நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/12. அடையாளக் குழப்பம்
ஒரு பெரிய நெற்களம் வழியிலே குறுக்கிட்ட போது, அந்த நெற்களத்தின் ஒரத்திலிருந்த பனை மரத்தடி மேட்டில் அமர்ந்து, காராளர் வீட்டில் தந்த பணியார மூட்டையை அவிழ்த்தான் கொல்லன். நெய் மணம் கமழ்ந்த அந்தச் சுவையான பணியாரங்களில், அவன் நாவும் வாயும் ருசி கண்டு கொண்டிருந்தன. பின் தொடர்ந்து வந்தவனும் அருகில் நெருங்கிக் கொண்டான். வருகிறவன் பூத பயங்கரப் படைவீரன்தான் என்பதைப் பற்றிக் கொல்லனுக்கு ஒரு சிறிதும் சந்தேகம் இருக்கவில்லை. அவன் தன்னை எப்படி எதிர் கொள்கிறானோ, அதற்கு ஏற்பத்தான் அவனை எதிர் கொள்வது என்ற திடமான முடிவுடன் பணியாரத்தை, அசைத்துப் புரளும் நாவுக்கு வேலை கொடுத்தபடி கொல்லன் தின்று கொண்டிருந்தான். வருகிறவன் தாக்குதலில் இறங்கினால், தாக்குதலில் இறங்குவது, வம்பு பேச வந்தால் வம்பு பேசுவது, உளவறிய முயன்றால் ஒன்றும் தெரியாதவனாக நடிப்பது என்று நினைத்து வைத்துக் கொண்டே காத்திருந்தான் கொல்லன். கொற்றவைக் கோவிலில் வைத்து இந்த எதிரியைச் சந்திப்பது, அங்கே சந்திக்க வேண்டிய கொற்கை நண்பனின் சந்திப்பிற்கு இடையூறாகவும், தடையாகவும் நேர்ந்து விடும் என்றெண்ணியே கொல்லன் இந்த நெற்களத்தில் அமர்ந்திருந்தான்.
கொல்லன் நினைத்த படி அந்தக் களப்பிர வீரன் இவனருகே வந்து சேர்ந்தான். அதே சமயம், கொல்லனைக் குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு காரியத்தையும் வந்தவன் செய்தான்.
வந்தவன் கொல்லனை நெருங்கியதும் நன்றாகப் பழகிய தமிழில், ஒலிப் பிழை கூட நேராமல், தெளிவாகக் 'கயல்' என்று கூறிவிட்டு இவன் முகத்தை உற்று நோக்கினான். எதை எதையோ எதிர்பார்த்திருந்த கொல்லன், இதை முற்றிலும் எதிர் பார்க்கவே இல்லை. இவன் திகைத்தான். மலைத்தான். குழப்பமுற்றான். எதிராளி அந்த நல்லடையாளச் சொல்லைக் கூறுவதை உணர்ந்து, இவன் ஒன்றுமே பேசாமல் வந்தவனின் முகத்தைப் பார்த்து விட்டு ஓரிரு கணங்களில் நிதானம் வரப் பெற்றவனாய்த் தன்னிடமிருந்த பணி யாரக் குவியலிலிருந்து தேன்குழலை எடுத்து நீட்டினான். வந்தவனும் விடாக்கண்டனாக இருந்தான். தேன் குழலை வாங்கிக் கொள்ளாமல் கீழே உட்கார்ந்து, கொல்லனின் காதருகே நெருங்கி மீண்டும் ‘கயல்’ என்று அவன் இரைந்து கூவினான். கொல்லனோ அந்தச் சொல்லையே காதினுள் ஏற்காதவன் போல்,
“அதனால் என்ன? தேன் குழல் வேண்டாம் என்றால் அதிரசம் தருகிறேன். சிலருக்கு எப்போதுமே உப்புப் பண்டம் பிடிக்காது. உப்பிட்டவருக்கு நன்றியும் பாராட்ட வேண்டி யிருக்கும். இனிப்பாக ஏதாவது தின்னலாம் அல்லவா?”, என்று கூறியபடி ஓர் அதிரசத்தை எடுத்து நீட்டினான். வந்தவன் ஒரு கணம் அயர்ந்து போனான். தான் எதிர்பார்த்து வந்தது நடவாத காரணத்தால் அவனுக்கு ஏமாற்றமாக இருந்ததோ என்னவோ, தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் கொல்லன் கொடுத்த அதிரசத்தை வாங்கித் தின்னத் தொடங்கினான் வந்தவன். இதற்குள் கொல்லனின் உள்ளுணர்வு மிக நன்றாக விழித்துக் கொண்டு விட்டது. ‘வன்னி மரத்தடிக்குச் செல்லும்போது வழக்கமான நல்லடையாளச் சொல் வேண்டாம்' என்று பெரியவர் காலையில் கூறியிருந்தது வேறு இவனுக்கு ஞாபகம் வந்து விட்டது. வேறொரு காரணத்துக்காக அவர் அப்படிக் கூறியிருந்தாலும், இந்தப் புதிய சூழ்ச்சியை முறியடிக்கவும் இவனுக்கு அதுவே பயன்பட்டது. திருமோகூரில் அவ்வளவு நாட்கள் தங்கியதால் களப்பிரர்களின் பூத பயங்கரப் படைக்குக் கிடைத்த ஒரே வெற்றி, பாண்டியர்களின் நல்லடையாளச் சொல் எப்படியோ அவர்களிடம் சிக்கியிருப்பதுதான் என்பதைக் கொல்லன் புரிந்து கொண்டான். முடியுமானால், அன்றிரவே பெரியவரைச் சந்திக்கும் போது இந்த நிகழ்ச்சியைக் கூறிப் பாண்டியர்களின் நல்லடையாளச் சொல்லை உடனே மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் அவன். இல்லாவிட்டால், பயங்கர விளைவுகள் ஏற்பட்டு விடும் என்பது புரிந்தது. தன் தந்திரம் பலிக்காததால், வந்தவன் இவனிடம் ஏதேதோ வம்பு பேசினான். இவன் அளித்த பணியாரங்களைச் சுவைத்துத் தின்றான். புறப்பட்டுப் போவதற்கு முன் பயமுறுத்துவது போன்ற சில வாக்கியங்களைக் கூறியபடியே இவன் முகத்தைக் கவனித்தான் வந்தவன்: “உனக்குத் தெரியுமா அப்பனே! களப்பிர குல திலக மகாபராக்கிரம வீர தீர ராஜாதி ராஜமார்த்தாண்டரான கலியரசரின் புதிய கட்டளைப்படி மறைந்திருக்கும் பாண்டியர்களுக்கு உதவி செய்கிறவர்களும், உதவி செய்வதாகச் சந்தேகப்படுவதற்கு உரியவர்களும் மதுரை மாநகரில் ஈவிரக்கமின்றிக் கழுவேற்றப் படுவார்கள்...”
“இந்த ஊரில் அப்படி யாரும் இல்லை! களப்பிர மன்னருக்கு உதவுகிறவர்கள்தான் இவ்வூரில் அதிகம். எங்களுர்ப் பெரு நிலக்கிழாரும், வள்ளலும் ஆகிய பெரிய காராளர் தம் கழனிகளில் விளையும் நெல்லிற் பெரும் பகுதியைக் களப்பிரர்களின் அரண்மனை உபயோகத்துக்கும், அறக் கோட்டங்களில் தேசாந்திரிகளாக வருபவர்களுக்கு உணவிடவுமே பயன்படுத்துகிறார். அவரைப் போல ராஜ விசுவாசம் உள்ளவர்கள் இந்த ஊரில் இருக்கும் போது இங்கே கெடுதல் எப்படி இருக்க முடியும்?”, என்றான் கொல்லன். வந்தவன் சிரித்தபடியே இதைக் கேட்டுக் கொண்டு போய் விட்டான். அவன் நெடுந் தூரம் சென்று மறைகிற வரை அங்கேயே உட்கார்ந்து கொண்டு பார்த்தான் கொல்லன். இருளில் அவன் உருவம் தொலைவில் மறைந்த பின்பே இவன் எழுந்தான். தன்னை யாரும் தொடரவோ, கவனிக்கவோ இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கொற்றவைக் கோயில் வன்னி மரத்தடியை அடைவதற்காகப் புறப்பட்டான் கொல்லன்.
போகிற வழியில் கொற்றவைக் கோயிலுக்கு முன்னிருந்த ஒரு தாமரைக் குளத்தில், நாலைந்து பேதைப் பருவத்துப் பெண்கள் குடங்களோடு அமர்ந்து படித்துறையில் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பதையும், யாரோ வெளியூர் அந்நியன் போல் தோன்றிய பால் வடியும் இளம் முகத்தினனான ஓர் விடலைப் பருவத்து இளைஞன் அவர்களிடம் ஏதோ வினாவுவதையும், அவர்கள் அவனைப் பொருட்படுத்தாமலே மேலும் தங்களுக்குள் சிரித்துக் கொண் டிருப்பதையும் கொல்லன் கண்டான். பெண்களைக் கவரும் கம்பீரமான ஆண்மைக் குரல், அந்த விடலை இளைஞனுக்கு இல்லை. அவன் குரல் இனியதாகவும், மிருதுவாகவும் தாழ்ந்தும் ஒலித்தது. அவன் முகத்திலும் கூடப் பெண்மைச் சாயலே அதிகம் புலப்பட்டது. அவனருகே நெருங்கிய கொல்லன்:
“என்ன வேண்டும் உங்களுக்கு? என்னைக் கேட்டால் மறுமொழி சொல்ல முடியும்!” என்று தானாகவே அவனை அணுகி வினவினான்.
“ஒன்றுமில்லை ஐயா! இந்தப் ‘பெட்டைப் பயல்'களுக்கு இருக்கிற கர்வத்தைப் பாருங்களேன்! கொற்றவைக் கோயில் வன்னி மரத்தடிக்கு வழி கேட்டால் வழி கூறாமல் சிரிக்கிறார்கள்”, என்ற தொடரும் இவனைச் சிந்திக்க வைத்தன. சில கணங்கள் தயங்கியும், சிந்தித்தும் முடிந்தபின்,
“ஆனாலும் உள்ளூரில் வருவது போல வெளியூரில் உங்களுக்கு இப்படிக் கோபம் வரக் கூடாது. என்னோடு வந்தால் அந்த இடத்தை உங்களுக்குக் காட்ட முடியும்” - என்று கூறி விட்டு அவன் தன்னைப் பின் தொடர்வதையும் உறுதி செய்து கொண்ட பின் விரைந்து நடந்தான் கொல்லன்.