உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தான் மானிடர் உண்மையான நாகரிகம் உடையோராவர்" என்றும் பாரதி திட நம்பிக்கை தெரிவிக்கிறார். லெனினைப் பற்றி பாரதி குறிப்பிடும்போது, 'ஸ்ரீமான்' என்ற அடைமொழியைச் சேர்த்துக் குறிப்பிடுவதிலிருந்தே, அவர் லெனினை எத்தனை உயர்வாக மதித்துப் போற்றி வந்தார் என்பதைப் புரிந்து கொள்ளலாம் (பாரதி கட்டுரைகள் - சமூகம்).

ரஷ்யாவில் உள்நாட்டுப் போர் வெடித்ததோடு, இளம் சோவியத் குடியரசைப் பதினான்கு அன்னிய நாடுகளின் ஆயுதந் தாங்கிய தலையீட்டுப் போரும் அச்சுறுத்திய காலத்தில், பாரதி இதனை அறிந்து பெரிதும் மனம் கலங்கினார்; இந்தக் கவலை அதிபரை இரவிலும் தூங்க விடவில்லை. ரஷ்யாவில் உள்நாட்டு எதிர்ப் புரட்சிக் கொள்ளைக் கூட்டமும் அன்னியத் தலையீட்டாளர்களும் புரிந்து வந்த ரத்த பயங்கரமான அக்கிரமங்களைப் பற்றிக் கூறும் ”பேய்க் கூட்டம்” என்ற தமது கதையில், ”ருஷியா விஷயம் எக்கேடு கேட்டால் எனக்கென்ன என்று தூங்க முயற்சி செய்தால் மனம் இணங்கவில்லை .... பிறகு எனக்கு ருஷியக் குடியரசின் தலைவனாகிய லெனின் என்பவனுடைய ஞாபகம் வந்தது. உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி. லெனினுக்கு லக்ஷம் பக்கத்திலே!” (பாரதி - கதைகள்) என்று லெனின்மீது பூரணப் பரிவும் பாசமும் கொண்டவராக எழுதினார் பாரதி.

புரட்சிக்குப் பின்னரும் ரஷ்யாவில் நிகழ்ந்து வந்த நிகழ்ச்சிகளை பாரதி உன்னிப்பாகக் கவனித்து வந்தார் என்றே சொல்லலாம். லெனினது தலைமையில் அங்கு நிறைவேற்றப்பட்ட பல சீர்திருத்தங்களையும் பாரதி ஆதரித்து எழுதியுள்ளார். அதே சமயம் அந்த இளம் சோவியத் குடியரசின் மீதும், அது மேற்கொண்ட தீவிரமான நடவடிக்கைகளின் மீதும் புழுதியை வாரித் தூற்றி வந்த மேலை நாட்டுப் பத்திரிகைகளின் விஷமத்தனமான பொய்ப் பிரசாரத்தை மறுக்கவும் அம்பலப் படுத்தவும் பாரதி தவறவில்லை. அவரது கட்டுரைகள் பலவும் இதற்குச் சான்று பகர்

14