் பெருமூச்சு விட்டேன். அந்தச் சமயம் எங்கள் பெரியண்ணா டி. கே. சங்கரன் அவர்களைத் தவிர எங்களில் எவருக்கும் மணமாகவில்லை. நாங்களும் எங்கள் குழுவின் ஏனைய நடிகர்களும் துள்ளித் திரியும் பருவமுடைய வாலிபர்கள்! வந்திருக்கும் நடிகையரோ இளமையும் எழிலும் குலுங்க நிற்கும் மங்கையர்! இந்நிலையிலே “இரும்பும் காத்தமும் பொருந்தும் தன்மைபோல்” விபரீத விளைவுகள் ஏற்படுவது இயற்கையல்லவா? இந்தப் பயம் அண்ணாவுக்கும் ஏற்பட்டிருந்தது என்பது சினிமாக் கம்பெனி வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே தெரிந்தது. தாதரில் ஸ்டுடியோவின் அருகிலேயே ஒரு பெரிய பங்களா ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. பெண்களுக்கு மாடி மீதும். எங்களுக்குக் கீழேயும் இடம் ஒதுக்கப் பட்டது. வீட்டில் அடியெடுத்து வைத்தவுடனேயே எங்கள் பெரியண்ணா, “எல்லோருக்கும் சொல்கிறேன். எவரும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் மாடிக்கு அனுமதியின்றிப் போகக்கூடாது” என்று கண்டிப்பான உத்தரவு போட்டுவிட்டார்.