நித்திலவல்லி/முதல் பாகம்/9. நம்பிக்கையின் மறுபுறங்கள்

விக்கிமூலம் இலிருந்து

9. நம்பிக்கையின் மறுபுறங்கள்

செல்வப் பூங்கோதையும், அவள் அன்னையும் தங்களிடம் இளைய நம்பியும், யானைப்பாகன் அந்துவனும் விடை பெற்றுச் சென்ற பின்பும் நெடுநேரம் அவர்களைப் பற்றிய நினைவுகளையும் கவலைகளையும் தவிர்க்க முடியாமல் இருந்தனர்.

‘இந்த விநாடியில் யானைப் பாகன் அந்துவனோடு அவர் எங்கே போயிருப்பார்? எவ்வளவு தூரம் போயிருப்பார்? யார் யாரை அவர் எதிர்கொண்டு சந்திக்க நேரிடும்’ என்று நினைவை இளைய நம்பியின் பின்னே அலையவிட்டபடி உடலால் மட்டும் தன் தாயின் பின்னே இயங்கிக் கொண்டிருந்தாள் செல்வப் பூங்கோதை. தாய் எதையோ கேட்டால் அதற்குத் தொடர்பில்லாமல், வேறு எதையோ அவளிடம் மறுமொழியாகச் சொன்னாள் இவள்.

‘பயப்படாதே! உனக்கு அபயம்’ என்பதுபோல் வண்டியில் நிறைந்திருந்த தாமரைப் பூக்களுக்கு நடுவே தென்பட்ட அந்தப் பொன்நிற உள்ளங்கையைச் செல்வப் பூங்கோதையால் மறக்கவே முடியவில்லை. அந்தக் கையை ‘அது கை இல்லை, தாமரைப்பூ’ என்று அவள் புனைந்து கூறியபோது, ‘இல்லை! அது கையேதான்’ என்று மறுக்கத் தயங்கி, அந்தப் பூதபயங்கரப் படை வீரனே, அது தாமரைப் பூதான் என்று நம்பி விடும் அளவுக்குப் பூவோடு அது ஒப்பிடப் பொருத்தமாயிருந்தது. அந்தக் கை மலர் அவள் நினைவில் பசுமையாய் வந்து தங்கியிருந்தது இப்போது.

“ஒரு வீரனின் கை பூப் போல் மென்மையாக இருக்கக் கூடாதுதான்! வாளும், வேலும் பற்றிச் சுழற்றிக் காய்த்துப் போயிருக்க வேண்டிய கை இது. தாமரைப் பூப் போல் மிருதுவாகவும், குளிர்ச்சியாகவும், சிவப்பாகவும் ஒரு கவிஞனின் கையைப் போல் இருக்கும்படி, இந்தக் கை வாளும் வேலும் ஏந்த முடியாமல் செய்துவிட்ட களப்பிரர்கள் மேல் திரும்பியது அவள் ஆத்திரம் எல்லாம். இளையநம்பியின் பூம்பட்டுக் கையை எண்ணியபோது பழைய இலக்கிய நிகழ்ச்சி ஒன்று அவளுக்கு நினைவுக்கு வந்தது. பல போர்களில் வெற்றி வாகை சூடிய பேரரசன் ஒருவன், ஒரு கவிஞரின் வலது கரத்தைப் பற்றித் தழுவி அவரைப் பாராட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. கல்லைப் போல் காய்ந்துத் தழும்பேறிய தன் கையும், பூப்போல் மென்மையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கக்கூடிய புலவர் கையும் இணைந்தபோது-

“ஐயா, புலவரே! உங்கள் கைமட்டும் எப்படி இவ்வளவு மென்மையாக இருக்கிறது!” என்று ஓர் அதிசயத்தைக் கண்டவன் போல் வியந்து வினவினான் அந்த அரசன்.

“இதில் வியப்பென்ன அரசே! நீ அன்போடு அளிக்கும் உணவை உண்டு வருந்தும் தொழிலைத் தவிர வேறு உழைப்பின் துயரங்கள் படியாத கைகள் இவை. இவை மென்மையாக இராமல் வேறு எப்படி இருக்கமுடியும்? உன் கைகள் வன்மையாக இருப்பதற்கும், இவை மென்மையாக இருப்பதற்கும் காரணம் ஒன்றுதான். துயரங்களை எல்லாம் உன் கைகளே தாங்கிக் கொள்கின்றன என்பதுதான் அந்தக் காரணம்” -என்று அந்த அரசனுக்கு அந்தப் புலவர் மறுமொழி கூறினாராம்.

தன் சிந்தனையில் அந்த அரசனோடு பெரியவர் மதுராபதி வித்தகரையும், அந்தப் புலவரோடு இளைய நம்பியையும் ஒப்பிட்டு இப்போது நினைத்தாள் செல்வப் பூங்கோதை. இளையநம்பியின் கைகளும் முகமும், தோள்களும், மேனியும் பூப் போல் மிருதுவாக இருப்பதையும், மதுராபதி வித்தகரின் கைகளும், முகமும், தோள்களும், மேனியும் செம்பொன்னில் வார்த்து இறுக்கியது போல் வைரம் பாய்ந்திருப்பதையும் இணைத்து நினைத்தாள் அவள். கோயிலில் வளமுடையாரை வழிபடும் போதும், ஆயிரத்தெட்டுத் தாமரை மலர்களை அர்ச்சித்த போதும், படிகளில் ஏறி, மேல் விதானத்து மாடத்தில் பரவாசுதேவராகக் கிடந்த கோலத்தில் இருக்கும் அந்தரவானத்து எம்பெருமானின் மாடக்கோவில் மணி மண்டப முகப்பிலிருந்து பெரிய பெரிய கருடக்கொடிகள் பறக்கும் இருந்த வனத்து மதில்களையும், மேற்புறமும், தென்புறமும் மதில்களை ஒட்டினாற்போல் மாலையெனச் சூழும் வையை நதியின் தென்புறக் கிளையையும், நகரின் பிறபகுதிகளான திருவாலவாய், திருநடுவூர், வெள்ளியம்பலம், திருநள்ளாறு முதலியவற்றையும், அந்திமாலை அழகுகளோடும் விளக்கொளி அலங்காரங்களோடும் கண்டபோதும், செல்வப் பூங்கோதையின் நினைவில் இளையநம்பிதான் நிறைந்திருந்தான். அவ்வளவு பெரிய கூட்டத்தினிடையேயும் தான் தனிமையாக விடப்பட்டதைப் போன்ற உணர்வை அடைந்திருந்தாள் அவள். இன்று அப்படி ஒரு தனிமையை உணரும்படி அவளைத் தாபத்தினால் தவிக்கச் செய்திருந்தது அவனுடைய ஞாபகம்.

வழிபாட்டை முடித்துக் கொண்டு அவளும், அவளுடைய அன்னையும் யானைக் கொட்டாரத்தின் வழியாக வண்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நந்தவனத்திற்குத் திரும்பியபோது, வேறு நாலைந்து யானைப்பாகர்களோடு அங்கே நின்று கொண்டிருந்த அந்துவன், ‘இளையநம்பி இங்கிருந்து பத்திரமாக வெள்ளியம்பலத்திற்குப் புறப்பட்டுப் போயாயிற்று’ -என்று சைகை மூலம் அவர்களுக்குத் தெரிவித்தான். சுற்றி மற்றவர்கள் இருந்ததால், அந்துவன் தன்னைச் சூழ இருந்தவர்களுக்குச் சந்தேகம் எழாதபடி பெரியகாராளர் மகளோடும் மனைவியோடும் நெருங்கிச் சென்று விரிவாக உரையாடுவதை அப்போது தவிர்க்க வேண்டியதாயிற்று.

வண்டிகள் பூட்டப்பெற்றுப் புறப்பட்டபோது, “அம்மா அந்துவன் செய்த குறிப்பைக் கவனித்தாயா?... அவர் இங்கிருந்து யாதொரு கெடுதலும் இன்றி அடுத்த இடத்துக்குப் போய்விட்டாராம்” -என்று ஆர்வம் பொங்கத் தாயிடம் கூறினாள், செல்வப்பூங்கோதை.

“ஆம்! கவனித்தேன். இனி அந்தத் திருக்கானப் பேர் பிள்ளையாண்டானைப் பற்றிப் பயப்பட ஒன்றுமில்லை. அந்துவனும் இங்குள்ள மற்றவர்களும் உயிரைக் கொடுத்தாவது அந்தப் பிள்ளையைப் பாதுகாப்பார்கள். இப்போது நாம் நேரே ஊர் திரும்புகிறோமா அல்லது ஆலவாய்க்குள் போய் இறைவனையும் வழிபட்டு விட்டுப் போகலாமா?”

என்று அன்னையிடமிருந்து வினாவாக மறுமொழி கிடைத்தபோது ஆலவாய்ப்பகுதிக்குப் போகலாம் என்றே செல்வப் பூங்கோதையும் இணங்கினாள்.

வண்டிகள் ஆலவாய்ப் பகுதிக்குப் போகுமுன், வெள்ளியம்பலப் பகுதியையும், திருநடுவூரையும் கடந்து சென்றபோது, செல்வப் பூங்கோதையின் கண்கள் கூட்டம் நிறைந்த கூடற் கோநகர வீதிகளில் மனிதர்களோடு மனிதர்களாகத் தனக்கு விருப்பமான அந்த முகம் எங்காவது தென்படாதா என்பதையே தேடிக்கொண்டிருந்தன. யாத்திரீகர்களும், பிற தேசத்தவரும் அதிகமாகத் தங்கக் கூடிய வெள்ளியம்பலப் பகுதியில் அங்கங்கே திரிந்து கொண்டிருந்த பூதபயங்கரப்படை வீரர்களைக் கண்ட வேளைகளில் எல்லாம், “ஐயோ! இந்தக் கொலை பாதகர்களிடம் சிக்கிவிடாமல் அவர் தப்ப வேண்டுமே"-என்று அவள் மனம் இளையநம்பிக்காகத் தெய்வங்களை எல்லாம் வேண்டித் தவித்தது. அதற்கேற்றார் போல் வெள்ளியம்பலப் பகுதியின் முடிவில், ஓரிடத்தில் பத்துப் பன்னிரண்டு பூதபயங்கரப் படைவீரர்கள் யாரையோ சிறைப் பிடித்துச் செல்லும் காட்சி ஒன்று அவள் கண்களில் பட்டு விட்டது. உடனே அவள் மனத்தில் என்னென்னவோ பயங்கரமான கற்பனைகள் எல்லாம் எழுந்து வாட்டின. அந்த இடத்திலிருந்து மேலே போகவே அவளுக்கு மனம் இல்லை. வண்டியை நிறுத்திக் களப்பிரர்கள் அப்போது சிறைப் பிடித்துச் செல்வது யாரை என்று அறிந்து கொண்ட பின்பே மேலே செல்ல விரும்பினாள் அவள். தானே இறங்கி, ஓடிப் போய்ப் பார்த்து ஐயம் தெளிய வேண்டும் என்று துடித்தாள் அவள். அவளுடைய வேதனையை உணர்ந்து அதற்குச் செவி சாய்த்து, வண்டியை ஒட்டுகிறவன் இறங்கிப் போய்ப் பார்த்து விட்டு வந்து-

“ஒற்றன் என்று சந்தேகப்பட்டு யாரோ ஒருவனைச் சங்கிலியிட்டுப் பிணைத்து இழுத்துப் போகிறார்கள்"- என்று தெரிவித்தான். அவள் மனம் விரைந்து துடித்தது. பயந்து கதறும் குரலில், “அவர்கள் யாரை இழுத்துப் போகிறார்களோ, அந்த மனிதரை நீ நன்றாகப் பார்த்தாயா?” -என்று அவனை மீண்டும் வினாவினாள் அவள். “பார்க்க முடியவில்லை” என்று மறுமொழி கூறியபோது அவள் நெட்டுயிர்த்தாள். செல்வப் பூங்கோதையின் அன்னை, அவள் தவிப்பைக் கண்டு நகைத்தாள்.

“பெண்ணே! நமக்கு வேண்டியவர்களைக் கோழைகளாவும், பலவீனமானவர்களாகவும் கற்பனை செய்கிற அளவிற்கு நாம் தைரியமற்றவர்கள் ஆகிவிடக் கூடாது. உன் தவிப்பு வீணானது. பெரியவர் மதுராபதி வித்தகரின் சோதனைகளில் உறுதி செய்யப்பட்டுத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் யாராயினும் அவர்களை இவ்வளவு எளிதாக எதிரிகள் பிடித்துவிட முடியாது என்ற நம்பிக்கையாவது உனக்கு இருக்க வேண்டும்."

“இருக்கலாம், அம்மா! ஆனால், ஒரு பலமான நம்பிக்கையின் மறுபுறத்தில்தான் பலவீனமான அவநம்பிக்கைகளும் அச்சங்களும் தோன்றுகின்றன.”

“நீ சொல்வது தவறு செல்வப் பூங்கோதை! ஒரு பலமான நம்பிக்கைக்கு மறுபுறமே கிடையாது. பலவீனமான நம்பிக்கைக்குத்தான் மறுபுறங்கள் உண்டு. திடமான முடிவுக்கு முதல் எண்ணம்தான் உண்டு. இரண்டாவது எண்ணமே இல்லை என்பதை நீ ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.”

தாயின் உறுதிமொழியால் ஓரளவு மனநிறைவு அடைந்தாள் அவள். தன்னுடைய அன்பின் மிகுதியால் இணையற்ற வீர இளைஞர் ஒருவரைக் குறைத்து மதிப்பிட நேர்ந்ததை மற்றொரு கோணத்திலிருந்து தாய் சுட்டிக் காட்டியபோது தன் சிந்தனையை எண்ணித் தானே வெட்கப்பட்டாள் அவள்.

திருவாலவாய்க்கோவிலிலும் வழிபாட்டை நிறைவேற்றிக் கொண்டு மோகூர் திரும்புவதற்காகக் கோட்டைக்கு வெளியே புறநகரை அடைந்து வண்டிகள் வையையைக் கடந்து கரையேறியபோது இரவு நெடுநேரமாகி விட்டது. எப்படியும் இரவோடிரவாக அவர்கள் மோகூர் திரும்பியாக வேண்டியிருந்தது. வழிபாட்டுக்கு மட்டுமே அவர்கள் மதுரை வந்திருந்தால் இவர்கள் திரும்பி வந்து சேருவதுபற்றிக் காராளர் கவலையின்றி நம்பிக்கையோடிருப்பார். இளைய நம்பியைத் தந்திரமாகக் கோநகருக்குள் கொண்டுவந்து விடவேண்டிய பொறுப்பும் சேர்ந்திருந்ததால் தாங்கள் திரும்புவதைத் தந்தை ஆவலோடும், கவலையோடும் எவ்வளவிற்கு எதிர்பார்த்திருப்பார் என்பதைச் செல்வ பூங்கோதை உணர்ந்திருந்தாள். அவளுடைய மனநிலையையும் அவள் தாயின் மனநிலையையும் உணர்ந்தவர்கள் போல் புறநகரிலிருந்து மோகூருக்குச் செல்லும் சாலையில் வண்டிகளை விரைந்து செலுத்தினார்கள் ஓட்டுபவர்கள்.