நித்திலவல்லி/முதல் பாகம்/35. இன்னும் ஓர் ஓலை

விக்கிமூலம் இலிருந்து

35. இன்னும் ஓர் ஓலை

தோளிலும் மார்பிலும் சந்தனம் மணக்க, பூக்களின் வாசனை கமழ, முந்திய இரவின் நளின நினைவுகள் நெஞ்சில் இனிமை பரப்ப இளையநம்பி விழித்து எழுந்திருந்து மேன்மாடத்திலிருந்து கீழே இறங்கி வந்தபோது அழகன் பெருமாள் திருமோகூர் வேளாளர் தெருக்கரும்பொற் கொல்லனோடு காத்திருந்தான். அவனும், கொல்லனும் இளையநம்பியின் வருகைக்காகவே காத்திருப்பது போலிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பின்பும் தோற்றத்தின் தனித்தன்மை காரணமாக அந்தக் கரும்பொற்கொல்லனை இளையநம்பிக்கு நன்றாக நினைவிருந்தது. திருமோகூர்ப் பெரியவர் மதுராபதி வித்தகரைச் சந்திப்பதற்காக வந்தபோது தான் காணநேர்ந்தது முதல் தன் மனிதன் இவனே என்ற ஞாபகத்தையும் தவிர்க்க முடியவில்லை. மலரும் முகத்தில் புன்னகையைப் புன்னகையால் எதிர்கொண்டு அந்தக் கரும்பொற்கொல்லனை வரவேற்றான் இளையநம்பி. இளையநம்பி எதிர்பார்க்க வில்லை என்றாலும் ‘கயல்-’ என்று நல்லடையாளச் சொல்லைக் கூறிவிட்டே அவனை வணங்கினான் கரும் பொற்கொல்லன். சிரித்தபடியே இளையநம்பி அவனிடம் கூறினான்: “நண்பனே! பயப்படவேண்டிய அவசியமில்லை! நீ அழகன் பெருமாளோடு வந்து என் எதிரே நிற்கிறாய்... நல்லடையாளச் சொல்லைக் கூறாவிட்டாலும் உன்னை நான் நம்புவேன். நீ நம்மைச் சேர்ந்தவன்.”

இப்படிக் கூறிய சுவட்டோடு இந்த வார்த்தைகளால் தான் முன்பு திருமோகூரில் நுழைந்த நாளன்று அவன் தன்னை நம்பாமல் நல்லடையாளச் சொல்லை எதிர்பார்த்துச் சோதனை செய்ததை இப்போது அவனிடம் குத்திக் காட்டத் தான் முயல்வதாக அவன் புரிந்து விடக் கூடாதே என்று தயங்கவும் செய்தான் இளையநம்பி.

“நீ அன்று திருமோகூரில் நான் முதல் முதலாக நுழைந்த தினத்தன்று என்னிடமிருந்து நல்லடையாளச் சொல் கிடைக்காத வரை எனக்கு வழி கூறாமலிருந்த பிடிவாதத்தை நான் பாராட்டுகிறேன். கட்டுப்பாடும், உறுதியும்தான் இன்று நமக்கு வேண்டும். இனிய வார்த்தைகளைக் கேட்டு மனம் நெகிழ்கிறவனை நண்பனும் நெகிழச் செய்யமுடியும். பகைவனும் நெகிழச் செய்து விட முடியும். நீ அப்படி நெகிழாதவனாக இருந்ததை நான் வரவேற்கிறேன்"-- என்று அந்தக் கொல்லன் தன்னுடைய முன்வார்த்தைகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாமலிருப்பதற்காக இளையநம்பி மேலும் தொடர்ந்து அவனோடு பேசினான். ஆனால் அவனோ மிகமிக விநயம் தெரிந்தவனாக இருந்தான். அவன் பணிவாகப் பேசினான்:-

“ஐயா! எப்படி இருந்தாலும் அன்று தங்களுக்கு மறுமொழி கூறாததற்காகத் தாங்கள் எளியேனைப் பொறுத்தருள வேண்டும். இரும்போடு பழகிப் பழகிப் பல வேளைகளில் என் மனமும் இரும்பாகி விடுகிறது.”

“அப்படி இருப்பதை நான் வரவேற்கிறேன். ஒவ்வொருவர் மனமும் இரும்பாக இல்லையே என்பதுதான் இப்போது என் வருத்தம். இரும்பைப் போல் உறுதியான மனம் நம்மவர்கள் எல்லோருக்கும் இருந்தால் என்றோ களப்பிரர்களை இந்த நாட்டிலிருந்து நாம் துரத்தியிருக்கலாம்...”

-என்று இளையநம்பி கூறிய மறுமொழி கொல்லனின் முகத்தை மலரச் செய்தது. சிறிது நேர்த்தில் அந்தக் கரும்பொற்கொல்லன் எப்போது வந்தான், என்ன காரியமாக வந்தான் என்பதையெல்லாம் இளையநம்பி அழகன் பெருமாளிடம் வினாவினான்.

“நேற்று முன்தினம் இரவில் தேனூர் மாந்திரீகன் வந்தது போல்தான், இவனும் நிலவறை வழியாகப் பின்னிரவில் நேற்று இங்கே வந்தான். நாம் கலந்து பேசவும் திட்டமிடவும் நிறையச் செய்திகள் இருக்கின்றன. நீங்கள் உறங்கி எழுந்த சோர்வோடு இருப்பதாகத் தெரிகிறது. நீராடி வாருங்கள்! பேசலாம்!"- என்றான் அழகன்பெருமாள். தன்னைத் தவிரப் பிறர் அனைவரும் நீராடிக் காலைக் கடன்களை எல்லாம் முடித்து ஆயத்தமாயிருப்பதைக் கண்டு இளையநம்பி நீராடுவதற்கு விரைந்தான். காலந்தாழ்ந்து எழுந்ததற்காக அன்று அவன் வெட்கப்பட்டான்.

கூடத்தில் மயில் தோகை விரித்திருப்பது போல் அமர்ந்து, இரத்தினமாலை ஈரக் கூந்தலுக்கு அகிற்புகை ஊட்டிக் கொண்டிருந்தாள். அவன் வரக் கண்டதும் அவள் நாணத்தோடு எழுந்து நிற்க முயன்றாள்.

“நீ எழுந்து நிற்க வேண்டாம்! உன் செயலைக் கவனி” என்பது போல் கையினாற் குறிப்புக் காட்டி விட்டுப் புன்முறுவல் பூத்தபடி மேலே நடந்தான் அவன். அவள் கூந்தலின் நறுமணமும், அகிற்புகை வாசனையும் வந்து அவன் நாசியை நிறைத்துக் கிறங்கச் செய்தன. இந்த நறுமணங்கள் எல்லாம் அவள் பொன்மேனியின் நறுமணங்களை அவனுக்கு நினைவூட்டின. நீராடுவதற்குச் செல்ல இருந்தவன் தேனூர் மாந்திரீகனின் நினைவு வரப்பெற்றவனாகத் திரும்பச் சென்று அவனைக் கண்டான். இளையநம்பி காணச் சென்றபோது, அவன் கட்டிலில் எழுந்து உட்கார்ந்திருந்தான். புண்கள் ஓரளவு ஆறியிருந்தன. இளையநம்பியைக் கண்டதும், அவன் முகம் மலர்ந்தான். அவனை அன்போடு விசாரித்த பின், சிறிது நேரம் ஆறுதலாக உரையாடிக் கொண்டிருந்து விட்டுப் பின்பு நீராடச் சென்றான் இளையநம்பி. அவன் உடல் நீராடியது என்றாலும் மனம், வந்திருக்கும் திருமோகூர்க் கரும்பொற் கொல்லன் சொல்லப் போகும் செய்திகள் என்னவாக இருக்கும் என்று அறிவதிலேயே இருந்தது.

நீராடி முடிந்ததும், நகரின் திருவாலவாய்ப் பகுதி இருந்த திசை நோக்கி இறையனார் திருக்கோயிலை நினைத்து வணங்கினான் அவன். தமிழ்ச் சங்கத்தின் முதற்புதல்வராக அமர்ந்து பெருமைப்பட்ட கண்ணுதற் பெருங்கடவுளைக் கோயிலுக்கே சென்று வழிபடவும் வணங்கவும் முடியாதபடி இருப்பதை எண்ணி அவன் உள்ளம் வருந்தியது. ஈர உடையோடு கண்களை மூடி, தியானித்து இறையனார் நினைவுடனே வழிபட்டு விழிகளைத் திறந்து கண்டால், எதிரே அவன் அணியவேண்டிய மாற்றுடைகளோடு இரத்தினமாலை நின்றாள்.

“ஒரு பெண்ணின் காதலால் எவ்வளவு கெடுதல் பார்த்தாயா இரத்தினமாலை? விழித்துக் கொள்ளவேண்டிய நேரத்தில் உறங்கிப் போய் விடுகிறோம்...”

“உறங்க வேண்டிய நேரத்தில் உறங்காவிட்டால், விழித்துக் கொள்ள வேண்டிய நேரத்தில் விழித்துக் கொள்ள முடியாதுதான்.”

“அப்படியா? தயை செய்து அதற்கு யார் காரணமென்று இப்படி என் முகத்தைச் சற்றே நிமிர்ந்து பார்த்து மறுமொழி சொல்லேன் பார்க்கலாம்! உறங்க வேண்டிய நேரத்தையும், விழிக்க வேண்டிய நேரத்தையும் மாற்றிய குற்றத்துக்குக் காரணம் யாரோ?”

இதைக் கேட்டு நாணிச் சிவக்கும் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டு ஓடி விட்டாள் அவள். இந்தப் புதிய வெட்கம், இந்தப் புதிய வேற்றுமை எல்லாம் அவனுக்கு வியப்பைத் தந்தது. உடை மாற்றிக் கொண்டு அவன் கூடத்துக்கு வந்தபோது அங்கே அழகன் பெருமாள், திருமோகூர்க் கொல்லன், கட்டிலில் அமர்ந்தபடியே தேனூர் மாந்திரீகன், இரத்தினமாலை எல்லாரும் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். இளையநம்பி வந்ததும் அவர்கள் பேச்சுத் தணிந்து ஓய்ந்தது. திருமோகூர்க் கொல்லனைப் பார்த்து இளையநம்பி கேட்டான்.

“நீ உப வனத்து முனை வழியேதான் நிலவறையில் நுழைந்து வந்திருப்பாய் என்று எண்ணுகிறேன். உப வனத்து நிலைமை எப்படி இருக்கிறது? களப்பிரர்கள் அதைக் கடுமையாகக் கண்காணிக்கிறார்களா?”

“அடியேன் முன் வாயில் வழியே நேராக உப வனத்தில் நுழைந்து வரவில்லை. இருளோடு இருளாக வையையில் குறுக்கே நீந்தி, நீரைக் கடந்து, மறைந்து வந்து உப வனத்து நிலவறை முனையில் இறங்கி இவ்விடத்தை அடைந்தேன். உப வனத்துக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து இப்படி ஒரு நிலவறைப் பாதை தொடங்குமென்று பூதபயங்கரப் படையினருக்குச் சந்தேகம் இருக்குமானால், வனம் முழுவதும் படை வீரர்களை நிரப்பிக் காவல் செய்திருப்பார்கள்.”

“அப்படியானால் இப்போது உப வனத்தில் கடுமையான காவல் இல்லையா?”

“நான் அப்படிச் சொல்லவில்லையே! அந்தக் கடுமையான காவலை நான் ஏமாறச் செய்து விட்டு வந்திருக்கிறேன் என்பதனால் காவலே இல்லை என்று ஆகிவிடாது...” என்று கொல்லன் கூறிக்கொண்டிருக்கும்போதே-

“காவல் மிகவும் கடுமையாக இருக்கிறது என்பதற்கு நான் சாட்சி"--என்பதாகத் தேனூர் மாந்திரீகன் குறுக்கிட்டுச் சொன்னான். “பாதுகாப்பும், கட்டுக்காவலும் அகநகரில் வெள்ளியம்பலத்து முனையில் கடுமையாக இருக்கும். நம் தேனூர் மாந்திரீகன் செங்கணான் கூறுவதிலிருந்து, பாண்டிய வேளாளர்கள் வசிக்கும் சுற்றுப்புறத்துச் சிற்றூர்களையும் களப்பிரர்கள் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்! பெரியவர் மதுராபதி வித்தகர் திருமோகூரில் இல்லாமற் போனதற்குக் காரணம் அதுவாகத்தான் இருக்கவேண்டும்"- என்று அழகன்பெருமாள் கூற முற்பட்டான். புதியவன் வாயிலாக நிலைமைகளை அறிய முற்படும் தன்னிடம், செங்கணானும் அழகன்பெருமாளுமே நிலைமைகளைக் கூற முற்படவே, இளையநம்பிக்கு அவர்கள் மேல் கோபமே வந்தது. அழகன்பெருமாளையும், செங்கணானையும் உறுத்துப் பார்த்தான் அவன். அந்தப் பார்வை அவர்கள் பேச்சைத் தடுத்தது. அவர்கள் பேச்சு நின்றதும், “இத்தகைய சூழ்நிலையில் உயிரைப் பொருட்படுத்தாமல் ‘நீ இங்கே எங்களைத் தேடி வந்திருக்கிறாய் என்றால் அதற்குரிய காரியம் ஏதேனும் உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்” -- என்று அவன் திருமோகூர்க் கொல்லனை நோக்கிக் கேட்டவுடன் அந்தக் கொல்லன், தன் கையோடு கொண்டு வந்திருந்த தாழை ஓலையால் நெய்து மூடியும் இட்ட ஓலைக் குடலையை எடுத்துத் திறந்தான். அடுத்த சில கணங்களில், சிறிய ஓலைச் சுவடி ஒன்றைப் பத்திரமாக எடுத்து இளைய நம்பியிடம் கொடுத்தான் அவன். இளையநம்பி அதை வாங்கினான்.

அப்படிக் கொடுப்பதற்காகக் குடலையிலிருந்து சுவடியை எடுத்த போது, கையோடு வந்த மற்றோர் ஓலையை மறுபடியும் குடலையிலேயே இட்டு மூடிவிட்ட அவன் செயலை இளையநம்பி கண்டான்.

“அது என்ன ஓலை நண்பனே? என்னைத் தவிர வேறெவர்க்கும் கூட நீ ஓலை கொண்டு வந்திருக்கிறாயா?”

“.............. ?”

அந்தக் கொல்லன் மறுமொழி சொல்லத் தயங்கினான். விடாமல் மீண்டும் இளையநம்பி அவனை துளைத்தெடுப்பது போல் கேட்கவே, அவன் பதிலளிக்க வேண்டியதாயிற்று.

“ஐயா! இதுவும் தங்களிடம் சேர்க்கப்பட வேண்டியதுதான். ஆனால்.... அவ்வளவிற்கு முதன்மையானதல்ல... தாங்கள் அந்த ஓலையை முதலில் படிக்கவேண்டும் என்பது அவ்விடத்து விருப்பம்...”

சற்றே தாமதமாகத் தன்னிடம் சேர்க்கப்படுவதற்கு இன்னோர் ஓலையும் இருக்கிறது என்று தெரிந்ததும், அதைப் பற்றிய ஆவலுடன் விரைந்து இதைப் பிரித்தான் இளையநம்பி. சுவடியின் ஒவ்வோர் ஓலையிலும் நல்லடையாளச் சொல் பொறிக்கப்பட்டிருந்தது.

பெரியவர் மதுராபதி வித்தகர் திருமோகூரில் இல்லை என்ற அந்துவனின் ஓலைச் செய்தி நினைவு வரவே, தன் கையிலிருந்த ஓலையைப் படிக்கு முன்,

“இப்போது நீ எங்கிருந்து வருகிறாய்?"--என்று கொல்லனைக் கேட்டான் இளையநம்பி.

“நான் எங்கிருந்து வருகிறேனோ அங்கிருந்து ஓலையும் வரவேண்டும் என்பதாக அனுமானித்துக் கொள்ள முடியாது” -என்றான் அவன். இளையநம்பிக்கு முதலில் அது புரிய வில்லை. ஆனால் அந்த ஓலையைப் படிக்கத் தொடங்கியதும் அவன் கூறிய மறுமொழியின் பொருள் புரியலாயிற்று.