நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/11. இரும்பும் இங்கிதமும்

விக்கிமூலம் இலிருந்து

11. இரும்பும் இங்கிதமும்

பெரியவரின் ஆணையைப் பெற்றுத் திருமோகூர் திரும்புவதற்காகச் சிறிது தொலைவு வரை மலைச் சரிவில் கீழிறங்கி வந்து விட்ட கொல்லனை, மறுபடியும் இரண்டு ஆபத்துதவிகள் பின் தொடர்ந்து துரத்தி வந்தனர்.

"இரவெல்லாம் வழி நடந்து ஒடி வந்திருக்கிறாய்! இங்கு வந்ததும் வராததுமாக, மறுபடி திருமோகூருக்கு ஒட நேர்ந்திருக்கிறது. பசியாறுவதைப் பற்றிய நினைப்பே உனக்கும் இல்லை. நாங்களும் மறந்து விட்டோம். இதோ இவற்றைப் போகிற வழியில் சிலம்பாற்றங்கரையில் அமர்ந்து உண்டு விட்டுப் போ", என்று வேக வைத்த பனங்கிழங்குகள் சிலவற்றையும், நாலைந்து கதலிக் கனிகளையும், இரண்டு விளாம்பழங்களையும் அவனிடம் கொடுத்து விட்டுச் சென்றனர் அந்த ஆபத்துதவிகள். அவனும் அவற்றை வாங்கித் தன் மேலாடையில் முடிந்து கொண்டான். அவர்கள் அப்படித் தேடி வந்து தன் பசியை எண்ணிக் கவலையோடும், சிரத்தையோடும் நடந்து கொண்டது அவனுக்குப் பெருமையாக இருந்தது.

புதிய இடத்தில் தங்களுக்கு என்று சிரமப்பட்டுச் சேகரித்து அவித்த பனங் கிழங்குகளில் சிலவற்றையும், பழங்களையும் துரத்தி வந்து தந்த ஆபத்துதவிகளை அவன் மனம் வாழ்த்தியது. நன்றியோடு பாராட்டியது.

‘களப்பிரர்கள் நாட்டைத்தான் பாண்டியர்களிடமிருந்து பறித்துக் கொள்ள முடிந்ததேயொழியப் பிறர்க்குதவும் பண்பு, பிறர் பசியை அறிந்து உணவிடும் பெருந்தன்மை ஆகிய குடிப் பண்புகளை ஒருபோதும் பறிக்க முடியாது’ என்று இறுமாப்போடு தோள்கள் விம்மி எழ, எண்ணினான் அவன். விண்ணவர் அமுதைப் பருகுவது போல் விரும்பிப் பருக ஏற்ற சிலம்பாற்று நீரோடு ,அந்தச் சிறிய அளவு உணவை உண்டு முடிந்த பின் நடையைத் தொடர்ந்தான் அவன். கைகளிலும் வாயிலும் விளாம்பழ வாசனை இன்னும் தொடர்ந்தது. இன்னும் பல நாட்கள் தொடர்ந்து தங்க நேரிட்டாலும், விளாம்பழங்களும் நல்ல மலை வாழைக்கனிகளும் அந்த மலையில் போதுமான அளவு கிடைக்கும் என்று தோன்றியது. அடிவாரத்தில் பனங்கிழங்குகள் கிடைக்கவும் வழி இருந்தது. மிகப் பல ஆண்டுகளாக மறைந்து வாழும் பாண்டிய ஆபத்துதவிகளும், முனை எதிர் மோகர்களும், வாய்க்குச் சுவையாக உண்ண இயலாமல் இப்படித்தான் அங்கங்கே கிடைத்த உணவுகளை உண்டு நிறைவு கொள்ள வேண்டிய நிலையிலேயே இருந்தனர். விருந்துகளையும், உண்டாட்டுக்களையும், ஆள்பவர்கள் அநுபவிக்க முடியாது என்று புரிந்திருந்தும், பாண்டிய வீரர்கள் தியாக மனப்பான்மையோடு தலைமையின் ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பணி புரிந்து வந்தனர். நாட்டை விடுவிக்கும் வேட்கையில், பசியையும் ருசியையும் கூட மறந்திருந்தனர். பாண்டியர் குடிப் பண்பான அதே கட்டுப்பாடு திருமோகூர்க் கொல்லனிடமும் இருந்தது. அவர்கள் பின் தொடர்ந்து வந்து கொடுத்து விட்டுப் போகவில்லையென்றால், அவன் உணவையும் மறந்து விட்டே பயணத்தைத் தொடரும்படி ஆகியிருக்கும். ஞாபகமாகத் தன் பசியை நினைவு கூர்ந்து, தேடித் துரத்தி வந்து தனக்குக் கொடுத்து விட்டுப் போன அந்த ஆபத்துதவிகள், தம் அளவில் இன்னும் பசியாறினார்களோ, இல்லையோ என்று சிந்தித்த போது அவன் உள்ளம் உருகியது.

சில நாட்களுக்கு முன்பு திருமோகூரிலிருந்து இடம் மாறியவுடன் பார்த்திருந்ததையும் விட, இன்று திருமால் குன்றில் பெரியவர் மதுராபதி வித்தகரின் முகம் இன்னும் ஒளி மிகுந்து காட்சி தந்ததாகவே அவனுக்குத் தோன்றியது. களப்பிரர்களால் விளைந்த புதிய சோதனைகளும் தப்பித்துக் கொள்வதற்காக ஒடி இடம் மாற நேர்ந்ததும் அவரைச் சிறிதும் கலங்கவோ, தளரவோ விட்டு விடவில்லை என்பதை அவன் நினைத்தான். துன்பங்களினால் சிறிதும் கலக்கமே அடையாத அந்த நிலை, அவனை மெய் சிலிர்க்கச் செய்தது.

“பேரரசுகளின் நடுவே இப்படிப்பட்டவர்கள் பிறப்பதில்லை! இப்படிப்பட்டவர்கள் பிறந்த பின்புதான் ஒரு பேரரசே பிறக்கிறது", என்று இதயத்தில் அவரை வியந்தபடியே அவன் திருமோகூர் திரும்பினான். திருமால் குன்றத்திலிருந்து காட்டுப் பாதையாகச் சுருங்கிய வழி இருந்ததனால், பிற்பகலிலேயே அவன் திருமோகூரை அடைந்து விட்டான். முதலில் தன் உலைக் களத்திற்குச் சென்றான் கொல்லன். சிறிது நேரத்திற்குப் பின், பெரியகாராளர் மாளிகைக்குச் சென்றான் அவன். அங்கே பூத பயங்கரப் படை வீரர்கள் சிலர் காவலிலிருந்தாலும், அவனைத் தடுக்கவோ, கேட்கவோ இல்லை. பெரியவர் சொல்லியிருந்த கொற்கை மனிதனைச் சந்திக்க இன்னும் நேரம் இருந்ததால்தான், முதலில் அவன் இங்கே வந்திருந்தான்.

அப்போது காராளர் வீட்டில் இல்லை. கழனிகளை மேற்பார்க்கச் சென்றிருப்பதாகக் காராளர் மனைவி கூறினாள். அவர் வெளியே சென்று வரத் தடை இல்லை என்பதைக் கொல்லன் இப்போது புரிந்து கொண்டான்.

அடுத்த கணமே செல்வப் பூங்கோதை ஒவியம் போல் அடக்கமாக, அவனை எதிர் கொண்டாள். காராளர் மனைவியும் உடனிருந்ததால் அந்த அம்மையாருக்குச் சந்தேகம் எழாமல் “கூடலில் தெய்வத்தை கண்டு வணங்கும்போது தங்கள் வேண்டுதலைச் சேர்த்தேன் அம்மா! இதோ பிரசாதம்!”, என்று அந்தத் தாழம்பூச் சுருளை எடுத்துச் செல்வப் பூங்கோதையிடம் சாதுரியமாக அளித்தான், கொல்லன். செல்வப் பூங்கோதையும் அதைப் புரிந்து கொண்டாள். அவள் கொடியாக வாடித் துவண்டு போயிருப்பது அவனுக்குப் புலப்பட்டது. அன்பு, மனிதர்களை எந்த அளவு தவிக்கச் செய்யவும் முடியும் என்பதை அவன் கண் கூடாகக் கண்டான். ஆறுதலாக இருக்கட்டும் என்று கருதி, அவனே மீண்டும், “தெய்வம் கை விடாது அம்மா! நல்ல காலம் விரைவில் வரும்”, என்றான். அவன் இப்படிக் கூறிய போது அவள் அந்தத் தாழம்பூச் சுருளையும், சந்தனத்தையும் கண்களில் ஒற்றி எடுத்துக் கொண்டிருந்தாள். அவள் விழிகளில் புதிய ஒளியை இப்போது அவன் கண்டான்.

“துன்பப்பட்டுத் தவிப்பவர்களின் வேதனைகள் தெய்வத்துக்கு எங்கே உடனே புரிகிறது? அந்தத் தெய்வம் அருளுகிற வரை நாம்தான் காத்துக் கொண்டிருந்து துயரப்பட வேண்டியிருக்கிறது. அன்பரைக் காக்க வைக்காத நல்ல தெய்வமே இந்த உலகம் எங்கும் இல்லை போலிருக்கிறது!”, என்றாள் அவள். இந்தச் சமயத்தில் காராளரின் மனைவி ஏதோ வேலையாக உட்பக்கம் சென்றாள். தாய் உள்ளே சென்றதும், செல்வப் பூங்கோதையின் கண்களில் நீர் நெகிழ்ந்து ஈரம் பளபளத்தது. 'அவரைப் பற்றி இன்னும் ஏதாவது சொல்லேன்-இன்னும் ஏதாவது சொல்லேன்', என்று அவனை இறைஞ்சியது அந்தப் பேதையின் துயரப் பார்வை.

“கவலைப்படாதீர்கள் அம்மா! நீங்கள் அனுப்பிய ஒலையைப் படித்து, அந்தத் திருக்கானப்பேர் நம்பி மிகவும் மனம் உருகி உணர்வுகள் நெகிழ்ந்ததை, நான் நேருக்கு நேர் என்னுடைய இரண்டு கண்களாலும் கண்டேன். இங்கே நீங்களும் அவரை நினைத்து உருகித் தவிக்கிறீர்கள். அங்கே அவரும் உங்களை நினைத்து உருகித் தவிக்கிறார். இந்தப் பாழாய்ப் போன களப்பிரர் ஆட்சி ஒழிந்ததுமே, உங்கள் இருவருக்கும் நல்ல காலம் விடியும் அம்மா!", என்று அவளுக்கு ஆறுதலாக மேலும் சொன்னான் அவன். திருக்கானப்பேர் நம்பி அந்த ஒலையைக் கணிகை மாளிகையின் சந்தனம் அரைக்கும் பகுதியிலிருந்து படித்து மகிழ்ந்ததை ஒரு சிறிது மிகைப்படுத்தியே 'உருகினார்', 'நெகிழ்ந்தார்' என்றெல்லாம் இங்கே செல்வப் பூங்கோதையிடம் அவன் சொல்ல வேண்டியிருந்தது. காரணம், ‘துன்பப்பட்டுத் தவிப்பவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் சொற்கள் பொய்யாக இருப்பினும், அத்தகைய பொய்களை வேண்டிய மட்டும் கூறலாம்’ - என்று அவன் மனதில் ஒரு நாட்டுப்புற நியாயம் இருந்தது[1]. இந்த நிலையில் மேலும் தொடர்ந்து பொய்யே சொல்லுவதா, அல்லது என்ன செய்வது என்று அந்தத் தூதனையே குழப்பும், அடுத்த வினாவைக் கேட்கலானாள் அவள்:

“கோநகரத்தில் யாரோடு எங்கே தங்கியிருக்கிறார் அவர்? உடனிருப்பவர்கள் அவருக்கு ஒரு குறைவும் வராமல் நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்களா?”

இந்தக் கேள்விக்கு அவன் உடனே மறுமொழி கூறி விடவில்லை. சற்றே சிரித்தான்; தயங்கினான். பெண்களின் நளினமான உணர்வுகளைப் பற்றியும் பொறாமை, புகைதல்களைப் பற்றியும் அவனுக்கு அதிக அனுபவ ஞானம் இல்லை என்றாலும், பொதுவான உலகியல் ஞானம் இருந்தது. இரும்பை உருக்கியும், வளைத்தும், நீட்டியும், காய்ச்சியும், அடித்தும் பழகிய கைகளில் தங்கம் வந்தது போல் மிருதுவானதும் இங்கிதமானதும் ஆகிய ஒரு வினா இப்படி வந்து சேர்ந்திருக்கிறது. கரும் பொன்னாகிய இரும்பிற் பழகுகிறவனிடம் அரும் பொன்னாகிய தங்கம் வந்திருக்கிறது. அதன் பணி வகைகளை அறியவும், தெரியவும் தயங்கினாலும் இது தங்கம் என்பதையும், இதை இங்கிதமாக அணுக வேண்டும் என்பதையும், ஒரு விநாடி கூட அயராமல், உடனே நிர்ணயம் செய்து கொண்டான் அவன். இளையநம்பி கூடல் மாநகரில் கணிகை மாளிகையில் தங்கியிருப்பதையும், ஆடல் பாடல்களில் வல்லவளும் அதியற்புதப் பேரழகியுமான இரத்தின மாலை என்ற இளம் கணிகை அவனோடு உடன் இருந்து அவனைக் கவனித்துக் கொள்கிறாள் என்பதையும், அப்படி, அப்படியே செல்வப்பூங்கோதையிடம் கூறினால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே அவனால் உய்த்துணர முடிந்தது. இவற்றையெல்லாம் எண்ணி மிகவும் சாதுரியமாகச் செல்வப் பூங்கோதைக்கு மறுமொழி கூறலானான் அவன்:-

“அம்மா! இந்தக் காராளர் பெருமாளிகையில், தாங்கள் இடைவிடாமல் அருகிருந்து உபசாரம் செய்து கவனித்துக் கொண்டால், அவரை எப்படிக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்வீர்களோ, அப்படிக் கவனித்துக் கொள்கிறவர்களோடு, அவ்வளவிற்கு வளமான ஒரு மங்கல மாளிகையில்தான் அவர் மதுரை மாநகரில் பாதுகாப்பாக மறைந்து தங்கியிருக்கிறார்.”

-கரடுமுரடான இரும்பில் தொழில் செய்து பழகியவன், முதன்முதலாகப் பொன்னில் இங்கிதமாக நகை செய்திருந்தாற் போல அமைந்தது, இந்த மறுமொழி. இவ்வளவு நளினமானதும் பாதுகாப்பு நிறைந்ததுமான மறுமொழிக்குக் கூட அவளிடம் இருந்து ஒரு மறுப்பு எதிர்ப்பட்டது. அவள் கோபமாக அவனை எதிர்த்து உடனே கேட்டாள்:

“அதெப்படி முடியும்? இந்த மாளிகையில் நான் அவரைக் கண்காணித்துப் பேணிப் பாதுகாத்து, உபசரிப்பது போல் வேறு எங்கும், வேறு எவராலும் அவரை என்றும் உபசரித்து விடமுடியாது? உன் ஒப்புவமையே தவறானது! நான் உபசரிப்பது போல் வேறு யாரும் அவருக்கு உபசாரம் செய்ய முடியாது என்பது தெரிந்திருந்தும், நீயே இப்படி ஒப்பிடலாமா? உன் உவமை தவறானது...”

“தவறுதான் அம்மா! அவர் நல்ல இடத்தில், நன்றாக இருக்கிறார் என்பதை உங்களுக்குத் தெளிவாகப் புலப்படுத்தவே அப்படிச் சொன்னேன். அந்த ஒப்புவமைக்கு வேறு எந்த வகையிலும் முழுமையான அர்த்தம் இருப்பதாக நீங்கள் நினைக்கவோ, இந்த ஏழையின் மேல் கோபப்படவோ கூடாது அம்மா!”

அவன் இப்படி மறுமொழி கூறிய பின் அவள் முகத்தில் கோபத்தின் சாயல் மெல்ல மறைந்தது.

“மீண்டும் எப்போது கோநகருக்குப் போக வேண்டுமோ, அப்போது என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போய் விடாதே. பெரியவர் எங்கிருக்கிறார் என்பதை நான் தெரிந்து கொண்டால் கூடவா ஆபத்து?”

“போகும் போது உங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் போகமாட்டேன் அம்மா!” - என்று அவளுடைய வினாவின் முன் பகுதிக்கு மட்டும் மறு மொழி கூறிவிட்டு மெல்லச் சிரித்தான் அவன். வினாவின் பிற்பகுதிக்கு அவனிடமிருந்து தனக்கு மறுமொழி கிடைக்காது என்பதை, அவனது அந்தச் சிரிப்பு மூலமே அவள் அறிய முடிந்தது. ‘எந்தப் பெண்களிடமும், அரசியல் ரகசியங்களையும் அரச தந்திரச் செய்திகளையும் விதிவிலக்காக நம்பிக் கூடச் சொல்லாதே! இரத்தினமாலையிடம் கூட நான் சொல்லலாம் என்று குறிப்பவற்றை மட்டுமே சொல்ல வேண்டும்’, என்று தன்னிடம் பணிகளை ஒப்படைக்கு முன்னர் மதுராபதி வித்தகர் தனக்குக் கூறியிருந்த அறிவுரை மீண்டும் தன் செவிகளில் ஒலிப்பது போலிருந்தது அவனுக்கு. அவள் மேலும் எதையும் தன்னிடம் கேட்பதற்கு முன், அவனே பேசத் தொடங்கினான்.

“உங்கள் தந்தையார் வீடு திரும்பியதும், அவரிடம் நான் இங்கே வந்து போனதாகச் சொல்லுங்களம்மா! ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் என்னிடத்துக்கு அவர் தேடி வரக் கூடாது என்பதையும் அவரிடம் நீங்கள் சொல்லி விட வேண்டும். அது அவருக்கே அபாயத்தை உண்டாக்கி விடும். நானே மீண்டும் நாளை அல்லது மறு நாள் இங்கு வந்து அவரைக் காண்பேன். களப்பிரர்கள் நெல் உதவியை மனத்திற் கொண்டு உங்கள் தந்தையாரைப் பகைத்துக் கொள்ள அஞ்சுகிறார்களே ஒழிய முழுமையாகச் சந்தேகம் நீங்கியிருப்பதாகச் சொல்ல முடியாது. அவர் எங்கெங்கே போகிறார், வருகிறார், யாரைக் காண்கிறார், என்ன என்ன பேசுகிறார் - என்பதை அறிவதற்காகவே அவரைக் கட்டுக் காவல் இன்றி வெளியே உலவ விட்டிருக்கிறார்களோ என்று கூட நான் நினைக்கிறேன்” என்று மகளிடம் தந்தையைப் பற்றிப் பொதுவாக எச்சரித்தான் அவன். இதற்குள் காராளரின் மனைவி ஒர் ஒலைக் கூடை நிறைய அவன் தின்பதற்குச் சுவையான பணியாரங்களைக் கொண்டு வந்து கொடுத்தாள். அந்தப் பணியாரங்களை அங்கேயே அமர்ந்து தின்பதற்கும் நேரமில்லாமல், அடுத்த வேலையின் இன்றியமையாத நிலையை நினைத்தான் அவன். காராளர் மனைவி கொடுத்த பணியாரங்களை வாங்கி மேலாடையில் முடிந்தபடி கொற்றவைக் கோவில் வன்னி மரத்தடிக்கு அவன் விரைந்தான். அந்த விரைவிலும், தன்னைப் பின் தொடரும் ஒர் இடையூற்றை அவன் கவனிக்கத் தவறவில்லை. விழிப்படைந்தான் அவன்.


12. அடையாளக் குழப்பம்

தாமரைத் தடாகங்களும், தண்ணென்ற மூங்கில் மரக்கொத்துகளும், பசுமை போர்த்த நெல் வயல்களும் நிறைந்த மருத நில ஊரான திருமோகூரில் அந்திப் போது மெல்ல வந்து கொண்டிருந்தது. மாமரத்துக் குயில் பிரகாசம் மிகுந்த பகற்பொழுது முழுவதும் மறைந்து போன அல்லது விட்டுப் போன எதையோ இரவுக்கு நினைவூட்டுவது போல் திரும்பத் திரும்பக் கூவிக் கொண்டிருந்தது.பகல் என்னும் நாயகனை இழந்த மேற்குத் திசை நங்கை, பால் ஒழுகும் வாயுடைய பிறைமதி என்னும் குழந்தையை இடுப்பில் ஏந்திக் கொண்டு தனிமையிற் புலம்புவது போன்ற சோகமயமான அந்த மாலை, மேற்கு வானம் எங்கும் செந்தீப்பட்டு எரிவது போல வந்து கொண்டிருந்தது. வந்து விட்ட இந்த அஸ்தமன வேளையை நாளையோ, நாளன்றைக்கோ விரைந்து வரப் போகும் களப்பிரர் ஆட்சியின் நிரந்தரமான அஸ்தமனத்தோடு ஒப்பிட்ட படி நடந்தான் கொல்லன். பெரிய காராளர் மாளிகையிலிருந்து வெளியேறியதுமே, வீதித் திருப்பத்திலிருந்து ஒரு களப்பிரப் பூத பயங்கரப் படை வீரன் தன்னைப் பின் தொடர்வதை அவன் புரிந்து கொண்டான். பின் தொடர்கிறவனின் ஐயப்பாடும் பரபரப்பும் பெருகுவதற்கு ஏற்ற வகையில், திரும்பித் திரும்பிப் பார்க்காமல் யாருமே தன்னைப் பின் தொடராதது போல் சென்றான் கொல்லன். இடையே ஒரு மாற்றத்தையும் செய்தான் அவன். பின்னால் வருகிறவன் ஒளிவதற்கோ, மறைவதற்கோ வழியில்லாமல்

  1. பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கும் எனின்.