நித்திலவல்லி/முதல் பாகம்/10. கருங்கல்லும் மலர்மாலையும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search10. கருங்கல்லும் மலர்மாலையும்

மோகூர் ஊரெல்லையை அவர்கள் அடையும் போது நள்ளிரவுக்கு மேலாகி விட்டது. ஊர் அடங்கியிருந்ததால் வண்டிகளை இழுத்துச் சென்ற காளைகளின் கழுத்துமணி ஓசை கூட இரவின் அமைதியைக் கலைத்துக் கொண்டு கணீர் கணீரென்று தனியாக ஒலித்தது. மூன்று வண்டிகளுக்கான ஆறு காளைகளின் கழுத்து மணிகளும் ஒலிக்க விரைந்து ஊர் எல்லையை நெருங்கிக் கொண்டிருந்த அந்த வண்டிகள் ஊர் எல்லையில் சாலையருகே யாரோ இருவர் ஒதுங்கி நிற்பதைக்கண்டு, அடையாளம் புரிந்து உடனே நிறுத்தப்பட்டன. நிற்பவரைக் கண்டு மணி ஒலிகள் அடங்கி வண்டிகள் அடுத்தடுத்து நின்ற விதமே தனியானதொரு பணிவையும் அடக்கத்தையும் காட்டின. யார் முன்னிலையில் உலகியலான சிறிய ஓசைகள் அடங்கிவிடுமோ அப்படி ஒரு கர்மயோகி வானையும் மண்ணையும் அளப்பது போன்ற உயரத்துடன் தன் அருகே பவ்வியமாகப் பணிந்து நிற்கும் காராளரோடு அங்கே நின்றிருந்தார்.

இருளையும் நிசப்தத்தையும் வென்று ஒலிக்கும் மணிகளின் கிண்கிணி நாதத்தோடு விரைந்து வந்த அவ்வண்டிகள் உடனே அடங்கி நின்ற விதம் எதிரே தோன்றியவரின் தோற்றத்துக்குக் கட்டுப்பட்டு அடங்கி விட்டாற் போலவே இருந்தது.

இரவில் காராளரோடு உலாவ வந்த மதுராபதிவித்தகர் அங்கே நின்று கொண்டிருந்தார். ஒரு பனைத் தொலைவு பின்னால் எந்நேரமும் அவரை நிழல்போல் உடனிருந்துகாக்கும் ஆபத்துதவிகள் இருவரும் கூடத் தென்பட்டனர். முதல் வண்டியிலிருந்த செல்வப் பூங்கோதையும், அவள் அன்னையும் கீழே இறங்கிப் பெரியவரை வணங்கினர். காராளரின் மனைவிக்கு மதுராபதி வித்தகரிடம் அளவற்ற பயம். அவரை எதிரே பார்த்து விட்டால், அவளுக்குப் பேச வராது. ஏதாவது தவறாகப் பேசி விடுவோமோ என்ற பயத்திலேயே அவள், அவர் முன்னிலையில் பேசமாட்டாள். செல்வப் பூங்கோதைக்கும் ஓரளவு அந்த அச்சம் உண்டு என்றாலும், தந்தை அனுப்பியும், தானாகவும் அவள் அவரைக் காண ஆல மரத்தடிக்கு அடிக்கடி செல்ல நேரிடுவது வழக்கம் என்பதால் அவருடன் ஓரளவு உரையாட முடியும். அப்படி உரையாடும் வேளைகளில் எல்லாம், செங்குத்தான மலை ஒன்றில் ஏற முயன்று இயலாமல், அச்சத்தோடு பாதியிலேயே கீழே இறங்கி விடும் ஒரு குழந்தையின் நிலையில், தன்னுடைய சொற்களுக்குப் பிடி கிடைக்காமல் தடுமாறும் ஓர் அனுபவத்தையே அவள் அடைந்திருக்கிறாள். மலர்களைப் போல் நளினமாகவும், பயபக்தியோடும் அவர் முன்னிலையில் அவள் தூவிய சொற்களை உணர்ச்சியோ, கிளர்ச்சியோ அடையாமல் கல்லைப் போல் தாங்கியிருந்திருக்கிறார் அவர். தன்னிடம் பேசுகிற எதிராளி வெற்றுச் சொற்களை நிறைய அடுக்கலாகாது என்று அவரே வாய் திறந்து கட்டளை இடுவதில்லை, ஆனால் பேசுகிறவன் தான் பேசும் போது, எதிரே தெரியும் அவருடைய கண்களையும், முகத்தையும் பார்த்தாலே பேசுவதற்கென்று திரட்டிய பல சொற்கள் கழன்று விழுந்து விடும். இது தவிர்க்க முடியாதது என்பதை அவள் பலமுறை உணர்ந்திருக்கிறாள். இப்போது அவள் தந்தை அவளைக் கேட்டார்.

“நடந்தவற்றைச் சொல்லம்மா!... ஏன் தயங்குகிறாய்?”

பெரியவரும் வலது கரத்தை மேல் நோக்கி அசைத்துச் ‘சொல்லேன்’ என்பது போல் குறித்து உணர்த்தினர். ‘சொல்’ என வார்த்தையால் கேட்காமல், அவர் அப்படிக் குறிப்புக் காட்டியதே அவளை ஓரளவு தாழ்வு உணர்ச்சியடையச் செய்தது. மொழியால் பேச நீயும் நானும் ஓர் எல்லையில் இல்லை என்பதுபோல் அவளை மருட்டியது அந்தக் குறிப்பு. அவள் மிகவும் நிதானமாக எல்லாவற்றையும் சொல்லத் தொடங்கினாள். தாமரைப் பூக்குவியலோடு இருந்த வண்டியைப் பூத பயங்கரப் படை வீரர் சந்தேகப்பட்டது, அவனுடைய சந்தேகத்தை நீங்கித் தாங்கள் மேலே சென்றது, யானைப் பாகன் அந்துவனைக் கண்டது முதலிய நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாகச் சொன்னாள் அவள். கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்த மதுராபதி வித்தகர், இளையநம்பி என்னும் சுந்தர வாலிபனின் மேல் செல்வப் பூங்கோதை என்னும் அழகிய இளம் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பிரியத்தையும், மயக்கத்தையும் கொண்ட சொற்களைத் தனியே பிரித்தெடுத்து விலக்கி, அவள் தெரிவித்தவற்றை அறிவதற்குப் போதுமான சொற்களை மட்டுமே புரிந்து ஏற்றுக் கொண்டார். இளையநம்பியைப் பற்றிக் கூற நேரிடுகையில், சில இடங்களில் நாணமும், சில இடங்களில் தன்னை மீறி அவன் அழகை வர்ணிப்பது போல் தன் வாக்கில் வந்து சேரும் பதங்களையும் தவிர்க்க முடியாமல், அவள் தான் கூற முற்பட்டவற்றைக் கூறிக் கொண்டிருந்த போது அந்த இணையற்ற அரச தந்திர மாமேதை உள்ளூற நகைத்தபடியே அதைச் செவிமடுத்துக் கொண்டிருந்தார். மோகூருக்கு அருகே யானைக் குன்றின் சாரலில் சில இடங்களில் அருமையான முல்லைக் கொடிகள் சில தரை மண்ணாயுள்ள இடத்தில் தோன்றி அருகே மலைக் கருங்கல்லாய் இறுகிய பகுதியில் படர்ந்து, அந்தக் கருங்கற் பரப்பின் மேல் பூக்களைப் பூத்துக் கொட்டுவது உண்டு. அந்தக் காட்சியைக் காணும் போதெல்லாம், செல்வப் பூங்கோதை இந்த மலர்களின் மேன்மையையும், குளிர்ச்சியையும் நறுமணத்தையும் அந்தக் கருங்கல் என்றாவது உணர முடியுமா? ஒரு தெய்வத்திற்கு அர்ச்சனை செய்வது போல், எவ்வளவு காலமாக இந்தப் பூக்கள் உதிர்ந்து அந்தக் கல்லை வழிபடுகின்றன! இந்தக் கொடியை ஒரு விதமான உணர்வுமின்றித் தாங்கும் ஆதார நிலமாக இருப்பதைத் தவிர, இதன் இதயத்து மென்மையையும் நறுமணங்களையும் சீதத் தன்மையையும் ஏற்றதற்கு அடையாளமாக அந்தக் கல் எந்த அருளைப் புரிந்திருக்கப் போகிறது இதற்கு?’ -என்று விளையாட்டாகச் சிந்திப்பதுண்டு. தன்னுடைய வியப்புகள், அதிசயங்கள், சுகதுக்கங்கள் ஆகியவற்றைப் பெரியவர் மதுராபதி வித்தகரிடம் அவள் முயன்று காண்பித்துக் கொள்ள விரும்புவதில்லை. எப்போதாவது அவரிடம் பேசும் போது அப்படி வியப்புகளோ, அதிசயங்களோ, சுக துக்கங்களோ தழுவிப் பிறக்கும் தன்னுடைய வார்த்தைகள், கருங்கல்லில் உதிரும் முல்லை மலர்களைப் போன்றே, அவரிடம் சென்று சேருவதாக அவளுக்குத் தோன்றும். அந்தக் கருங்கல்லில் எல்லையற்ற ஆற்றலும், தெய்வீகமும் இருப்பதாக அவளுள் பழகியிருந்த ஒரு பயபக்தியின் காரணமாக அதை அவள் ஒரு குறையாக எண்ணுவதில்லை. என்றாலும் அவரிடம் பேசும் ஒவ்வொரு முறையும், அந்த யானை மலைக் கருங்கல்லில் உதிரும் முல்லைப் பூக்களின் காட்சி அவளுக்கு நினைவு வராமற் போவதில்லை. இதயத்தின் ஒரு கோடியில் அந்தப் பெரியவருக்குப் பேர்த்தி வயதுகூட நிரம்பியிராத தன் மேல் அவருள்ளே ஒரு பாசமும், குழைவும், ஆசியும் இருக்கும் என்று அவள் நம்பினாலும், அந்தப் பாசத்தையும், ஆசியையும் சொற்களால் வெளிப்படுத்தி அங்கீகரிக்காத அவருடைய உணர்ச்சிகளின் இறுகிய தன்மையை அவள் பலமுறை நேருக்கு நேர் கண்டு மருண்டதுண்டு.

இன்று இந்த நள்ளிரவிலும் அப்படியே நேர்ந்தது. தன்னருகே அன்னையையும், எதிரே நிற்கும் பெரியவரின் அருகே தந்தையையும் வைத்துக் கொண்டு, தான் கூற வேண்டியவற்றுக்கான இங்கிதமான சொற்களை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்துப் புதிதாக மாலை தொடுத்துப் பழகுவது போல் சொற்களை ஒவ்வொன்றாகத் தொடுத்துப் பேசினாள் அவள். இளையநம்பியின் கையும் வண்டியில் குவித்திருந்த தாமரைப் பூக்களும் வேறுபாடு தெரியாமல் ஒன்றாயிருந்த இடத்தைப் பற்றிக் கூறும் போது, அவளையும் மீறிச் சொற்கள் மிக மிக நளினமாய்க் கோர்த்துக் கொண்டு வந்தன. தானும் தன்னுடைய அன்னையும், வெள்ளியம்பலப் பகுதியைக் கடந்து நடுவூர் பழியே திருவாலவாய்க்குச் செல்லும் போது பூத பயங்கரப் படையினர் யாரோ ஒரு மனிதரை ஒற்றர் என்று ஐயப்பட்டு சங்கிலியால் பிணித்து இழுத்துச் சென்றதைச் சொல்லும் போது, அதைக் கூறும் தன் வார்த்தைகளில் பதற்றத்தையும் அவளால் தவிர்க்க முடியவில்லை. அப்போது மட்டும் மதுராபதி வித்தகரின் குரல் தன் தந்தையை நோக்கி “இப்படி நம்மால் அன்பு செய்யப்படுகிறவர்களின் சுகதுக்கங்களைப் பல வேளைகளில் நாமே கற்பித்துக் கொள்கிறோம்! ஆனால், நாம் கற்பிக்கின்ற துக்கங்களின் படி துக்கங்களும் வருவதில்லை. நாம் கற்பிக்கின்ற சுகங்களின் படி சுகங்களும் வருவதில்லை --காராளரே?” என்று கூறியதைக் கேட்டாள் அவள், ‘நாம் கற்பித்தபடி துக்கங்கள் வருவதில்லை’ என்று அவர் கூறியது அவளுக்குப் பிடித்திருந்தது. ‘நாம் கற்பித்தபடி சுகங்களும் வருவதில்லை’ என்பதை அவர் ஏன் கூறினார் என்று அந்த வார்த்தைகளை மட்டும் ஏற்க முடியாமல் அவள் மனம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தபோது,

“ஆனால் நாம் விரும்புகிறபடியே நம் சுகங்கள் அமையவேண்டும் என்றும், நாம் விரும்புகிறபடியே நம் துக்கங்கள் விலகிப் போய்விட வேண்டும் என்றும் இளம் பருவத்தில் ஓர் ஆசை எல்லோருக்கும் இருப்பது இயல்பு", என்று பெரியவரே மேலும் பேசிய போது, தன் மனத்தைப் படித்து விட்டு அவர் மறுமொழி கூறினாற் போல் துணுக்குற்றாள் அவள். கூறுகின்ற சொற்களைக் கேட்டு விட்டு ‘மறுமொழி சொல்கிறவர்கள் நிறைந்துள்ள உலகில் நினைக்கின்ற சொற்களுக்கும் தீர்மானம் செய்தாற் போல் மறுமொழி கூறுகின்ற அந்தச் சதுரப்பாட்டை வியந்து நின்றாள் அவள். முதல் வாக்கியத்தை அவர் பேசிய சுகதுக்கங்களைப் பற்றி எதற்காக இப்போது இப்படி ஒரு தத்துவம் சொல்லுகிறார் என்று அவள் சிந்தித்தாள். அவளுக்குள்ளே இப்படி ஒரு சிந்தனையை உண்டாக்குவதற்காகவே முன் வாக்கியத்தைச் சொல்லியிருந்தவர் போல், அந்தச் சிந்தனையுடனேயே தனது இரண்டாவது வாக்கியத்தின் மூலம் அவளைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார் அவர். மீண்டும் அந்த யானை மலைக் கருங்கல்லின் மேல் படர்ந்து உதிர்ந்த முல்லைப் பூக்கள்தான் நினைவு வந்தன அவளுக்கு.

அதற்குமேல் அவளிடமும் அவள் அன்னையிடமும் கேட்டறிய வேறெதுவுமில்லை என்பது போல், வலது கையை மேலே போக வேண்டிய சாலையை நோக்கி அசைத்து, விடை கொடுப்பது போல் குறிப்பு உணர்த்தினார் அவர். அன்னையோடு வண்டியில் போய் ஏறியபோது,

“பெண்கள் உணர்ச்சி மயமானவர்கள். அவர்களுக்கு வாழ்வின் சுகதுக்கங்களை விடச் சுகதுக்கங்களைப் பற்றிய கற்பனைகளே அதிகம். அவர்கள் கூறுகிறவற்றில் இந்தக் கற்பனைகளையும், உணர்ச்சிகளையும், கழித்துவிட்டுப் பதங்களுக்குப் பொருள் தேட வேண்டும்” என்று தொலைவில் பெரியவர் தன் தந்தையிடம் கூறிக் கொண்டு செல்வதை அவளும் கேட்க முடிந்தது. நீண்ட நேரம் இந்தச் சொற்களையே சிந்தித்துக் கொண்டிருந்தாள். இந்த வாக்கியத்தில் பதங்கள் சந்திக்கும் இடங்களில் எல்லாம் பலவீனமான சிந்தனையால் உடைத்துப் பொருள் கண்டுபிடிக்க முடியாத இராஜ தந்திரப் பூட்டுகள் நிறைந்திருப்பது போல் தோன்றி அவளைப் பயமுறுத்தின... நீண்ட நேரம் இந்த வாக்கியத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தாள் அவள்.

இரவு நெடு நேரங் கழித்து பெரியவரை ஆலமரத்திற் கொண்டு போய் விட்டுவிட்டுத் திரும்பிய தன் தந்தையிடம் “இந்த வாக்கியத்துக்குப் பொருள் என்ன? ஏன் பெரியவர் அவரிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்?” என்று வினாவியதோடு தன் மனத்தில் தோன்றிய யானை மலை முல்லைக் கொடி கருங்கல்லில் உதிர்க்கும் பூக்களின் உவமையையும் அவள் மெல்லச் சிரித்தபடி கூறினாள். அப்போது அவர் அவளை மறுத்தார்.

“மகளே! அவரைப் பற்றி அப்படி நினைக்காதே. வருங்காலப் பாண்டிய நாட்டின் பல நூறு தலைமுறைகளை இன்றைய சிந்தனையில் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் செயல் வேள்வியில் அவர் ஈடுபட்டிருக்கிறார். அவருடைய

சொற்களுக்கு நிறைமொழி மாந்தார் ஆணையிற் கூறும் மறைமொழியின் பொருளாழமும் ஆற்றலும் உண்டு! பின்னால் ஒரு சமயம் நீயே இதை உணர்ந்து கொள்வாய்.”