நித்திலவல்லி/முதல் பாகம்/11. மூன்று குழியும் ஒரு வினாவும்

விக்கிமூலம் இலிருந்து

11. மூன்று குழியும் ஒரு வினாவும்

“இருளில் கால் சலிக்க நடக்கும் துணிவுள்ளவன் தான் காரியங்களைச் சாதித்து முடிக்கும் வீரனாக இயலும்” என்று அழகன் பெருமாள் மாறனுக்கு மறுமொழி கூறியிருந்தும் அந்தக் கரந்து படை வழியில் முன்னேறிச் செல்வது மிக அரிய செயலாயிருப்பதைச் சிறிது தொலைவு செல்வதற்குள்ளேயே இளைய நம்பி உணர்ந்தான். வெளி உலகில் பூமியின் தோற்றம் மேற்புறம் இரவென்றும் பகல் என்றும் கால வேறுபாடுகள் இருந்தது போல் அல்லாமல் இந்தச் சுரங்க வழியில் இரவு பகல்களே கிடையாது என்று தோன்றியது. நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் ஒரே இருள் மயமாய் நீண்டு செல்லும் அந்த நிலவறைப் பாதையில் இரவுக்கும் பகலுக்கும் வேறுபாடு இல்லாதது போல் கண்கள் பெற்றதன் பயனும், கண்கள் பெறாததன் பயனின்மையும் கூட வேறுபாடற்றதுதான். சூரியன் உதித்தாலும் மறைந்தாலும் அந்த நிலவறைப் பாதையில் தெரியாது. அத்தகைய பயங்கரமான மாயக் குகை போன்ற காரக்கிருகப் பாதையில் அழகன் பெருமாள்தன்னைத் தடுமாறாமல் வழிநடத்திச் செல்ல வேண்டுமானால், அவன் இந்த வழியிலேயே பல்லாயிரம் முறை சென்று பழகியிருந்தால்தான் முடியும் என்று தோன்றியது. அழகன் பெருமாளின் கையைப் பற்றி நடந்து கொண்டே இளையநம்பி அவனை வினாவினான்.

“அழகன் பெருமாள்! இந்தப் பாதை வழியாக அரண்மனை அந்தப்புர உரிமை மகளிரும் அரச குடும்பத்தினரும் திருமருத முன்துறைக்குப் புண்ணிய நீராடச் சென்றதாகச் சொல்கிறாயே? அரச குடும்பத்துப் பெண்கள் மிக மிக தைரியசாலிகளாக இருந்திருக்க வேண்டும் என்றல்லவா தோன்றுகிறது? இத்தனை பெரிய இருட் குகையில் நடக்க எப்படிப் பழகினார்கள் அவர்கள்!”

“அப்படியில்லை ஐயா! பல நூறு ஆண்டுகளுக்கு முன் அப்படி இருந்ததாக நான் கேள்விப்பட்டிருந்ததைச் சொன்னேன். களப்பிரர் ஆட்சி வந்த பின்பு, இந்த வழி மூடப்பட்டுப் பாழைடைந்து விட்டது. இந்த வழியைக் கண்டு பிடித்து நாம் மட்டுமே பயன் படுத்தி வருகிறோம் என்பதைத் தவிர, இப்படி ஒரு வழி இருப்பது இன்று இந்த நாட்டை ஆளும் களப்பிரர்களுக்குக் கூடத் தெரியாது. தவிர இந்த வழியின் மறுபுறமாகிய உப வனத்திலிருந்தோ, கணிகையர் வீதியிலிருந்தோ புறப்பட்டால் தீப்பந்தங்களை எடுத்து வருவோம். அந்த இரண்டு வாயில்களும் நம் ஆதிக்கத்தில் இருப்பவை. அதனால் பயமில்லை. பெரும்பாலும் வெள்ளியம்பலம் பகுதியின் வாயில் அகநகரில் இருப்பதனால் அதைப் பயன்படுத்துங்கால் மிகவும் விழிப்பாகவும் களப்பிரர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு விடாமல் பயன்படுத்த வேண்டும் என்பதும் பெரியவர் கட்டளை. அதனால் வெள்ளியம்பல முனையிலிருந்து புறப்பட நேர்ந்தால் நாங்கள் விளக்கோ தீப்பந்தங்களோ பயன் படுத்துவதில்லை. எதிர்ப் பக்கங்களிலிருந்து வெள்ளியம்பல முனை வழியே நகருக்குள் ஊடுருவும் போது நம்மவர்கள் விளக்கோ தீப்பந்தங்களோ கொண்டு வந்தாலும் வெளியேறு முன்பே அவற்றை அனணத்து விடுவது வழக்கம். பெரும்பாலும் பழகியவர்கள் மட்டுமே அந்தரங்கமாக இங்கு வந்து போவதால் கால் தடத்திலேயே இந்த வழி புரியும். உங்களுக்கு இது சிரமமாயிருக்கும் என்று எனக்கு முன்பே தெரிவிக்கப் பட்டிருந்தால், மறுமுனையிலிருந்து தீப்பந்தங்களோடு சிலரை நடு வழியில் வந்து எதிர்கொண்டு காத்திருக்கச் செய்திருக்கலாம்." “இதில் எனக்குச் சிரமம் எதுவும் இல்லை. மனத்தில் தோன்றிய ஐயத்தைத் தெளிவு செய்து கொள்ளவே உன்னைக் கேட்டேன்.”

“மழைக் காலங்களிலும், வையையில் வெள்ளப் பெருக்குக் காலங்களிலும் இந்த நிலவறையில் பெரும் பகுதி முழங்கால் அளவு தண்ணீர் கூட நிரம்பி விடுவது உண்டு, ஐயா...” பேசிக் கொண்டே இளையநம்பியை அழைத்துச் சென்ற அழகன்பெருமாள் ஓரிடம் வந்ததும் நின்று கூறினான்.

“ஐயா! இப்போது நீங்கள் நிற்கிற இடத்திற்கு வலதுபுறம் உங்கள் வலது தோளின் திசையில் வலப் பக்கமாக நடந்து நூறு பாக தூரம் சென்றால் நான் முன்பே கூறினேனே அந்தக் கணிகையர் வீதி வாயில் வரும்...”

“எதுவுமே தெரியாத இந்தக் கொடுமையான இருளில், அந்த வழியை இவ்வளவு குறிப்பாக இலக்குத் தப்பாமல், நீ எப்படிக் கூற முடிகிறது என்பதுதான் எனக்கு வியப்பாயிருக்கிறது!”

‘அது மிகவும் எளிது ஐயா! இந்த இடத்தில் கீழே கல்தளம் பரவியிருக்கிறது. அந்தத் தளத்தில் நடுவில் சிறிதாக மூன்று குழிகள் இருக்கின்றன. நடந்து வருகிற யாரும் அந்தக் குழிகளின் மேல் கால்கள் பாவாமல் நடக்க முடியாது. அதை வைத்து வழியை அநுமானம் செய்ய முடியும். இப்போது நீங்களே இன்னும் ஓர் அடிபெயர்த்து வைத்து முன் நடந்தால் அதை உணர்வீர்கள்.”

உடனே ஓர் அடி முன்னால் நடந்த இளையநம்பி, அழகன்பெருமாள் கூறியது போலவே பாதங்களில் கற்குழிகள் தென்படுவதைத் தெளிவாக உணர முடிந்தது. தனக்குத் தோன்றிய இன்னொரு சந்தேகத்தையும் அவன் அழகன் பெருமாளிடம் அப்போதே கேட்டான்.

“உப வனத்து முனையிலிருந்தும் வெள்ளியம்பல முனையிலிருந்தும் ஏற்படாத அபாயமோ, இடையூறோ இந்தக் கணிகையர் வீதி முனையிலிருந்து நமக்கு ஏற்படாது என்பது என்ன உறுதி?” “உறுதிதான்! உங்களிடமிருந்தும், என்னிடமிருந்தும் எப்படி இந்த வழியைப் பற்றிய இரகசியம் களப்பிரர்களுக்குத் தெரிய முடியாதோ அப்படியே அந்த கணிகை மாளிகையிலிருந்தும் தெரிய முடியாது. பாண்டிய குலத்துக்காகச் சர்வபரித்தியாகம் செய்யும் நெஞ்சுறுதி படைத்தவர்கள் அந்த மாளிகையில் இருக்கிறார்கள் என்பது பெரிவருக்கு மிக நன்றாகத் தெரியும். அவருடைய நம்பிக்கை பெரும்பாலும் தவறுவதில்லை.”

“கணிகையர்களில் நெஞ்சுறுதி படைத்தவர்களும் இருப்பார்கள் என்று நான் இன்றுதான் முதல்முதலாக உன்னிடத்திலிருந்து கேள்விப்படுகிறேன் அழகன் பெருமாள்!”

“அது ஒன்றை மட்டுமில்லை ஐயா! பல புதிய விஷயங்களையே நீங்கள் இன்றுதான் முதன் முதலாக என்னிடம் கேள்வீப்படுகிறீர்கள்...”

“இப்போது என்ன சொல்கிறாய் நீ?”

“தவறாகவோ, மதிப்புக் குறைவாகவோ எதுவும் சொல்லி விடவில்லை. கோநகருக்கு நீங்கள் புதியவர், பலவற்றை உங்களுக்கு நான் சொல்ல வேண்டியிருக்கிறது என்றுதான் கூறினேன்.”

கணிகையர்களின் இயல்பைப் பற்றித் தான் பொதுவாகக் கூறிய ஒரு கருத்து, அழகன் பெருமாளுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதை இளைய நம்பியினால் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு மிக வலிமையான காரணம் ஒன்று இருக்க வேண்டும் என்றுதான் தோன்றியது. என்றாவது ஒரு நாள் நிலவறைப் பாதையின் மூன்றாவது முனையாகிய அந்தக் கணிகையர் மாளிகையைப் பற்றித் தானே அறிந்தாலொழிய, அதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாது என்றும் தோன்றியது அவனுக்கு.

உப வனத்து முனையை அடைவதற்கு இன்னும் நெடுந்துாரம் செல்ல வேண்டியிருப்பதாக அழகன் பெருமாள் தெரிவித்தான். வழியை கால்களால் தடம் பார்த்து, அறிந்து மெல்ல மெல்லச் செல்ல வேண்டியிருந்ததால் நேரம் ஆயிற்று. இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டியிருக்கும் என்று இளையநம்பி அவனைக் கேட்காமலே அவன் இதைக் கூறியிருந்தான்.

“நான் மட்டும் தனியே செல்வதாயிருந்தால், இன்னும் வேகமாகச் செல்ல முடியும். இந்த வழிக்குப் புதியவராகிய உங்களைத் துன்பப்படாமல் அழைத்துச் செல்ல வேண்டியிருப்பதால் நாம் விரைந்து போய்ச் சேர இயலவில்லை.” அழகன் பெருமாள் கூறியதற்கு இளையநம்பி மறுமொழி எதுவும் கூறவில்லை. ஆனால் அந்த மையிருட்டில் சுற்றி எதுவுமே கண் பார்வைக்குத் தெரியாமல் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது என்னவோ போலிருந்தது. வேண்டும் என்றே கண்ணைக் கட்டிக் கொண்டு நடப்பது போலிருந்த அந்தச் சூழலில் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு போவதன் மூலம் கிடைக்க முடிந்த மனநிறைவை இழப்பானேன் என்று கருதி இளையநம்பி தானே முயன்று அழகன் பெருமாளிடம் பேசத் தொடங்கினான். ஆவலோடும் உற்சாகத்தோடும் பேசிக் கொண்டு வந்த அழகன் பெருமாள் அந்த மூன்று குழிப் பகுதியில் கணிகையர் மாளிகை பற்றித் தான் எழுப்பிய ஒரு வினாவுக்குப் பின் அவனே பேசுவதைக் குறைத்துக் கொண்டு, இளையநம்பி கேட்பதற்கு மட்டும் மறுமொழி சொல்வதென்று கருத்தை மாற்றிக் கொண்டு விட்டாற்போல் தோன்றிய, அந்தக் கருத்துப் பிணக்கை மாற்றி அழகன் பெருமாளை மீண்டும் தன்னுடன் இயல்பாகவும், கலகலப்பாகவும் பழகச் செய்ய இளையநம்பி முயல வேண்டியிருந்தது. இருளாயிருந்ததால் ஒருவருக்கொருவர் முகத்தையும் பார்த்துக் கொள்ள முடியவில்லை. இளைய நம்பி கேட்டான்;

“இந்த மாபெரும் மதுரை நகரின் எந்தப் பகுதியில் களப்பிரர்களின் பூத பயங்கரப் படை இப்போது அதிகமாகக் கவனம் செலுத்திக் கொண்டு திரிகிறது? அவர்களுடைய கவனம் அதிகம் குவியாத இடம் எது? இத்தனை நூறு ஆண்டுகளுக்குப் பின்பும் களப்பிரர் ஆட்சி அபாயத்தை எதிர்பார்க்க முடியும் என்று அவர்களே உணர்ந்திருக்கிறார்களா?”

“திருவாலவாய்ப் பகுதியையும் இருந்தவளப் பகுதியையும் பற்றிக் களப்பிரர்கள் அதிகம் கவலைப்படவில்லை. நடுவூர் ஏற்கெனவே அவர்களுடைய கடுமையான பாதுகாப்பில்தான் இருக்கிறது. புறநகரில் வையை ஆற்றை ஒட்டிய பகுதிகளையும், அகநகரில் அயலவர்களும், யாத்திரீகர்களும், தேசாந்திரிகளும் பழகக் கூடிய வெள்ளியம்பலப் பகுதியையும்தான் மிகவும் சந்தேகக் கண்களோடு பார்த்து வருகிறார்கள் அவர்கள்.”

“அப்படியானால் சிறிதும் இலக்குப் பிழையாமல்தான், அவர்களுடைய சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. நாம் அகநகருக்குள் ஊடுருவுவதற்குரிய ஒரே வழி வெள்ளியம்பலத் தோட்டத்தின் பின்புறம் மதிலோரமாக உள்ள பாழ் மண்டபத்தில் இருக்கிறது. வெளியேறுவதற்குரிய ஒரே வழி ஆற்றங்கரையில் உப வனத்தில் இருக்கிறது. இந்த இரண்டு பகுதிகளைத்தான் களப்பிரர்கள் சந்தேகப்படுகிறார்கள் என்றால், நாம் முதல் வேலையாக அவர்கள் சந்தேகத்தைத் திசை திருப்புவதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் அழகன் பெருமாள்!”

“கணிகையர் வீதியின் வழியே மூன்றாவதாக ஒரு வாயில் இருப்பது எவ்வளவிற்கு இன்றியமையாதது என்பதை இப்போதாவது நீங்கள் உணர முடிகிறதா ஐயா? வெள்ளியம்பலத்து முனைக்கும் உப வனத்து முனைக்கும் அபாயங்கள் வந்தாலும் நாம் பயன்படுத்த ஒரு மூன்றாவது முனை இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.”

அழகன் பெருமாள் மீண்டும் அந்தக் கணிகையர் வீதி நிலவறை வழி பற்றி இப்படிக் கூறிய போது இளையநம்பி ஓரிரு கணங்கள் என்ன பேசுவதென்று தோன்றாமல் வாளா இருந்தான். வெள்ளியம்பலத் தோட்டத்தில் தன்னைச் சந்தித்த போது, ‘எங்கு சத்தியத்தின் வலிமை குறைகிறதோ அங்கு சொற்களின் வலிமையால் அதை அலங்கரிக்கிறார்கள்’ என்ற வாக்கியத்தைத்தான் அவனிடம் கூறி அவனுக்கு நம்பிக்கை ஊட்டியபோதும் தன்னிடம் ஓர் அடிமையின் விசுவாசத்தோடு பணிந்து நின்ற இதே அழகன் பெருமாள் கணிகையர் வீதி மாளிகையிலுள்ளவர்களின் மனஉறுதி பற்றித் தான் எழுப்பிய ஒரு வினாவுக்குப்பின் முற்றிலும் ஒருவிதமான மாறுதலோடு பழகுவதாகவே இளையநம்பிக்குப் பட்டது! அழகன் பெருமாள் பற்றிய இந்தப் புதிரை உடனே புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் என்றாகிலும் ஒருநாள் புரிந்து கொள்ளலாம் என்று அவன் நம்பினான்.