நித்திலவல்லி/இரண்டாம் பாகம்/10. திருமால் குன்றம்

விக்கிமூலம் இலிருந்து

10. திருமால் குன்றம்

ரத்தின மாலைக்கும், இளைய நம்பிக்கும் பிணக்கு ஏற்பட்டுத் தவிர்ந்த தினத்திற்கு, முந்திய நள்ளிரவிலேயே அங்கிருந்து புறப்பட்டிருந்த திருமோகூர்க் கொல்லன், பெரியவர் மதுராபதி வித்தகரைச் சந்திப்பதற்காக விரைந்து கொண்டிருந்தான். கணிகை இரத்தின மாலையின் மாளிகையிலிருந்து புறப்பட்டு, நிலவறை வழியே உப வனத்தை அடைந்து, இரவோடிரவாக வைகையை நீந்திக் கடந்து, புறநகரில் போய், அங்கிருந்து திருமோகூர் செல்லும் சாலையை நாடாமல், நேர் வடதிசையில் திருமாலிருங் குன்றத்தை நோக்கி விரைந்தான் கொல்லன். நடு வழியில் எங்காவது களப்பிரப் பூத பயங்கரப் படையினரிடம் அகப்பட்டுக் கொள்ளக் கூடாதே, என்ற பாதுகாப்பு உணர்வினால், சில இடங்களில் காடுகளிலும், புதர்களிலும் வழி விலகி நடந்தான் அவன். திருமால் குன்றத்து இறைவனை வேண்டிக் கொண்டே வழியைக் கடந்து, கிழக்கு வெளுக்கும் நேரத்திற்கு முன்பாகவே மலையடிவாரத்தை அடைந்து விட்டான் அவன். எழில் குலவும் அந்த மலையடிவாரத்தில், கலின் கலின் என்று சிலம்புகள் குலுங்க ஒர் அழகி பாதம் பெயர்த்து நடப்பது போல் பாயும் சிலம்பாற்றின் கரையில் நின்று, சூரியோதயத்தைக் காண்பது கண் கொள்ளாக் காட்சியாயிருந்தது. பறவைகளின் வித விதமான ஒலிக் கலவைகளும், வைகறையின் தண்மையும், மலைச் சாரலின் பசுமையும், பசுமையின் கதம்பமான வாசனைகளும், அவனுடைய வழி நடைக் களைப்பைப் போக்கின. உடலுக்கு நன்மை செய்ய வல்ல பல வகை வேர்களிலும், மூலிகைகளிலும் ஊறி வரும் பட்டுப் போல் மென்மையான சிலம்பாற்று நீரில் மூழ்கி எழுந்து ஈர உடையோடு, அந்த மலையின் ஒரு பகுதியில் மறைந்திருந்த பெரியவரைக் காணப் புறப்பட்டான் அவன்.

முதன்முறை அவன் பெரியவரைக் காண அங்கு வந்த போது, அவர் புண்ணிய சரவணம் என்ற புகழ் பெற்ற பொய்கைக்கும் இட்டசித்தி, பவகாரணி என்ற மற்றப் பொய்கைகளுக்கும் அப்பால் மலை உச்சியில் பிலம்[1] போலிருந்த குகைகளில் ஒன்றில் மறைந்திருந்தார். இப்போதும் அவர் அங்கேதான் இருப்பார் என்று உறுதி கூற முடியாது. எதிரிகளிடம் முன்னெச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத் திருமோகூரிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் இடம் மாறியது போல் இந்தத் திருமால் குன்றத்திலும் அவரே அடிக்கடி இடம் மாறலாம் என்ற குறிப்பை முதலில் இங்கு வந்து அவரைச் சந்தித்த தினத்தன்று அவரோடு பேசிய போதே புரிந்து கொண்டிருந்தான் கொல்லன். இருபுறமும் மேல் நோக்கி ஓங்கிய மலைப் பக்கங்களின் நடுவே கணவாய் போன்ற அந்தப் பள்ளத்தின் முனையில்தான் சிலம்பாறு என்ற மலைமகளின் செல்வி,தரையில் சிலம்பு ஒலிக்க இறங்குகிறாள். அந்த இடத்தில் நின்று, நீராடிய ஈர உடையோடு அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருந்த போது, கீழ்ப் பக்கம் மேலே மலைச் சரிவில் பாண்டியர்களைச் சேர்ந்த மதுராபதி வித்தகரின் ஆபத்துதவிகள் இருவர் விரைந்து தன்னை நோக்கி இறங்கி வருவதைக் கண்டான். அவர்களைக் கண்டதும், பெரியவரின் இருப்பிடத்தைத் தேடுவது பற்றிய கவலை அவனிடமிருந்து அகன்றது. புறப்பட இருந்தவன், அவர்களுக்காக நின்றான்.

நீராடும் போதும் தவறி விடாமல் பத்திரமாகத் தனியே எடுத்து வைத்திருந்த இளையநம்பியின் தாழைமடற் சுருளை, மேலும் ஒரு தேக்கு இலையைத் தேடிச் சுருட்டி வைத்துக் கொண்ட பின், அவன் அவர்களை எதிர் கொண்டான், தெரிந்திருந்தும் முறைப்படி நல்லடையாளச் சொற்களைப் பரிமாறிக் கொண்ட பின், அவர்கள் அவனை மலைப் புதரில் வழி விலக்கி அழைத்துச் சென்றனர். அவன் முதலில் சந்தேகப்பட்டது நடந்திருந்தது. பெரியவர் முதலில் தங்கியிருந்த இடத்திலிருந்து வேறோர் இடம் மாறியிருக்க வேண்டும் என்பது அவர்கள் அழைத்துச் சென்ற பாதை மாறுபடுவதிலிருந்தே அவனுக்குப் புரிந்தது. அடர்ந்த புதர்களின் நடுவே நெடுந் தொலைவு நடக்க வேண்டியிருந்தது. நடந்து போகும் போதே, பெரியவரிடம் எதை, எதைச் சொல்ல வேண்டும், எப்படி, எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை ஒரு முறைக்கு இரு முறை நினைத்துப் பார்த்துக் கொண்டான் கொல்லன். “நீ திரும்பி வரும்போது நிலைமைகள் எப்படி இருக்குமோ, தெரியாது. ஆனால் நிலைமைகளை அறிந்து வந்து சொன்னால் மட்டும் போதும்; இளையநம்பியிடமிருந்தோ அழகன் பெருமாளிடமிருந்தோ, இரத்தினமாலையிடமிருந்தோ மறுமொழி ஓலை என்று எதுவும் வாங்கிக் கொண்டு வராதே! நீ அகப்பட நேர்ந்தால், அந்த ஒலைகளும் சேர்ந்து எதிரிகளிடம் அகப்பட நேர்ந்து, பல இரகசியங்கள் எதிரிகளுக்குப் புரிந்து விடும். அதனால் நீ திரும்பும் போது தெரிந்து கொள்ள வேண்டியவற்றை மட்டும் தெரிந்து வந்து சொல்! போதும்”, என்று பெரியவரே கட்டளை இட்டிருந்ததனால், தான் தெரிந்து வந்தவற்றை அவரிடம் கூற வேண்டிய முறைப்படி மனத்தில் வரிசைப்படுத்திக் கொள்ளத் தொடங்கினான் கொல்லன்.

குடை போல் கவிந்திருந்த ஒரு குருந்த மரத்தடியில் நெற்றி நிறையப் பளீரென்று திருநீறு துலங்கத் தியானத்தில் அமர்ந்திருந்தார் பெரியவர். காலைக் கதிர் ஒளியில் அவருடைய மேனி உருகும் செம்பொன் சாயலைப் பரப்பிக் கொண்டிருந்தது. அருகே கமண்டலமும், சில சுவடிகளும், ஒரு மண் பாண்டத்தில் சில கனிகளும் தென்பட்டன. அவர் தியானம் கலைகிறவரை அவன் காத்திருந்தான். அவருடைய கண்கள் திறந்ததுமே, அவன்தான் முதலில் பார்க்கப்பட்டான். “போன காரியம்... ?”

“யாவும் முடிந்தன ஐயா!”

“திருக்கானப்பேர் நம்பி...?”

“இரத்தினமாலையின் பொறுப்பில் கோநகரில் பாதுகாப்பாக இருக்கிறார் ஐயா!”

இதைக் கேட்ட போது மட்டும் அவருடைய கண்களில் சிரிப்பின் மெல்லிய சாயல் படர்ந்து மறைவது போல், கொல்லனுக்குத் தோன்றியது. சில விநாடிகள் ஏதோ சிந்திப்பது போல் இருந்த பின் மீண்டும் அவர் அவனைக் கேட்டார்;

“தென்னவன் மாறனையும் சிறைப்பட்டிருக்கும் மற்றவர்களையும் மீட்க என்ன ஏற்பாடு?”

“அழகன் பெருமாளும், உப வனத்து நண்பர்களும் அதை உடனே செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள் ஐயா!”

“நல்லது! இந்தப் புதிய இடம் பற்றி நீ யாருக்கும் கூறவில்லையே?”

“கூறவில்லை ஐயா!”

“திருமோகூர் நிலைமை?”

“காராளர் மேல் பூத பயங்கரப் படையின் கண்காணிப்பு இருக்கிறது! வேறு அபாயம் இல்லை. காராளர் மேலுள்ள ஐயப்பாட்டாலும், தாங்கள் திருமோகூர் சுற்றுப்புறத்தில் எங்காவது தங்கியிருக்கக் கூடும் என்ற அநுமானத்திலும், அங்கே தண்டு இறங்கிய களப்பிரப் படையினர் இன்னும் புறப்படவில்லை! சில நாளில் ஒரு வேளை அவர்கள் சந்தேகம் நீங்கிப் புறப்பட்டாலும் புறப்பட்டு விடலாம்...”

“சில நாளில் அப்படி நடக்கலாம் என்பது உன் அநுமானம்தானே? இன்றோ, நாளையோ அந்தப் படைகள் திரும்ப வழியுண்டா?”

“இல்லை...”

“அப்படியானால் நீ இப்போதே விரைந்து திருமோகூர் திரும்பி, அங்கே எனக்காக உடனே செய்ய வேண்டிய காரியம் ஒன்று உண்டு." “தங்கள் ஆணை என் கடமை!”

“தென்னவன் மாறனைச் சிறை மீட்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, இளையநம்பியை ஆபத்தின்றிப் பாதுகாக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியமான மற்றோர் ஆணையை உன்னிடம் நான் இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறேன்.”

“புரிகிறது! அந்த ஆணையை எல்லா வகையிலும் இந்த அடிமை நிறைவேற்ற முடியும் என்று தாங்கள் உறுதியாக நம்பலாம் ஐயா!”

அவர் அவனை இன்னும் சிறிது நெருக்கமாக அருகே அழைத்துக் கூறலானார்:-

“இளையநம்பி என்னைத் தேடி வந்தது போல் இன்று பிற்பகலில், தெற்கே கொற்கையிலிருந்து ஒர் இளைஞன் திருமோகூருக்கு என்னைக் காண வருவான். விளக்கு வைக்கும் நேரத்துக்குத் திருமோகூர் கொற்றவைக் கோவிலின் வாயிலிலுள்ள வன்னி மரத்தடியில் அவன் வந்து நிற்பான். அவனிடம் நீ நம்முடைய வழக்கமான நல்லடையாளச் சொல்லைக் கூறினால், அவனுக்கு அது புரியாது. ‘பெருஞ்சித்திரன்’ என நீ அவனிடம் குரல் கொடுத்தால், அவன் தன் வலது கையில் ஒன்பது ஒளி நிறைந்த முத்துகளை எண்ணி எடுத்து வைத்து, உன்னிடம் நீட்டுவான். அதுதான் அவனை நீ இனம் காணும் அடையாளம். உடனே நீ அவனை ஊருக்குள் அழைத்துச் செல்லாமல், ஊர்ப்புற வழியாக ஒதுக்கி, இரவோடு இரவாக இங்கே கூட்டிக் கொண்டு வந்து விட வேண்டும். மலையடிவாரத்தில் சிலம்பாற்றங்கரைக்கு வந்து நின்றால் போதும். அங்கே நம் ஆபத்துதவிகள் உங்களை என்னிடம் அழைத்துவரக் காத்திருப்பார்கள்.”

உடனே தலை வணங்கி, அந்தப் பணியை ஏற்றுக் கொண்டு, திருமோகூர் திரும்புவதற்காக விரைந்தான் கொல்லன்.

  1. ஆழமான பாறைப் பிளவு